உயர் திரு இராம கோபாலன் ஜி அவர்களுக்கு ,
அசட்டு அம்மாஞ்சி எழுதிக் கொள்வது.
சமீபத்தில் ‘வீடு திரும்புதல்’ நிகழ்ச்சி ஒன்றிற்கான அழைப்பிதழ் பார்த்தேன். உங்கள் இந்து முன்னணி வெளியீடு என்று அறிந்துகொண்டேன்.
இந்து தர்மத்தை விட்டு விலகியவர்களை மீண்டும் உள்ளே அழைப்பது நல்லது தான். ஆனால் சில கேள்விகள் எழுகின்றன. தீர்க்க முடியுமானால் செய்யுங்கள்.
வீடு திரும்புபவர்கள் எந்த சாதிக்குள் சேர்த்துக்கொள்வீர்கள் ? தலித்தாக வெளியேறி மீண்டும் உள்ளே வருபவரை தேவர சாதியில் சேர்ப்பது உங்களால் முடியுமா ?
வீடு திரும்பி தேவரான தலித்தை தேனி மாவட்டத்தில் கோவில் தேர் இழுக்க விடுவார்களா ?
வீடு திரும்புபவர்கள் பிராமணர்களாக விரும்ப மாட்டார்கள். ஆவதால் அரசாங்கப் பலன் ஒன்றும் இல்லை என்பதால் சொல்கிறேன். ஒரு வேளை அப்படி விரும்பினால் அவர்களுக்கு உபநயனம் செய்துவிக்க இராமானுசர் தயாரா ?
பிராமணராக உருமாறும் தலித்தை எந்தக் கலையில் சேர்ப்பது ? தென்கலை ஐயங்காராக ஆனால் முதல் தீர்த்தம் கொடுக்க இப்போது உள்ள தென்கலையார் ஒப்புக்கொளார்களா ? அவர்கள் வடகலையாரையே கோவில் உள்ளே விட யோசிக்கிறார்களே, அதனால் கேட்கிறேன்.
ஒருவேளை பிள்ளைமாராக அவர்கள் மாறினால் எட்டு வீட்டுப் பிள்ளைமார் வகையறாவில் சேர முடியுமா ? அதிலும் தின்னவேலிப் பிள்ளைமாராக முடியுமா ?
வீடு திரும்புபவர்கள் செட்டியாராகச சேர்ந்தால் எந்தச் செட்டி? மஞ்சள் பூச்சா, நாட்டுக்கோட்டையா? இல்லை வேறு ஏதாவதா ?
அவர்கள் கௌண்டர்களாக வழி உண்டா? வேளாளக் கௌண்டரா, வீர சைவக் கௌண்டரா ?
இன்னும் எவ்வளவோ சாதிகள் உள்ளன. அதில் எல்லாம் எத்தனையோ உட்பிரிவுகள் உள்ளன. உள்ளே கொண்டுவந்து சரியான உட்பிரிவில் சேர்ப்பது ரொம்ப கஷ்டம். பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆசை காட்டி மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் அழைப்பது நல்லதே. ஆனால் அவர்களை என்னவாக அழைப்பது என்பது ரொம்ப பெரிய சமாச்சாரம். சூதனமாக நடந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லி வருகிறது. ஆக அவர்கள் கிறித்தவர்களாக, இசுலாமியர்களாக இருந்தாலும் அவர்களும் இந்துக்கள் தானே ? அப்போது வீடு திரும்புதல் எப்படி சாத்தியமாகும் ?
ரொம்பவும் குழப்பமாக இருக்கிறது.
நன்றி
அசட்டு அம்மாஞ்சி