‘அப்பாவின் ரேடியோ’ என்னும் ஒரு நூல் எங்கோ கிடைத்தது.
முன், பின் அட்டைகள் இல்லை. எழுத்து நடை சுவரஸ்யமாக இருந்த்தால் படிக்கத் துவங்கினேன். சுஜாதாவின் ஏதோ தெரியாத நூல் என்று நினைத்திருந்த எனக்கு அதிர்ச்சி அளித்தது நூலின் நடுவில் இருந்த பின் அட்டை. அதில் எழுத்தாளர் சுஜாதா இந்த நூலின் ஆசிரியரைப் பற்றிச் சொல்கிறார். ஆசிரியர் சுஜாதா தேசிகன்.
நிஜ வாழ்வில் தேசிகனின் மனைவி பெயரும் சுஜாதாவாம். ஆனால் தேசிகன் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகர். சுஜாதாவே தான் எழுதிய நூல்கள் பற்றிய சந்தேகங்களை இவரிடம் கேட்பாராம்.
ஆக புஸ்தகம் சுஜாதாவினுடையது அல்ல என்பது புலனாகியது. ஆனால் நடை அப்படியே சுஜாதா. கதை முடிவில் உள்ள திருப்பம், அதிகம் செலவாகாமல் சொற்களை அளவாகக் கையாளும் பாங்கு, புதிய பார்வை – அசத்துகிறார் ஆசிரியர். வாழ்க தேசிகன்.
‘அப்பாவின் ரேடியோ’ ஒரு சிறுகதைத் தொகுப்பு. பல கதைகள் என்னை பாதித்தன. அவற்றுள் ஒன்று ‘ராமானுஜலு’. Short and Sweet என்று நச் என்று இருக்கிறது கதை. தற்கால வைஷ்ணவர்கள் சிந்திக்க வேண்டும்.
‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே ராதா கல்யாண வைபோகமே’ ஐயங்கார்களின் கல்யாண ஏற்பாடுகள் பற்றிய நெத்தியடி. அதுவும் ‘ நரசிம்மப்பிரியாவில் தென்கலைன்னா எளக்காரமா பாப்பா’ என்பது உண்மை போல் தான் தெரிகிறது. கடைசியில் பாட்டி ‘இதுவரைக்கும் ஐயங்கார்ப் பையனா பார்த்துப் பண்ணிண்டானே ..’- செம நக்கல்.சுஜாதா படித்திருந்தால் சிரித்திருப்பார்.
‘பாட்டனாரெல்லாம் மூணு வேளை அக்னி வளர்த்தா. இப்ப நாங்க இரண்டு வேளை விளக்கேத்தறோம்’ – இது ஐயங்கார்களின் நிதர்ஸன உண்மை.
‘..திருநட்சத்திரத்துக்குப் போயிருந்தோம். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. வயசான காலத்துல ஏதோ கைங்கைர்யம்’ – நல்ல ஹாஸ்யம்.
‘பெருங்காயம்’ என்னும் தேரழுந்தூர் பற்றிய கதை. கதையல்ல. அதுவே உண்மை. 40 ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்களிடம் வீடுகளை விற்று வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்று ஓய்வு பெற்று தேரழுந்தூர் திரும்ப விரும்பும் பெரியவர்கள் பலரை எனக்குத் தெரியும். எழுத்தாளர் தேசிகனுக்கு எனது விசேஷ வந்தனங்கள். கதையின் துவக்கத்தில் உள்ள திருமங்கையாழ்வார் பாசுரம் கதைக்கு மிகப் பொருத்தம்.
‘பிச்சை’ கதை கண்களில் நீர் வரவழைத்தது. பல குடும்பங்களில் இப்படி நிகழ்ந்துள்ளது உண்மை.
நூலுக்குக் காரணமான ‘அப்பாவின் ரேடியோ’ கதை பல பழைய நினைவுகளை வரவழைத்தது. எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு ரேடியோ வாங்கப்பட்டது. ஆனால் அது பிலிப்ஸ் ரேடியோ. ரொம்ப நாட்கள் வரை வேலையும் செய்து வந்தது.
மொத்தம் 23 கதைகள். என்னைக் கவர்ந்தவை இவை. இக்கதைகளைப் பற்றி, இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.
சுஜாதா இன்னமும் நம்முடனேயே இருக்கிறார்.
சிங்கப்பூரில் நூலகத்தில் கிடைக்கிறது. சென்னையில் இங்கே வாங்கலாம்.