நூல் படிப்பவர்கள் பல வகையினர்.
நூலை உண்மையிலேயே படித்தவர்கள் உடனே கருத்து சொல்லிவிடுவார்கள். அல்லது எழுதிவிடுவார்கள்.
அதிகப்படியான நூல் விமர்சனங்கள் என்று வருபவை பெரும்பாலும் நேர்மையற்ற, தனி மனிதப் புகழ்ச்சிகள் கொண்ட, ‘வள்ளுவரே’ ,’ வால்மீகியே’ என்று வானளாவப் போற்றிகள் கொண்ட ஒன்றாக இருக்கும்.
இன்னொரு வகை உண்டு. நூலைப் பெற்றுக்கொண்டு படிப்பதே இல்லை. எப்போது கேட்டாலும் ‘அல்மோஸ்ட் முடிச்சுட்டேன். இன்னும் பத்துப் பக்கம் தான்’ என்பதாக இருக்கும். ‘படிச்ச வரை கருத்து சொல்லுங்க,’ என்றால் ‘முடித்துவிட்டுச் சொல்கிறேன். அப்பத்தான் ஒரு கண்டினியூட்டி இருக்கும்’ என்பார்கள். அதிலிருந்தே அவர்கள் எவ்வளவு பிடித்துள்ளார்கள் என்று தெரிந்துவிடும். திறந்திருக்கவே மாட்டார்கள்.
இன்னொரு சுவையான வகை உண்டு. அது படித்திருக்கும். ஆனால் கருத்து சொல்லாது. எங்காவது பார்த்தால் ‘ஆம். படித்தேன். நல்லாயிருந்துச்சு’ என்பதாகச் சொல்லும் வகை. காரணம் அசூயையாக இருக்கலாம் என்று தோன்றும். என்ன விமர்சனமோ அதை எழுதித் தொலக்க வேண்டியது தானே என்று தோன்றும். கேட்க முடியாது. கேட்டால் பகை வரும்.
புதிய வகை ஒன்று உண்டு என்பதை இப்போது தான் கண்டுகொண்டேன். அது படித்திருக்கும். ஆனால் படிக்காத்து போலவே உலா வரும். ‘படிச்சுட்டீங்களா?’ என்று கேட்டால், ‘இல்லைங்க. எங்க நேரம் கிடைக்குது? வேலைக்குப் போயிட்டு வரவே நேரம் இல்லை. உங்களுக்குத் தெரியாததா?’ என்னும். நாமும் ‘அட ஆமாம்,’ என்று சொல்லியே ஆக வேண்டும். ஆனால் ஒன்று. இவ்வகையாளர்கள் ஒரு சினிமா படம் விடாமலும், ஒரு அக்கப்போர் விடாமலும் பங்குபெற்றிருக்கும். எப்போதும் மொபைலும் கையுமாகவே அலையும் இவ்வகை, உலக விஷயங்களில் கருத்துச் சொல்லாமல் இருக்கவே இருக்காது. வரலாற்றில் இடம் வேண்டும் என்பது போல.
இந்த மாதம் ஒரு புத்தம் புதிய வகையைப் பார்த்தேன். ‘இப்பல்லாம் ஈ-புக். வந்திருச்சே. உங்க புக் ஈ-புக் பார்மட்ல எப்ப வருது?’ என்று கேட்கும். ‘இப்ப இல்ல. புக் படிச்சீங்களா?’ என்று கேட்டால், ‘அதான் சார். நமக்கு ஈ-புக்ல படிச்சாத்தான் படிச்ச மாதிரியே இருக்கு,’ என்று ஜகா வாங்கும். ‘கடைசியா ‘ஈ-புக்’ல என்ன படிச்சீங்க?’ என்றால், ‘லாஸ்ட்டா டான் பிரவுண் கதை ஒண்ணு. அதான் சார் படமா வந்திச்சே. அத டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன்’ என்று பீலா விடும். ‘படிச்சீங்களா?’ என்றதும், ‘எங்க ஸார் டயம் கெடைக்குது? வேலைக்குப் போறதுக்கே டைம் சரியா இருக்கு,’ என்று பின் வாங்கும்.
இவ்வாறான வகையறாக்களால் சூழப்பட்டது தான் விமர்சன உலகம். இதில் இலக்கியவாதி என்று பட்டங்கள் வேறு. வாழ்க விமர்சன உலகம்.