‘பஞ்சாமிர்தம்’ என்றால் தெரியும்தானே ? அது தான் சுஜாதா தேசிகனின் ‘என் பேர் ஆண்டாள்’ நூல்.
‘அனுபவம்’, ‘சுஜாதா’, ‘பொது’, ‘பயணங்கள்’, ‘அறிவியல்’ என்று ஐந்து அமிர்தங்களைக் கொண்ட கட்டுரை நூல்.
39 சுவையான கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் என்னை மிகவும் ஈர்த்த சில கட்டுரைகளைப் பார்ப்போம்.
‘என் பேர் ஆண்டாள்’ – நூலின் பெயரில் ஒரு கட்டுரை. இல்லை Cute-உரை. அவ்வளவு Cute. ஆண்டாள் என்று பெயரிடப்படும் ஆசிரியரின் குழந்தை பேசுவது போல் அமைந்துள்ளது. மயில் இறகால் வருடியது போன்ற ஒரு உணர்வு.
‘அமுதன்’ – மகன் பெயர். கட்டுரையின் பெயரும் அதுவே. ‘அமுதன்’ பெயர்க்காரணமும் அது தொடர்பான ஆழ்வார் பாசுரங்களும் ஆக அருமை.
‘தொட்டமளூர்’ என்னும் பயணக்கட்டுரையில் ஒரு மண்டபம். அதில் அக்காலத்தில் புரந்தரதாசர் அமர்ந்து ‘ஜகதோதாரணா’ பாடியிருக்கிறார். தேசிகன் அமர்ந்து ‘ததியோதாரணா’ (தயிர் சாதம் உண்ணல்) என்கிறார். வார்த்தை விளையாட்டில் சுஜாதா மீண்டும். கட்டுரை முடிவு – சுஜாதா கர ஸ்பரிசம்.
‘மேல் கோட்டையில் ஒரு நாள்’ கட்டுரையில் இன்றைய நிலைமையின் நிதர்சனம் – ‘கிராமங்கள் கற்புடன் இருக்கின்றன. ஐ.டி.கம்பெனிகள் இன்னும் வரவில்லை’ என்கிறார். நெத்தியடி வாசகம்.
ராமானுசருக்குள்ள மேல்கோட்டைத் தொடர்பு, கோட்டைக் கோவிலின் விஸ்தீரணங்கள், கோவிலில் தொல்பொருள் துறையின் தொலைந்துபோன நிலை இத்தனையும் விளக்கப்படுகின்றன. முடிவில் – ‘பெருமாள் கூட்டத்தை நோக்க, கூட்டம் நோக்கியாவில் பெருமாளை நோக்க..’ – மீண்டும் சுஜாதா.
‘ராமானுச நூற்றந்தாதி’ பாடிய திருவரங்கத்து அமுதனார் பற்றிய கட்டுரையின் முடிவு மிகவும் ஆழமான உண்மைகளை உள்ளடக்கியது. மிக அற்புதமான ஸ்ரீவைஷ்ணவ அனுபவத்தை அளிக்கிறது. அடுத்தமுறை ஸ்ரீரங்கம் போகும் போது, அந்த வீட்டிற்குப் போக வேண்டும்.
பூந்தமல்லியில் வாழந்த திருக்க்ச்சி நம்பிகள் பற்றிய கட்டுரை உங்களைக் கரைத்துவிடும். 100 ஆண்டுள் முன்பு வாழ்ந்த அவர், ராமானுசருக்கே ஆசாரியன். அவரது வீடு இன்று இருக்கும் நிலை, அற நிலையத்துறையின் வழக்கமான விளக்கெண்ணை பதில் – உயர் பதவியில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் கொஞ்சம் இந்தப்பக்கம் பார்க்கவும். ஒட்டுமொத்த தமிழர்களுமே தலைகுனிய வேண்டிய தருணம்.
இதெல்லாம் போகட்டும். இராமானுசருக்கு ‘அஷ்டாட்சர’த்தை உபதேசித்தார் திருக்கோஷ்ட்டியூர் நம்பி. இராமானுசர் அதனை உலகிற்கே அறிவித்தார். அந்தத் திருக்கோஷ்டியூரில் அவர் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார் தேசிகன். ‘இராமானுசர் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்; நானும் அதே வீட்டிற்குச் செல்கிறேன் ’ என்று புளகாங்கிதம் அடையும் அவர் வீட்டின் நிலையை வர்ணிக்கிறார்.
‘ராக்கெட் வண்டுகள்’ என்னும் வண்டுகள் பற்றிய கட்டுரை அறிவியல், இலக்கியம், ஆன்மீகம் கலந்ததாக உள்ளது. வண்டு பற்றிய குறுந்தொகைப் பாடலான ‘கொங்குதேர் வாழ்க்கை..’யில் துவக்கம் ‘தேமருவு பொழிலிடத்து..’ என்னும் வண்டைத் தூது அனுப்பும் தேரழுந்தூர்ப் பாசுரத்துடன் முடிவு. தேசிகனின் ‘அப்பாவின் ரேடியோ’ நூலில் ‘பெருங்காயம்’ என்னும் தேரழுந்தூர் பற்றிய கதை நினைவுக்கு வந்தது. தேசிகனுக்கு எங்கள் தேரழுந்தூர் ரொம்ப பிரியம் என்று தெரிகிறது.
‘சுஜாதா’ பற்றிய கட்டுரைப் பகுதியில் மறைந்த எழுத்தாளர் பற்றிய அவரது இறுதி நாட்கள், இறுதிக்கணம் பற்றிய விவரிப்புகள் நெஞ்சை அடைக்கும்.
ஒருமுறை ஆசிரியர் தேசிகனின் தந்தையார் ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது அங்கிருந்த தூண்களைத் தொட்டுக்கொண்டே இருந்தாராம். கேட்டதற்கு ‘இந்தத் தூணில் திருமங்கையாழ்வாரும் தொட்டிருப்பார்’ என்று சொன்னார் என்று அந்த வரலாற்றுத் தொடர்பை நினைவுபடுத்தியுள்ளார். நானும் இதே கருத்தை முன்னிறுத்தி முன்னர் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தேன். அவை இங்கே, இங்கே. தேசிகனின் இந்த நூலைப் படித்தவுடன் புல்லரித்தது.
அழகர் கோவில் என்னும் திருமாலிருஞ்சோலையில் ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் படைக்க எண்ணியதை நானூறு ஆண்டுகள் கழித்து ராமானுசர் நிறைவேற்றியதையும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் சாத்தியக்கூறுகளையும் ஒருங்கே கொண்ட இந்தப் பஞ்சாமிர்தக் கட்டுரை நூலில்.அசோகமித்திரன் பற்றிய கட்டுரையில் தமிழ்ச் சமுதாயம் எழுத்தாளர்களை வைத்துள்ள நிலையும் தெரிகிறது.
முடிக்கும் முன் : தென்கலை, வடகலை என்று இல்லாத வித்தியாசங்களை உண்டு பண்ணி. சண்டை போடும் நேரத்தில், திருக்கச்சி நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கத்து அமுதனார் வீடு இவற்றை வாங்கி, வைஷ்ணவ சமயக் கேந்திரங்களாக, பாசுரங்கள் கற்பிக்கும் பாடசாலைகளாக ஆக்கினால் குருபரம்பரை வாழ்த்தும். பெரியவர்களுக்கு அந்த மகரநெடுங்குழைக்காதப் பெருமாள் புத்தி வழங்கட்டும்.
என் பேர் ஆண்டாள் – இங்கே வாங்கலாம்.