துறவி

கூட்டம் கை கூப்பி நின்றது. ‘சாமீ, சாமீ’ என்று அரற்றியது. பெருமாள் முதலியும் சண்முக சுந்தரமும் விழுந்து வணங்கினர். சாரியார் கூட்டத்தைப் பார்த்துக் கையை உயர்த்தி ஆசி வழங்கினார். பின்னார் எழுந்து நடக்கத் துவங்கினார்.

‘வெள்ளைக்கார துரைகள்ளாம் ஸ்வாமியப் பார்க்க வந்திருக்கா’, வீட்டு வெளியில் பவ்யமாக நின்றபடியே கூறினான் வத்சன். சாரியாரின் பல சீடர்களில் இளையவன் அவன். ‘ஸ்வாமி’ என்று அவன் அழைத்தது சாரியாரைத்தான்.

அவர் கொல்லைப்புறத்தில் சந்தியாவந்தனத்தில் இருந்தார். குந்தியிருந்தபடியே கைகளைத் தூக்கி ஆசி வழங்குவது போல் சைகை செய்தார் சாரியார். நான்கு கட்டு வீடாக இருந்தாலும் கொல்லையில் சந்தியாவந்தனம் செய்யும் போது வாசல் பக்கம் தெரியும் விதமாக அமைந்திருந்தது அந்த ஓட்டு வீடு.

தில்லை விளாகத்தில் சாரியார் பெரிய பண்டிதர். பலர் அவரிடம் பாடம் கேட்டனர். காலையில் வேதக்கல்வி, மாலையில் பிரபந்தம் மற்றும் தத்துவ விசாரங்கள் என்று சாரியாரின் காலம் கடந்துகொண்டிருந்தது. மூன்று போகம் விளையும் சில நூறு ஏக்கர் நிலங்களும் சில தென்னந்தோப்புகளும் இருந்தன. தில்லை விளாகம் அவருடையது.

சந்தியாவந்தனம் முக்கால் மணி நேரம் செய்வது சாரியார் வழக்கம். யாருக்காகவும், எதற்காகவும் அக்காலவெளி குறையாது. ‘இராம இராவண யுத்தத்துல இராமன் சைன்யம் எல்லாம் இழந்து நிற்கிறான். நாம விடற அர்க்யம்  தான் இராமனுக்கு பலம். ஆகையால அவசரமோ வேகமோ கூடாது’, என்று பல முறை சொல்லியிருகிறார் சாரியார். வத்சன் அதனால் வாய் மூடி மௌனியாக நின்றுகொண்டிருந்தான்.

துரைமார்களுக்கும் சாரியாரின் வழக்கங்கள் தெரியும். அவரது அனுஷ்டானங்கள் முடியும் வரை காத்து நின்றார்கள். மெதுவாக அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். பெரிய துரை போலத் தோற்றம் அளித்தவர் தன் கையில் இருந்த அரசுக் காகிதங்களைப் புரட்டிக்கொண்டு சில பகுதிகளை அடிக்கோ டிட்டுக்கொண்டிருந்தார்.

அரை மணி நேரம் கழித்துச் சாரியார் வந்தார். நல்ல வெளுத்த சரீரம். நெற்றியில் கம்பீரமான வடைகலை திருமண் ( நாமம் ). பஞ்ச கச்சம் அணிந்து மார்பின் குறுக்காக அங்க வஸ்திரம் அணிந்திருந்தார். அது அவர் தடிமனான பூணூல் போட்டிருப்பது போலத் தோற்றம் அளித்தது.

மிகப் பெரிய அலங்காரத்துடன் இறைவனைச் சுமந்து கொண்டு வரும் தேர் வீதியில் வந்தால் மக்கள் தங்களை அறியாமல் எழுந்து நின்று அஞ்சலி செய்வது போல் துரைமார்கள் அனைவரும் எழுந்து நின்றனர். இத்தனைக்கும் சாரியார் துரைமார்களை விட உயரத்தில் சிறியவராகவே இருந்தார்.

திண்ணையில் கால் மேல் கால் போட்டு சப்பணமிட்டு அமர்ந்த பின்னர், ‘என்ன வெள்ளைக்காராள்ளாம் வந்திருக்கேளே, தேசத்துக்கு ஸ்வதந்த்ரம் வரப் போறதால சொல்லிட்டுப் போகலாம்னு வந்திருக்கேளா?’, என்று புன்னகை செய்தார். அவர் சொன்னதில் உண்மை இருந்தது. வெள்ளையர் வெளியேறப் போவது ஒருவாறு உறுதியான நேரம் அது. இருப்பதா செல்வதா என்று பல வெள்ளையர் திண்டாடிய நேரம் அது.

‘வெள்ளைக்காராளுக்கு ஸம்பந்தமுள்ள ஒரு பள்ளிக்கூடம் கட்டணுமாம். அதுக்கு ஸ்வாமியோட குடும்பத்துலேர்ந்து தென்னந்தோப்பு பக்கமா நாலு ஏக்கரா நிலம் வேணுமாம்’, வத்சன் மெதுவாகக் கூறினான்.

‘நல்ல விஷயம் தான். தரலாம். ஆனா ரெண்டு விஷயம். ஒண்ணு, பள்ளிக்கூடம் யாருக்கு ? வெள்ளைக்காராளுக்கு மட்டுமா ?  இல்லை எல்லாரும் படிக்கலாமா ? ரெண்டாவது, தோப்பு பக்கமா இருக்கற எடம் நஞ்சை. அதை அழிக்கப்படாது. அதோட மாடு மேய்க்கறவாள்ளாம் அங்க வந்து தான் செத்த படுத்துக்கறா. மேலத் தெரு பக்கமா தரிசா ரெண்டு ஏக்கரா இருக்கு. அத வேணா தரேன்’’.

வெள்ளையர் முகத்தில் ஏமாற்றம். அவர்கள் நிலம் கேட்டது மாதா கோவிலுடன் சேர்ந்த ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு. வெளியில் பள்ளி என்று சொல்லிக்கொண்டார்கள். இதை வத்சன் சாரியார் காதில் சொன்னான்.

‘க்ஷமிக்கணும், அன்ய மதஸ்தாளா இருந்தாலும் கொழந்தைகள் படிக்கறதுக்குன்னு கேட்டதால குடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா உங்களவாளோட மத்த ஸ்தாபன்ங்கள்ள மதம் மாத்தறான்னு காதுல படறது. அதுனால அந்த எடத்துல ஏதானும் கோசாலை கட்டலாம்னா சொல்லுங்கோ; இன்னும் ரெண்டு காணி நிலம் சேர்த்துத் தரேன். ஆனா சனாதன தர்மத்தை அழிக்கக் காரணமான எதையும் நான் செய்ய மாட்டேன். நீங்க நீர் மோர் சாப்டுடுட்டுக் கிளம்புங்கோ’ என்றபடி வீட்டின் உள்ளே சென்றார்.

‘என்ன ராஜாங்கம் ? என்ன ராஜ்யம் ? ராஜாஜியே சொன்னாலும் தர்மப் பிரஷ்டமான காரியம் பண்ணலாமோ?’ என்று உள்ளேயிருந்து சாரியாரின் குரல் கேட்ட்து. மத மாற்ற நிகழ்வுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நாட்கள் அவை. எவ்வளவு பெரிய உத்யோகஸ்தர்களானாலும், பதவியானாலும் சாரியாருக்குக் கவலை இல்லை. இது வத்சனுக்கும் தெரியும். எனவே அவன் மௌனமாகவே இருந்தான்.

மறு நாள் அமாவாசை. தர்ப்பணம் செய்துவிட்டு சாரியார் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார். வத்சன் ஓடி வந்தான். ‘ஸ்வாமி, ஜீயருக்கு தேக ஸௌக்கியம் இல்லையாம். திருமேனி அசக்தமாக இருக்கிறதாம்’, என்றான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சாரியார் ரயிலில் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்.

மிகச் சிறந்த ஆசார சீலரான அவர் மைசூர் வரை பிரயாணம் செய்த போதும் தண்ணீர் கூட அருந்தாமல் கண்ணீர் விட்டபடியே அமர்ந்திருந்தார். தன் ஆச்சாரியருக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் மிகுந்த மன வருத்தத்துடன் பயணப்பட்டார்.

ஆச்சாரியர் என்றாலும் சம வயதுடையவர்களே இருவரும். ஒரே பாட சாலையில் பதின்மூன்று வருடங்கள் ஒன்றாக அத்யயனம் ( பயிற்சி ) செய்தவர்கள். யஜுர் வேத அப்யாசம் ( பயிற்சி ) செய்து,  பூர்ண அத்யாயி ( முழுமையாக்க் கற்றவர்கள் ) என்று பெயர் எடுத்தவர்கள்.

சாரியார் பல ஏக்கர்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர். தொடர்ச்சியாக இருபது வருடங்கள் மழை பொய்த்தாலும் உட்கார்ந்து உணவருந்த முடியும். நண்பரோ ஒரு வேளை உணவிற்கே சிரமப்படும் குடும்பம். ஆனாலும் இருவரும் ஆத்ம நண்பர்கள்.

முன்னர் பதவியில் இருந்த பெரிய ஜீயர் காலமாகும் தருவாயில் நண்பரை மடத்தின் பீடம் ஏற்க அழைத்தார். நண்பரும் பீடாதிபதியானார். சாரியாருக்குப் பரம சந்தோஷம். நண்பர் பீடம் ஏற்றவுடன் அவரை நெடுஞ்சாண்கட்டையாகக் கீழே விழுந்து வணங்கினார். வைணவத்தில் இது தான் விசேஷம். ஆச்சாரிய ஸ்தானம் ஏற்றால் வயது வித்யாசம் எல்லாம் பார்ப்பதில்லை.

அந்த நண்பருக்குத்தான் உடல் நிலை சரியில்லை என்று சாரியார் கிளம்பியிருந்தார். மைசூர் வந்தடைந்தவுடன் சாரியார் ஜீயரை ஓடிச்சென்று பார்த்தார். ஜீயர் படுத்திருந்தார். கடுமையான ஜூரம். டாக்டர்கள் யாரையும் அண்ட விடவில்லை. விஷக்கடி என்று சொன்னார்கள். சாரியார் ஜீயரை விழுந்து சேவித்தார். எழுந்து அமர்ந்து ‘கருட தண்டகம்’ பாராயணம் துவங்கினார். ‘கருட தண்டகம்’ 700 ஆண்டுகளுக்கு முன் கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரத்தில் வேந்த தேசிகன் என்னும் பெரியவரால் அருளப்பட்ட சுலோகக் கொத்து. அதைப் பாடியவுடன் கருடன் தோன்றினான் என்பதாக ஐதீகம்.

சாரியார் இரண்டு நாட்கள் விடாமல் பாராயணம் செய்தார். ஜீயரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒருவாரத்தில் எழுந்து அமர்ந்துவிட்டார். சாரியாருக்கு ‘மந்திர சித்தி’ உள்ளது என்று பேசிக்கொண்டனர்.

ஒருவாரம் உடனிருந்து பணிவிடை செய்துவிட்டு சாரியார் தில்லை விளாகம் திரும்பினார். கும்பகோணம் இரயில் நிலையத்தில் இறங்கி விளாகம் நோக்கி நடந்து வந்தார். நல்ல வெயில். நா வறண்டது. இன்னும் அரை மைல் தான். சற்று அமர்ந்து இளைப்பாற ஒரு கல் மீது அமர்ந்தார்.

வத்சன் ஓடி வந்தான். ‘ஸ்வாமி, ஜீயருக்குப் பழையபடி தேக அசக்தம். தந்தி வந்திருக்கு. தேவரீர் எழுந்தருளவேணுமாய் உத்தரவு’ என்றான். சாரியாருக்கு அதன் பொருள் புரிந்தது. வத்சனை தீட்சண்யமாய் ஒரு பார்வை பார்த்தார்.

‘வத்சா, ஒண்ணு பண்ணு. நான் ஊருக்கு வரல்லே. இங்கேயே இருக்கேன். உடனே ஓடிப்போய் கார்யஸ்தர் சர்மாவை அழைச்சுண்டு வா. கையோட எனக்குப் பாத்யதையுள்ள பத்திரங்களை எல்லாம் கொண்டு வரச்சொல்லு’, என்றார்.

ஒரு மணி நேரத்தில் தில்லை விளாகமே ஊர் வெளியே சாரியாரைச் சுற்றி அமர்ந்திருந்தது. சர்மா கையில் இருந்த பத்திரத்தை வாசித்தார்.

‘தில்லை விளாகம் கனபாடிகள் நாராயாணாச்சாரியாரின் மகன் நரசிம்மாச்சாரியாகிய நான், தெளிந்த மனதுடன் நல்ல ஸ்வாதீனத்துடன் எழுதிக்கொடுப்பது : மேற்படி கிராமத்தின் மேற்கு திசையில் தென்னந்தோப்பின் அருகில் உள்ள எனக்குப் பாத்யதைப்பட்ட நான்கு ஏக்கர் நஞ்சை நிலம், குடியானத் தெரு சண்முக சுந்தர நாயக்கருக்கும், வடக்கே காவிரிக்கரைக்கு அருகில் உள்ள எட்டு ஏக்கர் நஞ்சை நிலம் அதன் குத்தகைக்காரர் குடியானத் தெரு பெருமாள் முதலிக்கும், நன்னிலத்தில் உள்ள எனக்குப் பாத்யதையான பதின்மூன்று ஏக்கர் பாரத ஸ்வதந்திர அரசாங்கத்தாருக்குப் பிள்ளைகளுக்குப் பாடசாலை கட்டுவதற்காகவும் அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் மற்றும் வீடு என் தாயார் மற்றும் மனைவி இருவரின் இறுதிக்காலம் வரை அவர்கள் அனுபவிக்கவும் பின்னர் அரசாங்கம் எடுத்துக்கொள்ளவும் கடவது.

இந்தப் பங்கீடுகளில் என் குடும்பத்தாருக்கும் என் வாரிசுகளுக்கும் பங்கில்லை’.

கூட்டம் கை கூப்பி நின்றது. ‘சாமீ, சாமீ’ என்று அரற்றியது. பெருமாள் முதலியும் சண்முக சுந்தரமும் விழுந்து வணங்கினர். சாரியார் கூட்டத்தைப் பார்த்துக் கையை உயர்த்தி ஆசி வழங்கினார். பின்னார் எழுந்து நடக்கத் துவங்கினார்.

வத்சன் மட்டும் அருகில் வந்து, ‘ஸ்வாமி, ஒரு தரம் ஆத்துக்கு வந்துட்டுப் போகணும்’, என்றான்.

ஊருக்கு எதிர் திசையில் நடந்துகொண்டிருந்த சாரியார் சொன்னார், ‘அதில்லை, ஆத்துக்கு வந்தா அம்மா இருக்கா. ஒரு வேளை மனசு மாறினாலும் மாறும். உடனே புறப்பட்டு வாங்கறது ஆச்சாரிய நியமனம். எங்க அம்மாவைக் கடைசிவரை நன்னா பார்த்துக்கோ’.

நான்கு நாட்களில் புதிய ஜீயராகப் பொறுப்பேற்றார் சாரியார். ஜரிகை வேஷ்டியைப் பஞ்சகச்சமாக உடுத்திய சாரியார் துவராடை உடுத்துத் துறவியானார். தில்லை விளாகத்தினுள் நுழையாமல் போனது ஏன் என்ற கேள்வி கேட்கப்படவில்லை. கேட்பதற்கு யாருக்கும் துணிவில்லை. பல நூறு ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரரான சாரியார் ஒரு நொடி நேரத்தில் அனைத்தையும் உதறிவிட்டு வந்தார் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

அன்று ஆவணித் திருவோணம். தில்லை விளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பல ஆண்டுகள் கழித்து ஜீயர் ஊருக்கு வருகிறார். வயதான பிராமணர்கள் பஞ்சகச்சம் உடுத்திப் பன்னிரண்டு திருமண் தரித்து ஊர் வாயிலில் நின்றிருந்தனர். தங்கள் ஊரைச் சேர்ந்த பூர்வாசிரமத்தில் சாரியார் எனறு அறியப்பட்டவர் அன்று அந்த ஊருக்கே வருகிறார். வீட்டு வாயில்களில் பெரிய கோலங்கள் போட்டிருந்தனர்.

வத்சன் பெரிய மனிதனைப் போல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தான். ‘மாமி, மாமி’, என்று அறியப்பட்ட, ‘தேவிகள்’ என்று அழைக்கப்பட்ட கனகவல்லி அம்மாள் முன்னாள் சாரியாரின் மனைவி மட்டும் உள் அறையில் அமர்ந்து கண் கலங்கிக் கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் தன் கணவர் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஊர் வாயிலில் இருந்தபடியே சந்நியாசியானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களும் அடக்கி வைத்த துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

ஆனால் இந்தத் துக்கம் மேலும் அதிகமான நாள் ஒன்று உண்டு. அது சாரியார் சந்நியாசம் பூண்ட நாள். கணவனும் மனைவியும் சேர்ந்து பல ஹோமங்கள் செய்ய வேண்டி இருந்தது. கணவர் மந்திரங்கள் ஜபித்து ஹோமம் செய்ய, கனகவல்லியம்மாள் அழுதுகொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் தன் கணவர் தன்னைப் பிரியப்போகிறார் என்னும் துக்கம் மேலோங்கி இருந்தது. ஒவ்வொரு ஜபமாகச் செய்யச் செய்ய, துக்கத்தின் அளவு அதிகமாகிக்கொண்டே இருந்தது. பின்னர் நடந்தது தான் ஆகக் கொடுமையானது.

அது சாரியாரின் ஆத்ம தர்ப்பணம். சாரியார் முழுமையான சந்நியாசியாக ஆவதற்குச் சற்று முன் நிகழும் நிகழ்வு அது. சாரியார் தனக்கே இறுதிக்காரியம் செய்து கொள்வது அது. ஒருவர் தனக்கே திவசம் செய்ய வேண்டும். அதை அவரது மனைவி ஒரு ஓரத்தில் நின்று பார்க்க வேண்டும். அதன் பின் இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆக வேண்டும். மிகக் கடுமையான சந்நியாச விதிகளில் இது முதன்மையானது.

சாரியார் தன் வலது கையை உயர்த்தி ஒரு மந்திரத்தை உரக்கச் சொன்னார். ‘ஓ மக்களே, மேலே இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தேவதைகளே, ஓ சூரியனே, உங்களிடம் நான் சூளுரைப்பது இது. நான் இனி நான் இல்லை. எனக்கும் இந்த உடலிற்கும் ஒரு தொடர்பும் இல்லை. நான் என் உடலில் இருந்தும், இந்த உடலின் தொடர்பில் உள்ளவர்களிடமிருந்தும், என்னிடமிருந்தும் விடுதலை பெறுகிறேன். எனக்கும் என் உடலிற்குமோ, எனக்கும் என் உடல் தொடர்புள்ள மற்றவர்களுக்குமோ இன்றிலிருந்து தொடர்பு அறுபடுகிறது. நான் நானாக இல்லாத இந்த உடலிற்குத் தர்ப்பணம் செய்கிறேன். இந்த உடலாகிய நான் இறந்து விட்டேன். இந்த ஆத்மா நல்ல கதி அடைவதாக’.

இந்தச் சூளுரைகள் தேவிகளைக் காயப்படுத்தின. ஆனாலும் சந்நியாச தர்மம் என்பது இதுவே என்று சாந்தமானார். அன்றிலிருந்து சாரியாருக்கும் அவரது இரத்த சம்பந்தமுள்ள யாருக்கும் தொடர்பில்லை என்று ஆனது. அதன் பிறகு இன்று தான் ஜீயராகச் சாரியார் விளாகம் வருகிறார்.

நான்கு நாட்கள் விமரிசையான விழாக்கள், உபன்யாசங்கள் என்று ஊர் திமிலோகப்பட்டது.

ஊருக்குள் இருந்த பெரிய மடத்தில் ஜீயரும் அவரது பரிவாரங்களும் முகாமிட்டிருந்தனர். கிளம்ப வேண்டிய நிலையில் ஜீயர் ஏற்பாடுகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தார். இரவு ஒன்பது மணி அளவில் கிளம்பினால்தான் மறு நாள் காலைக்குள் திருவள்ளூர் சென்று சேர முடியும். மறு நாளைய தினப்படி பூஜைகளுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்பதில் ஜீயர் கவனமாக இருந்தார்.

எட்டரை மணி அளவில் வத்சன் மூச்சிரைக்க ஓடி வந்தான். ‘ஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும். ரொம்பவும் அவசரம்’, என்று சொன்னான்.

மடத்தின் வெளியில் சலசலப்பு கேட்டு ஜீயர் மெதுவாக எழுந்து வந்து பார்த்தார். வத்சன் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தான்.

எழுந்து, வளைந்து நின்று, வாய்பொத்தி ,’அம்மா…’ என்றான்.

ஜீயரின் பூர்வாசிரம தாயார் சிறிது நாட்களாகவே படுக்கையில் இருந்தார். அவரைக் கனகவல்லி அம்மாள் தான் கவனித்து வந்தார். தான் செய்யவேண்டியது என்ன என்று ஜீயருக்குப் புரிந்த்து.

‘ஏற்பாடெல்லாம் ஆயிடுத்தா?’ என்றார்.

‘ஏற்பாடு’ என்றால் என்ன என்று வத்சனுக்குப் புரிந்தது.

‘ஆயிடுத்து அடியேன், யாரும் கண்ணுல பட மாட்டா’, என்றான்.

‘யாரும்’ என்பது ஜீயரான சாரியாரின் மனைவி கனகவல்லி என்பது வத்சனுக்குத் தெரியும். சந்நியாச ஸ்வீகரத்திற்குப் பிறகு மனைவி முன்னாள் கணவரின் பார்வை படும் இடத்தில் தென்படக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம். வைணவ மடங்களில் கடுமையாக்ப் பின்பற்றப்படும் ஒரு நியமம்.

வேறு ஓன்றும் பேசாமல் ஜீயர் திரிதண்டத்துடன் நடந்து வந்தார்.

சாரியார் தாயின் முகத்தைப் பார்த்தார். திரிதண்டத்தைக் கீழே வைத்து அக்னியை எடுத்துத் தாய் மேல் சேர்த்துப் பின் கை கூப்பினார்.

ஒரு முறை குளத்தில் நீராடி திரிதண்டம் எடுத்து ஜீயர் மடம் நோக்கித் திரும்பினார்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: