திருமலை ஐயங்காரை உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஏனெனில் அவர் போய்ச் சேர்ந்து 70 வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால் வீட்டில் அவரைப் பற்றி பேசாத நாளே இல்லை.
வெள்ளைத் துரைகள் எல்லாம் அடிக்கடி வந்துகொண்டிருந்த நேரம் அது. கம்பர் மேட்டைப் பிளந்து கொண்டிருந்தார்கள். நிறைய அள்ளிக்கொண்டு போனார்கள் என்று பேச்சு. அதனால் ஊரே புழுதிப் படலம் நிரம்பியதாய் இருந்தது.
திருமலை மடைப்பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். நெற்றியிலும் மார்பிலும் வியர்வை மழையில் நனைந்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கரி வேஷ்டியில் இன்னும் கரி ஒட்ட இடம் இல்லை. அடுப்புக்கரி ஒட்டத்தானே செய்யும்? ஊரை விட்டு வந்த பின்பு சாதம் போடுவது மடைப்பள்ளி வேலை தான். ஏதோ பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் இந்த வேலை கிடைத்ததோ ஆறு வயிறுகள் நிரம்புகின்றன. விடியற்காலை 4 மணிக்கு மடைப்பள்ளி வந்தால் முதுகு ஒடிய வடைக்கு அரைப்பது, பாத்திரம் தேய்ப்பது, அக்கார அடிசிலும் வெண்பொங்கலும் தளிகை பண்ணுவது என்று 5 மணி நேரம் போவதே தெரியாது.
பண்ணின அத்தனையும் பெருமாளுக்கு அமுது செய்யப் பண்ணிய பிறகு மத்தியானத் தளிகைக்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் இன்னொரு தடவை தீர்த்தாமாடிவிட்டு மடைப்பளியில் நுழைந்தால் வேலை முடிய மதியம் ஒரு மணி ஆகும். பெருமாள் அமுது செய்தல், பின்னர் ஊர்ப் பிரமுகர்களுக்குத் ததீயாராதனம் என்று இன்னும் ஒரு மணி ஆகும். மிச்சம் இருக்கும் பிரசாதங்களைக் கொஞ்சமாக வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போனால் ஆறு பேரின் அன்றைய சாப்பாட்டுக் கவலை தீரும். மறுநாள் மற்றுமொரு நாள்.
திருமலைக்கு வீட்டிற்கு வரவே தற்போதெல்லாம் பிடிப்பதில்லை. பெரியவள் கோமளத்திற்குப் பதினைந்து வயதாகிவிட்டது. கல்யாண வயது கடந்து மூன்று வருஷங்கள் ஆகிவிட்டது. சீரும் செனத்தியுமாக எப்படியும் ஐம்பது ரூபாயாவது ஆகும். அதெல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. கொஞ்ச நாட்களாக இடைவிடாத சளி இருமல் தொல்லை வேறு வந்துள்ளது. என்னவென்று தெரியவில்லை.
‘நாளைக்குக் கார்த்தால பெரிய மிராசுதார் ஆத்துல திவசம். தளிகை பண்ணச் சொல்லிவிட்டிருக்கா. போனா அரை ரூபாய் கிடைக்கும். ஒரு வாரம் ஆத்துல அடுப்பு எரியும்.
மடைப்பளியில் இருந்திருந்து வேலை பார்த்தாலும் ஒரு நாளைக்கு ஒன்றேகால் அணா தான் தேறறது. என்னிக்கி இது வளர்ந்து ஐம்பது ரூபாயாறது ? என்னிக்கு கோமளத்துக்குக் கலியாணம் நடக்கறது ? எப்படி யோசித்தாலும் கோமளத்தின் கலியாணம் நடக்கறதப் போல நெனச்சு கூட பாக்க முடியல,’ என்று நினைத்தபடியே திருமலை கம்பர் மேடு தாண்டி சன்னிதித் தெரு முனையில் நின்றார்.
‘ஊரே காலியாயிண்டிருக்கு. கம்பர் மேடாவது ஒண்ணாவுது ? எப்பவோ கம்பர் இருந்து ராமாயணம் எழுதினாராம். அதனால என்ன ? வெச்சுக்க நமக்கு வக்கில்லே, வெள்ளைக்காரன் தோண்டி எடுத்துண்டு போறான். ஒண்ணேகாலணா சம்பாதிக்கற எனக்கு யார் எத தோண்டினா என்ன, எடுத்துண்டா என்ன ? மடப்பளில விறகு எரியறதானா ஆத்துல அடுப்பு எரியும். இல்லேன்னா வயறுதான் எரியும்’ என்று நினைத்துக்கொண்டு சன்னிதித் தெருவில் கால் வைத்தார்.
காலில் ஏதோ ஒட்டியது போல் இருந்தது. கீழே இருந்த கல்லில் தேய்த்தார். இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது. தாள் போல் உணர்ந்தார்.
இரண்டு அடி நடந்திருப்பார். இன்னும் காலில் ஒட்டியிருந்ததை உணர்ந்தார். குனிந்து பாத்த்தைத் தடவிப் பார்த்தார். தாள் தான். ஆனால் சற்று வழவழப்பாக இருந்தது.
ஒரு காலில் நிற்க முடியாமல் அருகில் இருந்த பழைய தூண் ஒன்றில் சாய்ந்தவாறு காலில் ஒட்டியிருந்த தாளைப் பிய்த்தெடுத்தார்.
வெயிலில் அது பளீரென்றிருந்தது. சந்தேகத்துடன் கண் அருகில் வைத்துப் பார்த்தார். நிஜமாகவே நூறு ரூபாய்த் தாள் தான். மன்னர் படம் போட்டிருந்தது. முகம், தலை என்று எல்லாம் வியர்த்தது. புதிய வியர்வை பழைய வியர்வையை அடித்துக்கொண்டு சென்றது. வியர்வை வேஷ்டியில் பட்டு வழிந்ததில் கரிய நீர் கீழே சொட்டியது.
கையில் பாம்பைப் பிடித்தது போல் இருந்தது அவருக்கு. இவ்வளவு ரூபாய் யாரிடம் இருக்கும் ? யாரோ வெள்ளைக்காரன் பையில் இருந்து விழுந்திருக்க வேண்டும். நூறு ரூபாயை வைத்துக்கொண்டு மூன்று கல்யாணம் பண்ணலாம். இரண்டு வீடு வாங்கலாம். மாடு கன்றுகளுடன் பெரிய தொழுவங்கள் நான்கைந்து வாங்கலாம். கோமளத்தின் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடக்கும். சர்வமானிய எரியை ஒட்டிய நிலங்கள் பல குழிகள் வாங்கலாம். ஒரே நொடியில் தரித்திரம் தொலையும்.
‘அட, இப்பிடி ஒரு அதிர்ஷ்டமா ? பெருமாளே, விளக்கேற்றி விட்டீரே பெருமாளே. மடப்பளியில் வெந்தற்கு இப்படி ஒரு பலனா ? ஒரு நொடியில் என் கஷ்டங்கள் எல்லாமா போக்கிட்டீரே பெருமாளே,’ என்று அழுதபடியே வெயிலில் நடந்தார் திருமலை.
இடுப்பில் மடித்து வைத்துள்ள தாள் இருக்கிறதா என்று தொட்டுக்கொண்டவாறே படியேறிய அவரைக் கோமளம் வித்தியாசமாகப் பார்த்தாள்.
யாரிடமும் ஒன்றும் பேசாமல் கிணற்றடிக்குச் சென்று நான்கு குடம் இழுத்து விட்டுக் கொண்டார். ஹோமக் குண்டத்தில் நீர் ஊற்றினால் அணைந்து குளிரும் நெருப்பு போல் அவரது உடல் குளிர்ந்தது.
ஒரு நிமிஷம் பெருமாள் உள் முன் நின்றார். நூறு ரூபாயை எடுத்து பெருமாள் படத்தின் முன் வைத்து விழுந்து சேவித்தார்.
‘இவ்வளவு பணம் எப்படிக் கெடச்சுதுன்னு யாராவது கேட்டா என்ன சொல்றது ? எங்கேருந்து திருடினேன்னு யாராவது கேட்டா என்ன பண்றது ? கீழே கிடந்து எடுத்தேன்னா யாராவது நம்புவாளா ?’ என்று சிந்தித்தபடியே நின்றிருந்தார் திருமலை.
‘அப்பா, உடம்பு சரியில்லையா ? ஏன் ஒரு மாதிரி இருக்கேள்?’ என்று கேட்ட கோமளத்திற்குப் பதில் அளிக்காமல் மூடியிருந்த கையை மேலும் அழுத்தமாக மூடிக்கொண்டார்.
‘சேர்ந்தாப்போல அஞ்சு ரூபா பாத்திருக்கமா ? ஒரு தெவசத் தளிகைக்கு அரை ரூபா சம்பளம். ஒரேயடியா நூறு ரூபா வெச்சிண்டிருந்தா மடப்பளிலேருந்தும் நிறுத்திடுவாளே ஊர்ப் பெரியவாள்ளாம். ஐயோ பெருமாளே,’ என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு நின்றிருந்தார் திருமலை. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததால் தலை கிறு கிறு என்று சுற்றத் துவங்கியது.
‘முடியாது, என்னால் இதைத் தாங்க முடியாது.’
ஒரு தீர்மானத்திற்கு வந்தவராய் வேகமாக அடுப்பின் அருகில் சென்று சென்று கையில் இருந்த பணத்தை எரியும் நெருப்பில் இட்டார்.
அடுப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
‘சாதம் போடுடீ கோமளம்,’ என்று சொல்லி இலையில் அமர்ந்தார் திருமலை.
Manasatshi ullavargal seiyum kariyum.
LikeLike
Thanks for stopping by
LikeLike
கதையில வேறு ஏதாவது திருப்பம் கொண்டுவந்து அந்த ரூபாய் அவருக்கே கிடைக்குமாறு செய்திருக்கலாம். பாவம்!
LikeLike