சாஸனம்

வானம் திடீரென இருள் சூழ்ந்து கரிய பேருருவம் கொள்ளும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக மழை இல்லை. ஊர் காலியாகிவிட்டது. பெயரில் தான் தீட்சிதர் இருக்கிறதே தவிர கோவில் கருவறைக்குள் போக முடியாது. அந்தப் பரம்பரை இல்லை. முன்னோர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்களாக இருந்தபடியால் கோவில் கைங்கர்யங்களில் இருந்து விலக்கி விட்டார்கள்.

கோவிந்த தீட்சிதர் பரம்பரைன்னு பேர் தான். அவரது பாண்டித்யம் எங்கே ? நாயக்க மன்னர்களின் ஆட்சியையே அவர்கள் ஊரில் இல்லாத போது தானே நின்று தனியாக நடத்திய கோவிந்த தீட்சிதர் பரம்பரை என்று சொன்னால் ஆம்படையாள் தர்மாம்பா கூட ஏளனம் செய்கிறாள். ‘தீட்சிதர் பரம்பரை ஆனா சோத்துக்கு வக்கில்லை’ என்று அவளது வீட்டில் ஏளனம் செய்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது எங்கள் பின்புலம் பற்றி. இன்றைய காலத்தில் நாற்பது வேலி நிலம் இருக்கிறது என்னிடத்தில். ஆனால் பயன் தான் இல்லை. தர்மாம்பா பல முறை சொல்லிவிட்டாள். நிலத்தை விற்று விட்டு வேறு ஊர் சென்று விடலாம் என்று. ஆனால் போக மனம் வரவில்லை.

‘என்ன ஊர் இது ! ஒரு காலத்துல பஞ்சம் பொழைக்க வந்த எடத்துல ஏதோ கொஞ்சம் எழுதப் படிக்க வந்ததால கோவிந்த தீட்சிதர் சாஸனம் பண்ணிக்கொடுத்த எடம் நாப்பது வேலி. வருஷம் தவறாம கோவிலுக்குப் படியளந்துட்டு ஆறுல ஒருபங்க நாங்க எடுத்துக்கலாம். சாஸனத்துலயே அப்பிடிதான் இருக்கு. ஆனால் விளைச்சலே ஆறுல ஒருபங்கா இருந்தா என்ன பண்றது?’ இந்தக் கேள்வியைக் கேட்டு பதில் பெற கோவிந்த தீட்சிதர் இல்லை. நானூறு வருஷ சிலாசாஸனம் இன்னும் கோவில் வாசல்ல இருக்கு. ஆனா இதெல்லாம் யார்கிட்ட சொல்லி என்ன புண்ணியம் ?’ சற்று கோவில் கோபுரம் வரை சென்று வரலாம் என்று படியிறங்கினேன்.

Govinda Dikshitar‘நாளும் ரெண்டு தடவை கோபுர வாசல் போகாட்டா இப்ப என்ன குடி முழுகிப் போயிடறது ? சிலா சாஸனமாம் சிலா சாஸனம். என்ன புண்ணியம்? ஒரு வேளை அரிசி கிடைக்குமா அதால?’ தர்மாம்பா எப்போதும் அப்படித்தான். வேறு என்ன செய்வாள் ?

‘போறது போறேள் , அமாவாசை தர்ப்பணம் பண்ணிட்டு சாப்பிடாம போக வேண்டாம். சிலாசாஸனத்தக் கட்டிண்டு அழுங்கோ, ஆனா ஒரு வாய் சாப்டுட்டுப் போங்கோ.’ நல்லவள் தான். ஆனால் என்ன வாய் கொஞ்சம் அதிகம்.

‘ராக்ஷஸ வருஷம் ஆடி அமாவாசையாகிய இன்று வீர கேஸரி அச்சுத ராயப்ப நாயக்கர் கோலோச்சிய காலத்தில் ஐயன் கோவிந்த தீட்சிதனால் எழுதப்பட்டது…’ என்று தொடங்கியது அந்த சிலா சாஸனம். அதற்கு மேல் உள்ள எழுத்துக்கள் சிதைந்து போயிருந்தன.

நானூறு வருஷங்களுக்கு முன்பு இதே ஆடி அமாவாசையின் போதுதான் இந்த தர்மம் துவங்கியது. இந்த இடத்தில் நின்று தான் கோவிந்த தீட்சிதர் இந்தப் பிரகடனத்தைச் செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரை இது தான் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

‘இந்த தர்மம் சந்திர சூரியர்கள் இருக்கும் அளவுக்கு நடைபெற வேண்டும். தினமும் மேற்கில் உள்ள பெருமாள் கோவிலுக்கும் கிழக்கில் உள்ள சிவன் கோவிலுக்கும் அன்னப்படி அளிக்கப்பட வேண்டும். இந்த அன்னப்படியிலேயே தெய்வங்களுக்கு நைவேத்யம் சமைக்கப்பட வேண்டும். இதற்காக ஊருக்கு மேற்கே மேக்கிரிமங்கலமும், கிழக்கே ஆடுதுறையும், தெற்கே தொழுதாலங்குடியும் உள்ள அளவில் நாற்பது வேலி நிலம், அதற்தென்று வெள்ளைக் குளம், கடகடப்பைக் குளம் என்னும் இரண்டு குளங்களும் வீர கேசரி அச்சுதப்ப நாயக்கரால் நிவந்தம் அளிக்கப்படுகிறது. இந்த தர்மத்தை எனது குடும்பத்தைச் சார்ந்த வேத நாராயண தீட்சிதர் தேரழுந்தூரில் இருந்து நிர்வஹிப்பார். விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை தனது குடும்ப பரிபாலனத்திற்கு எடுத்துக்கொள்வார். இந்த தர்மத்துக்கு ஹானி விளைவிப்போர் காசியில் ஆயிரம் காராம்பசு வதை செய்த பாவத்தை அடைவார்கள்’. அப்பா இதனைப் பல முறை சொல்லியுள்ளார்.

ஒவ்வொரு முறை நிலத்தில் இருந்து குடியானவன் நெல் அளக்க வரும்போதும் வயிறு குலுங்கி அழத் தோன்றும். நாற்பது வேலி நிலத்தின் விளைச்சல் எங்கே ? இப்போது கலி காலத்தில் இந்த வெள்ளைக்கார அரசாங்கத்தில் வருஷத்துக்கு பத்து மூட்டை நெல் விளைந்தாலே பெரியதாக இருக்கிறது. கேட்டால் மழை இல்லை என்கிறான். வாஸ்தவம் தான். தாது வருஷப் பஞ்சம், பிறகு அடுத்தடுத்த பஞ்சங்கள், மழை இல்லை என்று குடியானவனும் என்னதான் செய்வான் ?

ஆனால் கோவிலுக்கு அளக்காமல் இருப்பது எப்படி ? நிலமே அதற்காகதானே கொடுத்திருக்கிறார்கள் ? ‘கோவிந்த தீட்சிதரா வந்து கேக்கப்போறார்? பேசாம பத்து மூட்டையும் நாமளே வெச்சுண்டா என்ன? இப்பிடி போக்கத்த பிராமணனா இருக்கேளே’ என்று மனைவியும் பலமுறை சொல்லிவிட்டாள்.

ஒரு நாலு வார்த்தை இங்கிலீஷ் படிப்பு படிச்சிருந்தால் இந்த வெள்ளைகாரா கிட்ட  உத்யோகம் பார்த்திருக்கலாம். மாசம் பொறந்தா அடுப்பாவது எரியும். இப்ப அதுக்கும் வழி இல்லை. வேதம் சாதம் போடும்னு அப்பா சொன்னத நம்பி மடிசிஞ்சியா இருந்து ஒரு புண்ணியமும் இல்லை. அடுப்புல பூன தூங்கறது. தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் படிப்பு படிச்ச எல்லாரும் பட்ணம் போய் கொழிக்கறா.

ஆனா தினம் ரெண்டு தரம் சிலா சாஸனத்தைப் பார்க்கல்லேன்னா அன்னிக்கி சாதம் எறங்க மாட்டேங்கறது. எவ்வளோ பெரியவா கோவிந்த தீட்சிதர் ? அவர் பேர்லயே எவ்வளவு தர்மங்கள்ளாம் இருக்கு ? அவர் எங்க குடும்பத்த நம்பி இந்த தர்மத்த குடுத்துட்டுப் போயிருக்கார். அவருக்கு துரோகம் பண்ணச் சொல்றாளே ஆம்படையா. ஏற்கெனவே குடும்பம் நசிச்சுப் போச்சு. இன்னும் இந்த துரோகம் வேற நடந்தா வேற என்னல்லாம் நடக்குமோ ?

அச்சுதப்ப நாயக்கர் கோவிந்த தீட்சிதர நம்பி அத்தன அரசாட்சியும் கொடுத்து, அவர் பேர் கெடாம தீட்சிதர் எத்தன தர்மம் ஏற்படுத்தியிருக்கார் ? அவர் பரம்பரைல வந்த்துகாகவாவுது ஏதோ விட்ட கொற தொட்ட கொறையா இருக்கற தர்மத்த விட்டுட முடியுமா ?

ஆனா இதப்பத்தி பல தடவை யோசிச்சாச்சு. ஒரு முடிவுக்கும் வர முடியல. தர்மாம்பா கேக்கறது சரிதானே. தீட்சிதர் காலத்துல நாப்பது வேலி நிலத்துலேர்ந்து கணிசமான நெல் வந்தது. அதுல ஆறுல ஒரு பங்கு குடும்பத்துக்கு சரியா இருந்தது. இப்ப விளைச்சலே இல்லையே. விளைச்சல் இல்லாத காலத்துல என்ன பண்ணணும்னு தீட்சிதர் எழுதிவெக்கல்லியே. அதுனால வித்துடலாம்கறா தர்மாம்பா. ஒரு வகைல சரின்னுதான் தோணறது.

ஆனா மனசு ஒப்புக்கல. நானூறு வருஷமா நடந்துண்டு வந்த தர்மம் நம்மளால நிக்கலாமான்னு இன்னொரு பக்கம் மனசு கேக்கறது. தீட்சிதர் என்ன நினைச்சிருப்பார் ? சந்திர சூர்யாள் இருக்கற வரைக்கும் இந்த தர்மம் நடக்கும்னுதானே நினைச்சிருப்பார் அவர். நம்ம காலம் ஆனாலும் இந்த சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் தினப்படி அன்னப்படி நடக்கும்னுதானே அவர் நினைச்சிருப்பார். அவர் எண்ணத்துல மண்ணப் போடலாமா ?

இதோ இந்த சன்னிதித் தெருவுல தானே யானை மேல ஏறி தீட்சிதரும் அச்சுதப்ப நாயக்கரும் வந்திருப்பா ? ஆழ்வார் கோவில் வாசல்ல யானைய நிக்க வெச்சு ஆரத்தி சுத்தியிருப்பளே ! அச்சுதப்ப நாயக்கர் பேரச் சொல்லி ‘வாழ்க’ கோஷம் வானைப் பிளந்திருக்குமே ! துந்துபி முழங்க பெருமாள் கோவில்லேருந்தும் சிவன் கோவில்லேருந்தும் மாலை மரியாதைகள் வந்திருக்குமே ! இவாளுக்கெல்லாம் முன்னாடி என்னோட மூதாதை வேத நாராயண தீட்சிதர் மனசெல்லாம் பூரிப்பா ‘இப்பிடி ஒரு கைங்கர்யம் நம்மளுக்கு வாச்சுருக்கே’ன்னு கண்ணீர் பெருக நின்னிருப்பாரே !அதே எடத்துல அதே பரம்பரைல வந்த எனக்கு அந்த கைங்கர்யத்த நிறைவேத்த வக்கில்லாம போய் இப்பிடி மண்ணாந்தையா நிக்கறேனே !

இப்படியாவது தெய்வ சொத்த சாப்பிட்டு உடம்ப வளர்க்கணுமா ? எங்க பரம்பரை இருந்ததுக்கு அடையாளமே இந்த நாப்பது வேலி நிலம் தானே? நிலத்தால கோவிலுக்குப் பலன் இல்லை. என்னாலயும் இல்லை. ஒரே அடியா கோவிந்த தீட்சிதருக்கும் நாயக்கருக்கும் சேர்த்து துரோகம் பண்றேனோ ? இந்த எண்ணங்கள்ளாம் தர்மாம்பாவுக்கு வரல்லையே, எனக்கு மட்டும் ஏன் ?

இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. இந்த மாதிரி தர்ம சங்கடத்துல வேற ஒண்ணும் பண்ண முடியாது.

‘தீட்சிதரே, இதே ஆடி அமாவாசை அன்னிக்கித்தான் நீங்கள் இந்த சாஸனத்தை எழுதி வெச்சேள். எங்க பரம்பரைல எல்லாரும் உங்க வாக்கு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துப்பாள்னு நெனச்சுத் தான் நீங்க நிவந்தம் கொடுத்தேள். ஆனா நான், உங்க பரம்பரைக்கே லாயக்கில்லாத பாவி. படிப்பும் இல்ல, பணமும் இல்ல. ஒரு வேள சாதத்துக்கு உஞ்சவிருத்தி எடுக்கறேன். இந்த நிலைல நாப்பது வேலி நிலத்த வாங்கிக்க இன்னிக்கி அமாவாசை நல்ல நாள்னு பெரிய பண்ணை நம்மாத்துக்கு வரப்போறார். என்னால விக்கறதுக்கும் மனசில்ல. விக்காம இருக்கவும் சூழ்நிலை இல்லை. எனக்கு இத விட்டா வேற வழி தெரியல. பெருமாளே என்ன மன்னிச்சுடுங்கோ’.

ஆண்டுதோறும் கரிய மேகங்கள் சூழும் ஆடி அமாவாசை அன்று சிலாசாஸனத்தின் முன் ஊரே கூடி நின்று படையல் வைப்பது, தர்ப்பணம் செய்துவிட்டு உணவருந்தாமல் கோபுரத்தின் ஏழாவது நிலையில் இருந்து விழுந்து உயிர்விட்ட நாகராஜ தீட்சிதர்  நினைவாகத்தான் என்று ஊரில் தற்போது யாருக்கும் தெரியவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s