ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணம், நான் இன்று சென்ற நிகழ்ச்சி.
‘திருநீலகண்டர்’ என்னும் ஒரு நாட்டிய நாடகம் அரங்கேறியது சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவிலில். திருமுறைக் கழகம் இதனை நடத்தியது. அதைத் தான் சொல்கிறேன்.
மேடை கயிலாயமாக மாறியது. சில கணங்களில் அதுவே திருநீலகண்டன் என்னும் குயவனின் வீடாக மாறியது. சில கணங்கள் கழித்து வீட்டின் வெளியாக மாறியது. நிறைவாகக் குளமாக மாறியது. அதில் திருநீலகண்டரும் அவரது மனைவியும் இறங்கினர். ஆம். குளத்தில் இறங்கினர்.
திடீரென்று சிதம்பரம் தெரிந்தது.. அங்கு ஒரு மண்டபத்தில் தில்லைவாழ் அந்தணர்கள் அமர்ந்து நீதி பரிபாலனம் செய்துகொண்டிருந்தனர்.
இக்காட்சிகள் அத்தனையும் ஒரே மேடையில் நிகழ்த்திக் காட்டினர் கூத்தம்பலம் குழுவினர்.
நாட்டிய நாடகம் என்று சொன்னேனா ? அத்தனை வசனமும் செய்யுள் வடிவில். எழுதியிருந்தவர் வெண்பாக் கவிஞர் ஆ.கி.வரதராசன் அவர்கள். சில வருடங்களில் சேக்கிழாரை இவர் விஞ்சி விடுவார் என்று தோன்றுகிறது.
அத்துடன் நட்டுவாங்கம் செய்கிறேன் என்று ஒரு குழு இறங்கியது. தொழில் முறையில் ஒதுவார் ஒருவர், வயலின் வித்துவான் ஒருவர், மிருதங்க மேதை என்று பலருடன் ஐஸ்வர்யா என்னும் ஒரு தெய்வக் குழந்தை சளைக்காமல் விளாசித் தள்ளியது. ஐஸ்வர்யா எங்கள் வீட்டில் பாடியிருக்கிறாள் என்றாலும் இன்றைய அவளது மேடைப் பாடல் நாட்டிய நாடகத்துக்கு மிகுந்த வலுவளித்தது. ஒரு சில நேரங்களில் நடப்பது நாட்டிய நாடகமா அல்லது பாட்டுக் கச்சேரியா என்று எண்ணத் தோன்றியது.
உதாரணத்திற்கு இரண்டு பாக்கள். வரதராசன் எழுத ஐஸ்வர்யா ராகம் சேர்த்துப் பாடுகிறாள். ராகம் அவளது தேர்வு.
ராகம்: ஸாவேரி
இச்சையாம் காமம் தன்னை இடைவிடா தெதிர்த்து நின்றார்
துச்சமாய் அதனை எண்ணி தூயநன்னெறியில் வென்றார்
நச்சிமண் உலகை நாடி நாடகம் ஒன்றும் ஆடி
அச்சிவன் அன்னார் செம்மை, அவனியோர் அறியச் செய்தான்
ராகம்: சாருகேசிகுயவனார் குலத்தில் வந்தார் கோதிலாத் தில்லை வாழ்ந்தார்
மயனெனத்திறமை காட்டி மண்ணினால் பாண்டம் செய்தார்
அயர்வெதும் அறியா வண்ணம் அரன் அடியார்க்கு நல்ல
பயன்தரு ஓடு மற்றும் பானைகள் செய்து தந்தார்
புலவர். ஆ.கி.வரதராசனின் கைவண்ணம், ஐஸ்வர்யாவின் மற்றும் குழுவினரின் நாவண்ணம், கூத்தம்பலத்தாரின் உடல் மொழி நாட்டிய வண்ணம் என்று பல வருஷங்களுக்குப் பிறகு தெய்வ சமீபம் இன்று கிடைத்தது. இள வயது திருநீலக ண்டராக நடனமாடி நடித்த அந்த மாதுவுக்கும் சிவபெருமாநாக நடனமாடி நடித்த அந்தச் செல்விக்கும் பல நூறு கட்டிகள் கற்பூரம் கொண்டு சுற்றிப் போட வேண்டும்.
இதில் விசேஷம் என்னவென்றால் பல நடனமணிகளுக்குத் தமிழ் தாய்மொழி இல்லை.
இறுதியில் பேசிய சாரதா நம்பி ஆரூரன் மனம் நெகிழ்ந்து சிங்கப்பூரை ஆசீர்வதித்தார்.
இப்படி ஒரு நிகழ்வுக்கு, இனி அடுத்த வருஷம் வரை காத்திருக்க வேண்டுமே என்பது தான் ஒரே வருத்தம்.
பி.கு.: மேடையில் ஐஸ்வர்யா பாடும்போது அருகில் இருந்த சிங்கை எழுத்தாளர் திருமதி. சித்ரா ரமேஷிடம், ‘யார் பாடறது தெரியுமா ? என்னுடன் நெய்வேலியில் படித்த கல்பனாவின் மகள், தெரிஞ்சிகிடுங்க..’ என்று பெருமையாகச் சொன்னவுடன் அவர்,’ நெய்வேலி பசங்களுக்கு கேக்கவா வேணும்?’, என்று பதில் அளித்தார்.
அவரும் நெய்வேலி தான் என்பது வேறு கதை !
எதையும் எழுதுவது ஒன்று – அனுபவித்து எழுதுவது மற்றொன்று! அனுபவிக்கும்போது, சைவம், வைணவம் அத்தனையும் அருள் பெற்று எழுந்துவிடும். இறைத் தொண்டையே முழு மூச்சாக்கி வாழ்ந்த பக்திச் செல்வங்கள் நம்மிடையே எண்ணிறந்தவர்கள். தன் சொந்த இல்லற வாழ்வையே ஈடாக்கி, அரனை அரணாகக் கொண்டு வாழ்ந்தவர் திருநீலகண்டர். அவருடைய தெய்வ வாழ்வை சித்தரிக்கும் இசைக் கோவையை அர்த்தமுள்ள சொற்களால் அலங்கரித்திருக்கிறீர்கள். ஆழமான விமர்சனம். வாழ்த்துகள்.
LikeLike