காதில் எதுவும் வாங்கிக் கொள்ளக் கூடாது, அழகுநிலாவின் ‘ஆறஞ்சு’ நூலைப் படித்து முடித்து விட வேண்டும் என்று எம்.ஆர்.டி.யில் ஏறினேன். ஊற்றம் பார்க்கில் இடம் கிடைத்தது.
‘ஆறஞ்சு’ கதை என்னை உள்ளே இழுத்துச் சென்றது. விக்கியின் கவலைகளைப் பகிர்ந்துகொண்டே முன்னேறினேன். அருகில் இரு இந்தியர்கள்.
‘சனிக்கிழமை பிரதோஷம் அன்னிக்கி சிவனப் பார்த்துட்டுதான் பெருமாளப் பார்க்கணும்னு வீட்ல சொல்லிட்டாங்க’
‘அதால என்ன செஞ்சே?’
‘பாயா லெபார் சிவன் கோவிலுக்கு காலைலயே போய்ட்டேன்’
‘என்ன ஆச்சு அப்புறம்?’
‘என்ன செய்யறது. கோவில்ல செம சாப்பாடு. நெய், பருப்பு, மோர் குழம்புன்னு ஏக தடபுடல்.’
‘அப்புறம் எங்கே போன?’
‘போறது எங்க? அப்பிடியே வீட்டுக்குப் போயிட்டேன்.’
‘அப்ப பெருமாள் கோவிலு?’
‘சாயந்திரம் வந்தேன். ஒரே கூட்டம்?’
‘சாமி பார்த்தியா?’
‘அத விடு. பெருமாளு கோவில்ல ரொம்ப மாறிட்டாங்கடா. சாயந்திரம் உப்புமாவும் வடையும் போடுறாங்க.’
‘போடா புளியோதர இல்லாம இருக்குமா?’
‘இருந்துதாண்டா. ஆயிடுச்சாம். அப்புறம் உப்புமா போட்டாங்க. எல்லாரும் மாறிட்டாங்கடா.’
‘இந்தக் கோவில் பரவாயில்லை. திரு இந்தளூர் என்னும் திவ்யதேசத்தில் பெருமாளுக்கு ஏஸி போட்டிருக்கிறார்கள். அவரும் ஆனந்தமாக யோக நித்திரை செய்கிறார்,’ என்று அவர்களிடம் சொன்னேன்.
‘சாமிக்கு கூடவா ஏஸி போடுவாங்க?’ என்றார் ஒருவர்.
‘ஆசாமிங்கல்லாம் ஏஸில இருக்கலாம், சாமி இருக்கக் கூடாதா?’ என்று லாஜிக்கலாகக் கேட்டார் இன்னொருவர்.
இப்படியாக ஆறஞ்சில்’ தொடங்கி ‘உப்புமா’வில் முடிந்தது என் பயணம்.