‘இன்னிக்கு என்ன படிச்ச?’ என்று அப்பா கேட்டால் அது பாடம் தொடர்பான கேள்வி அல்ல. அன்றைய ஹிந்துவைப் பற்றியது. #நெய்வேலி நாட்கள் ஹிந்து இல்லாமல் இருந்ததில்லை.
தம்பிக்கு ரொம்ப சுலபம். கபில் தேவ், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி என்று சொல்லி தப்பித்துவிடுவான். அவன் படிப்பது ஆர்.மோஹன் எழுதும் கிரிக்கெட் பக்கங்கள் மட்டுமே.
எனக்கு மார்கரெட் தாட்ச்சரில் இருந்து, ரீகன், டெங் ஷாபெங், ஜியா உல் ஹக் என்று பலரது பெயரையும் சொல்லியாக வேண்டும். இத்தனை பேரும் அந்தந்த நாட்டில் இல்லாமல் கண்டபடி ஊர் சுற்றி, ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, இப்படி தினமும் பிராணனை வாங்குவானேன்?’ என்று அவர்களைப் பலமுறை சபித்திருக்கிறேன்.
‘தாட்சர் என்ன சொன்னார்?’, ‘இந்திரா காந்தி பார்லிமெண்டில் என்ன பேசினார்?’, ‘ஜார்ஜ் பெர்னாண்டஸ்ற்கு பம்பாயில் என்ன நடந்தது?’ கேள்விகள் இப்படிப் போகும்.
தாட்சரும், இந்திரா காந்தியும் பேசாமல் இருந்தால்தான் என்ன ? கிளாசில் எங்களை எல்லாம் பேசாதே பேசாதே என்றுவிட்டு. இப்படித் தலைவர்கள் எதற்குப் பேச வேண்டும்? அவாளுக்குள்ள ஏதோ பேசிக்கறா, அதை இந்த ஹிந்து வேலை மெனக்கெட்டு எதுக்கு எழுதணும்? ‘என்ன பேசினா, என்ன பேசினான்னு இவர் ஏன் என் பிராணனை வாங்க வேண்டும்?’ என்று நினைத்ததுண்டு.
‘பேப்பர்ல என்னடா போட்ருக்கான்?’ என்று பாட்டி கேட்பதற்கு வேறு காரணம் உண்டு. ஹிந்துவில் கடைசிப் பக்கத்தில் ஆபிச்சுவரி பற்றியது பாட்டியின் கேள்வி. ‘ஏதாவது அய்யங்கார் பெயராக இருக்கக் கூடாதே’ என்று வேண்டாத பெருமாள் கிடையாது. ஏனென்றால் யாராவது ‘மல்லியம் கிருஷ்ணசுவாமி அய்யங்கார் ஆச்சாரியன் திருவடி அடைந்தார்’ என்று இருந்தால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். யாரோ ஊர் பேர் தெரியாத பிராமணன் மண்டையைப் போட்டு, இந்த வருஷம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் உலை வைத்துவிடுவாரோ என்கிற பயம் தான்.
‘யாரும் அய்யங்கார் பேர் இல்லை பாட்டி’ என்று சொல்லி டபாய்க்கலாம் என்றால், மத்தியானம் பொழுது போகாத வேளையில் (அ) ஹிந்து பேப்பரில் மாவு சலிக்கும் சுபயோக சுப நாழியில், ‘கே ஆர் ஐ எஸ் எச் என் ஏ என்’ என்று எழுத்துக் கூட்டிப் படித்து அந்த வருஷம் தீபாவளிக்கு வேட்டு விழுந்ததும் உண்டு.
இதை ஒருவாறு அறிந்துகொண்ட அப்பா, பாட்டியிடம், ‘போட்டிருக்காம்மா. நம்மடவா பேரா இருக்கு. ஆனா டெல்லில இருந்தாளாம். நமக்கு யாரும் தாயாதி டெல்லில இல்லியோன்னோ?’ என்று சமாளிப்பார். எந்த தாயாதியும் இல்லாதிருக்க வேண்டுமே என்று ஸத்-ஸங்கம் பிள்ளையாரிடம் பலமுறை வேண்டியுள்ளேன். அய்யங்கார் பெயர் இல்லாமல் இருக்க பிள்ளையார் உதவி செய்தார். மத நல்லிணக்கம் இது தான் போல.
சில சமயம் யாராவது ‘சிவபதம் சேர்ந்தார்’ என்று போட்டு ஏதாவது பெயர் இருக்கும். அவர் சிவபதம் தான் சேர்ந்தாரா? அவருக்கு கிருஷ்ணன் மேல் அபிமானம் ஏற்பட்டு ஒரு வேலை வைகுந்தம் ஏகியிருக்க மாட்டாரா என்று யோசித்ததும் உண்டு. ஆனால் யாரிடமும் கேட்டல்லை. தைரியம் இல்லை. அவ்வளவுதான்.
ஆனால் இந்திரா காந்தி இறந்த போதும், அதன் பின்னர் ராஜிவ் காந்தி இறந்த போதும் அப்பாவும், பாட்டியும் ரேடியோவையும் ஹிந்துவையும் கட்டிக் கொண்டு அழுத அழுகை இன்றும் கண்ணில் நின்றாலும், எம்.ஜி.ஆர்.இறந்ததைக் கேள்விப்பட்டு பாட்டி,
‘வயசாயிடுத்து, போயிட்டுப் போறான். ஆனா அந்த பொம்மனாட்டியை இப்பிடிப் பாழாக்கிட்டுப் போக வாண்டாம். நன்னா கல்யாணம் பண்ணிண்டு கொழந்தை குட்டின்னு இல்லாம, இவுளும் அவன் பின்னாடியே போனா.வேற யாராவது பேர் போட்ருக்கானா பாருடா,’ என்றாள்.
2002ல் பாட்டி பெயர் வந்தது. பார்க்க பாட்டி தான் இல்லை.
தற்போதெல்லாம் ஹிந்து ஆபிச்சுவரி பார்ப்பதில்லை. ஏனெனில் ஹிந்து வாங்குவதில்லை.
I also had this experience with my mother. My mother could read English. So she would herself see the obituary column.
LikeLike
அப்படியே எனக்கும். ஹிந்து இப்போது வாங்குவது இல்லை-உள்பட.
LikeLike