
‘அருமா கடலமுதே’ என்ற ஆச்சரியமான தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினார் கண்ணன் இன்று தனது கம்ப ராமாயணத தொடர் சொற்பொழிவில். மாதவி இலக்கிய மன்றத்தின் 50வது நிகழ்வில் இன்றைய கண்ணனின் சொற்பொழிவில் அருமையான பாசுர விளக்கங்களும் கம்பனின் சுவையுடன் சேர்ந்து அக்கார அடிசில் போல் அமைந்தது அவரது பேச்சு.
சிறுபுலியூர் என்னும் சோழ நாட்டுத் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள ‘கிருபாசமுத்திரப் பெருமாள்’ பற்றிய அந்தப் பாசுரம் இதுதான் :
கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே
‘குக தரிசனம்’ என்னும் தலைப்பில் கம்பன், வால்மீகி, ஆழ்வார்கள் மூவரும் குகன் இராமனைக் கண்டடைந்ததை எப்படிப் பார்த்தனர் என்று முக்கோணப் பார்வையில் விளக்கினார் கண்ணன்.
கடவுள் பற்றி நாகூர் ஹனீபாவின் பாடலையும் விட்டு வைக்கவில்லை அவர்.
ஒரு சில சுவையான பகுதிகள் பின்வருமாறு :
இறைவன் நம்மைக் காண்பதற்காக நாம் கோவிலுக்குச் செல்கிறோம். ஏனெனில் அவன் பால் சுரந்து தேங்கியுள்ள பசுவைப் போன்றவன். கன்று வந்து அருந்தாததால் .மடி நிறைந்த பாலுடன் பசு துன்புறுவது போல இறைவன் நமக்காக அருட்பாலுடன் காத்திருக்கிறான். கன்றாகிய நாம் அப்பாலை அருந்தினால் இறைவனுக்கு அதுதான் இன்பம். நமக்கும் தானே !
இராமனிடம் சரணாகதி அடைந்தவர்கள் மூவர். சுக்ரீவன் கிஷ்கிந்தைக்காகச் சரணடைந்தான். வீடணன் இராவணனிடமிருந்து தப்புவதற்காகச் சரணடைந்தான். பரிசாக இலங்கையைப் பெற்றான். ஆனால் எந்தப் பலனையும் எதிர்பாராமல் சரணாகதி அடைந்தவன் குகன் ஒருவனே. அதற்காக இராமன் அவனுக்கு ‘அலைகள் சூழுலகெலாம் உன்னுடையதே’ என்று இந்த உலகத்தையே அளித்தான்.
முடிவில் தனக்குத் தமிழார்வம் அளித்த தன் இளமைக்கால ஆசிரியர்களை நினைவுகூர்ந்து தனது குரு வணக்கத்தைத் தெரிவித்தார் கண்ணன். அந்தப் பண்பு அவரைக் காக்கும்.
இவர் வெகுதூரம் செல்லப்போகிறார். சிங்கையில் கம்பனைப் பற்றிப் பேசுவதே குறைவு. அவற்றுடன் ஆழ்வார்களையும் ஒப்பிட்டுப் பேசிய பாங்கு அருமை. ஒரு தேர்ந்த உபன்யாசகராக ஆவதற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிகின்றன.

கண்ணனைச் சிங்கைத் தமிழ் அமைப்புகள் சரியாகப் பயன் படுத்திக்கொள்ள அந்த அருமாகடலமுதன் அருள் செய்வானாக. மாதவி இலக்கிய மன்றத்தின் வழியாக இவ்வகையான நல்ல நிகழ்வை அளித்த அதன் தலைவர் திரு.கோவிந்தன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பானாக.
உங்களுடைய வாழ்த்திற்க்கு தக்கவாறு தொடர்ந்து நடந்து கொள்ளும் வரம் வேண்டி நிற்ப்பேன் இராமனிடம்
LikeLike