‘டேய் உன் பேர் என்னடா?’
‘…ஆ .. ஆமருவி சார்’
‘என்னடா இழுத்து பதில் சொல்ற? ‘ பளார் என்று ஒரு அறை.
‘இ..இல்ல சார். பே..பேச்சு அப்பிடித்தான்.’
‘என்ன பேர் சொன்ன?’
‘ஆ…ஆமருவி சார்’
‘என்னாடா புனைபேரெல்லாம் சொல்ற?’
‘இ..இல்லா நி…நி.. நிஜப் பேரே அதான் சார்.’
‘டேய், இவன் நாமம் போட்டிருக்காண்டா..நீ என்ன எப்.சி.யா ?’
‘ஆமாம் சார்.’ பளார் பளார் என்று இரு அறைகள்.
‘டேய் எப்.சி.ன்னா என்ன பெரிய புடுங்கியா? தே**** மகனே. இந்தா தம் அடி’
பின்னர் பல அறைகள். சில உதைகள், பல வசவுகள் என்று நாள் முடியும். புகழ் பெற்ற ஒரு அரசுப் பொறியியல் கல்லூரியில் ‘ராகிங்’ என்ற பெயரில் நடந்த கட்டற்ற வன்முறை.
1990ல் மீண்டும் மீண்டும் எனக்கு நடந்த நிழல் நாடகம் இது. சாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெற்ற சிலர் அரங்கேற்றிய தினப்படி சேவை இது. தட்டிக் கேட்க யாருமில்லை. யாருக்கும் தைரியம் இல்லை. அப்போதைய மண்டல் கமிஷன் வன்முறைகள் வேறு தீயைத் தூபம் போட்டு நெய் விட்டு வளர்த்தன.
‘மண்டல் கமிஷன் தேவையா இல்லையா டா?’
‘வேண்டாம் சார். அது தேவை இல்லை’
‘என்ன எப்.சி.ன்னு திமிரா? மவனே, போடுடா ரெண்டு’ இரண்டு அறைகள்.
‘ஏண்டா மண்டல் கமிஷன் வேண்டாம், நாயே’
‘இல்லை சார், தமிழ் நாட்டுல 50 சதவிகிதத்துக்கு மேலயே இருக்கு. 69 இருக்கு. மண்டல் வெறும் அம்பது தான் வேணம்னு சொல்லுது’
‘அப்டியா சொல்ற? என்ன மச்சான், திக்குவாய் ஏதோ சொல்லுது?’
மண்டல் கமிஷன் என்ன சொல்கிறது என்பதே தெரியாமல், அல்லது தெரிந்துகொள்ள அறிவில்லாமல் வெறும் ஆட்டு மந்தைக் கூட்டங்களாய் அரசுப் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்த பல பிள்ளைகள் நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் 25 ஆண்டுகள் கழிந்தும் மனதில் வடுவாய் நின்றுவிட்டது. இப்போது நினைத்தாலும் உடலில், முதுகுத் தண்டில் பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இவை அனைத்தும் பெரும் பணக்கார இடை நிலைச் சாதி சார்ந்தவர்கள்.
சாதி அடிப்படை இட ஒதுக்கீடு தேவை இல்லையா? அந்தப் பிள்ளைகள் அதைப் பயன் படுத்தி வளரவில்லையா? என்று கேட்கலாம். வளர்ந்தார்கள். பலர் மிகவும் கீழிருந்து வந்தவர்கள். பனை மரம் ஏறும் ஒரு தொழிலாளியின் மகனும் என்னுடன் படித்தார். ஆங்கிலம் விடுங்கள், தமிழில் எழுதத் தெரியாத பண்ணை வேலையாளரின் மகனும் படித்தார். இவர்கள் தங்கள் நிலை உணர்ந்து ஊன்றிப் படித்து இன்று அமெரிக்காவில் நல்ல நிலையில் உள்ளனர்.
சாதி அடிப்படியில் வந்ததால் இவர்கள் படிக்கவில்லை. அவர்களின் சாதி அவர்களுக்குப் படிக்க ஊக்கம் அளிக்கவில்லை. ஆனால் அவர்களின் வறுமை அவர்களை விரட்டியது, படிப்பில் ஊக்கம் கொள்ள வைத்தது. தங்கள் தாய் தந்தையரின் அயராத உழைப்பு இவர்கள் கண் முன் நின்று இவர்களை ஆற்றுப்படுத்தியது.
இட ஒதுக்கீடு வழங்குங்கள், ஆனால் பொருளாதாரம் பார்த்து வழங்குங்கள். சாதி அடிப்படை வேண்டாம். சாதியை வாழ வைக்காதீர்கள்.
விஜயராகவாச்சாரியார் சாலையில் இருந்தும், அப்பு முதலியார் தெருவில் இருந்தும் சாரியாரையும் முதலியாரையும் நீக்க மட்டுமே உங்கள் பகுத்தறிவுக் கழகங்களால் முடிந்துள்ளது. சாரியாரை வெட்டினால் விஜயராகவன் தெரு என்று இருக்க வேண்டுமே தவிர விஜயராகவா தெரு இன்று இருக்கக்கூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்சியாளர்களையே உங்கள் பகுத்தறிவு அரசுகள் உருவாக்கின.
தெருக்களில் மட்டுமே சாதிகளை வெட்ட முடிந்த உங்கள் முற்போக்குகளால் இன்று தெருக்களில் சாதிப் பெயரில் வெட்டிக்கொள்கிறார்கள். அடிப்படை மானுட அறத்தைப் போதிக்காமல் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே அரசியல் மேடைகளில் முழங்கினீர்கள். எதுகை மோனையுடன் பேசுவதே சமூக நீதி என்று நம்ப வைத்தீர்கள். எதற்கெடுத்தாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று புரளி பேசி சாதி என்னும் புற்று நோயை மறைத்தீர்கள்.
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சாதி வேண்டாம்; பொருளாதாரம் மட்டுமே பாருங்கள். சாதியில்லாத சமுதாயம் உருவாகும்.
இன்று ஓட்டுப் பொறுக்கும் உங்களுக்கு இது காதில் விழாது. ஆனால் நாளை நீங்கள் நெஞ்சு வலி வந்து, மருத்துவமனையில் சேரும் போது உணர்வீர்கள்.
ஆனால் அப்போது காலம் கடந்திருக்கும். உங்கள் காலம் முடிவுக்கு வந்திருக்கும்.
Whatever you have written here definitely has struck a chord in me too.
LikeLike