‘இந்தியப் பயணம்’ – வாசிப்பு அனுபவம்

ஜெயமோகனும் நண்பர்களும் தாரமங்கலத்தில் இருந்து புத்த கயா வரை சென்ற சாலைவழிப் பயணத்தின் அன்றாடத் தொகுப்பே ‘இந்தியப் பயணம்’ என்னும் நூல். அன்றாடப் பயண நிகழ்வுகள், பயணத்தின் போது கண்ணில் படும் காட்சிகள், சுற்றுப்பறம், தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உபி, பிஹார் என்று வேறுபடும் நிலங்களின் வர்ணனைகள், மாறும் சீதோஷ்ண நிலைகள், அவ்விடங்களில் கிடைக்கும் கள் முதலிய பானங்கள் என்று பலதையும் தொட்டுச் செல்லும் இப்பயணக் குறிப்புகள் அவ்வூர்களின் கோவில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் அளிக்கத் தவறவில்லை.

பாரதத்தின் ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்குச் செல்லும் ஜெயமோகன், தான் கண்ட கோவில்கள், கோட்டைகள் என்று அவற்றின் வரலாறு, ஆண்ட மன்னர்கள் பற்றிய குறிப்புகள் என்று அன்றாடம் எழுதுகிறார். தமிழகம் தவிர்த்த இத்தனை மாநிலங்களின் சிறு வரலாறு குறித்து இத்தனை தகவல்களை அவர் எப்படித்தான் நினைவில் வைத்துள்ளார் என்பது மலைப்பாகவே உள்ளது.

தாரமங்கலத்தில் சைவத்தில் துவங்கும் இவரது பயணம், ஆந்திராவில் வைணவத் தலங்களில் நிகழ்ந்து, புத்த கயாவில் பவுத்தத்தில் முடிவது, பாரதத்தின் பரந்துபட்ட சமயங்களின் ஒத்திசைவைக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது.

india-payanam-10002242-800x800ஆந்திராவில் அஹோபிலம் குறித்த பயணக் குறிப்புகளில் தற்போதைய அஹோபில மடத்தின் ஆரம்ப கால நிகழ்வுகள் குறித்த சரியான செய்திகள் இடம் பெற்றுள்ளது சிறப்பு. செஞ்சு பழங்குடியினர் வாழும் அஹோபில மலைகளுக்குக் காஞ்சிபுரத்தில் இருந்து தனியாளாகச் சென்று, பழங்குடியினரை வைணவர்களாக்கி, அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு சமயமாக வைணவத்தை வளர்த்த ஆதி வண்சடகோப ஜீயர் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளன. ஆனால் அஹோபில மடம் தென்கலை வைணவர்களுக்கானது என்பது தவறு. அது வடகலை வைணவர்களுடைய பிரதான மடம். தமிழ் மொழிக்கு அம்மடம் அளித்து வரும் முதன்மையையும் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் பயணிக்கும் போது அம்மாநிலத்துச் சாலைகள் பற்றிக் குறிப்பிடுவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. அவசியம் பா.ஜ.க. அரசு கவனிக்க வேண்டிய ஒன்று இப்பகுதி.

பயணிக்கும் பல மாநிலங்களிலும் பிழைப்பு தேடிச் சென்றுள்ள தமிழர்களைச் சந்திக்கிறார் ஆசிரியர். ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்னும் வெற்றுக் கோஷத்தைக் கண்டிக்கும் விதமாக உள்ளவை இப்பகுதிகள்.

கோவில் இடிபாடுகள் என்றாலே இஸ்லாமிய மன்னர்களின் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை. அவ்வாறே அவர் காட்டும் கோவில்களும், பண்டைய கல்வி நிலையங்களும் இடிந்து தத்தமது பழைய வரலாற்றைக் கூறுகின்றன.

ஜெயமோகனின் கூரிய பார்வை நம்மைப் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் இந்து அரசர்கள் ஆண்ட போதும் இஸ்லாமிய மசூதிகளுக்கு இடம் அளித்தார்கள் என்னும் தகவலைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.  பெனுகொண்டா நகரில் பாபையா தர்க்கா இருந்துள்ளதைச் சுட்டும் ஆசிரியர், ஷெர் கான் மசூதியை 1564ல் சதாசிவ ராயர் கட்டினார் என்று கல்வெட்டு ஆதாரம் காட்டுகிறார். மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை பற்றி இன்று ஓலமிடும் இடதுசாரிகளும் பகுத்தறிவாளர்களும் அவசியம் படிக்க வேண்டிய பகுதி இது.

பல கோவில்களைப் பற்றிக் கூறும்போதெல்லாம் தமிழ் நாட்டுக் கோவில்களுடன் அவற்றை ஒப்பிட்டுக் காட்டுவது பாராட்டும்படி உள்ளது. வாஜ்பாய் துவங்கிய தங்க நாற்கரச் சாலைத் திட்டம் எப்படி காங்கிரஸ் ஆட்சியில் அழிக்கப்பட்டது என்பதைத் தனது ஆந்திர, மத்தியப் பிரதேசச் சாலைகள் பற்றிய குறிப்புகளில் வெளிப்படுத்துகிறார் ஜெயமோகன்.

விறுவிறுப்பாகவும், அவசரமாகவும் எழுதப்பட்ட அன்றாடக் குறிப்புகள் என்பதால் சில இடங்களில் மேலதிக வர்ணனைகள் இல்லாமல் இருக்கிறது. நூலாக வெளியிடும் போது அவற்றைச் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

பாரத தரிசனத்தைத் துவங்கும் யாருக்கும் பயனளிக்கும் நூல் ‘இந்தியப் பயணம்’. இதை இங்கே வாங்கலாம்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

4 thoughts on “‘இந்தியப் பயணம்’ – வாசிப்பு அனுபவம்”

  1. சதாசிவ ராயர் அவர்கள் ஷேர்கான் மசூதி கட்டி கொடுத்ததை எழுதியுள்ளீர்கள். விஜயநகர மன்னர்கள் எவ்வாறு இஸ்லாமியர்களும் மசூதி கட்ட அனுமதித்தார்கள் என உண்மையை பதிவு செய்துள்ளது வரவேற்கவேண்டிய ஒன்று. ஆனாலும், பதிப்பகத்தார் கிழக்கு பதிப்பகம் என்பதால், இவை புத்தகத்தில் அச்சிட்டு இருப்பார்களா என சந்தேகம் வருகிறது. ₹90 ரிஸ்க் எடுத்து kindle version வாங்குகிறேன். படித்த பின் உறுதி செய்கிறேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: