வாடகைக் காரின் முன் பெரும் மக்கள் திரள். கூட்டம் நகராமல் நின்றிருந்த்து. விமான நிலையம் விட்டு வெளியே வந்தவுடனே இந்தியாவை உணரத் துவங்கினேன். ‘கட்சிக் கூட்டம் ஸார். சாவடிக்கறானுக’, என்று அங்கலாய்த்தார் ஓட்டுனர்.
எங்கு பார்த்தாலும் சிவப்புக் கொடிகள் அருவாள் சுத்தியல் சின்னத்துடன். ‘மதவாத எதிர்ப்பு’, ‘நில உரிமைச் சட்டம்’ என்று எழுதப்பட்ட பதாகைகள் எங்கும் தென்பட்டன. கொடி ஏந்தியவர்களில் பெரும்பாலும் வயதானவர்களும் சில முதிய பெண்களும்.
தூரத்து மேடை மேல் என் வயதொத்த ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் சாயலில் எங்கள் ஊர் வாடை அடித்த்து. உற்றுப் பார்த்தேன். முகம் பரிச்சயமாக இருந்தது. காரை விட்டுக் கீழே இறங்கினேன். சந்தேகத்துடன் மேலும் கண்களை இடுக்கிப் பார்த்தேன். கொடி பிடித்திருந்த ஒரு இளைஞி சொன்னார்,’தோழர் ஆராவமுதன் பேசறார், தோழர். அனல் தெறிக்குது பாருங்க’.
ஒரு நிமிடம் என் கால்கள் பஞ்சு போல ஆவதை உணர்ந்தேன். ஆராவமுதன். எப்படிப்பட்டவன் அவன் ? சிவப்புச் சட்டை அணிந்து சிம்மம் போல் ‘முதலாளித்துவத்தை’ கிழித்துக்கொண்டிருந்த அமுதனை நம்ப முடியாத கண்களுடன் உற்றுப் பாத்தேன்.
ஆம். அவனே தான். நெற்றியில் அதே காயத் தழும்பு. பள்ளியில் காற்பந்து விளையாடிய போது கீழே விழுந்து ஏற்பட்ட விழுப்புண். நான் தான் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். இருபத்தைந்து வருடங்கள் கழிந்தாலும் பழைய நினைவுகள் அப்படியே மீண்டு வந்தன.
வகுப்பில் என் பென்ச்சிற்கு அடுத்த பலகை அமுதனுடையது. அவனை அப்படித்தான் நான் அழைப்பேன்.
அவன் பட்டாச்சாரியாரின் மகன். நல்ல வரும்படி. நில புலன்களும் நிறைய. அடுத்த வேளை உணவு பற்றியோ எதிர்காலம் பற்றியோ கவலை கொள்ளத் தேவை இல்லை என்றால் கலை, இலக்கியம், இசை எல்லாம் கைவரும் போல. அவனுக்கு அப்படித்தான் நடந்தது.
பள்ளியின் அனைத்துப் பேச்சுப் போட்டிகள், காற்பந்துப் போட்டி, நாடகம் என்று வெளுத்து வாங்கினான் அமுது. படிப்பிலும் சூரன் தான். பாரம்பரியம் காரணமாகப் பாசுரங்கள் அத்துப்படி. சில வேளைகளில் தனியாக சைக்கிளில் சென்று வரும்போது பாசுரங்களை நல்ல ராகத்தில் பாடிக்கொண்டே வருவான்.
எனக்கு அமுதனைக் கண்டு சற்று பொறாமையும் உண்டு. எதையும் ஒரு முறை படித்தாலே நினைவில் நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தான். எத்தனை நாள் கழித்துக் கேட்டாலும் அப்படியே சொல்வான். நிறைய வாசிப்பான். தடை செய்யப்பட்ட நூல்கள் என்று சொல்லி சில சிவப்பு அட்டை போட்ட நூல்களை அடிக்கடி படிக்கத் துவங்கினான்.
சிவப்பு நூல்களில் பல, உயர்தர ஆங்கிலத்தில், நல்ல வழுவழுப்பான அட்டை போட்டு ரஷ்ய வெளியீடுகளாக இருந்தன. பலமுறை நான் அந்நூல்களின் தாள்களைத் தடவிப் பார்த்ததுண்டு. நம் நாட்டுத் தாள்கள் ஏன் இவ்வாறு இருப்பதில்லை என்று எண்ணியதுண்டு. அவற்றைப் பார்க்கும் போது என் பள்ளி நூல்கள் செவலைப் பிள்ளைகள் போல் தோன்றும்.
இப்போது பார்த்தால் முழுநேர இடதுசாரி அரசியல்வாதி போல் பேசிக்கொண்டிருந்தான் அமுது. நேராக மேடையின் கீழே சென்று நின்றுகொண்டேன். அவன் என்னைப் பார்க்கவில்லை. வீராவேசமாக மத்திய அரசைச் சாடிக்கொண்டிருந்தான். அங்கு காரியஸ்தர் போல் தோற்றமளித்த ஒருவரிடம் என் அறிமுக அட்டையைக் கொடுத்து அமுதனிடம் கொடுக்க்ச் சொன்னேன். அதில் ‘மாயவரம்’ என்று எழுதியிருந்தேன்.
அன்று இரவே வந்து சந்திக்கும்படி அழைப்பு வந்தது. உணவருந்தத் தயாரக வருமாறு அவனது உதவியாளர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.
அமுதனைச் சந்திக்கச் சென்ற இடம் குரோம்பேட்டையில் ஒரு பழைய தொழிற்சங்கக் கட்டடம். அதற்கு எப்படியும் எண்பது வயதாவது இருக்கும். உள் அறையில் முப்பது வயதான மின்விசிறி சப்தத்துடன் வயதான கிழவர் நடப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தது. எந்நேரமும் விழுந்துவிடும் என்று தோன்றியது. அதன் கீழ் குறைந்தது அறுபதாண்டுகள் பழமையான மர மேஜையின் பின் வெள்ளை சட்டை போட்டு சிரித்தபடியே அமர்ந்திருந்தான் அமுதன். நெற்றியில் திருமண் இருந்ததற்கான தடயமே இல்லை. முழுவதுமாக மாறியிருந்தான் அவன்.
இருபதாண்டுப் பயணங்கள் குறித்துப் பேசினோம். உணவு முடிந்து சற்று சாவதானமாகத் தொடர்ந்தோம்.
‘ஏண்டா இப்படி ஆயிட்டே ? அப்பா ஒண்ணும் சொல்லலையா ?’, என்றேன்.
மிகப் பெரிய ஆற்றைத்தடுத்து நிறுத்தியுள்ள மாபெரும் அணையின் மதகைத் திறந்தது போல் அடுத்த ஒரு மணி நேரம் பேசினான்.
‘நீ கேக்கறது புரியறது. ஏண்டா நாஸ்திகவாதம் பேசற, பட்டாச்சாரியார் பரம்பரை ஆச்சேன்னு கேக்கறே’.
‘உனக்கு ஞாபகம் இருக்கா நம்ம ஸார் கிளாசுல எனக்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதங்கள் ? அதுதான் ஆரம்பம்’, என்று துவங்கினான்.
ஸார் எங்கள் தமிழாசிரியர். இலக்கியங்களில் கரைகண்டவர். அவருடன் அமுதன் பலமுறை வகுப்பில் தர்க்கவாதம் புரிந்திருக்கிறான். ‘தாஸ் கேப்பிடல்’ மற்றும் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நூல்கள், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா முதலிய மார்க்சீய சிந்தனையாளர்களின் கருத்துக்களை அவன் வகுப்புக்குக் கொண்டு வருவான். அதற்கு ஸார் பதிலளிப்பார். சில புரிந்தும், பல புரியாமலும் நாங்கள் கேட்டபடி அமர்ந்திருப்போம்.
ஒன்று மட்டும் புரிந்தது. அமுதன் போன்ற ஆழ்ந்த ஞானமும் வாசிப்பும் தர்க்க அறிவும் உள்ள மாணவன் இடது சாரிகள் பக்கம் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று பிரம்மப்பிரயத்தனம் மேற்கொண்டார் ஸார்.
‘ஞாபகம் இருக்கு. ஸார் அவ்வளவு பேசியுமா நீ இப்படி ஆயிட்டே ?’, என்றேன் நான்.
‘ஸார் என்னடா சொன்னார் கீதையப் பத்தி நான் கேள்வி கேட்டப்ப ?’, ஆவேசமாக்க் கேட்டான் அமுதன்.
நன்றாக நினைவில் இருந்தது. அன்று வகுப்புக்கு சற்று முன்னதாகவே வந்துவிட்டார் ஸார். அவரிடம் கீதையின் சாரம் சொல்லும் ஒற்றைச் செய்தி என்ன?’ என்று கேட்டான் அமுதன்.
‘ஏன், சந்தேகமே இல்லாம சரணாகதி தத்துவம் தான்,’ என்றார் ஸார்.
இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் அந்த உரையாடால் என் நினைவில் இருந்தது. ஒரு சாதாரண வகுப்பறை மாபெரும் தத்துவ விவாதத் தளமாக ஆன அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அமுதனும் ஸாரும் நிகழ்த்திய அந்தத் தர்க்க வாதம் வெகு நேரம் நீண்டது. ஆங்கில ஆசிரியரும் அதில் கலந்துகொண்டார் என்றால் அதன் ஈர்ப்பு எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
‘சரணாகதிங்கறது நம்ம வைஷ்ணவாள்ளாம் சேர்ந்து கீதைக்குப் போட்டிருக்கிற தத்துவ விலங்கு ஸார். கீதை அதுக்கு மேலேயும் போறது’, என்றான் அமுதன்.
‘உண்மை தான். சரணாகதி இரண்டாவது அத்யாயமான சாங்கிய யோகத்துலேயே இருக்கு. ஆனால் அதற்கு அப்புறம் மேலும் பல அத்யாயங்கள்ள கர்ம யோகம், ஞான யோகம் எல்லாம் சொல்றார். இருந்தாலும் வெகு ஜனங்களால ஞான யோகமெல்லாம் சாதகம் பண்றது கஷ்டம் இல்லையா?’ அதனால சரணாகதித் தத்துவமான ‘சர்வ தர்மான் பரியஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ ங்கற சுலோகம் ஒண்ணு மட்டும் போதும்னு சொல்றேன். லௌகீகமான பொருளாதாரம் சார்ந்து வாழற மக்களுக்கு ஏத்தது ஞான யோகம் இல்லை. பக்தி தான், சரணாகதி தான். ஏதோ வயத்தக் கழுவிக்கணும், குடும்பத்தைக் காப்பாத்தணும் அதோட பெருமாள் விக்ரஹம் முன்னே ஒரு புஷ்பம் போட்டு ‘நாராயணா நீயே சரணம்’னு ஒரு வரி சொல்லிட்டு அவன் மத்த லௌகீக வாழ்க்கைக்குப் போகணும். அதனால பக்தி யோகம் மட்டுமே கலியுகத்துக்குப் போறும். அதனால சரணாகதி ஒண்ணே கீதையோட சாரம்னு சொல்றேன். மக்களால அனுஷ்டிக்க முடியாத ஞான யோகத்துனால அவாளுக்கு என்ன பலன்?’, என்றார் ஸார்.
ஸாரின் வாதம் சரியாகவே பட்டது எனக்கு.
ஆனால் அமுதன் மேலும் தொடர்ந்தான்.
‘ஆனா ஸார், அப்போ பக்தி யோகத்தையும் சரணாகதி தத்துவத்தையும் கடைசிலே வைக்காமல் ஏன் முன்னாடியே சாங்கிய யோகத்துல வெச்சிருக்கார்? பக்தி, சரணாகதி இதெல்லாம் கடந்து அப்புறம் அடையவேண்டிய உயர் நிலையே கர்ம யோகமும் ஞான யோகமும்ங்கறதால தானே ? அதோட, சாதாரண மக்களால சரணாகதி தத்துவம் தாண்டி யோசிக்கத் தெரியாதுங்கறீங்களா?’, என்று கேள்வி எழுப்பினான் அமுதன்.
ஸாரைத் தாக்குவது போல் தோன்றியது எனக்கு. இதற்கு அவர் பதில் அளிக்காமல் அவனை அமரச் செய்யவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் ஸார் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பது போல் புன்முறுவல் பூத்தபடியே அதற்கும் பதிலளித்தார்.
‘அமுதா, நீ சொல்றது நல்ல பார்வை. ஒரு ஆராய்ச்சியை இப்படித்தான் பண்ணணும். நான் சொல்ல வந்தது இது தான். கி.பி. ஆறு, ஏழு நூற்றாண்டுகள்ல மக்கள் கிட்டே சிந்தனாசக்தி அதிகம் இருந்தது. ஆதி சங்கரர் அத்வைத ஞானத்தைப் பரப்பின நேரம். அப்பவே உடம்பு வேற, ஆன்மா வேறன்னு சாதாரண மக்களுக்குப் புரிஞ்சு அதுனால சமணம், பௌத்தம்னு பல சம்பிரதாயங்களோட வாதம் எல்லாம் பண்ணியிருக்கா. அந்த மக்கள் கிட்ட போய் ஞான யோகம், மோட்ச சந்நியாச யோகம் எல்லாம் பேசலாம்.அவாளால அதை மேல எடுத்துண்டு போக முடியும்.
ஆனால் அதுக்கப்பறம் பக்தி இலக்கிய காலம் வந்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் என்ன சொல்லியிருக்கா ?
‘அந்தி மூன்றும் அனல் ஓம்புதலை விட உன் திருவடி போதும்’னு பேசறா. அதுக்கும் மேல மோட்சமே வேண்டாம். உன் நாமத்தையே சொல்லிண்டு பூலோகத்துலயே இருந்துடறேன். உதாரணத்துக்கு இந்த பாசுரம் தெரியாதா உனக்கு ?
“பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே”
நாம சங்கீர்த்தனம் மட்டுமே போரும்னு அவாளே சொல்றா. சாதாரண மக்கள் உய்யறதுக்கு பகவானோட நாமத்தைச் சொன்னாலே போறும்னு அப்பவே ஆயிடுத்து. ஆக, சாதாரண லௌகீக மக்கள் ஞானம், மோட்சம் எல்லாம் முடியாதுன்னு ஆழ்வார்களூக்கே தோணியிருக்கு.
அது மட்டும் இல்லை. பக்தி இலக்கியக் காலத்துக்கு அப்புறம் வந்த இராமானுஜர், எல்லாரும் மோட்சம் போக ஒரே வழின்னு நாராயண நாமத்தை மக்களுக்கு உபதேசிக்கிறார். ஆனா அவரேதான் கீதைக்கு பாஷ்யமும் எழுதறார். அவர் என்னோட பாஷ்யத்தின் படி படிச்சு மோட்சத்துக்குப் போங்கோன்னு ஏன் சொல்லவில்லை ? அவரே ஏன் சாணாகதியை வலியுறுத்தறார்?’, என்றார் ஸார்.
‘இராமானுஜர் சாமானிய மக்களின் அறிவைக் கம்மியா எடை போட்டார் என்கிறீர்களா ஸார்?’, என்று கேள்வி எழுப்பினான் அமுதன்.
ரொம்பவும் அதிகபிரசங்கியாக இருக்கிறானே என்று பட்டது எனக்கு. ஆனால் ஸார் அப்படி நினைக்கவில்லை.
‘அப்படி இல்லை. இராமானுசர் சாதாரண மக்களும் மோட்சம் நோக்கிப் போறதுக்கு என்ன வழின்னு யோசிச்சார். ஞானம், யோகம் என்று பாதை கடினமாக இருந்தால் மக்கள் திசை மாறி விடுவர். மேலும் ஜாதி அமைப்பும் அவர்கள் உய்வதற்கு வழி செய்யவில்லை. ஆகவே எல்லாருக்கும் புரியட்டும்னு ‘நாராயண’ நாமத்தை எல்லாருக்கும் உபதேசித்தார். இங்கே ரொம்பவும் சாதாரணமா சமூகத்துல கீழ் நிலைல இருக்கறவாளும் கரை ஏறணும்கற சம தர்ம இரக்க மனசு காரணம். அவாளுக்கு அறிவில்லேன்னு அர்த்தம் இல்லை.
ஞான மார்க்கம் வழியா மேலேற கல்வி வேணும். கல்வி கத்துண்டு எல்லாரும் படிச்சு ஞானம் அடைய ரொம்ப தலைமுறை ஆகும். உடனடியா ஒரு சமத்துவமும் உயர்வும் வேணும்னா எல்லாருக்கும் ‘அஷ்டாட்சரம்’ ( ஓம் நமோ நாராயணாய ) உபதேசம் பண்ணனும்னு செஞ்சார்’, என்றார் ஸார்.
சிறிது நீர் அருந்திவிட்டு மேலும் தொடர்ந்தார்.
‘அவர் காலத்துக்கப்புறம் வைஷ்ணவம் ரெண்டாச்சு. ஆப்கானிஸ்தான் அங்கிருந்தெல்லாம் படை எடுப்பு. அப்புறம் வெள்ளைக்காரா வர வரைக்கும் ஒரே களேபரம், பஞ்சம், பட்டினி. அதுக்கப்புறமும் பஞ்சம். இதிலெல்லாம் மக்களோட தேடல்கள் எல்லாம் பாழாப்போய் வெறும் சோற்றுப் பிண்டங்களாக மனிதர்கள் வாழ ஆரம்பிச்சா.
தேச விடுதலைக்குப் பிறகும் மக்கள் சாப்பாட்டுக்கு வழி செய்யற வேலைக்குத் தான் போனா. ஆத்ம விசாரம், ஞான மார்க்க முயற்சிகள் என்று எதுவும் இல்லை. ஏன்னா வெள்ளைக்காரா கொண்டுவந்த அடிமை அறிவுக் கல்வி மக்களை மர மண்டைகளா ஆக்கிடுத்து. இன்னும் அப்படித்தான் இருக்கு.
ஆகையால ‘கீதை மோட்ச சந்நியாச யோகம் போதிக்கற ஞானத் தேடலை முன் வைக்கறது, அதனால் எல்லாரும் அந்த வழியே போங்கோ’ன்னா அதைப் படிக்கறவனும் படிக்க மாட்டான். அதுனாலதான் இராமானுஜர் சொன்ன மாதிரி நானும் ‘சரணாகதி தத்துவமே கீதையின் சாரம்’னு சொல்றேன்’, என்று நிறுத்தினார்.
அமுதன் எழுந்து நின்று கை கூப்பினான். நாங்கள் அனைவரும் எழுந்து நின்று செய்வதறியாது விழித்தோம். சிலரது கண்களில் கண்ணீர், ‘எப்பேர்ப்பட்ட வியாக்கியானம்!’ என்று.
சன்னதம் கொண்டவர் போல் மேலும் தொடர்ந்தார். அவர் கண்களில் ஒரு தீவிர ஒளி தென்பட்டது.
‘ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு பெரிய மாமரம் இருக்கு. சில பூச்சிகள் அதோட இலைய சாப்பிடறது. சிலது மாம்பூவுல இருக்கற தேனை சாப்பிடறது. சிலது பழத்த சாப்பிடறது. சில பறவைகள் மரத்த ஓட்டை போட்டு அதுக்குள்ள இருக்கற புழுக்கள சாப்பிடறது. ஆனா மரம் ஒண்ணுதான். கீதை அந்த மாமரம் போன்றது. யாருக்கு எப்படி சாப்பிடப் பிடிக்கிறதோ அப்பிடி சாப்பிடலாம். ஆனா எல்லாராலும் சுலபமா சாப்பிடறதுக்காக ‘சரணாகதி’ங்கற பழத்தை சாப்பிடுங்கோன்னு நான் சொல்றேன்’, என்று கூறி நாற்காலியில் அமர்ந்தார். ஆங்கில ஆசிரியர் கண்களில் நீருடன் எழுந்து நின்று கை தட்டினார்.
‘கடைசியா ஒரு கேள்வி ஸார்’, என்றான் அமுதன்.
‘நன்னா கேளு. ‘கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப்படாத செவி’ன்னு வள்ளுவர் சொல்றார். நீ கேட்கற கேள்விகளைப் பார்த்தா விவேகானந்தர் உன் ரூபத்தில் மீண்டும் வந்திருக்கிறாரோன்னு தோண்றது,’ என்றார்.
அமுதன் நெகிழ்ச்சியுடன் கேட்டான். ‘இந்த சாப்பாட்டுக் கல்வி பத்திக் கவலைப் படாமல் மேற்கொண்டு ஞான யோகம் தேடி நான் போகக் கூடாதா? இந்த லௌகீகக் கல்வியால எனக்கு ஒரு பயனும் இல்லையோன்னு தோண்றது,’ என்றான்.
ஸார் மௌனமானார்.
‘லௌகீகக் கல்வி எல்லாருக்கும் ஆனது. அதைக் கத்துக் கொடுக்கத் தான் நான் சம்பளம் வாங்கறேன். அதனால இதிலிருந்து வெளியே போய் ஞானத்தைத் தேடுன்னு என்னால சொல்ல முடியாது. முதல்ல நான் ஞானம் நோக்கிப் போறேன். அப்புறம் உனக்கு வழி காட்டறேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா மேல படிச்சுண்டு இரு’, என்று ஒரு கையைத் தூக்கி ஆசி வழங்குவது போல் சொல்லிவிட்டுச் சென்றார்.
ஆனால் அதற்கும் அமுதனின் இன்றைய நிலைக்கும் என்ன தொடர்பென்று புரியவில்லை. கேட்டேன்.
‘சரிதான். தொடர்பில்லை தான். ஆனால் பதினாறு வருஷம் நான் கல்கத்தாவுல பல்கலைக் கழகத்துல தத்துவப் பேராசிரியரா இருந்தேன். போன வருஷம் மாயவரம் வந்தேன்.
எத்தனையோ மாணவர்களுக்கு அறிவுக்கண் திறந்து வெச்ச அவர், கை கால் இழுத்து, பாரிச வாயு வந்து நிலை குலைஞ்சு கிடந்தார்.
காரல் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவ அரசுகள் அவரைக் கண்டுக்கலை. வணிக நோக்குல மட்டுமே செயல் படற பெரிய மருத்துவமனைகளால அந்த அறிவுச் சுடருக்கு சேவை செய்ய முடியல்ல. பணம், பணம்னு பிடுங்கித் தின்னானுங்க மருந்துக் கம்பெனிகள் எல்லாம். பதினாறு வயசுல எனக்கு ஆத்மா, உடல், பிரபஞ்சம்னு அறிவுக்கண்ணைத் திறந்த அவருக்கு, என்னால பணத்தால ரொம்ப ஒண்ணும் பண்ண முடியல.
அப்போ முடிவெடுத்தேன். இந்த தத்துவம்,விசாரம் எல்லாம் நம்ம நாட்டுக்கு இப்ப மட்டும் இல்லை, எப்பவுமே தேவை இல்லை. ஸார் சொன்ன மாதிரி சோத்துக் கல்வி, சோத்துக்கான வாழ்க்கைன்னு இருக்கற நாட்டு மக்கள் மத்தியில அந்த மாதிரி விசாரமெல்லாம் வர்ரதுக்கு இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். சாமானிய மக்கள் செத்த அப்புறம் மோட்சம் அடையறாளா இல்லையாங்கறது இப்ப அவசியம் இல்லை. வாழறச்சே தினம் தினம் செத்து செத்து வாழாம இருக்காளாங்கறது தான் முக்கியம். இது தான் இப்போ இருக்கற ஒரே தேவை. அதுக்கு சுரண்டல், மேலதிகாரம் எல்லாம் போகணும். இந்த முதலாளித்துவ அமைப்புகளால இயக்கப்படற அரசுகளும் வணிக நிறுவனங்களும் அழியணும். அதுக்கான முயற்சியே தேவைன்னு இதிலே முழுசா இறங்கிட்டேன்’, என்றான்.
ஸார் இருந்தால் ஒப்புக்கொள்வார் என்று தோன்றியது.
அமுதனை எனக்கும் பிடித்துவிட்டது. பட்டினி கிடப்பவர்களிடம் மதத்தைப் பற்றி பேசாதீர்கள் என்றார் விவேகானந்தர் அன்று. அதையே தான் அமுதனும் சொல்லுகிறார். ஆனால் அதை மாற்றஅமுதன் எடுத்த முயற்சியும், விவேகானந்தர் எடுத்த முயற்சிகளும் வேறு வேறானது, இல்லையா?
LikeLike
good
LikeLike
Thank you
LikeLike
என்னுடைய கல்லூரி தோழன் தான் ஞாபகத்திற்கு வருகிறான். கல்லூரியில் படிக்கும் போது தீவிர வைஷ்ணவன், இப்போது தீக்கதிரில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த மாற்றத்திற்கான காரணம் தெரியாது ஆனால் அமுதன் இல் அவனைக்காண்கிறேன்.
LikeLike