‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது’ என்பது உண்மையாகிவிடும் போல் தெரிகிறது.
பசு மாட்டைக் கடிப்பது தற்போது தேர்தல் விஷயமாகியுள்ளது. எல்லா பிரச்சினைகளையும் தீர்த்தாகிவிட்டபடியால் தீர்ப்பதற்கு உள்ள ஒரே பிரச்சினை இதுதான் போல இருக்கிறது.
மாட்டுக்கொட்டகையை விட்டு வெளியே வருவோமா ?
முயல், காக்கை மாமிசம் எப்படி இருக்கும் தெரியுமா ? எனக்குத் தெரியாது.
முயல் மாமிசம் கிடக்கும் போது காக்கை மாமிசம் தேடி அலைவதா என்று திருமங்கையாழ்வார் கேட்கிறார்.
‘ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே..’ என்பது அவரது பாசுர வரி.
இரண்டு விளக்கங்கள் தெரிகின்றன :
முயல் நிலத்தில் கிடைப்பது. காக்கை வானத்தில் கிடைப்பது. பூமியில் உள்ள அர்ச்சாவதார மூர்த்திகளை வணங்கினாலே போதும், விண்ணுலகில் பரமபத வாழ்வு தேவையில்லை என்பது ஒன்று.
மற்றொன்று திருமால் தெய்வம் ( முயல் ). எளிதில் நிலத்தில் கிடைக்கும். மற்ற தெய்வங்கள் அவ்வளவு சிறந்தவை அல்ல(காக்கை ). சிறப்புகள் இல்லாவிடினும் அவற்றை அடைவது கடினம். எனவே முயலை விரும்புங்கள் என்னும் பொருள்.
‘அச்சுவை பெறினும் வேண்டேன்..’ பாசுரம் நினைவுக்கு வந்தால் நலம்
அது சரி. திருமங்கையாழ்வார் முயல், காக்கை மாமிசங்களை உண்டாரா ? என்று கேட்கலாம்.
உண்டிருக்கலாம். சோழ மன்னரின் தளபதி, கள்ளர் குலத்தவர் என்று சொல்கிறார்கள். எனவே முயல் காக்கைக் கறி விசேஷங்கள் தெரிந்தே சொல்லியிருக்கலாம். ‘பறவைக்காய்ச்சல்’, ‘எபோலா’ முதலானவை ஆழ்வார் காலத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் நலம்.
இனி காக்கையையோ முயலையொ கண்டால் அருகில் யாராவது மனிதர் இருகிறாரா பாருங்கள். ஒரு வேளை அவர் திருமங்கையாழ்வாராக இருக்கலாம்.