ஏ.என்.எஸ். அச்சின் வார்ப்பு கீழாம்பூர். முன்னவரின் கூரான பேச்சும் சீரான சிந்தனையும் பின்னவரிடம் அப்படியே. ஏனெனில் முன்னவரின் பேரன் பின்னவர்.
ஏ.என்.ஏஸ். தினமணியின் ஆசிரியராக இருந்த போது எங்கள் நெய்வேலில் இப்படி ஒரு வழக்கம் உண்டு. ஹிந்து நரசிம்மன் ஒரு விஷயம் பற்றி தலையங்கம் எழுதினால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் குடும்பம் எங்களுடையது. பின்னாளில் ‘இதே விஷயத்துல ஏ.என்.எஸ். என்ன சொல்றார்னு பார்க்கலாம்’ என்று அப்பாவை இறங்கி வர வைத்த பெருமை ஏ.என்.எஸ்.ஸுக்கு உண்டு.
ஏ.என்.சிவராமன் என்னும் ஏ.என்.எஸ். கோலோச்சிய அந்தக்காலம் தமிழ்ப் பத்திரிக்கை உலகின் பொற்காலம். அப்படிப்பட்டவரின் பேரன் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் ஒரு மாற்று கூட குறையாமல் சின்ன ஏ.என்.எஸ்.ஸாகத் தெரிந்தார் நேற்று நடந்த கி.வா.ஜா. விருதுவிழாவில். நேர்ப்படப் பேசுதல் , நயம்பட உரைத்தல், சுருங்கச் சொலல் என்று பிளந்து கட்டினார் கீழாம்பூர். ஆம், அவர் சுருங்கத் தான் சொல்ல வேண்டியிருந்தது. அவரை இரவு 9:15 க்குப் பேச அழைத்தால் என்னதான் செய்வார் மனுஷன் ?
உள்ளம் உருகும் பல நிகழ்ச்சிகளை அவர் சொன்னார். கலைமகளின் ஆரம்ப கால ஆசிரியராக தமிழ்த் தாத்தா உ.வே.சா. இருந்தது, பின்னர் அவரது மாணவரான கி,வா.ஜா பொறுப்பேற்றுக் கொண்டது அது முதல் இன்று வரை கலைமகளின் தரம் குறையாமல், வணிக வல்லூறுகளுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்து தேர்ந்த ஒரு பத்திரிக்கையாக நடத்திக்கொண்டு வரும் கீழாம்பூரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு தமிழ்ப் பத்திரிக்கையை, நம்பி என் மகனிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லலாம் என்றால் அது கலைமகள் தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் பாரம்பரியம் கெடாமல் பாதுகாத்து வருவது போற்றுதலுக்குரியது.
திருக்குறள் நமக்குக் கிடைக்க சரபோஜி மன்னர் ஆற்றிய தொண்டு, பத்துப்பாட்டு நூல் சேகரிப்பில் உ.வே.சா. பட்ட அவமானம், சென்னையில் எம்டன் தாக்குதலின் போது உ.வே.சா. தான் சேகரித்துவைத்திருந்த ஓலைச் சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வேறிடம் சென்றது என்று நமது பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இருந்திருக்க வேண்டிய பல விஷயங்களைக் கீழாம்பூர் சொன்னார்.
முன்னதாக வயிற்றுக்கு உணவுடன் கி.வா.ஜா. விருதளிக்கும் விழா துவங்கியது. பெரியவர் ஏ.பி.ஆர், எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் இருவரது உரையிலும் நியாயமான நன்றியறிதல் இருந்தது. இரத்தின வெங்கடேசன் பேச்சு இரத்தினச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் பொருள் படவும் இருந்தது.
இவ்வகையான பாராட்டு விழாக்களில் நேர வரம்பிற்குள் துவங்கி முடிக்க இன்னும் முயற்சி தேவை என்று தோன்றியது. என் அருகில் அமர்ந்திருந்த இருவர் பேசிக்கொண்டது,’இதே ரேட்ல போனா நம்மளையும் பேசச் சொல்லுவாங்க போல.’ பேச்சாளர் எண்ணிக்கையைக் குறைத்து இந்தியாவிலிருந்து வந்துள்ள சிறப்புரையாற்றுவோருக்கு இன்னும் நேரம் அளிப்பது நல்லது.
பொன்னாடைக் குவியல் என்னும் தமிழகப் பண்பாடு இங்கும் தென்பட்டது. பொன்னாடைக்குப் பதில் நூல்கள் அளித்திருக்கலாம் என்பது என் எண்ணம். தினமலரின் சிங்கை ஆசிரியர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்குச் சிறப்பு செய்தது மனதை நெகிழ வைத்தது.
சமீப காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த பேச்சாளர்களில் கீழாம்பூர் பேச்சு தனித்து நிற்கிறது.