தாஸன்

#நெய்வேலியில் ‘தாஸன்’ (70) வருகிறார் என்றால் வீட்டினுள் ஒளிந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. ‘திருப்பாவைல 8ம் பாசுரம் சொல்லு’, ‘சஹஸ்ரநாமத்துல ‘பீஷ்ம உவாச’க்கு அப்பறம் கண்டிநியூ பண்ணு’ என்று நேரம் காலம் தெரியாமல் எல்லார் எதிரிலும் கேட்டு வைப்பார் என்பதால் அந்த பயம்.

விடியற்காலையில் எப்போதுமே குளிர் இருக்கும். மார்கழி மாதம் நெய்வேலி குளிர் கொஞ்சம் அதிகம். 4:30 மணிக்கு எழுந்து, தீர்த்தமாடி, பஞ்சகச்சம் உடுத்தி, 4-5 வீதிகளில் திருப்பாவை சொன்னபடியே செல்வார். அதனால் பாதகம் இல்லை. எங்களையும் உடன் வரச் சொல்வார். திருப்பாவை முழுவதும் தெரியாது என்பது ஒரு பயம். விடியற்காலை குளிர் இன்னொன்று. மூன்றாவது பயம் தெரு நாய். அவை அவரை ஒன்றும் செய்வதில்லை. அவருடன் நடக்கும் என்னைப் பார்த்து மட்டும் உறுமும். முந்தைய நாள் மாலையில் நான் ஏதாவது வாலாட்டியிருப்பேன்.

தாஸன் எங்கள் தெருப் பிள்ளைகளுக்கு ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்தி வந்தார்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ‘ஏண்டா நீங்கள்ளாம் நாடகம் போடக்கூடாது?’ என்று ஆரம்பித்தார் தாஸன். ‘தில்லி சென்ற நம்பெருமாள்’ என்கிற நாடகம் மூலம் அவர் பெரிய பிரபலம் பெற்றிருந்தார் என்று தெரியும். ‘நெய்வேலி சில்ரன்ஸ் கிளப்’ (NCC) என்கிற அமைப்பைத் துவங்கினார். நான் செயலாளர் ஆனேன்.

அவரது ஊக்கம் அசாத்தியமானது. ‘இதோ பார். என்.சி.சி. பத்தி ஹிந்துவுக்கு எழுதியிருக்கேன். ‘நெய்வேலியில் நாடக உலகின் விடிவெள்ளிகள்’ என்ற தலைப்பில் நான்கு பக்கத்திற்கு எழுதியிருந்தார். இன்று வரை ஹிந்து அதை வெளியிடவில்லை.

அசட்டுத்தனமான இரு நாடகங்களை அரங்கேற்றினோம். முதல் நாடகம் ஒரு திருடனைப் பற்றியது. வீட்டில் இருந்த படுதா, போர்வை எல்லாம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாசல் திண்ணையில் நாடகம். ஆறு நடிகர்களும் ஒன்பது பார்வையாளர்களுமாக நாடகம் நடந்தேறியது. கடைசிக் காட்சியில் ஒரு படுதா கழன்று விழ, என் தம்பி அதைப் பிடித்துக்கொண்டு நிற்க, ஏக களேபரத்துடன் நாடகம் முடிந்தது.

இரண்டாவது நாடகத்திற்கு இரண்டு பார்வையாளர்கள் வந்தனர்.

தாஸன் எங்களை வைத்துக்கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் போட்டார். ‘மாக்பெத்’ நாடகம் நெய்வேலி சத்சங்கம் மணித்வீபத்தில். கீரன், வாரியார் முதலியோர் பேசிய மேடையில் நாங்கள். பார்வையாளர்கள் விநோதமாகப் பார்த்த்துச் சென்றார்கள். நாடகம் பார்க்க வந்த என் பாட்டி,’ ஏண்டா, மஹாபாரதம்னு சொன்னே. கடைசி வரைக்கும் கிருஷ்ணர் வரவே இல்லையே’ என்றாள். ‘மாக்பெத்’ மஹாபாரதம் ஆன கதை அன்று நடந்தது.

அதன் பிறகு தாஸன் எங்களை நாடகம் போட வலியுறுத்தவில்லை. சில மாதங்களில் நெய்வேலியில் அரசு ஆடிட்டராக இருந்த அவரது மகளுக்கு மாற்றல் ஆகி வேறு ஊர் சென்றுவிட்டார் தாஸன். விரைவில், நெய்வேலி சில்ரன்ஸ் கிளப் புதிய அவதாரம் எடுத்தது. நெய்வேலி கிரிக்கெட் கிளப் உதயமானது. இருப்பில் இருந்த சில பத்து ரூபாய்கள் பந்துகளாகவும், பேட்களாகவும் மாறின. ஒரே மேட்ச்ல் பணம் காலாவதியாகி கிளப் மூடு விழா கண்டது.

பல ஆண்டுகள் கழித்து தாஸனை ஒரு திருமண விழாவில் சந்தித்தேன். அப்போது அவருக்கு வயது 90. நெய்வேலி சில்ரன்ஸ் கிளப் ( NCC) பற்றி நினைவு படுத்தினேன். கேட்கும் திறனை முற்றிலும் இழந்திருந்த அவர், ‘என்.எல்.சிக்கு (NLC) என்ன ஆச்சு? என் அது சரியா போகலையா?’ என்றார்.

சில நாட்களில் அவர் காலமானார் என்று அறிந்தேன். அன்று அவர் இட்ட ஆங்கிலப் பிச்சையை இன்றும் நினைவுகூர்கிறேன்.

ரயில் பயணமும் திரிவிக்கிரமாவதாரமும்

3 டயர் ஏஸி பாபா ராம்தேவுக்காக மட்டும் உள்ளது. அவரால் மட்டுமே அப்படி கூனி, குறுகி, வளைந்து, நெளிந்து, எம்பி, குதித்து மேலெழும்பி அந்த மூன்றாவது கூண்டுக்குள் சென்று படுக்க முடியும்.

வசதியாக இருக்குமே என்று ரயிலுக்கு வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தேன். ராசி. 3 டயர் ஏஸியில் மேலுள்ள மூன்றாம் அடுக்கு கிடைத்தது.

ஒரு துள்ளலில் முதல் நிலை மேல் கால் வைத்துவிட்டேன். வெற்றி. இன்னொரு கால் இன்னும் தரையில்.ஒரு எம்பு எம்பி 3வது அடுக்கை ஒரு கையால் பிடித்துவிட்டேன். கால்களில் ஒன்று தரையில், இன்னொன்று முதல் அடுக்கில்.

பெரும் முயற்சியால் முதல் அடுக்குக் காலை வைத்து ஒரு எம்பு எம்பி மூன்றாவது அடுக்கில் அமரவும் இல்லாமல் ஒட்டிக்கொள்ளவும் இல்லாமல் போன்ற நிலையினை அடைந்தேன். தரையில் இருந்த கால் என்னுடன் மூன்றாவது அடுக்கில்.

இப்போது 3வது அடுக்கினுள் நுழைய வேண்டும். கொஞ்சம் வளைந்தேன். முடியவில்லை. இன்நும் கொஞ்சம் வளைந்து ஆங்கில எழுத்து ”சி” போல் ஆனவுடன் அடுக்கினுள் நுழைய முடிந்தது. நத்தை போல் ஊர்ந்து ஒரு அடி முன்னேறினேன். வயிறு பிடித்துக் கொண்டது. அதே நேரம் காலும் குறக்களி இழுப்பு. நகரவும் முடியாமல், அமரவு முடியாமல், நிமிரவும் முடியாமல் அப்படி ஒரு பரமானந்த நிலை. வானத்தின் தேவதைகள் கால் கொலுசு சப்தம் கேட்டது போல் உணர்ந்தேன். கதை முடிந்து ஸ்வர்க்கலோகம் போகும் வழியில் இதெல்லாம் கேட்குமாம்.

நிமிர்ந்தால் வயிற்றுப் பிடிப்பு நீங்கும். நிமிர முற்பட்டேன். ரயிலின் கூரை தனது இருப்பை உணர்த்தியது. தலையைத் தடவிக்கொண்டே ஒரு வழியாக என்னை முழுவதுமாக உள்வாங்கி முழுமையனுபவத்தை அனுபவித்தேன்.

சில மணி நேரங்கள் கழித்து ஐஸ் பெட்டியில் வைத்து விட்டார்களோ என்னும் அளவுக்கு குளிர். போர்த்திக்கொண்டு தூங்கினால் ரயில் எங்கோ நின்றது போல் பட்டது. ”என்ன ஸ்டேஷன்?” என்று பொதுவாகக் கேட்க, யாரோ ஒருவர் ‘தாம்பரம்’ சொல்ல உடனே இறங்க வேண்டிய சூழ்நிலை.

தடாலென்று எழுந்து, ரயில் மேற்கூரை இருப்பை மீண்டும் என் தலை உணர்ந்த அந்த மோனத் தருணத்தில் வேகமாக இறங்க முற்பட்டு, ஒரு கால் தரையிலும், இன்னொரு கால் மூன்றாவது அடுக்கிலும், ஒரு கை மேற்கூரையில் உள்ள கொக்கியிலும், இன்னொரு கை அபய ஹஸ்தம் போல் அமைய, நான் திருவிக்ரமாவதாரம் உலகளந்த பெருமாள் போன்று சேவை சாதித்தபடி அந்தரத்தில் நின்ற போது ”கண்ராவி” என்னும் சொல்லை யாரோ ஒருவர் உதிர்த்ததற்கும் என் வேஷ்டி காணாமல் போயிருந்தது காரணமாக இருக்கலாம் என்று என் இருத்தியால் அறிவு எனக்கு உரைக்கும் முன் ரயில் கிளம்பிவிட்டது.

ஆகவே, மாம்பலத்தில் 3:30 மணிக்கு இறங்கி, மீண்டும் தாம்பரம் வந்த பயணத்தில் காரண-காரிய சம்பந்தம் இருந்ததால் சஹதர்மிணி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டிருந்ததில் தவறில்லை என்று பட்டது.

ஆகவே நண்பர்களே , மீண்டும் வரி 1ஐப் படியுங்கள்.

இலந்தைப் பழம்

#நெய்வேலி ராஜி மாமி வீட்டு இலந்தைப் பழம் ப்ரஸித்தம். தெரியாமல் எடுத்துத் தின்பதால் சுவை கொஞ்சம் அதிகம். மாமாவுக்குத் தெரிந்தால் முதுகில் டின் கட்டிவிடுவார். ஆனாலும் அவர் ஈஸி சேரை விட்டு எழுந்து வரும் முன் ஓடிவிடுவதால் நாங்கள் தப்பித்தோம்.

ராஜி மாமியின் கை வேலைகளும் ப்ரஸித்தம். வாய் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஊசி, மணி வேலை செய்து கொண்டிருப்பார். தையல் வகுப்புக்கள் எடுப்பார். அதிர்ந்து பேசாத, சாந்த ஸ்வரூபியான அவருக்கு மஹா முசுடான கணவர், கொஞ்சம் அசமஞ்சமான மகன் மற்றும் ரொம்ப அசமஞ்சமான மகள் சுமதி. சுமாராக பி.காம் படித்த மகன் துபாய்க்கு வேலைக்குச் சென்றான்.

அலுவலகம் முடிந்தபின் ஈஸி சேரை விட்டு எழாதவரான கணவர் வீட்டில் எல்லாரையும் விரட்டு விரட்டென்று விரட்டி, தெருவில் விளையாடும் எங்கள் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்வார். பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் தொலைந்தோம். தெருவில் டி.வி. வைத்திருந்த ஒரே வீடு அவர்களுடைய வீடு என்பதால் காசு வாங்கிக்கொண்டு டி.வி. பார்க்க அனுமதிப்பார். இலந்தைப் பழமும் வாங்கிக்கொள்ளலாம். காசு உண்டு.

சுமாரான ஞானமுள்ள மகனை நினைத்துக் கவலைப்படுவதா, கொஞ்சம் கூட ஞானமே இல்லாத மகளைக் குறித்து கவலைப்படுவதா, எப்போதுமே எறிந்துவிழும் கணவரைக் குறித்துக் கவலைபப்டுவதா என்கிற கவலையில் ராஜி மாமிக்கு நீரழிவு நோய் வந்ததது. ‘கீழ தரைல படுத்துக்கறதே இல்ல. படுத்துண்டா எறும்பு பிடிச்சு இழுத்துண்டு போயிடற அளவுக்கு சர்க்கரை இருக்கு” என்று வேடிக்கையாகச் சொல்வார்.

எப்படியோ தடுமாறி பத்தாம் வகுப்பு முடித்த சுமதியைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் வீடு ரணகளப்படும். பையன் விட்டார் போனபின் மாமா ருத்ர தாண்டவம் ஆடுவார். சுமதியைக் கரித்துக் கொட்டி, மாமியை ஏசியபின் உக்ரம் அடங்கும்.

ராஜி மாமியின் பெருமுயற்சியால் எப்படியோ கல்யாணம் ஆகி பெண் புக்ககம் போனாள். பிறந்த வீட்டில் ஏச்சும் பேச்சும் கேட்டவள் புகுந்த வீட்டில் ஒரு ஏச்சு பேச்சு இல்லை. வெறும் அடி உதை தான். மாப்பிள்ளைக்கு வேலை போய் சுமதி மாட்டுத் தொழுவத்திலேயே பெரும் நேரத்தை செலவிட்டாள்.

ராஜி மாமி உடைந்து போனாள். மகனுக்குக் கல்யாணம் பண்ண முயன்று, தோற்று, சர்க்கரை ஏறி ஒரு அரை மணி நேரத்தில் மாலை போட்ட போட்டொவில் சுவரில் தொங்கினாள்.

மனைவி போனபின் மகனுக்குக் கல்யாணம் பண்ண மாமா ரொம்பவும் முயன்றார். தமிழ் நாட்டில் அவர் போகாத ஊரே இல்லை என்னும் அளவுக்கு எல்லா ஊருக்கும் போய் பெண் பார்த்தனர். கடைசியில் ஒரிசாவில் ஒரு அய்யங்கார் பெண் கிடைத்துக் கல்யாணமும் ஆனது.

மாமாவின் ஆட்டம் குறையவில்லை. மருமகள் அவதிப்படுவதை ராஜி மாமி போட்டோவில் இருந்தபடியே பார்த்தாள். விரைவில் குட்டி ராஜி மாமி பிறந்தாள். மாமாவின் ஆட்டம் இன்னமும் அதிகரித்தது. மகன் மௌனியாக இருப்பதைப் பார்க்க சகிக்காமல் மருமகளைக் காப்பாற்ற தன்னிடம் அழைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை போலும். மாமியாரும் மருமகளும் அருகருகில் போட்டோவில் இருந்து குடும்பத்தைப் பார்க்கத் துவங்கினர்.

தானும் ரிடையர் ஆகிவிட்ட நிலையில், மகளும் சுகப்படவில்லை, மகனுக்கும் வேலை போய் வீட்டில் வெறுமனே வளைய வருக்கிறான், பெண் குழந்தை வேறு என்று ஒருமுறை அங்கலாய்த்தார் மாமா. அவர் சற்று மனம் விட்டு சாந்தமாகப் பேசி அன்றுதான் பார்த்தேன்.

15 ஆண்டுகள் கழித்து 2002ல் என் மனைவி குழந்தையுடன் ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் போது ஒரு சந்தில் இருந்து என்னை யாரோ பெயர் சொல்லி கூப்பிடுவதைக் கேட்டுத் திரும்பினேன்.

”என்னப்பா, என்னைத் தெரியலையா? நான் தான் ராஜி மாமி பொண்ணு சுமதி” என்றபடி என் முன் வந்து நின்ற அந்தக் கிழிந்த, வெளிறிய புடைவைக்காரி ராஜி மாமியின் பெண் தான் என்று நம்ப முடியவில்லை.

”அப்பா, அண்ணால்லாம் எப்படி இருக்கா?’ என்றேன்.

”அண்ணாவா? அவன் போய் ரெண்டு வருஷம் ஆறதே. அப்பா அவனுக்கு கயா ஸ்ரார்த்தம் பண்ண காசிக்குப் போயிருக்கா” என்றாள்.

”நீங்க எப்படி இருக்கீங்க?” என்றேன் திக்கித் திணறியபடி.

“பார்த்தா தெரியலையா? நான் நன்னா இருக்கேன். இவாத்துல ஆறு மாடு வளர்க்கறா. ஏழாவதா நான்” என்றாள்.

ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தேன்.

”இரு இதோ வரேன். இவாத்து இலந்தைப் பழம் நன்னா இருக்கும். ஒரு அரை ஆழாக்கு தரேன்” என்றபடி உள்ளே சென்றாள்.

ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை

wrapper-final

எச்சரிக்கை : இரத்த அழுத்த மாத்திரையை உட்கொண்ட பின் இந்த நூலைப் படிக்கவும்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நம்மை ஆண்ட தன்னிகரில்லாக் கருணையும் தயையும் கொண்ட முகலாய, சுல்தானிய மன்னர்களின் தியாகச் செயல்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள நூல் இது.

சிவாஜி என்னும் திரைப்பட நடிகரையோ, திரைப்படத்தையோ குறிக்கும் சொல்லால் ஆசிரியர் யாரோ போர் வெறி பிடித்த மராட்டிய மன்னனைச் சொல்கிறார். அவன் எந்தக் கோட்டையைப் பிடித்தால் என்ன? எக்கேடு கெட்டால்தான் என்ன? அவன் எந்த கஷ்டத்தை அனுபவித்தால் தான் நமக்கென்ன?

துக்ளக் என்றொரு மன்னனைப் பற்றிச் சொல்கிறார் ஆசிரியர். அருமையான அரசியல் செய்திகள் கொண்ட பத்திரிக்கையை விடுத்து, யாரோ மன்னனாம், படை எடுத்தானாம், மக்களைக் கொன்றானாம், ஸ்ரீரங்கத்தை அழித்தானாம். இதெல்லாம் யாருக்கு வேண்டும்? இதைப் படிப்பதால் கஞ்சி கிடைக்குமா சார்? புஸ்தகமாம் புஸ்தகம்.

முகமது பின் துக்ளக் அப்படி என்ன சித்ரவதைகள் செய்துவிட்டான்? கண்களைக் கிழித்தான், மனிதர்களை உயிரோடு அறுத்தான், உயிரோடு இருப்பவர்களின் எலும்புகளை உடைத்து பொடிப் பொடி ஆக்கினான், தொண்டைக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினான், நெருப்பு மூட்டி அதில் மக்களை நிறுத்தினான், கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தான். ஒரு அரசன் இதைக்கூட செய்யக் கூடாது என்றால் வேறு என்னதான் செய்வது? வள்ளுவன் சொன்ன ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்’ செய்ய அவன் பாரதீய அற வழியில் நடப்பவனா என்ன? ? அவன் பரம்பரை என்ன, வளர்ப்பு என்ன, பழக்கங்கள் என்ன! துக்ளக்கின் பின் வந்த பிரோஸ் ஷா துக்ளக்  பணம் பெற்றுக்கொண்டு முகமது பின் துக்ளக் செய்தவற்றை எழுதிவிட்டான். அதை வைத்துக்கொண்டு கூப்பாடு போடுகிறார் ஆசிரியர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் அராஜகம் செய்தான் துக்ளக் என்கிறார் ஆசிரியர். வெள்ளாயி என்கிற நாட்டியக் காரியின் தியாகம் என்கிறார். அவள் நாட்டியம் ஆடியபடியே துக்ளக்கின் தளபதியைக் கவர்ந்து வெள்ளைக் கோபுரத்திற்கு மேல் அழைத்துச் சென்று அங்கிருந்து அவனைக் கொன்று தானும் இறக்கிறாள். இதை தியாகம் என்கிறார்கள். நாட்டியத்தால் ஒரு தூய்மையான வீரன் இறந்தான் என்று எழுதியிருந்தால் பாராட்டிடலாம். இதனால் தான் அவுரங்கசீப் நாட்டியத்தைத் தடை செய்தான். இப்போது புரிகிறதா நாட்டியத்தால் வரும் கேடு? தியாகமாம் தியாகம்.

மாலிக் கபூர் படை எடுத்தானாம் கோவில்களை அழித்தானாம், உருவ வழிபாட்டாளர்களைக் கொன்றானாம். அதனால் என்ன? கடமையைத் தானே செய்தான்? தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினான். அவ்வளவுதான்.  இதில் தவறு என்ன?

மாலிக் கபூர் செய்த தியாகம் எத்தகையது? மதுரை மீனாக்ஷி கோவிலை அவன் நினைத்திருந்தால் இடித்திருக்க முடியும். செய்தானா? இல்லையே. நகைகளையும், நெல் மூட்டைகளையும், கஜானாவையும், யானை குதிரைப் படைகளையும் விலையாகப் பெற்று, மீனாட்சியின் கருவறைக்குள் பிரவேசிக்காமலே திரும்புகிறான் அந்த தியாகி மாலிக் கபூர். இம்மாபெரும் தியாகத்தைப் பாராட்ட மனது உண்டா ஆசிரியருக்கு? அவனுக்கு சிலை வைக்க வேண்டாம் ஐயா, அவனது தியாகத்தைச் சிதைக்காமல் இருந்திருக்கலாமே.

விஜயநகர அரசு வந்ததாம், பாரத கலாச்சாரத்துக்கு அரணாக இருந்ததாம், கிருஷ்ண தேவ ராயன் என்கிற பிற்போக்காளன் கோவில்களுக்கு உதவினானாம். சுத்த ஹம்பக். மக்கள் வரிப்பணத்தை வாரி விட்டான். இதைத் தூக்கிப்பிடிக்கிறார் ஆசிரியர்.

தனது படையில் 30 சதம் ஹிந்து வீரர்களைக் கொண்டிருந்த செக்யுலர் அரசன் அவுரங்கசீப் என்கிற மகத்தான ஆளுமையின் அன்றைய தீர்க்க தரிசனத்தால் தான் இன்று பாரதம் செக்யுலர் நாடாக இருக்கிறது என்னும் செய்தியை மறைக்க ஆசிரியர் என்னவெல்லாம் சொல்கிறார்? கோவில்களை இடித்தானாம், ஷரியா அமல் படுத்தினானாம், கொலை பாதகங்கள் செய்தானாம். என்ன பார்வை இது? 30 சதம் ஹிந்துக்களுக்கு வேலை கொடுத்த அந்த மகோன்னத சக்கரவர்த்தியைப் பாராட்ட வேண்டாம் ஐயா, தூற்றாமலாவது இருக்கலாமே. இதற்கு ஒரு புஸ்தகம். ஹூம்.

டொமிங்கோ பேஸ் என்கிற போர்த்துகீசிய ஆய்வாளர் கிருஷ்ண தேவ ராயர் அரசர்களுக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்தார் என்று தற்புகழ்ச்சி வேறு. அதே ஆய்வாளர் அவுரங்கசீப் பற்றி மட்டும் ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்பதில் இருந்தே டொமிங்கோ பேஸ் பணம் வாங்கிக்கொண்டு எழுதியுள்ளார் என்பது தெரியவில்லையா? ‘பெய்டு மீடியா’ என்னும் தத்துவம் அன்றே இருந்துள்ளது தெரிகிறதா?  நேருவிய செக்யுலர் கல்வியில் படித்தோமோ இந்தக் காவி புத்தகத்தின் உண்மையை உணர்ந்தோமோ. நல்ல வேளை.

தெலுங்கு பேசும் ராஜகம்பள நாயக்கர் இனத்தின் கெட்டி பொம்மு என்கிற தெலுங்கரின் வீரத்தைப் புகழ்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆண்ட பரம்பரைகள் கொண்ட, கல்லும் மண்ணும் தோன்றாத போதே தோன்றிய தமிழ் நாட்டில் இல்லாத வீரமா தெலுங்கு நாட்டில் இருந்து வந்தது? அதைப் போய் புகழ்கிறார் ஆசிரியர்.  கெட்டி பொம்மு என்று இருந்தால் தெலுங்கு என்று தெரிந்துவிடும் என்பதால் கட்டபொம்மன் என்று பெயரை மாற்றி அழைத்த வீரம் கொண்ட நம் முற்போக்குத் தமிழ் மண்ணில் இப்படிப்பட்ட பாசிச உண்மை விளம்பி  நூல்கள் தோன்றுகின்றனவே. ஐயகோ!

சிவாஜி என்கிற கொடும் போர் மன்னன் பீரங்கிப் படை வைத்திருந்தானாம். அதற்கு கோவா, ஐரோப்பா முதலான இடங்களில் இருந்து பொறியாளர்களை வரவழைத்தானாம். இது தான் ‘மேக் இந்த இந்தியா’ திட்டமாம். அதையே தற்போதைய பிரதமர் மோதி பின்பற்றுகிறாராம்.

இந்தியாவைக் கட்டமைத்துக் கொடுத்ததே முகலாய மகோன்னத அக்பர், அவுரங்கசீப் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த ஆங்கிலேயர். இங்கிலாந்து ராணியின் கடைக்கண் பார்வை இல்லாவிட்டால் நமக்கு அரசியல் சட்டம் ஏது? அது கூட வேண்டாம். இந்தியா என்கிற அமைப்பே இங்கிலாந்து போட்ட பிச்சை தானே. சிவாஜியாம், பீரங்கியாம். ஹூம் .

மெக்காலே இல்லாவிட்டால் நாம்  மரங்களில் தாவிக்கொண்டிருந்திருப்போம் என்பதை மறைக்க இம்மாதிரிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள்.

சரி. புஸ்தகம் எழுதிவிட்டார். அச்சாகிவிட்டது. புஸ்தகத்திற்கான 80 தரவுகளையும் கொடுத்துவிட்டார் ஆசிரியர். இந்த வலதுசாரி எழுத்தாளர்களே தரவுகளை அடுக்கி விடுவார்கள். அதுதான் பிரச்சினையே. அருண் ஷோரியின் புத்தகத்தை விட அவர் காட்டும் தரவுகளின் அளவு அதிகமாக இருக்கும். அது போலவே இந்த ஆசிரியரும் செய்துள்ளார். சரி. என்ன செய்வது? சாட்சியங்கள் அளித்துள்ளார். நமக்கு சாட்சியங்கள் எம்மாத்திரம்? யாரோ மேற்கத்தியன் ஏதாவது சொல்ல வேண்டும், அதை நாம் ‘பகுத்தறிவுடன்’ பின்பற்ற வேண்டும். அது தானே நமக்கு வழக்கம். போகட்டும்.

என்னதான் செய்வது புஸ்தகத்தை ?

ரத்தம் சுண்டி, ஹீமோகுளோபின் குறைந்து, கை கால்களில் வலு இழந்தவர்கள், உயிர் வாழ விருப்பம் இல்லாதவர்கள், இறப்பை எதிர் நோக்கி, வலிமையற்று படுத்திருப்பவர்கள் – இப்படியானவர்களுக்கு இந்தப் புஸ்தகத்தை வாசிக்கக் கொடுக்கலாம். ரத்தம் சூடேறி, திடீரென்று உணர்வு பெற்று எழுந்து உட்கார வாய்ப்புண்டு.

உடல் நலமுள்ள, கல்வி, பணம், அந்தஸ்து முதலியவை பெற்ற, பேஸ்புக்கில் போட்டோ போட்டு வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு லைக் வந்துள்ளது என்று கணக்கிட்டு ஆகப்பெரிய தியாகத்தைச் செய்வாரும், ரஜினி காந்தின் அடுத்த படத்திற்கான பூஜை வேலைகள் துவங்கும் அன்றே அதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வழி உண்டா என்று யோசிக்கும் பெருவாரியானவர்களுக்கு இந்த நூலினால் எந்தப் பயனும் இல்லை.

காலை மாலை ஆபீஸ் போனோமா, மாலை டி.வி. பார்த்தோமா, ரஜினி வழிபாடு செய்தோமா, விவசாய நிலத்தில் கட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளில் ஏஸி ரூமில் அமர்ந்துகொண்டு, ‘விவசாயிகளைக் காப்போம்’ என்று மிமி போடுவது என்று காலத்தை ஓட்டுவதை விட்டு, புஸ்தகம் படிப்பது, உண்மை வரலாற்றை அறிந்துகொள்வது, அறிவோடு பேசுவது / எழுதுவது என்றெல்லாம் மூடவழக்கங்கள் வைத்துக்கொண்டு இருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தப் புஸ்தகத்தைப் படியுங்கள். ஒரு ரத்த டாக்குமெண்டரிக்கு தயாராகுங்கள்.

எச்சரிக்கைகள்:

  1. படித்து முடித்தபின் ஓவென்று அழுகை வரும். இது நார்மல் பிஹேவியர் தான்.
  2. நூலைப் படித்தபின் பாரத கலாச்சாரத்துக்கு நாம் கிஞ்சித்தாவது செய்தோமா என்கிற குற்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
  3. நூலில் வரும் கோவில்களுக்கும், வரலாற்று இடங்களுக்கும் செல்லும் போது, பக்தி மற்றும் வரலாற்று உணர்வை மீறி அழுகை வரும். மற்றவர்கள் பார்வைக்கு ஆளாக நேரிடும்.
  4. அடுத்த விடுமுறைக்கு சிவாஜியின் கால் பதித்த இடங்களைப் புண்ணிய தரிசனம் செய்துவர கிளம்பிவிடுவீர்கள்.
  5. ஒவ்வொரு முறையும் மதுரை மீனாட்சியை வழிபடும் போது எப்பேர்ப்பட்ட இன்னல்களில் இருந்து மீண்டு வந்து இன்றும் நமக்கு அருள்பாலிக்கிறாள் என்கிற எண்ணத்தோடு அவளைப் பார்க்கத் தோன்றும்.
  6. நூலைப் பத்து பிரதிகளாவது வாங்கி நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்னும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஸ்ரீரங்கம் கோவிலையும் நம்பெருமாளையும் காக்க பிள்ளைலோகாச்சாரியாரும் வேதாந்த தேசிகரும் ஆற்றிய பணிகள் பற்றி முன்னரே ஸ்ரீவேணுகோபாலனின் ‘திருவரங்கன் உலா’வில் படித்திருந்தேன். எஸ்.பி.சொக்கலிங்கம் ‘மதுரை சுல்தான்கள்’ என்னும் நூலில் ஏற்கெனவே கோரங்களுக்குத் என்னைத் தயார்ப் படுத்தியிருந்தார். மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ என்னும் ரத்தக்களரியிலும் முன்னரே மூழ்கி எழுத்துவிட்டேன். எனவே எனக்கு இப்போது அதிக பாதிப்பில்லை.

என்ன வாங்கப் போகிறீர்களா? சரி. அப்புறம் உங்கள் இஷ்டம்.

பிரகாஷ் எழுதி தடாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புஸ்தகத்தை இங்கே வாங்கலாம்.

இத்தனை மெனக்கெட்டு இந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்நூல் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டால் பெருவாரியான மக்களைச் சென்றடையும்.

 

லக்ஷ்மியும் வேஷ்டியும்

நெய்வேலியில் லக்ஷ்மியின் மேல் கை வைக்க அவள் தூங்கும் போது மட்டுமே முடியும். என் நண்பன் ஜான் வீட்டில் வளர்ந்த லக்ஷ்மி ரொம்ப முன்கோபி. ஒருமுறை கத்தியதும் கயிறை அவிழ்த்து விட வேண்டும். இல்லையெனில் கயிறு அறுந்துவிடும் அளவுக்கு இழுப்பாள். சுத்திச் சுத்தி வருவாள். தினமும் கழுநீர் குடிக்க வீட்டு வாயிலில் நின்று குரல் கொடுப்பாள். உடனே கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் தரையை முட்டி கோலம் போட்ட இடத்தை அப்கானிஸ்தான் போல் ஆக்கிவிடுவாள். அவளது பால் எங்களைப் பல வருஷங்கள் வாழவைத்தது.

அவளது கன்றுக்குட்டியைத் துரத்தி விளையாடிக்கொண்டு என் தம்பி ஓட, அவனைத் துரத்திக்கொண்டு லக்ஷ்மி ஓட, அவள் பின்னர் இன்னொருவர் ஓட, அதன் பின்னர் நடந்ததை எழுதினால் நன்றாயிருக்காது. கடைசியில் ஓடியவர் ஓடும் முன் வெறும் வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டிருந்தார். ‘ஓடும் முன்’ – அண்டர்லைன் ப்ளீஸ்.

கிரிக்கெட் விளையாடும் போது நான் எறிந்த பந்து லக்ஷ்மி மீது பட்டு, அவள் அதை நினைவில் கொண்டு சில நாட்கள் கழித்து என்னைத் துரத்தி, நான் தெருவில் ‘ஏன் எல்லாரும் வேடிக்க பார்க்கிறார்கள்?’ என்று குழம்பியவாறே ஓடி வீடு வந்து சேர்ந்த போது பாட்டி, ‘ஏண்டா வேஷ்டி கட்டிண்டு போனயே, வேஷ்டி எங்க?’ என்று கேட்டது லோக பிரசித்தம்.

பசு மாடு நம்முடனே எப்போதும் பயணிக்கிறது. கடுமையாக உழைத்தால் ‘மாடு மாதிரி வேலை செய்யறான்’ என்பதும், அதிக அளவு உண்பவனை ‘மாடு மாதிரி தின்றான்’ என்பதும் நமது முரணியக்க வரிசையில் சேருமோ என்னவோ.

‘ஆடற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடற மாட்டப் பாடிக் கறக்கணும்’ என்னும் பழமொழி நெய்வேலியில் எனக்குத் தெரியாது. சாதாரணமாகவே கோபம் கொண்ட லக்ஷ்மியிடம் போய் பாடவும் ஆடவும் செய்தால் நிலைமை கவலைக்கிடம் தான். நல்லவேளை.

‘ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு மனுஷனையும் கடிக்கற..’ பழமொழி நல்லவேளை லக்ஷ்மிக்குத் தெரியாது. அவளது கொம்பு கூர்மை பற்றி தெரிந்த எங்களுக்கு அவளது பல்லின் கூர்மை தெரிந்திருக்கும்.

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ பழமொழியை யாரும் லக்ஷ்மியிடம் செய்துபார்த்ததாக நினைவில்லை. செய்திருந்தால் அவர்களுக்குப் பால் தான். லக்ஷ்மியின் பால்.

ஒருவேளை லக்ஷ்மியை யாருக்காவது தானம் கொடுத்து, அவர்கள் அவளது பல்லைப் பிடித்துப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. பார்த்திருந்தால் அவர்களுக்கும் மறு நாள் பாலுக்கு அலைய வேண்டியிருக்காது.

இப்போது லக்ஷ்மி தனது எத்தனையாவது ஜென்மத்தில் எந்த ஊரில் இருக்கிறாளோ தெரியவில்லை. ஆனால் ஒன்று. அவள் இருக்கும் தெருவில் வேஷ்டிக்கு வேலை இல்லை.

இலங்கையில் மீள் குடியேற்றம் வேண்டும்

இலங்கை கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் சொல்வது : “இலங்கைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பி.எஸ்.ஸி. படித்திருந்தால் அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்படும்.”

நல்ல விஷயம். என்னதான் கனடா, சுவீடன் என்று வெளி நாடுகளில் அகதிகளாய்க் குடியேறினாலும் சொந்த ஊர் போல் வராது தான். தம்பிகள் யோசிக்க வேண்டும். தமிழகத்தில் உங்களை வைத்து அரசியல் வியாபாரிகள் பேரம் நடத்தித் தங்களது வாழ்வை வளப்படுத்திக் கொண்டுள்ளனர். இனியும் நீங்கள் ஏமாற வேண்டாம்.

எனது நண்பர் ஒருவர் இலங்கை சென்று அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு சுய முன்னேற்றப் பயிற்சிகள் அளித்து வருகிறார். தனது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்னும் உத்வேகமே அவரை அதைச் செய்ய வைக்கிறது. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பொருளீட்டுவதில் வெற்றி பெற்றுள்ள இலங்கையைச் சேர்ந்த தம்பிகள் இலங்கைக்குச் சென்று மீள் குடியேற முன்வர வேண்டும்.

இழந்த காலத்தையோ பொருளையோ உயிர்களையோ மீட்டெடுக்கவியலாது. இனி அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்று, வெளியில் நாம் கற்றதையும் பெற்றதையும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்போம்.

தமிழும் சைவமும் தழைத்தோங்கிய இலங்கையில் மீண்டும் அந்நிலை அடைய வழி செய்ய உறுதி பூணுவோம்

நடையில் தோன்றிய ஞானம்

‘வேற ஒண்ணும் கேக்க வேண்டாம். ஒலி 96.8 கேட்டால் என்ன? நான் சொல்றதுக்காகவாவது கேட்கலாமோன்னோ?’ என்கிற ஆஞ்ஞைக்கிணங்க நேற்று இரவு நடையின் போது சிங்கை வானொலி கேட்டேன். பழைய பாடல்களாக ஒலிபரப்பினார்கள். நிற்க.

‘இப்ப அரியலூர் மாவட்டதிலேருந்து ஜோதிலட்சுமி பேசறாங்க’ என்றார் அறிவிப்பாளர். அரியலூரா? ஐ.எஸ்.டி. கால் எகிறிடுமே என்று நான் கலங்கியவனாய் நின்றேன். ‘என் பேர் ஜோதிலட்சுமி, என்னை டயானான்னும் கூப்புடுவாங்க,’ என்று ரொம்ப சந்தோஷத்துடன் பேசினார் அந்தப் பெண். ‘தினமும் பேஸ்புக் வழியா ஒலி 96.8 கேப்பேன். இன்னிக்கி பேசணும்னு விடாம டிரை பண்ணி பேசிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு,’ என்றவர் தான் ஏர் டெல் சேவையைப் பயன்படுத்திப் பேசுவதாகக் கூறினார். மொத்தம் 4 நிமிடங்கள் பேசியிருப்பார். எப்படியும் ரூ.500 ஆகியிருக்கும்.

சிங்கப்பூர் வானொலிப் படைப்பாளரிடம் பேச இவ்வளவு செலவு தேவையா என்று நினைத்துக் கொண்டிருந்த போது, சிங்கையில் இருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். ‘இன்னிக்கி எப்படியாவுது பேசணும்னு முயற்சி பண்ணினேன்,’ என்றார். தத்துவப் பாடல்கள் வேண்டும், ‘எத்தனை கோடி பணம் இருந்தாலும்..’ என்னும் பழைய பாடல் வேண்டும் என்றார். விடாமல் பேசியவர் ‘எனக்கு கால் இல்லை. நடக்க முடியாது. வீட்டுக்குள்ளயே நடமாடுவேன். தினமும் வானொலில ஒலி 96.8 கேட்பேன். வானொலி தான் எனக்குத் துணை,’ என்றார். அறிவிப்பாளர் கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தேவை இருக்கிறது. வானொலியை நாம் உதாசீனப் படுத்துகிறோம். ஆனால் அது பலருக்குப் பல விதங்களில் உதவுகிறது. மனிதர்கள் கடல் தாண்டி இருந்தாலும் இந்த ஒரு அலைவரிசையில் இன்பம் பெறுகிறார்கள்.

ஒரு வகையில் வானொலியும் பிரும்மம் போலவே தெரிகிறது. இருப்பது ஒன்று தான். அதனை நோக்கிய பயணம் பலரிடம் பலவகையில் இருக்கிறது. கடல் கடந்து பேசும் ஜோதிலட்சுமிக்கு என்ன கவலைகளோ. ஆனால் அவர் ஒலி 96.8 மூலம் அதனை மறக்கிறார். பணம் செலவழித்துப் பேசினாலும் அவருக்கு ஒரு இன்பம் கிடைக்கிறது. சிங்கப்பூரின் அழைப்பாளரும் தனது உடற்குறையை மறந்து ஒரு மணி நேரம் இன்பமாக இருக்க அதே ஒலி வானொலியை நாடுகிறார்.

‘அடுத்த பாடல்’ என்றார் அறிவிப்பாளர். உன்னிப்பாகக் கவனித்தேன். ‘திருவிளையாடல்’ படத்தில் இருந்து ‘நான் அசைந்தால், அசையும் உலகம் எல்லாமே’.

பிரும்மம் ஒன்று. அதைப் பார்ப்பவர்கள் பலவாறாகப் பார்க்கிறார்கள் / பேசுகிறார்கள். ‘ஏகம் சத். விப்ர: பஹுதா வதந்தி’ என்கிற உபநிஷத வாக்கியம் நினைவிற்கு வர மேலும் நடந்தேன்.

கண்ணீருடன் நிற்கும் கருணைக்கடல்கள்

‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது ஸ்ரீமத் ராமானுஜரின் ஆஞ்ஞை.

தற்காலத்தில் உத்யோக நிமித்தம் எங்கெல்லாமோ இருக்க நேர்கிறது. பணி ஒய்வு பெற்றவுடனாவது தத்தமது பூர்வீக ஊர்களில் (அ) அருகிலிருக்கும் திவ்ய தேசங்களில் குடியிருக்க முயற்சிக்கலாம். கொஞ்சம் அசௌகரியங்கள் இருக்கும். ஆனாலும் வீண் மன உளைச்சல், அதிக இரைச்சல், சுற்றுச் சூழல் கேடு முதலியவற்றில் இருந்து தப்பிக்கவும் இது நல்ல வழியே. ரிடையர் ஆன பின்னும் பம்பாய், சென்னை என்று உழல்வதில் அந்தந்த கார்ப்பரேஷன்களுக்குத் தான் பயன்.

பல திவ்யதேசங்களில் பெருமாளுக்கு சேவாகாலம் சாதிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. புஷ்பகைங்கர்யம் செய்யக்கூட ஆளில்லாமல் பெருமாள் தனித்து நிற்கிறார். அதுவும் அறம் நிலையாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திவ்யதேசங்களின் நிலை சொல்லி மாளாது. நேரடியான அனுபவத்தால் சொல்கிறேன்.

ஆக, நாம் செய்யக் கூடியது என்ன? பணியில் இருக்கும் போதே நமது பூர்வீக கிராமங்களில் வீடு, மனை இருந்தால் சிறிய அளவிலாவது ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். வருஷம் ஒரு முறையேனும் உற்சவாதிகளுக்குச் சென்று வரலாம். ஊர்களுடனான பரிச்சயம் ஏற்பட்டு ஓய்வுபெறும் சமயத்தில் அங்கு சென்று குடியேற ஒரு எண்ணம் பிறக்கும்.

திவ்யதேசங்களில் ஆஸ்திகர்களின் மீள் குடியேற்றம் நடைபெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது இல்லாததால் அங்கெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆபத்துக்கள் பற்றிப் பொதுவெளியில் பேச இயலாது.

‘வெகேஷன்’ என்று சொல்லிக்கொண்டு ‘தண்ணி இல்லாக் காடுகள்’ தேடிச் சென்றுகொண்டிருக்கிறோம். திவ்ய தேசங்களிலும் தண்ணீர் இல்லை. அங்கும் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் கருணைக்கடல்களும், கிருபாசமுத்திரங்களும் கண்ணீர் பெருக்கி நின்றிருப்பது தெரியும்.

கவிதை வாசிப்பு அனுபவம்

புதுக்கவிதை என்றால் குதிகால் பின்னந்தலையில் பட ஓடிவிடும் வர்க்கம் நான். கண்றாவியாக எழுதப்படும் வரிகளைக் கவிதை என்று சொல்லிக் கடுப்பேத்தும் கூட்டம் அதிகமானதால் ஓடி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

ஆனால், இன்று மதியம் மதிக்குமாரின் (Mathikumar Thayumanavan) ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. ஒரே சமயத்தில் தாய் மனம், வறுமை, கல்வி, மங்கலம் என்று பல கோணங்களைக் காட்டும் அபாரமான வரிகள். ஒரு க்ஷணத்தில் ஒரே அடியாக உச்சத்தைத் தொட்டு நிற்கும் வரிகள் இவை. நல்ல தூக்கத்தில் இருக்கும் போது கன்னத்தில் ஓங்கி அறைந்து எழுப்பும் குழந்தையைப் பார்த்தால் ஒரே சமயத்தில் மனதில் எழும் குதூகலமும் அதிர்ச்சியும் கலந்த உணர்வை இந்தக் கவிதை வரிகள் ஏற்படுத்தின.

சொற்சிக்கனம், பொருட்செறிவு, வட்டாரச் சொற்கள் தரும் இயல்புத் தன்மை என்று இவ்வரிகள் வழியாக நாம் அடையும் உணர்வுகள் மிக அணுக்கமானவை . படித்துவிட்டு 5 நிமிடங்கள் விடடத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தேன்.

இம்மாதிரியான எழுத்துக்களே தமிழில் கவிதை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இக்கவிஞர் வளர வேண்டியவர். தமிழ் முரசு இவரைப் போன்ற கவிஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவருக்கு என் வாழ்த்துக்கள். கவிதையை அனுபவித்துப் பாருங்கள்.

இத்துணூண்டு
வெளக்கமாத்து
குச்சிக தான்
தூந்துபோகாம
காப்பாத்துச்சு
அம்மாவுட்டு காதுகளையும்
அந்த வருசப் படிப்பையும்.

ISRO: a personal history – a review

ISRO-A Personal History R.Aravamudan, an Engineer with the premier space organization ISRO, writes his experiences in first person singular, in this fascinating book.  His history calibrates with the history of ISRO and both grow together and bring laurels to the nation.

The story starts when Aravamudan joins Vikram Sarabhai’s team that plans to launch rockets. What a journey from then on!

Aravamudan trains with NASA for 2 months along with Abdul Kalam, and then heads to the tranquil Thumba in Kerala for initiating the sounding rockets programme. He, along with Kalam and a few others, under monthly supervision by Vikram Sarabhai builds the TERLS in Kerala.

Aravamudan details the different stages of development of ISRO, the nail biting moments during early rocket launches, the leadership of Sarabhai, Satish Dhawan and Kalam and the trials and tribulations of rocket programmes run by a newly independent country.

Aravamudan also details the sabotages staged by trade unions and the delays caused by the violent workers who were affiliated with the unions.

The sections on the workaholic Vikram Sarabhai who worked until he dropped dead, the sequence of events leading up to the SLV launch ( Kalam was responsible for this), the sequential upgrades to the SLV Programme – all these are so tightly narrated without any letup that you feel the tension building up in you when you read them.

What is remarkable is that, page after page, you see the young engineers trying to solve a complex problem with what ever limited resources they had. Without sophisticated technical assistance from abroad, with limited governmental budgetary support, what has been achieved is indeed remarkable.

If you need to know about what the US did to scuttle the cryogenic engine technology development in India and how the engineers from ISRO overcame the hurdles, then this book is for you.  You get to know about the contributions of often familiar names : Kasturi Rangan, U.R.Rao, Madhavan Nair, Abdul Kalam, Brahm Prakash, Satish Dhawan and a whole list of luminaries from ISRO.

In 1962 a batch of 5 Indian engineers land in NASA for a 2 month training, return to India and help set up the ISRO and make the organization what it is today. In the same year, a team from Pakistan also visits NASA. Rest is history.

A veritable read that no Indian should miss.