திருமேனி பாங்கா?

வைஷ்ணவத்தில் பல தமிழ்ச் சொற்கள் வழக்கத்தில் உள்ளன. இருந்தன என்று சொல்லலாம். அவை மறைந்து வருகின்றன.

ரேழி, அரங்குள், திருமாப்படி, பத்தாயம், முதலான சொற்கள் முழுமையாகவே வழக்கொழிந்து போய்விட்டன. நெல்லே இல்லாத போது ‘பத்தாயம்’ எப்படி தப்பிக்கும்?

‘தளீப்பண்ற உள்’ என்பது மட்டும் ஓரிரு வைஷ்ணவ இல்லங்களில் எஞ்சி இருக்கிறது. ‘கிச்சன்’ என்று தற்போது தமிழால் அறியப்படும் அறை அது. இவை தவிர ‘சாத்துமுது’, ‘நெகிழ்கறமுது’ போன்றவை அநேகமாக இல்லவேயில்லை.

‘கண்ணமுது’ இதுவரை தப்பித்துவிட்டது. ஆனாலும் ‘பாயசம்’ தான் யாருக்கும் தெரிகிறது.’ஸ்வீட் பாரிட்ஜ்’ க்கு இன்னமும் பழகவில்லை. ‘அக்கார அடிசில்’ என்றால் மனைவி முறைத்துப் பார்க்கிறாள். ( அக்காரம் – கரும்பு, அடிசில் – அரிசி ).

‘நூறு தடா வெண்ணையும் அக்கார அடிசிலும் ‘ சமர்ப்பிப்பதாக ஆண்டாள் கூறுகிறாள். ‘தடா’ என்கிற அளவையும் போய். இன்று வழக்கொழிந்த இந்தியச் சட்டம் எனறே நமக்குத் தோன்றும்.

‘தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்’ என்று எழுதுவது உண்டு. ‘ஒரு தண்டத்தை ( கழியை) நிற்கவைத்தால் எப்படி தடாலென்று விழுமோ அப்படி கீழே விழ்ந்து வணங்குகிறேன்’ என்று பொருள். எஸ்.எம்.எஸ். காலத்தில் இப்படி எழுதினால் நம்மைத்தான் ‘தண்டம்’ என்பார்கள்.

‘நைவேத்யம்’ என்கிறார்கள். ‘காட்டுவது’ என்னும் பொருளில் வருகிறது இது. வைணவத்தில் ‘அம்சேப்பண்றது’ ( அமுது செய்யப் பண்ணுவது) என்னும் நல்ல தமிழ்ச் சொல்லாடல் இருக்கிறது. இதுவும் அருகி வருகிறது.

பெரியவர்களை ‘அமருங்கள்’ என்று சொல்வது அவ்வளவு மரியாதையாக இருக்காது என்பதால் ‘எழுந்தருளியிருக்க வேண்டும்’ என்பதும் தற்போது மிகவும் வயதான, சித்தாந்தத்தில் ஊறியவர்களுக்கு மட்டுமே என்று ஆகியுள்ளது. அது போல அந்தப் பெரியவர்களை வீட்டிற்கு அழைத்தால் ‘பொன்னடி சாற்ற வேண்டும்’ என்று சொல்வது வழக்கம். ‘பொன்’ ரொம்ப விலையாகிவிட்டதால் விட்டு விட்டார்கள் போல. ‘அடி சாற்ற வேண்டும்’ என்றால் விபரீதமாகப் பொருள் படும் என்பதால் வழக்கில் இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

‘சௌக்கியமா?’ அல்லது ‘நலமாயிருக்கிறீர்களா?’ என்று கேட்பதற்குப் பதிலாக ‘தேவரீர் திருமேனி பாங்கா?’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. ‘திருமேனி பாங்காய் எழுந்தருளியிருக்கிறீர்களா?’ என்பதன் சுருக்கம். இப்போது இல்லவே இல்லை. ‘தேவரீர்’ என்பது ‘தேவள்’ என்று ஆசார வட்டாரங்களில் இன்னும் ஒலிக்கிறது. விரைவில் மறையும் என்று எதிர்பார்க்கலாம்.

‘வாழ்க்கை நல்லபடியாக நடக்கிறதா?’ என்பதை ‘திருமாளிகையில் திருவாராதனங்கள் நடக்கின்றனவா?’ என்று சாளக்கிராம ஆராதனைகளின் நலனை விசாரிப்பதும் தற்போதும் இல்லை.

‘அவருக்கு வயிற்றில் வலி வந்துள்ளது’ என்பதை ‘நோவு சாற்றிக்கொண்டுள்ளார்’ என்று சொல்வது வழக்கம். இப்போது அப்படிச் சொன்னால் ‘கீழ்ப்பாக்கம்’ என்று நினைக்கலாம்.

பெரியவர்கள் காலமானதை ‘ஆச்சாரியன் திருவடி அடைந்தார்’ என்பதை மட்டும் இன்னும் விடாமல் பின்பற்றுகிறார்கள். ஹிண்டு பேப்பர் விளம்பரங்களில் இதை இன்னும் காணலாம்.

‘குர்ச்சி ஸ்வீகரிக்கணும்’ என்று சமீபத்தில் காதில் விழுந்தது. இது தமிழ் இல்லை என்றாலும் சில பத்தாண்டுகள் கழித்துக் கேட்டதால் மனதிற்கு நிறைவாக் இருந்தது.

கொல்லைகளே இல்லாத பிளாட் வாழ்க்கையில் ‘கொல்லைக்குப் போவது’ என்னும் வழக்கு இல்லாமல் போய் ‘பாத்ரூம் போறேன்’ என்று தமிழில் சொல்கிறோம். இன்னும் ஒரு 10 வருடத்தில் ‘வாஷ் ரூம்’ பழகிவிடும். ‘இரண்டாம் கட்டு’ என்று சொல்பவர்களை ‘ரெண்டுங்கெட்டான்’ என்று நினைக்கத் துவங்குவோம்.

இதெல்லாம் முன்னேற்றம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் போல. ஆனால் அதற்கான விலை நமது பண்பாட்டையும் பழைய சொல்லாடல்களையும் நாம் இழப்பது.

வாழ்க்கையின் வேகத்தில் எதையெல்லாமோ இழக்கிறோம். இதனால் நம்மை நாமே இழக்கிறோம் என்பதை உணராமலேயே.

மனதின் ஆழத்தில் ஏதோ கனக்கிறது.

6 thoughts on “திருமேனி பாங்கா?

  1. >>”இதெல்லாம் முன்னேற்றம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான் போல.”
    Yes, very sad.. How many of us talk to our own children in tamil at home? I feel that number is too rapidly reducing.

    Like

  2. உடம்பு சரியில்லை என்றால் நோவு சாற்றிக்கொண்டிருக்கிறார் என்று சொல்வதுண்டு. வெறும் வயிற்றுவலிக்கு மட்டுமில்லை என்று நினைக்கிறேன்.
    நான் எங்கள் அகத்தில் ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையுடனேயே பேசி வருகிறேன். யாராவது போன் செய்தால் அடியேன் இராமானுஜ தாசன் என்றே சொல்லுகிறேன். அனேக தண்டன் சமர்பித்த விண்ணப்பம் என்றே எழுதுகிறேன். என் பேரன்கள் இருவரும் தீர்த்தம் என்றே சொல்லுகிறார்கள். முடிந்தவரை காப்பற்றி வருகிறேன். மற்றவர்களிடத்தில் பேசும்போதும் மாற்றாமல் பேசுகிறேன். யாரும் நமக்காக மாறுவதில்லையே!
    உங்களுடைய தமிழ் மாமி வணக்கம் பதிவு நினைவிற்கு வருகிறேன்.

    Like

Leave a comment