சிங்கப்பூரில் யாருக்காவது எதற்காகவாவது விருது வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளூருக்குள் வழங்கிக் கொள்வது வழக்கம்.
வித்தியாசமாக சென்ற முறை தமிழ் மொழி பண்பாட்டு வளர்ச்சிக்கழகம் இந்திய பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய்யிற்குத் ‘திருவள்ளுவர் விருது’ வழங்கியது. திருக்குறளின் மேல் தணியாத காதல் கொண்டுள்ள அவருக்கு அந்த விருது ஏற்புடையதே. ஏதோ சிங்கப்பூரிலாவது திரு. ஹரி கிருஷ்ணன் போல் அவரைப் பாராட்டத் துணிவு கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தது. நிற்க.
இதுவரை வழங்கிய விருதுகள் ஒருபுறம் இருக்கட்டும். இந்த விருது விசேஷமானது. விசேஷமானவருக்குக் கொடுக்கிறார்கள்.
விருது பெறுபவர் சிங்கை இலக்கிய உலகின் பீஷ்மர்; எம்.ஜி.ஆர்., கண்ணதாசன் போன்றோரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர்; சிங்கை இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் பங்கெடுத்து ஊக்கம் அளிப்பவர்; ஊடகத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; பல நாடகங்களின் ஆசிரியர்; கம்பனிடம் ஆழ்ந்த காதல் கொண்டவர்; வெறும் 80 வயது இளைஞர் திரு.ஏ.பி.இராமன் ஐயா அவர்கள்.
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மட்டும் அல்ல அவரது பணி. நடந்துள்ள நிகழ்ச்சிகளை தனது முகநூல் பக்கத்தில் தினமும் எழுதுகிறார். மனதில் பட்டதை அப்படியே எழுதும் வழக்கம் கொண்டவர். திருக்குறள் போல் சில சொற்களில் தீர்க்கமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்; ஒரு சமயம் வாரத்தின் ஒரே நாளில் பல அமைப்புகள் நிகழ்ச்சிகள் வைத்த போது அதனை எதிர்த்து எழுதி மாதம் முழுவதும் வார விடுமுறை நாட்களில் நடைபெற அறிவுறுத்தியவர்.
சென்ற ஆண்டு தமிழவேள் விருதும், அறவாணர் விருதும் பெற்றவர். இந்த ஆண்டு கலைமகள் மாத இதழ் ‘கீ.வா.ஜா.’ விருதை அவருக்கு வழங்குகிறது.
இப்படிப்பட்டவர் என் முதல் நூலான ‘பழைய கணக்’கின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார். என் பாக்கியம் அது.
வைஷ்ணவத்தில் ஒரு வாழி வழக்கம் உண்டு. இராமானுசரை ‘இன்னுமொரு நூற்றாண்டிரும்’ என்று வாழ்த்திச் சொல்வது வழக்கம்.
சிங்கை பீஷ்மரே, நீரும் இன்னுமொரு நூற்றாண்டிரும்.
A.P.Raman..
September 16, 2015 at 11:45 pm
அடித்துச் சொல்லலாம், புகழ் மயக்கம் அனைவருக்கும் ஏற்படும்.அதை ரசிக்காதவர்களே யாரும் இல்லை. நான் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா? இத்தனை பூர்வபீடிகையும் நண்பர் ஆமருவின் மனம் திறந்த புகழை ஏற்றுக் கொள்வதற்குத்தான் ! என்னைப் புகழ்ந்த இந்நேரத்தில், அவரின் எழுத்து மகிமையை பற்றி நான் உடனே எழுதப் போவதில்லை. நேரம் வரும்போது கவனித்துக் கொள்கிறேன். அன்றாடம் எழுதிக் கொண்டிருப்பவர் தானே -சிக்காமலா போய்விடுவார்!
ஒரு சின்ன ;ஸ்பெல்லிங்’ மிஸ்டேக்! வயது 80 அல்ல. அதிகமாக எழுதிவிட்டோமோ என்று பயப்பட வேண்டாம். எனக்கு இப்போது 84.
ஒரே ஒரு வார்த்தை ஆமருவி : ந ன் றி.
LikeLike