RSS

யட்சிப் பசி

07 Feb
யட்சிப் பசி

தீராத பேரவாவுடன் அவள் அமர்ந்திருந்தாள். தணியாத தாகம், அடங்காத மோகம், வேட்கை அவள் முகத்தில் தெரிந்தது. வரும் எந்த ஆணையும் ஒரே ஆகர்ஷணத்தில் விழுங்க விரும்பி அமர்ந்திருப்பவள் போல் அவள் அமர்ந்திருந்தாள். அவளை மீறி, கவனிக்காமல் எந்த ஆணும் சென்று விடமுடியாது என்னும் மிதப்புடன் அவள் அமர்ந்திருந்தாள். ஆம். உலகப் பெண்களின் பேரழகுகள் அனைத்தும் ஒருசேர ஒரே பெண்ணிடம் இருப்பது போல் அவள் உடல் தெரிந்தது. உடையும் அதனை வெளிப்படுத்தியது.

அவளது வேட்கை அவளது கண்களில் வழிந்தது. நீல நிற விழிகளால் தன்னைச் சுற்றி ஒரு முறை பார்த்தவள் தன்னை நாடி யாரும் வராததை எண்ணி நீண்டதொரு பெருமூச்சுடன் எழுந்தாள். சவுக்கு மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டில் இருந்த ஒரே மகிழ மரத்தின் அடியில் உள்ள கல் மேடையில் சென்று அமர்ந்து நீண்ட பெருமூச்சுடன் உடலை ஒருமுறை குலுக்கி, கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தாள்.

தாபம் இன்றும் தீரவில்லை. எந்த மனிதனும் சிக்கவில்லை. இப்படியே பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டாலும் தாபமும் வேட்கையும் தீராத உடல் அனலென எரிய அவள் மேகத்தை உற்று நோக்கினாள். தீச்சுவாலை போல் கனன்ற அவள் கண்களின் வெப்பம் தாளாமல்,மேகம் உடைந்து பெருமழை பொழிந்தது. வானில் இருந்து விழும் நீர் தன் மேனி முழுதும் விழுந்து கொப்பளித்துத் தெறிக்க அவள் அசையாமல் நின்றாள்.

பல நூறு ஆண்டு காலத் தீயை ஒரு மழை அணைக்காது. உடல் தீ இன்னும் கனன்று எரிந்தது. ‘ஹோ’ வென்ற பெரும் உறுமலுடன் ஆக்கிரோஷமாய் கல் தளத்தில் ஓங்கி அறைந்தாள். கண்கள் இன்னும் பாதையைத் துழாவின. தூரத்தில் வெள்ளை முண்டு அணிந்த தம்புரான், மழைக்காகத் தலைக்கு வெள்ளை அங்கவஸ்திரம் கொண்டு முக்காடு போட்டு மெள்ள நடந்து வந்தார்.

அவள் புன்முறுவல் பூத்தாள். வேட்டை சிக்கியது என்று உணர்ந்தாள். நூற்றாண்டுத் தாபம் தீர வழி பிறப்பது போல் தோன்றியது அவளுக்கு. மெள்ள எழுந்து நின்று வெளீரென்ற தன் இருப்பை உணர்த்தினாள். ஏறிட்டு நோக்கிய தம்புரான் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்தார். மழை ஈரம் அவளை மேலும் வெளிப்படுத்தியது. அவளை நோக்கி முன்னர்ந்தார்.

அவளது புன்னகையில் தெரிந்த சிங்கப்பற்களை அவர் அப்போது பார்க்கவில்லை. பின்னர் பார்க்க நேரிட்ட போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கிழிந்த, ரத்தக் கறை கொண்ட வெள்ளை அங்கவஸ்திரத்தை மகிழ மரத்தின் அடியில் ஆட்டிடையர்கள் மறு நாள் கண்டெடுத்தனர். சில மல்லிகை மலர்களும் அங்கு இருந்தன.

மகிழ யட்சி பற்றிய இந்த நிகழ்வில் மாறும் தன்மை கொண்டது ஒன்றே. அது அதனிடம் சிக்கும் ஆண்கள் மட்டுமே. பெரும்பாலும் பிராமண நம்பூதிரிகளும் சில நேரம் நாயர் தம்புரான்களும் அடங்குவர். கடந்த 200 வருடங்களாக இவ்வாறு நடப்பதில்லை.Soolam

ஆனாலும் இன்றும் மகிழ யட்சி காத்திருக்கிறாள். பல்வேறு ஊர்களில் பல்வேறு பெயர்களில் பல்வேறு உருவங்களில். நூறாண்டுகள் கடந்தாலும் அழியாத, கலையாத பேரழகுடன், காலங்கள் தாண்டிய தாபத்துடன், சிறு புயல்களாய்த் தோன்றும் பெருமூச்சுக்களை அவ்வப்போது வெளியிட்டு, சிறு கல்லாய், வெறும் கண்ணாய், பல நேரம் தனித்த சூலமாய், முனை மழுங்கிய கல்லாய்ச் சமைந்திருக்கிறாள் மகிழ யட்சி, பசி தீர, தீர்க்க வரும் பலிகளுக்காக.

Yakshi

பண்டைய நாட்களில் யாருக்கும் அடங்காத யட்சிகளைச் சில பெருந்தெய்வக் கோவில்களில் சில சன்னிதிகளில் அல்லது உள் அறைகளில் அறைந்துவிடுவர். அதர்வண வேத தாந்திரீக முறைப்படி அக்கோவில்களின் நிலவறைகளில் கட்டியிருப்பர். திருவனந்தபுரம் கோவிலில் கூட பெரும் நகைகள் கொண்ட கல்லறையில் ஒரு கோர யட்சி கட்டப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. தற்காலத்தில் திடீரென்று முளைக்கும் சில சித்து வேலைக்காரர்கள் சில வேலைக்கார யட்சிகளைத் தங்கள் ஏவலில் வைத்திருப்பர்.

ஒரு சில யட்சிகள் பெருந்தீனிப் பண்டாரங்கள்.எவ்வளவு வடித்துக்கொட்டினாலும் உள் வாங்கி மேலும் கேட்கும் அகோரப் பசியுடன் ‘ஹோ’ வென்று வாய் பிளந்து அமர்ந்திருக்கும் – ஹவிசுக்காக ஏங்கி நிற்கும் தேவர்கள் போல. இவை பெரும்பாலும் மலர்களின் தேனின் துளியை வண்டுகளின் கால்களிலிருந்து உறிஞ்சி, முன்பசி தீர்ந்து பெரும் பலிக்காக வாளாவிருக்கும்.

கலவியும் அவற்றிற்கு ஒரு ஹவிசே. தேவர்களுக்கு ஹவிசு மட்டும் போதுமானது. ஆனால் இவைகளுக்கு அதற்கு மேலும் தேவை. இவற்றின் பசி கலவியால் மட்டும் நிறைவதில்லை. தன் வனப்பில் வீழும் ஆணின் உதிரத்தை உறிஞ்சி, பிரேத உடலைப் புறந்தள்ளி பலத்த சப்தத்துடன் அவ்வுடலின் மார் மீது கால் வைத்து நெஞ்சு நிமிர்த்தி வெற்றிக் களிப்பில் பெருமூச்சுடன் நின்றிருக்கும் இவற்றிடம் வெறி இன்னனும் அடங்கியிருக்காது. ஒரே சமயத்தில் பல பலி கொள்ளும் யட்சிகளும் உண்டு. பெரும்பாலும் ஒரு பலி கொள்வனவே அதிகம். உதிரம் உறிஞ்சப்பட்ட பிரேதங்களின் முகம் வெளிறி, கண்கள் அகன்று, வியப்பான பார்வையுடன் கருவிழிகள் குத்திட்டிருந்தால் அவை யட்சிப் பலிகள் என்று நம்பலாம்.

கலவி கோராத யட்சிகளும் உண்டு. ஆனால் இவற்றையும் கண்டவர்கள் பிழைத்திருப்பது துர்லபமே. அப்படிப் பிழைத்தாலும் சித்த பிரமை பிடித்தவர்களாயிருப்பர்.

சில நேரங்களில் திடீரென்று தோன்றி அதிகார மேல் மட்டத்தில் புகுந்து பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் பெண்களை உற்று நோக்கினால் யட்சிகள் புலப்படும். அவை அந்த வேளையின் நிகழ்வுகள் அல்ல. பல நூறு ஆண்டுகளாய்த் தீர்க்கப்படாத வன்மத்தின் கோர வெளிப்பாடு. பளீரென்ற முகமும், செதுக்கிய உடல் வாகும், வசீகரிக்கும் சிரிப்பும் கொண்ட எத்தனையோ பெண்கள் திடீரெனத் தோன்றி மின்னல் வேகத்தில் மாற்றங்கள் நிகழ்த்தி, அதிகாரத்தை வீழ்த்திச் சட்டென்று மாயமாய் மறைந்துவிடுவர். இது தற்போதும் பல மாநிலங்களில்  நிகழக் காண்கிறோம்.

‘இயக்கி’ என்று சிலப்பதிகாரம் சொல்வதும், ‘இசக்கி’ என்று தற்போது வழங்கும் சிறு தெய்வங்களும் இவைகளே என்று மொழியாளர்கள் சொல்கிறார்கள்.

கால மாற்றங்களாலும் தாது வருஷப் பஞ்சம் மற்றும் அதன் முந்தைய பிந்தைய பஞ்சங்கள் காரணமாகப் பெருங்குடியேற்றம் நடந்த போது இந்த யட்சிகள் பலிகளை இழந்தன. காடுகளில் இவை தனித்து விடப்பட்டன. மக்கள் அவ்வப்போது செலுத்தும் சிறு பலிகளை உண்டு தம் தாகம் தீர்த்த யட்சிகள் தற்போது காடுகளில் வெறும் கற்களாய்க் காத்து நிற்கின்றன. காடுகள் அழிபடும் போது ஒருசில யட்சிகள் வீடுகள் கட்ட, சாலைகள் அமைக்க என்று எடுத்துச் செல்லப்படுவதும் உண்டு. சில சாலைகளில் ஒரே இடத்தின் நிகழும் வாகன விபத்துக்கள் மூலம் தம் பலிகளை இவை ஓரளவு பெற்றுக்கொள்கின்றன என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு மாந்திரீகர்.

தங்கள் மக்கள் நகரங்களுக்கு நகர்ந்து சிவனையும், ஹரியையும் கும்பிடத் துவங்கிய பின், பிள்ளைகளை இழந்த தாய் போல் இவை பெரும் சோகத்துடன் ஏங்கிக் காத்துக் கிடக்கின்றன.

பல புது மதங்களால் மக்கள் ஈர்க்கப்பட்டாலும் குல தெய்வம் என்று கிராம தேவதைகளையே மக்கள் கொண்டுள்ளனர். பெருந்தெய்வ வழிபாட்டாளர்களும் அப்படியே. ஆண்டுக்கு ஒரு முறை என்று தங்கள் கிராமங்களுக்குச் சென்று குல தெய்வக் கோவில்களில் படையல் இடுகின்றனர். சமீப காலங்களாக படையல்கள் சைவ உணவு வகைகளாக மாறிவிட்டன என்பது கால மாற்றத்தின் வெளிப்பாடு.

காடுகளில் பலிகளுக்காகக் காத்து நிற்கும் சில யட்சிகள் கடந்துபோன பொற்காலங்களை எண்ணி ஏங்கி நிற்கின்றன. பன்றிக் குருதி, கிடா ரத்தம், கோழிக் குருதி என்று வாங்கி உண்டு களித்த மாடன், கருப்பு முதலான காட்டு தேவதைகளும் பலிகள் வேண்டிக் காத்து நிற்பது பார்த்து இந்த யட்சிகள் தங்களுக்குள் ஓரளவு சாந்தம் கொள்கின்றன. சில நேரம் தாபம் பொறுக்க முடியாமல் பெருங்காற்றாய் வீசிக் கோபம் தணிக்க முற்படுகின்றன. காற்றின் வீச்சு பொறுக்காத, பசியில் வாடும் சுடலையும் கருப்பும், யட்சிகளை தங்கள் பீடங்களில் அமர்ந்தவாறு கோபத்துடன் பார்க்கின்றன. தங்களது இயலாமை குறித்த கழிவிரக்கத்தால் ஒன்று செய்ய முடியாமல் தலை தாழ்த்தி வாளாவிருக்கின்றன.

21-ம் நூற்றாண்டில் இவை பற்றி அறிந்துகொள்வதால் என்ன பயன் என்கிற கேள்வி எழலாம். ஒரு வேளை ஊர்களுக்கிடையில் பயணம் செய்யும் போது, உணவு அருந்தவோ, இயற்கை உபாதைகளுக்காகவோ கீழிறங்கும் நேரம், அங்குள்ள தனித்த சில நட்ட கற்களைக் கண்டால் ஒரு நிமிடம் நின்று நன்றியுடன் நினையுங்கள். ஒரு சிறு பூ எடுத்துச் சாத்துங்கள். ‘நாம் மறக்கப்படவில்லை’ என்ற நினைப்பில் அவை உங்களை வாழ்த்தும். ஏனெனில் யட்சிகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை விட, அவை நம்மை எப்படிப் பார்க்கின்றன என்பது இன்றைய தேவைகளில் ஒன்று. அவை நம்மை நல்ல விதமாகப் பார்க்க வேண்டும்.

யட்சிகளும் காட்டு / கிராம தெய்வங்களும் நமது பண்டைய காலத்துடனான நமது தொடர்புகள். நாம் அறிவால் யூகித்திராத முன்னோர்கள் காலம் தொட்டு இன்று வரை அவை நமது காலங்களின் தொடர்ந்த் காலக் கணக்கீட்டாளர்களாகத் திகழ்கின்றன. நாம் பார்க்காத கடந்த காலத்தையும், நாம் கண்டுகொண்டிருக்கும் நிகழ் காலத்தையும் அவை இணைக்கின்றன. எதிர் காலத்திலும் இவை இருக்கும்.

காலம் கடந்து வாழும் அவை நமது மூதாதைகள் விட்டுச் சென்ற மிச்சம் ஏதாவது இருப்பின் அதை நம்மிடம் எதிர்பார்க்கும்.  அவற்றை நமது அவ்வப்போதாலான பலிகளால், படையல்களால் நிரப்புகிறோம். முன் சொன்ன ஒற்றைப் பூ சாற்றுவதும் அப்படியே. ஏதோ பழைய சோற்றுக் கடன் என்று கொள்ளலாம்.

ஒரு யட்சி / கிராம தேவதை எதிர்பார்ப்பது இது தான்:

‘உன் முன்னோர் எனக்குக் கடன் பட்டுள்ளார்கள். வருஷம் தோறும் கடன் கழிப்பார்கள். அதற்காக வருஷப் பலி உண்டு. இன்று நீங்கள் எங்களை விட்டு வெளியேறி விட்டீர்கள். நாங்கள் பசியாயிருக்கிறோம். இந்தப் பசி பல நூற்றாண்டுப் பசி. ஒட்டுமொத்த கிராமங்களே காலியான பின் எங்களுக்கான பலிகள் மொத்தமாக இல்லாததாயின. எனவே எங்கள் பசியை ஆற்றுங்கள். இது உங்கள் கடன். அதற்கான சகுனங்கள் அளித்துக்கொண்டே இருக்கிறோம். அவற்றை உணர்ந்து கடன் தீருங்கள்.’

அந்தக் குழந்தைக்கு ஆறு வயது இருக்கும். நெல்லி மரத்தடியில் மாட்டாங்கரையில் அமர்ந்திருந்தாள். புதிய குழந்தையாக இருக்கிறதே என்று விவசாயிகள் விசாரித்தனர். ‘நானு கொழந்த. இப்ப தான் வந்தேன். வேற ஊருலேருந்து வந்தேன்’, என்றாள். வேளாண் சமூகம் வரவேற்றது. குழந்தையைப் பராமரித்தது. அந்த ஆண்டு அமோக விளைச்சல்.

அடுத்த ஆண்டு நடவு நடும் முன் குழந்தை நாற்றங்காலில் நட்டு துவக்கியது. அந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத விளைச்சல். வேளாளர் குழந்தையைத் தெய்வமாகக் கொண்டாடினர். நெல்லியம்மா என்று அழைத்தனர். மரத்தடியில் ஒரு கூரை அமைத்து சிறு குடில் கட்டினர்.

நெல்லியம்மாவின் பெயர் பல ஊர்களுக்குப் பரவியது. பல ஆண்டுகள் கழித்து நெல்லியம்மா கன்னித் தெய்வமானாள். விரைவில் ஒரு சிலை நிறுவினர். இரவு நடு நிசியில் மட்டும் அவள் உருப்பெற்று வெளி வந்து வயல்களைச் சுற்றி வருவாள். பயிரைக் கையில் எடுத்துத் தடவிக் கொடுப்பாள். பயிர்கள் செழித்து வளர்ந்தன. இதை அறிந்த ஒரு பட்டுநூல்காரன் ( சௌராஷ்டிர இன வணிகன்) ஒரு நாள் இரவு அவளைச் சிறை பிடித்து ஒரு யட்சி சிலையில் ஆவஹானப் படுத்தினான். அவளை வைத்து தனது வியாபாரத்தைப் பெருக்கினான்.

அவள் வஞ்சக வணிகனின் கைதியானாள். தன்னை விடுவிக்க வணிகனிடம் கெஞ்சினாள். ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அவளை வெளிச்செல்ல அனுமதித்தான் வணிகன். பத்து வருடங்கள் கழிந்து மீண்டும் ஒரு முறை அவள் கெஞ்சினாள். அவன் மேலும் 5 ஆண்டுகள் அவளைச் சிறையிருக்க ஆவாஹனம் செய்து கட்டினான். ஐந்தாண்டுகள் மாட்டாங்கரை ஒட்டிய வயல்கள் சீரழிந்தன. அவள் அழுதாள். வணிகனிடம் இறைஞ்சினாள்.

Nelliyadiaal

நெல்லியடியாள்

ஆறாம் ஆண்டு துவக்கத்தில் அவளை மீண்டும் கட்ட முயற்சித்த போது தேவி வீறுகொண்டெழுந்தாள். வணிகன் தலை உருண்டது. நெல்லியம்மா மூலஸ்தானம் வந்தாள். ஊர் செழித்தது. வேளாளரும் வைதீகரும் கொண்டாடினர். இன்றும் நெல்லியடியாள் என்று தேரழுந்தூரில் எழுந்தருளியுள்ளாள். ஊர் சார்ந்த வைதீகக் குடும்பங்களுக்கும் குலதெய்வமாக சுமார் 700 ஆண்டுகளாக அருள்பாலிக்கிறாள்.

அவள் அங்கு இல்லாத காலத்தில் ஊரைக் காக்க சப்த கன்னிகைகளை வேண்டி அவைகளைப் பிடாரியின் தலைமையில் கடகடப்பைக் குளம் அருகில் இருக்கச் செய்தாள் நெல்லியடியாள். இன்றும் பிடாரி சப்த கன்னிகைகள் சூழ ஊரின் தெற்கில் கோயில் கொண்டுள்ளாள்.பிடாரி கோவில்

‘கோமல் ரோடு’ என்னும் இடத்திலிருந்து தேரழுந்தூருக்கு அப்போதெல்லாம் வாகன வசதி கிடையாது. இரவு 10 மணிக்கு மேல் மாட்டு வண்டிகளும் போகாது.  நெல்லியம்மாவின் பழைய கோவிலைக் கொஞ்சம் மேம்படுத்தக் கும்பகோணம் சென்று வசூல் செந்து வந்த பொன்னுச்சாமித் தேவர் கோமல் ரோடில் நின்றிருந்தார். தனியாக நின்ற அவருக்குத் திடீரென்று வியர்த்தது. முப்பது வயது மதிக்கத்தக்க, தலைமுழுவதும் மல்லிகைப் பூ வைத்த, மிகுந்த வனப்புள்ள பெண் அவ்வளவு அருகில் அந்நேரத்தில் நிற்பதை அப்போதுதான் பார்த்தார்.

‘எங்க இந்நேரத்துல?’ அந்தப் பெண் வினவினாள். குரலில் ஒரு வசீகரம்.

‘ஊருக்குப் போகணும். வண்டி இல்ல. கும்மோணம் போயிட்டு வர நாழி ஆயிட்டு,’ படபடப்புடன் சொன்னார் தேவர்.

‘வாங்க, நானும் தேரழுந்தூர் தான் போறேன். துணையோட போயிடலாம்,’ என்றாள் அவள். முதலில் தயங்கிய தேவர் கொஞ்சம் பயத்துடன் பின் தொடர்ந்தார். சிறிது தூரம் சென்றபின் மஞ்ச வாய்க்கால் அருகில் வந்த போது, ‘நீங்க முன்ன போங்க. நான் பின்னால வரேன்,’ என்றாள் அவள்.

தொழுதாலங்குடி குளம் அருகில் வரும் போது மணி பதினொன்று இருக்கலாம். தேவர் பயத்துடன் திரும்பிப் பார்த்தார். பதினாறு வயதுப்பெண் ஒருவள் தலை நிறைய பூவுடன் வந்துகொண்டிந்தாள். தேவர் வியர்த்துப் போனார். ஏதோ தெரியாத்தனமாக மாட்டிக்கொண்டோமே என்று தலையில் இருந்து வியர்த்து ஊற்றியது.

கடகடப்பைக்குளம் அருகில் வந்த போது நாற்பது வயதுப்பெண் ஒருவள் வருவது தெரிந்தது. வாய் குழற தேவர் பிதற்றிக் கொண்டே விடு விடுவென நடந்து ஒரு வழியாக வீட்டின் வாயிலை அடைந்தார். அருகில் அதே முப்பது வயதுப் பெண்.

‘உன் உன் வீடு எங்கெம்மா?’ என்று ஒருவாறு கேட்டுவைத்தார் தேவர். நெல்லி மரத்தை ஒட்டிய கோவிலைக் கை காட்டி வேகமாகச் சென்று அடைந்தாள் அவள். தேவருக்கு நினைவு திரும்ப இரண்டு நாட்களாகியது.

இந்த ஆண்டு இந்த இரு ஊர்த் தெய்வங்களுக்கும் செய்யவேண்டியவற்றைச் செய்தோம். நீராட்டி, புதுப் புடவை சாற்றி, சர்க்கரைப் பொங்கல் படைத்து ஊருக்குக் கொடுத்தோம். பல நூற்றாண்டுத் தொடர்புள்ள ஒரு குழந்தையின் மனம் குளிர திருப்திப்படுத்தினோம்.

புடவை சாற்றி பொங்கல் வினியோகம் செய்து முடித்த போது ஏழு வயதுச் சிறு பெண் குழந்தை ஒன்று என்னைப் பார்த்துச் சிரித்தது. பொங்கல் கொடுத்தேன். அதன் பெயர் கேட்டேன்.

‘கௌரி’ என்றது.

நூற்றாண்டுப் பசி தீர்ந்தது.

 
Leave a comment

Posted by on February 7, 2016 in Writers

 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: