‘செல்லிடப் பேசி’ன்னு பேருக்கு ஒண்ணும் குறைவில்லை. செல்லும் போது பேசுவதற்காக என்பது போய், செல்லும்போதெல்லாம் பேசுவதற்கு என்று ஆனது தான் விகாரம்.
இப்போது அதற்கு ‘அலை பேசி’ என்று புதுப் பெயர் வேறு. புதுப்பெண்டாட்டி போல் போகும் இடத்துக்கெல்லாம் கொண்டு போகலாம் என்றாலும் அதற்கும் ஒரு வரைமுறை இல்லையா ?
வீட்டில் தான் அதையே கட்டிக்கொண்டு அழுதாலும் வெளியில் போகும் போதாவது அது இல்லாமல் போகலாமே என்று இல்லாமல் அதையே பார்த்துக்கொண்டு சென்றால் எங்காவது மோதிக்கொள்ள வேண்டியது தான். நான் அலைபேசியைச் சொல்கிறேன்.
அலையும் போது பேசலாம் என்பது போய், பேசுவதற்காகவே அலைவது போல் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் யாரும் தரையைப் பார்த்துக்கொண்டு நடப்பதில்லை. எல்லாரும் கையைப் பார்த்துக்கொண்டு நடக்கிறார்கள். கைகளில் அலைபேசி.
நடக்கும் போது கூட ஒத்துக்கொள்ளலாம்.
யூரினலில் மூச்சா போகும்போது கூடவா ? பயமாக இருக்கிறது. ஒரு கையில் .. சரி அதை விடுங்கள். மீதம் இருப்பது ஒரு கை தான். அதில் அலைபேசி. அடுத்த யூரினலில் நிற்பவனின் நிலைமையை நினைக்கவே மாட்டீர்களா சார் ? பேச்சு சுவாரஸ்யத்தில் கொஞ்சம் திசை மாறினால் நம் நிலை என்ன என்று நினைப்பதிலேயே.. பகவானே, இந்த உலகத்தில் இதைக்கூட நிம்மதியாகச் செய்ய முடியவில்லையே.
அந்த இடத்தில் அப்படி என்னய்யா பேச்சு ? ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு பேசினா ஸ்டாக் மார்க்கெட் விழுந்துடுமா ?
ரெண்டு மூணு மணி நேரம்னு ஆப்பீஸ் மீட்டிங்ல மிதிபட்டு, விழி பிதுங்கி திருவிழால மிதிபட்ட எலி மாதிரி ஒரு வழியா தப்பி இங்க வந்தா ரெண்டு நிமிஷம் கூட நிம்மதியா.. சே !
ஒரு வேளை ‘புரொடெக்டிவிட்டி’ங்கறது இது தானோ ?