மதிப்புக்குரிய திரு ஆமருவி தேவநாதன் அவர்களுக்கு
வணக்கம். தங்களது பழைய கணக்கு சிறுகதை தொகுப்பை எனது மகனின் மாமனார் திரு சம்பத் அளித்தார். இன்னும் பக்கங்கள் இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்தான் தோன்றியது அதை வாசித்து முடித்ததும். உண்மைக் கதைகள் என்றாலும் நடை முறை வாழ்க்கையில் நாம் காணும் ஒவ்வொரு மனிதனிலும், நிகழ்ச்சியிலும் இத்தனை பரிமாணங்களைக் காணக் கூடிய பார்வை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தாலும் அதை ஒரு கலைப் படைப்பாக வெளியிடும் திறன் யாரோ ஒருவருக்குத்தான் அபூர்வமாக அமைகிறது. இரண்டும் உங்களுக்கு அமைந்தது என்போன்ற வாசகர்களுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும் விஷயம்.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவி பாடும் என்னும்போது தேரழுந்தூரில் பிறந்த நீங்கள் எழுதுவது வியப்பில்லை. மனிதநேயமும் , இயற்கையான நகைச்சுவை உணர்வும் ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகின்றன. ரசிகனாக, சாக்ஷியாக நீங்கள் ஒவ்வொன்றையும் வர்ணிக்கும்போது வார்த்தைகள் சுகமாக வந்து விழுவது ஆனந்தம்.
உங்களது அடுத்த வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ஸு ஜாதா விஜயராகவன்
———————————-
அன்புடையீர்,
உங்கள் அன்பிற்கும் ஆசிக்கும் நான் என்ன கைமாறு செய்வது என்று தெரியவில்லை.
நூல் படித்து மகிழ்ந்தது குறித்து மகிழ்ச்சி.
விரைவில் ‘நான் இராமானுசன்’ என்னும் தத்துவம் சார்ந்த நாவல் வெளி வர இருக்கிறது.
சில ஆங்கில நூல்களும் வரிசையில் உள்ளன.
உங்களின் தொடர்ந்த நல்லாதரவு வேண்டுகிறேன்.
நன்றி