‘இன்னிக்கி அவசியம் பார்க்க வர்றீங்க,’ அண்ணாச்சியின் குரலில் அவசரமும் கோபமும் தெரிந்தது.
மதிய உணவு வேளையில் நாங்கள் சந்தித்துப் பேசுவது வழக்கம்.
‘எலே மக்கா, நீரு விஷ்ணுபுரம் நாவல் பத்தி ஒசத்தி எழுதினீரேன்னு அதப் படிச்சா, ஒரு எளவும் புரியல. என்னதான்யா சொல்றாரு ஜெயமோகன்? மூணு கதவுங்கறார், விஷ்ணுங்கறார், திடீர்னு ஆழ்வார்ங்கறார், வைசேஷிகம், சார்வாகம்கறார். இத்தனையும் சொல்லிட்டு, கடைசில என்னவா முடிக்கறாருன்னே தெரியல,’ என்று சற்று கோபமாகவே சொன்னார் அண்ணாச்சி.
சற்று அமைதியாயிருந்தேன். ‘என்னா ஒரு பேச்சும் காணோம்? நீரு சொன்னதால ‘அறம்’ படிச்சேன். அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே,’ என்ற தன் நியாயமான கருத்தை முன்வைத்தார் அண்ணாச்சி.
‘அண்ணாச்சி சொல்றது வாஸ்தவம் தான். விஷ்ணுபுரம் கொஞ்சம் கடினமான நாவல் தான். ஆனா அது மாதிரி தற்சமயம் தமிழ்ல வேற எதுவும் வரல்ல. ‘அறம்’ங்கறது சிறுகதைத் தொகுப்பு. வேற வேற வித்துக்கள் இருக்கும் ஒரு ஒரு கதைலயும். ஆனா விஷ்ணுபரம் அப்பிடி இல்லை. யுகங்கள் கடந்த பார்வை அது. ரெண்டு யுகங்கள் முழுக்க பயணிக்கணும் இல்லையா. அதால ஒரு அயற்சி ஏற்படறது சகஜம் தான். ஆனா அதுல இருக்கற தத்துவ தரிசனம் தான் முக்கியமே தவிர கதைன்னு பார்த்தா பெருசா ஒண்ணும் இருக்காது,’ என்றேன்.
‘நல்லா பேசுதீரு. ஒரு வரில சொல்லும் வே விஷ்ணுபுரம் கதைய,’ என்று சவாலாகப் பேசினார் அண்ணாச்சி.
‘விஷ்ணு புரண்டு படுக்கறாரு. யுகம் மாறுது. அவ்வளவு தான் கதை,’ என்றேன்.
‘இத சொல்றதுக்கு எதுக்கு இவ்வளவு நீட்டி முழக்கணும்? ஏதுக்கு வளவளன்னு எழுதணும்?’, என்று கோபம் குறையாமல் கேட்டார் அவர்.
‘அண்ணாச்சி, இலக்கியம்னா என்னான்னு நெனைக்கீக? அது என்ன பேசுபுக்கு ஒத்தவரியா? ‘தமிளா எந்திரி நாளைக்கி நீ மந்திரி இல்லாட்டி நான் சுந்தரி’ அப்புடின்னு கவிதை எளுதி பட்டம் வாங்குற வைரமுத்து கவிதையா? இது இலக்கியம் இல்லில்லா? இலக்கியம்ங்கறது வாழ்க்கை அண்ணாச்சி’ என்றேன்
‘அப்பா வைரமுத்து கவிஞர் இல்லியா? அவுரு செய்யுறது இலக்கியம் இல்லியா? என்னவே சொல்லுதீய?’ என்று பொரிந்தார் அண்ணாச்சி.
‘அண்ணாச்சி, இப்பம் நீங்க பேசுகது பாலிடிக்ஸ். இது இலக்கியம் இல்லை.
இலக்கியம் படிக்கறது நாம பிளேன்ல போவது மாதிரி. பிளேன் கிட்ட நாம நம்மள ஒப்புவிக்கறோம் இல்லையா. அது ஆரம்பத்துல சொணக்கமா மெதுவா போகுது, பிறகு திடீர்னு வேகம் பிடிச்சு சட்டுனு எழும்புது, ரொம்ப நேரம் சலனமில்லாம பதறாம பறக்குது, அப்பப்ப சின்ன அதிர்வுகள், பிறகு சட சடன்னு இறங்கி சில சமயம் அமைதியாவும் சில சமயம் ஒரு அதிர்வுடனும் தரைதொடுது. நாம இத்தனையையும் அதுக்குள்ள இருந்து அனுபவிக்கறோம் இல்லையா. அது மாதிரி தான் இலக்கியமும். நாம நம்மள முழுமையா அதுகிட்ட ஒப்புக் கொடுக்கணும். அது போற போக்குல எல்லாம் போகணும். இலக்கியம்ங்கறது முழுமையான அனுபவம். தமிழ்ப் படம் பார்க்கற மாதிரி ரெண்டு ஃபைட்டு, ரெண்டு பாட்டு, தாலி செண்டிமெண்ட், சுபம்னு முடியாது. இலக்கியம் நம்ம வாழ்க்கை மாதிரி அண்ணாச்சி. பிரமாதமான திருப்பங்கள் இல்லாம சீராவும் இருக்கும், சில நேரங்கள்ல் சின்ன மாற்றங்களும் ஏற்படும்,’ என்றேன்.
ரொம்ப பேசிவிட்டேனோ என்று நினைத்தேன்.
‘புரிஞ்சா மாதிரி இருக்கு. ஆனா தத்துவம் நெறைய பேசறாரே ஜெயமோஹன். அதெல்லாம் நம்ம வாழ்க்கையில இருக்கா என்ன? எதுக்கு அந்தக் கஷ்டம் எல்லாம்?’ என்று கேட்டார் அண்ணாச்சி.
‘அது நம்ம கல்விமுறைல இருக்கற பிராப்ளம் அண்ணாச்சி. சைவம், சாக்தம், சாங்கியம், வைசேஷிகம், அத்வைதம், துவைதம் இதெல்லாம் என்னன்னே தெரியாத தலைமுறைகளா கடந்த 300 வருஷங்களா ஆயிட்டோம். இப்ப சைவம்னா ஏதோ சாப்பாடுன்னு ஆயிட்டு. அதுக்கு மேல தெரியல. வைஷணவன்னா வைசியாளான்னு கேக்கறோம். அந்த அளவுலதான் நாம இருக்கோம். இது கல்வி முறை பிரச்சினையே தவிர விஷ்ணுபுரம் பிரச்சினை இல்லை,’ என்றேன்.
அண்ணாச்சி சற்று யோசிப்பது போலத் தெரிந்தது.
‘அண்ணாச்சி, விஷ்ணுபுரம் மாதிரி ‘கொற்றவை’ ன்னு ஒரு நாவல். அவரோடது தான். சிலப்பதிகாரக் கதை. சுத்த தமிழ்ல. படிச்சுப் பாரும். ரொம்ப கஷ்டம். ஆனா அந்த அனுபவம் கடைசில பேரானந்தமா இருக்கும். நம்ம மொழியோட வளம் தெரியும். சொற்களோட ஆளுமை தெரியவரும். ‘லாலாக்கு டோல் டப்பி மா’ னு பாட்டு கேக்கற நம்ம தமிழ்ச் சமுதாயத்துல இப்படி ஒரு எழுத்தாளர் இருக்காறேன்னு நாம கொண்டாடணும் அண்ணாச்சி,’ என்றேன்.
‘படிச்சுட்டு சொல்றேன் சாமி,’ என்றார் அண்ணாச்சி.
Yes, not an easy exercise, but awesome writing, needs a glossary!
LikeLike
Well said sir
LikeLiked by 1 person
ஒரு அருமையன அடர்வான இலக்கியத்தை, வெகு ஜனத்திற்கு அறிமுகம் செய்ய முயன்றிருக்கிறீகள். நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
LikeLike
thanks sir
LikeLike