குளிக்கறதா வாணாமா ?
ஒவ்வொரு தபா சவாரி போக சொல்ல இதே ரோதனை தான். போன வருஷம் வரிக்கும் அம்மா இருக்க சொல்ல, ‘ சவாரி போற, நல்லா குளிச்சிட்டு ரீஜன்டா போ’ ன்னு சொல்லும்.
அது சரி இப்போ குளிக்கறதா வாணாமா ? குளிக்காம போனா கால் டாக்ஸி கெளம்பாதா என்னா ? இல்ல சவாரி தான் ஏற மாட்டானா ?
காலைல அஞ்சு மணிக்கி அடையாறு போய் கஷ்டமர பிக்கப் பண்ணினு, அப்டியே மாம்பலத்துல கஷ்டமரோட அண்ணனையும் இட்டுகினு சுண்ணாம்பு கொளத்தூர் போய்வரணும். நல்ல சவாரி தான். ஆனா குளிக்கணுமா ?
குளிக்காட்டா இன்னா ஆவும் ? ஒடம்பு சுத்தம் இருக்காது. அது சரி. மெட்றாஸ் வெய்யில்லே குளிச்சா என்ன குளிக்காட்டா என்ன ? ஒரு வழியா சவாரி போய் வந்து பொறவு குளிக்கலாம்.
அட இன்னாபா காலங்காலைல அடையாறுல இம்மாங்கூட்டம் ? மூணாவது தெருதானே சொன்னாங்க ? ஆங்.. அதோ அந்த தனி ஊடு தான். பார்ட்டி பெரிய பார்ட்டியா இருக்கும் போல. அடையாறுல தனி ஊடு வெச்சிருக்காங்கன்னா பெரிய கைதானே.
அட அய்யிரா ? ஏதோ விசேஷம் போல. தார்பாச்சி வேட்டி கட்டியிருக்காங்களே. அம்மிணியும் மடிசார் கட்டி வராங்க. நல்ல சகுனம் தான்.
ஆறு மணிக்கு மாம்பலத்துல என்ன கூட்டம் ? இந்த ஊர்ல எல்லாருமே மாம்பலத்துலதான் இருக்காங்களோ ?
‘இன்னா சார், குளிக்கலையான்னு கேக்கறீங்களா ? ஆமாம் சார். விடிகாலைல தண்ணி வர்ல. அதான் குளிக்கல. வேணும்னா சென்ட் அடிக்கட்டுமா சார் ?’
அட ராமா. இவுங்களுக்கும் தெரிஞ்சு போச்சே.
‘இன்னும் அரை மணி தான் சார். தாம்பரம் வந்துடும். பொறவு கால் மணில சுண்ணாம்பு கொளத்தூர் போயிடலாம் சார்’.
இன்னா கண்றாவிடா இது ? அண்ணனும் தம்பியும் என்ன பேசிக்கறானுங்க ? நல்ல விஷயத்துக்குப் போறானுங்க. ஏதோ கெரப்பிரவேசம் போல. ஆனா புது ஊடு கட்டினவங்களப்பத்தி இப்பிடி பேசுறாங்களே.
‘இதான் சார் அந்த தெரு. அதோ தெரிது பாருங்க அது தான் சார் அந்த ப்ளாட்டு. வாழை மரமெல்லாம் கட்டியிருக்காங்களே ’
அண்ணனும் தம்பியும் வீட்டுக்குள்ள போயிட்டாங்க. கொஞ்சம் காத்தாட வெளில நிக்கலாம்.
இந்த அய்யமார் வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது. வெளிலயே நின்னுக்கணும். எதுனா சொல்லுவானுவ. நமக்கு புரியாது. சாடையா சொல்லுவானுவ. வெளங்காத பயலுவ. அதான் எல்லா பேரும் அமெரிக்கா போயிட்டனுவ. ஒருவேள வெள்ளக்காரங்கிட்ட தீட்டு பாப்பானுங்களோ ?
ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசினாங்க காருக்குள்ள? ஏதோ இந்த வீட்டுக்காரங்க கடன் வாங்கினாங்களாம். ஆனா இப்ப வீடு வாங்கறாங்களாம். ஏக பொகச்சல் போல.
அட என்னப்பா ? போன வேகத்துல திரும்பி வராங்க. பின்னால ஓடி வார அம்மிணி இவுங்க போலவே இருக்கே. ஒரு வேள அக்கா, தம்பியா இருக்கலாம். ஆனா அழுவுது ?
‘வந்தவாள வாங்கோன்னு சொல்ல வக்கில்ல. அப்புறம் எதுக்குக் கூப்ட?’
‘இல்லடா கண்ணு தெரியல்லே. யார் வந்திருக்கான்னு புரியல்ல. வரச்சொல்லிட்டு வாங்கோன்னு சொல்ல மாட்டேனா?’
‘ஆமா ஆமா. கண்ணு தெரியாது, காது கேக்காது. பணம் வந்திருக்கோனோ, அதான் கண்ண மறைக்கறது’.
‘அட நாராயணா ! நான் தான் பாக்கல்லே, பின்னாடி நின்னுண்டிருந்தேன்னு சொல்றேனோனோ ? இவ்வளவு தூரம் வந்துட்டு இப்பிடிப் பேசாதேடா’.
‘இப்போ நாங்கள்லாம் உங்களுக்கு வேண்டாம். பணம் வந்துடுத்து. அடையார்லேர்ந்து வரோம். வந்தவாள வாங்கோன்னு சொன்னா பெருமை கொறஞ்சுடுமா ? இருக்கட்டும்.’
‘தோ பார்ரா, நான் முடியாம இருக்கேன். ஏதோ பிள்ளை வாங்கியிருக்கான் வீடு. வந்து ஆசீர்வாதம் பண்ணுவியா இப்பிடி விடுவிடுன்னு போனா நன்னா இல்லே.’
‘எது நன்னா இருக்கு, எது நன்னா இல்லன்னு அவா அவாளுக்குத் தெரியும். நாங்க வறோம்’.
‘டே வேண்டாம்டா. எங்க சம்மந்தில்லாம் வந்திருக்காடா. எல்லாரும் பாக்கறாடா. அக்காவாத்துக்கு வரதுக்கு எதுக்குடா வரவேற்பெல்லாம்? நான் தான் பாக்கல்லேன்னு சொல்றேனே’.
‘உங்க சம்மபந்திக்கு முன்னாடி எங்கள அவமானப் படுத்தணும்னே தானே இப்பிடிப் பண்ணினே நீயும் அத்திம்பேரும். நன்னா இருங்கோளேன், யாருக்கு வேணும் உங்க மரியாத எல்லாம்.’
உள்ள போனவங்கள வான்னு கூப்பிடல போல. அந்தம்மா கண்ணு தெரியலேங்குது. இவுனுங்க கத்திட்டு வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் நல்ல காத்துல நிக்க முடியுதா ? என்ன பொழப்பு இது ?
‘என்னா சார் ? ரேடியோவா சார். யாரோ அய்யிரு சாமி பேசறாருங்க. வெக்கவா சார்?’
‘வேளுக்குடி கிருஷ்ணன் என்னமா சொல்றார் ? விசிஷ்டாத்வைத தத்வ ரத்னாகரம்னு பட்டம் குடுக்கலாம். உடம்பு வேற, ஆத்மா வேற. சுகம், துக்கம், சோகம், சம்ஸ்காரம், மரியாதை, அவமரியாதை எல்லாம் உடம்புக்குதான், ஆத்மாவுக்கு இல்லை. உடம்பு சாஸ்வதம் இல்லை. ஆத்மா தான் சாஸ்வதம். ஆகையால இந்த உலகத்துல நடக்கற காரியங்களால பாதிப்படையாம ‘ஸ்திதப் ப்ரக்ஞன்’ அப்பிடிங்கற ஸ்தானத்த நாம எல்லாரும் அடையணும்’ அடாடா என்ன வியாக்யானம். என்ன ஸ்பஷ்டம்?’
ஒண்ணும் பலன் இல்ல. குளிக்க வாணாம்னு முடிவு பண்ணிட்டேன்.