RSS

தீபாவளிக்கு லேகியம் உண்டா மை லார்ட் ?

12 Oct

மாண்புமிகு கோர்ட் நீதிபதி அவர்கள் சமூகத்துக்கு அநேக நமஸ்காரம். மன்னிக்கவும். வணக்கம்.

பட்டாசு பற்றிய உங்கள் தீர்ப்பு வந்ததும், இது போல இன்னும் பல விஷயங்களுக்கு நீங்கள் தான் சரியான ஆள் என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அதனால் இக்கடிதம் எழுதுகிறேன்.

கோவில்களிலும் வீட்டிலும் எண்ணெய் விளக்கேற்றலாமா? இல்லை மெழுகு விளக்கு தான் ஏற்ற வேண்டுமா? நிகழ்ச்சிகளைத் துவக்கும் போது குத்துவிளக்கு ஏற்றுவது பற்றி செக்யுலர், சுற்றுப்புறச் சட்டங்களில் வருகிறதா? ஒருவேளை கூடாது என்றால், ‘குத்துவிளக்கெரிய..’ என்று ஆண்டாள் பாடுகிறாளே, அதனால் திருப்பாவையைப் பாராயணம் பண்ணலாமா கூடாதா?

வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றலாமா? வாசல் தெளிப்பது பற்றி சட்டம் என்ன சொல்கிறது? கோலம் போடலாமா? கோலத்திற்கு என்ன மாவு பயன் படுத்த வேண்டும்? கல் மாவு கலக்கலாமா? இதனால் அணில்கள் பாதிக்கப்படுமா? இதைப் பற்றி விலங்கியல் சட்டம் ஏதாவது இருக்கிறதா

தீபாவளிக்கு பட்சணங்கள் பண்ணலாமா கூடாதா? விறகு, எரிவாயு என்று பலது பயன்படுகிறது என்பதால் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்.

கற்பூரம் ஏற்றலாமா ? தீபாராதனை எத்தனை முறை காட்டிட வேண்டும்? எத்தனை முழம் பூ சாற்ற வேண்டும்? பெருமாளுக்கு என்ன தளிகை பண்ண வேண்டும்? கோவில்களில் அர்ச்சகர் பஞ்சகச்சம் கட்டிக் கொள்ள வேணும் என்பது அடக்குமுறை போல் தெரிகிறது. அரை டிராயர் போட்டுக் கொள்ள செக்யுலர் சட்டத்தில் எங்காவது எழுதி இருக்கும். இதை எல்லாம் கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள். உங்களுக்கும் ஏதாவது வேலை வேண்டாமா சார் ?

இதெல்லாம் பரவாயில்லை. தீபாவளி லேகியம் என்று விதம் விதமாகப் பண்ணுகிறார்கள் சார். எல்லாம் கரும்பச்சை நிறத்தில் இருக்கிறதே தவிர மற்றப்படி இதற்கும் லேகியத்திற்கும் ஸ்நான சம்பந்தம் கிடையாது. அதிலும் போகும் வீடுகளில் எல்லாம் ‘சாப்பிடு சாப்பிடு’ என்று வேண்டி, வற்புறுத்தி வாயில் திணிக்கிறார்கள். அவர்கள் வீட்டில் செய்தது தீரவில்லை என்றால் நான் தான் கிடைத்தேனா?

லேகியம் கூட பரவாயில்லை. எல்லார் வீட்டிலும் ஒரேமாதிரி கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல் வாங்கிவிட்டு, சாப்பிட்டாலே ஆயிற்று என்று போராட்டம் நடத்துகிறார்கள். வீட்டிற்கு வருவதில்லை என்கிறார்கள், போனால் இப்படி உணவு பயங்கரவாதம். ஒரு சராசரி அம்மாஞ்சி ஆண்பிள்ளை என்னதான் செய்வது? இதற்கு ‘மனித உணவு உரிமை மீறல்’ என்று ஏதாவது சட்டம் இருக்கா யுவர் ஆனர்?

தீபாவளிக்கு வீட்டில் பண்ணும் பட்சணங்களின் தொல்லை தாளாமல் அக்கடாவென்று உட்காரலாம் என்றால் டி.வி.யில் உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக நூறு முறை போட்ட திரைப்படம் போடுகிறார்கள். அதற்குமேல் பட்டி மன்றம் என்னும் பெயரில் பார்க்கும் எங்களைப் பரிகாசம் செய்கிறார்கள். இதற்கு ‘திரைவழி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்’ என்று ஏதாவது இருக்கிறதா யுவர் ஆனர்?.

பட்டிமன்றம் கூட பரவாயில்லை யுவர் ஆனார், அறிவிப்பு செய்கிறேன் பேர்வழி என்று தமிழில் பேசுகிறார்களே, அதைச் சொல்லி மாளாது. நீங்கள் தில்லியில் இருக்கிறீர்களோ தப்பித்தீர்களோ.  இவர்கள் அறிவிப்பு செய்கிறார்களா அல்லது எச்சரிக்கை விடுகிறார்களா என்று தெரியாமல் நாள் பூராவும் உச்ச ஸ்தாயியில் ஏதாவது கத்திக்கொண்டே இருக்கிறார்கள். எதோ கொஞ்ச நஞ்சம் தெரிந்த தமிழும் போய்விடுமோ என்று பயந்துகொண்டே இருக்க வேண்டியுள்ளது. இதனால் இப்போதெல்லாம் ஸ்டீரியோ ஸ்பீக்கர் இருந்தாலும் டி.வி.யை மியூட்டிலேயே தான் வைத்திருக்கிறோம்.

இது தேவலை என்றால், 60 வயதான பாட்டிகளும் மாமிகளும் சேர்ந்து ஆறு வயதுக் குழந்தையை ஒரு டூயட் பாட்டைக் கொடுத்து ‘இன்னும் பீலிங் குடுத்துப் பாடணும்மா’ என்று ராகிங் பண்ணுவதை ஒளிபரப்புகிறார்கள். இந்த ராகிங்கை குழந்தையின் பெற்றோரே உடனிருந்து ஊக்குவிக்கின்றனர். இந்தக் கொடுமைக்கு எல்லாம் ‘குழந்தையைக் கொடுமைப் படுத்துதல்’ என்று சட்டம் எல்லாம் இல்லியா சார்? இல்லை இதெல்லாம் பட்டாசுக் குழந்தைகளுக்கான குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திற்குள் வராதா சார்?

அது போகட்டும்.

2ஜி வழக்கு என்று ஒன்று கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே போடப்பட்டது. 2ஜி என்பது சோனியாஜி, ராகுல்ஜி இல்லை. இரண்டு ஜி. காந்தி கணக்கு போல் ஆகாமல் எப்போதாவது உங்களுக்கு நேரம் கிடைத்தால் – அதாவது தீபாவளி பட்டாசு, சபரிமலை வழக்கு, ஆதார் அட்டை வழக்கு, சல்மான் கான் வழக்கு, சஞ்ஜய் தத்தைப் பரோலில் விடுவது போன்ற அடிமக்களைப் பாதிக்கும், நாட்டிற்கு அத்தியாவசியமான வழக்குகளை எல்லாம் நீங்கள் பார்த்த பிறகு, ஓய்வாக இருக்கும் நேரத்தில், அல்லது ஒய்வு பெறும் நேரத்தில், 2-ஜி வழக்கு என்பதை ஒருமுறை எடுத்து தூசு தட்டிப் பார்க்கவும். மறக்காமல் இருக்க உதவும் – பைல்கள் அபேஸ் ஆகாதிருக்க  உதவும். இல்லையென்றால் ஜெயலலிதா கதை தான். ஆள் போனபிறகு தீர்ப்பு வந்து, வாலறுந்த பூனை போல லபோ திபோவென்று குதிக்க வேண்டும்.

இன்னொன்று. ரொம்ப முக்கியமாக நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது. தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் கொள்வது என்றொரு காட்டுமிராண்டிப் பழக்கம் உள்ளது. அதுவும் விடியற்காலையில் எழுப்பி, இந்தட்சணம் எண்ணெய் தேய்த்துக் கொண்டாலே ஆயிற்று என்று பெரியவர்கள் அடம் பிடிக்கிறார்கள். காலில் நலுங்கு இட்டு, தலையில் எண்ணெய் வைத்து (ஏற்கெனவே மூஞ்சியில் வழிகிற அசடையும் மீறி), முகம் முழுக்க எண்ணெய் வழிய நிற்க வைக்கிறார்கள். இதெல்லாம் கூடாது என்று ‘ஹிந்து தலை முழுகும் சட்டம்’ என்று ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்.

இல்லையென்றால் ‘இப்படி ஒரு சட்டம் ஏன் இல்லை ?’ என்று மத்திய அரசைக் கேளுங்கள். ஹிந்து பேப்பரில் நான்கு அம்மாஞ்சிகள் இக்கேள்வியை ஆதரித்து எழுதுவார்கள். இன்டாலரன்ஸ் என்று கொஞ்ச நாள் கூப்பாடு போட வழி கிடைக்கும். பார்த்துச் செய்யுங்கள். விருதுகளைத் திருப்பித் தரும் விழா நடத்த ஏதாவது இப்படி நடந்தால் தானே உண்டு? இதெல்லாம் இல்லாததால் உலக்கை நாயக்கர்கள் சி.எம். ஆக வேண்டியுள்ளது. படம் போணியாகவில்லை என்பதை எத்தனை நாள் தான் மறைக்க முடியும்?

தீபாவளி போகட்டும் சார். பொங்கலுக்கு என்ன பண்ணலாம்? சர்க்கரைப் பொங்கலுக்கு பதில் நூடூல்ஸ் பண்ணலாம் என்று சொல்ல முடியுமா என்று பாருங்கள். ரொம்ப நாட்களாக சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு போர் அடிக்கிறது. அப்படியே பொங்கல் பண்ணினாலும் வெல்லம் எவ்வளவு போட வேண்டும் என்றும் கொஞ்சம் சொல்லுங்கள். ஜட்ஜ் சொல்லிவிட்டார் என்று வீட்டிலும் கேட்பார்கள். இப்படி யாராவது சொன்னால் தான் கேட்கிறார்கள்.  காவிரி தீர்ப்பு போல இதுவும் அமலாகும்..

தீபாவளிக்கு வருவோம். மின்சார விளக்கு பயன்படுத்தலாமா? மின்சார உற்பத்தி செய்ய அணைகள் கட்ட வேண்டியுள்ளது. எனவே இயற்கைக் சூழல் பாதிப்பு அடைகிறது.  மின்சாரமும் கூடாது, எண்ணெய் விளக்கும் கூடாது என்றால் எல்லாரும் இருளில் தான் இருக்க வேண்டுமா? சட்டம் ஒரு இருட்டறை என்பது இதுதானா மை லார்ட்?

அடுத்த கடிதம் மற்ற பண்டிகைகளை விடுத்து, பொங்கல் பண்டிகையின் போது வரும் பொது நல வழக்கை ஒட்டி எழுதுகிறேன்.

இப்படிக்கு,
தீபாவளி வாழ்த்துக்களுடன்,
அசட்டு அம்மாஞ்சி

 
2 Comments

Posted by on October 12, 2017 in Writers

 

2 responses to “தீபாவளிக்கு லேகியம் உண்டா மை லார்ட் ?

  1. Santhanam B

    October 18, 2017 at 6:27 pm

    Simply super

    Like

     

Leave a Reply to Amaruvi Devanathan Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: