அத்வைத சித்தாந்தத் தெளிவு பெறக் கண் மருத்துவரை நாடுங்கள். நேற்று அப்படி நான் ஞானம் பெற்றேன்.
உலக உருண்டை போல் ஒரு கருவி. எப்.81 பீல்டு டெஸ்ட் என்கிறார்கள். தலையை உள்ளே கொடுக்க வேண்டும். எங்கும் ஒரே வெண்மை மயம். தூரத்தில் ஒரு சின்ன ஒளி. அதை மட்டும் பார்க்க வேண்டும். அவ்வப்போது அந்த வெள்ளை உலகத்தில் சிறு மின்மினி ஒளி ஒரு நொடிக்கு மட்டும் வரும். தூரத்து ஒளியை விட்டுக் கண்ணை எடுக்காமலும், அதே சமயம் மின்மினி ஒளி தோன்றும் போதும் கையில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.
அதாவது மின்மினி ஒளி தெரிந்தது என்பதற்கு அடையாளம். ஆனால் மின்மினி ஒளி ஒரு நொடியே இருக்கும். தூரத்தில் இருக்கும் நிதானமான ஒளி நிரந்தரமானது. அது பிரும்மம். மாறாதது. இந்த மின்மினிகள் தோன்றுவது போல் தெரியும், ஆனால மறைந்துவிடும். இவை மாயை. காட்சிப்பிழை என்றும் சொல்லலாம்.
எந்த மின்மினி ஒளியையும் சட்டை செய்யாமல், அதன் வருகையை மட்டும் பதிவு செய்துகொண்டு, பிரும்மம் ஒன்றே என்கிற ஞான மோனத்தில், ஞான மோகத்தில் சிந்தையை பிரம்மத்திடம் மட்டுமே செலுத்தி அதன் அருளை வேண்டினால், 10 நிமிஷத்தில் எப் 81 பீல்டு டெஸ்ட் முடிந்து வீடு செல்லலாம்.