சமீபத்தில் எனது சிறந்த நண்பன், ஆமருவி தேவநாதனின் முதல் படைப்பாம், ‘பழைய கணக்கு’ எனும் கட்டுரை தொகுப்பை படித்து மகிழ ஒரு வாய்ப்பு கிடைத்து. ஆமருவி என்னுடன் படித்த காலத்தில், இவ்வளவு திறம் படைத்தவன் (என் நண்பன் என்ற உரிமையில் ஒருமையில் கூறுகிறேன்) என மறைத்து வைத்த நேர்த்தியை என் கண் முன்னே கொணர்ந்து வந்து விட்டான். இந்த கட்டுரை தொகுப்பில் பல இடங்களிலும் அவனுடன் அனுபவித்த நிகழ்வுகளை என்னால் உணர முடிந்தது. அவன் மேன்மேலும் இந்த எழுத்து பணியை தொடர வாழ்த்துக்கள் மட்டுமன்றி ஒவ்வொரு எழுத்து பணியையும் படித்து மகிழ மற்றும் ஆராய எனக்கு பாக்கியம் கிடைக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்.
இப்பொழுது ‘பழைய கணக்கு’ விரிவான விமர்சனம்
இந்த கட்டுரை தொகுப்பின் அத்தியாய மேன்மை இதில் இடம் பெற்றுள்ள மொழி அமைப்பு (language construct ). தேரெழுந்தூரில் வைணவனாய் பிறந்த மண்ணில் பேசப்படும் மொழி மற்றும் அனுபவங்கள் கண் முன்னே நிற்பது மிகப்பெரிய பலம். என்னை போன்ற நடுத்தர வயது மற்றும் என்னை விட முதியோர் காலத்தில் பயன்படுத்தபடும் மொழி அமைப்புக்கு பாராட்டுகள். இளைய வயதுடையோர் இதன் சிறப்பை அறிவார்களா என மனதில் தோன்றினாலும் இளையவர்கள் இந்த மொழி அமைப்பை கற்று அறிய ஒரு அருமையான வாய்ப்பை தந்திருக்கிறான் ஆமருவி.
பல சிறு கதைச் சம்பவங்களில் சமூக உணர்வு (இஸ்லாத்தை தழுவிய நபர்கள் பிராமணர்களுக்கு உதவுவதும், பிராமண ஆசார்யர் இஸ்லாமிய வியாபாரியையும் நகருக்குள் முன்னேற்ற வழி செய்வது), சில காலங்களாக சமூகத்தில் உள்ள ‘ரிசர்வேஷன்’ என்னும் பேயை சாடுவதும், தமிழ் ஆசிரியர்களை எப்படி இந்த சமூகம் அவர்களது முதுமை காலத்திலே மாணவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே காப்பாற்றும் அவலம் அதே சமயம் அரசோ, பணக்கார வர்க்கமோ அவர்களை ‘கண்டு கொள்ளாமல்’ விட்டுவிடுவது நம் விழிகளை நனைய வைக்கிறது. இந்த அவலங்கள் எப்பொழுது தீரும் என மனதிலே கேள்விகள் எழுப்புகின்றன. அதே சமயம் எவ்வளவு வைத்திருக்கிறார்களோ அதை வைத்தே உலகம் மனிதனை எடை போடுகிறது என்பதில் அவனின் கோபம் கூறாமல் கூறுகிறான்.
ஆன்மீகம் பற்றிய இரண்டொரு தொகுப்பில் பிராமண சமூகத்திடையே இருக்கும் பிரிவினைகள் குறைய வேண்டும் என subtleஆக உணர்த்தி என்னிடம் மிகப்பெரிய ‘சபாஷ்’ பெறுகிறான். அதே சமயம் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து நமது வேதங்களில் உள்ள விஞ்ஞானம் மற்றும் வாழ்க்கை முறைகளை ஆணித்தரமாக கூறுகிறான். அந்த ஆழ்ந்த ஆராய்ச்சி சிலராலேயே செய்ய முடிந்த ஒன்று. பணியில் இருந்து கொண்டே இத்தனை ஆராய்ச்சி செய்ய முடிந்ததா என வியப்படைகிறேன்.
‘மாயவரம்’, ‘ஸார் வீட்டுக்கு போகணும்’ ஆகியவை ஒரே நிகழ்வினை பிரித்து கொடுத்த விதம் அற்புதம். ஒவ்வொன்றிலும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இரண்டானதால் அதை மிக நேர்த்தியாக பிறித்திருக்கிறான்
தான் பிறந்த தேரழுந்தூர் சம்பவங்கள் அவனது கோவில் மற்றும் ஆன்மீகத்தின் ஈடுபாட்டை காட்டுவதோடு அந்த கோவிலில் இருந்த தேர் மற்றும் கதவு ஆகியவற்றின் கதைகள் முன்னர் காலத்தில் நடந்த சரித்திரம் என்ன என தெள்ள தெளிவாக தெரிய வைத்துள்ளான். தேர்-இழந்த-ஊர் மாறி தேர்-அழுந்த-ஊர் என மீண்டும் தேர் வந்த பெருமை கண்கூடாக தெரிகிறது.
பதிப்பாளர் ஓரிரு எழுத்து பிழைகள் செய்திருப்பினும் ‘பழைய கணக்கு’ ஒரு மனிதனின் (ஆமருவியின்) வாழ்க்கையிலே நடந்த மற்றும் அவர் கூட உள்ளவர்களின் வாழ்க்கை கணக்கு.
முன்னிட்ட சில வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி