RSS

Monthly Archives: December 2017

நாயகனாய்

‘நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய..’ #பாசுரத்தில் பாவை நோன்பிருக்கும் பெண்கள் வாயிற்காவலனிடம் கெஞ்சுவதும், கண்ணபிரானின் அனுபவத்தைப் பெற மணிகள் பூட்டிய கதவைத் திறக்க வேண்டுவதாகவும் இருப்பது பொதுப்பார்வை.

பாசுரத்தின் முதலில் காணப்பெறும் ‘நாயகனாய் நின்ற’ என்கிற அடைமொழி யாரைக் குறிக்கிறது என்கிற கேள்வி சுவையானது.

  1. ‘நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய, கோவில் காப்பானே’ என்று தொடர்புள்ளியை(Comma) ‘நந்தகோபனுக்குப் பின் போட்டு வாசித்தால், ‘நாயகனாய் நின்ற’ என்பது நந்தகோபனைக் குறிப்பதாகத் தோன்றும்.
  2. தொடர் புள்ளியை ‘நின்ற’விற்குப் பிறகு போட்டால் ‘நாயகனாய் நின்ற, நந்தகோபனுடைய கோவில் காப்பானே’ என்றால்,  ‘நாயகனாய் நின்ற’ என்பது கோவில் காப்பவனைக் குறிப்பதாகத் தோன்றும்.

இரு பார்வைகளுமே சுவையானவை தான்.

1. – இதில் கருத்து வேறுபாடு எழ வழியில்லை. இருந்தாலும் ‘நாயகனாய் நின்ற கண்ணனுடைய’ என்றில்லாமல் நந்தகோபனுக்கு ஒரு ஏற்றம் தெரிகிறது. அவ்வளவுதான்.

2.- இதில் கேள்வி எழலாம். ‘வாயில் காப்பவனுக்கு ஏன் இவ்வளவு ஏற்றம்?’ என்னும் கேள்வி எழ வாய்ப்புள்ளது. இவ்விடத்தில் வைஷ்ணவ காலட்சேப உரை சுவையானது. வாயில் காப்பவன் நமக்கெல்லாம் பரம்பொருளைக் காட்டிக் கொடுப்பவன். இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல உதவுபவன். எனவே இவ்விடத்தில் ‘வாயில் காப்பவன்’ என்பது ஆச்சார்யனைக் குறிக்கிறது என்பதாகக் கொள்வது சுவையானது.

ஆனால், கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே’ என்று இன்னொரு ‘ஆச்சார்யன்’ உள்ளாரே? என்கிற கேள்வியும் எழலாம். ஆம். இரு ஆச்சார்யர்கள் இருப்பது நியாயமே. ஒருவர் நமது குல / பரம்பரை ஆச்சார்யன் ( நமக்கு சமாஸ்ரயணம் / பாரநியாஸம் செய்தவர்). இன்னொருவர் இவ்வழக்கத்தையெல்லாம் பெருமளவில் நடைமுறைப் படுத்திய எம்பெருமானார் என்னும் யதிராஜர். ஆக, இரு ஆச்சார்யர்கள் கணக்கு சரியாகிவிட்டது என்கிற பார்வை அலாதியானது.

‘ஆனால், எம்பெருமானார் ஆண்டாளுக்குப் பின்னர் தோன்றியவர் ஆயிற்றே ?’ எனலாம். அதனால் தான் ஆண்டாள் ‘எம் அண்ணரே’ என்று யதிராஜரை அழைத்து இவ்வினாவிற்கு விடை அளித்துள்ளாள் என்று கொள்ளலாம்.

இப்பாசுரத்தில் பாவை நோன்பிருக்கும் பெண்டிர் ‘தூயோமாய் வந்தோம்’ என்று மீண்டும் கூறுவது வாயிற்காப்போருக்கு விடை அளிப்பது போல் உள்ளது. வாயிற்காப்பவர்கள்  ‘நீங்கள் திரிகரண சுத்தி உடையவர்களா?’ என்று கேட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க இடமுள்ளது. இது பார-நியாசம் செய்யும் முன் ஆச்சார்யன் ‘நீ பெருமாள் கைங்கர்யத்தை விடாமல் செய்து வருகிறாயா? உனக்கு மோக்ஷம் கேட்டுப் பெருமாளிடம் சிபாரிசு செய்யும் முன், தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று வினவுவதைப் போல் உள்ளது.

#ஆண்டாள் #திருப்பாவை

 

 

Tags: , ,

எல்லே இளங்கிளியே

‘எல்லே இளங்கிளியே’ என்னும் பாசுரத்தில் தமிழின் தொன்மை தெரிகிறது.

‘எலுவை’ என்பது பெண்ணை அழைக்கும் சொல். ‘எலுவன்’ என்பது ‘தோழன்’ என்னும் பொருளில் வருகிறது என்று தமிழ் அகராதி கூறுகிறது. ஆக, எலுவன் என்பது மருவி தற்போது ‘எலேய்’ என்றும், ‘எலுவை’ என்பது ‘எல்லே’ என்றும் வருகிறது. எலுவை, எல்லே என்பவை சங்க காலச் சொற்கள்.

ஆக, ‘எல்லே’ என்னும் ஆண்டாளின் சொல் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு பழையது.

இப்பாடலில் வைஷ்ணவ லக்ஷணம் சொல்லப்படுகிறது.

‘எழுப்பாதீர்கள். உங்கள் சொற்கள் குளிர்ந்த நீரைக் காதில் விடுவது போல் என் தூக்கத்தைக் கெடுக்கின்றன. ‘சற்றுப் பொறுங்கள். நான் எழுந்தது வருகிறேன்’
‘நீ வாய்ச்சொல்லில் வீராங்கனை. நாங்கள் நீ உரைப்பனவற்றை நம்பப்போவதில்லை.’
‘ஆமாம், நீங்கள் நல்லவர்கள். நான் வாய்ச்சொல் வீராங்கனை தான். அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.’

அழைக்கும் பெண்கள் குற்றம் சுமத்தியவுடன், அதனைத் தன் குற்றமாகவே கொள்கிறாள் உறங்குபவள். பாகவதர்கள் நம் மீது குற்றம் சொன்னால், நாம் அக்குற்றத்தைச் செய்யாவிடினும் பாகவதர்கள் சொல்வதால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது வைஷ்ணவ லக்ஷணம் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அவ்விலக்கணப்படி, உறங்குபவள் வைஷ்ணவ லக்ஷணத்திற்கு ஒரு உதாரணம் போல் உள்ளாள்.

‘மாற்றாரை மாற்றழிக்க வல்லானை’ என்பதில் ஒரு நயம் உண்டு. இது இராமனுக்கும் கண்ணனுக்கும் உள்ள வேறுபாடு. இராமன் ‘மனத்துக்கினியான்’ எனவே ‘இன்று போய் போர்க்கு நாளை வா’ என்று கருணையினால் கூறினான். ஆனால், கண்ணன் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற பைனரி முறையில் செயல்படுபவன். எனவே எதிரிகளின் மீது இராமனைப் போல் கருணை காட்டாமல் உடனுக்குடன் அவர்கள் கதையை முடித்துவிடுவான் என்கிற பொருளில் ‘மாற்றாரை மாற்றழிக்க வல்லானை’ என்கிறாள் ஆண்டாள்.

இக்கருத்தை வலியுறுத்த ‘வல்லானை ( கம்சனின் குவலயாபீடம் என்னும் வலிமையான யானை ) ‘ என்கிறாள் ஆண்டாள்.

இவை தவிர, ‘ஒல்லை’ என்னும் அருந்தமிழ்ச்சொல் காணக்கிடைக்கிறது. ‘உடனே, அப்போதே’ என்பதை உணர்த்த இச்சொல் பயன்படுகிறது.

ஒல்லை நீ போதாய்’ என்கிறாள் ஆண்டாள். ‘

அவளது தந்தையான பெரியாழ்வாரோ

‘ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ’ என்கிறார்.

பாகவதர்கள் குழாத்தில் ஒல்லை (உடனே) சேர்ந்து கொள்ளுங்கள் என்று அப்பாவும் மகளும் ஒன்று போலவே அழைக்கிறார்கள்.

#திருப்பாவை #ஆண்டாள்

 

Tags: , ,

உங்கள் புழைக்கடை

‘உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்’ என்னும் பாசுரத்தில் ஆச்சார்ய லக்ஷணம் பேசப்படுகிறது.

‘செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோவில் சங்கிடுவார் போதந்தார்’ என்னும் பிரயோகம் காவி உடை சந்நியாசிகளைப் பற்றிய ஆழ்ந்த பொருளுடைய ஒன்று.

வெளிப்படைப் பொருள்: செங்கல் ( காவி) உடை உடுத்திய, வெண்மையான பற்களை உடைய சந்நியாசிகள் தத்தமது கோவில்களுக்குச் செல்கின்றனர். செல்லும் பொது தங்களது சங்கை முழங்கிக்கொண்டு செல்கின்றனர். எனவே பொழுது விடிந்து விட்டது என்பதை உணர்வாயாக.

உள்ளுறைப் பொருள்: ஆச்சார்யர்களது வெளித்தோற்றம் அழுக்குடையதாகத் தெரிந்தாலும் அவர்களது உள்ளம் தூய்மையானது. ‘செங்கல் பொடிக்கூறை’ என்பது அவர்களது வெளித்தோற்றத்தையும், ‘வெண்பல் தவத்தவர்’ என்பது அவர்களது அழுக்கடையாத உள்ளத்தையும் குறிக்கிறது. ‘வெண்பல்’ என்பது ஞானத்தைக் குறிப்பதாகவும் கொள்வது சம்பிரதாயம்.

சில பாடல்களுக்கு முன் வந்த ‘புள் அரையன் கோவில் வெள்ளை விளி சங்கு’ என்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பொழுதே விடியவில்லை என்றால் கோவிலில் இருந்து சங்கொலி எப்படி எழும் என்னும் கேள்வி எழலாம். அதற்கான விடை இன்றைய பாடலில் – சந்நியாசிகள் சங்கம் ஒலிக்கிறார்கள்.

‘புழைக்கடை’ (வீட்டின் பின்புறம்), ‘வாவி’ (பெரிய கிணறு, சிறிய குளம்) என்னும் அரிய தமிழ்ச் சொற்கள் நம் கண்களைப் பனிக்கச் செய்கின்றன. நாம் இழந்துள்ள எத்தனையோ விஷயங்களில் இவ்வரிய சொற்களும் சேர்த்தி.

#ஆண்டாள் #திருப்பாவை

 

Tags: , , ,

புள்ளின் வாய்

‘புள்ளின் வாய்க் கீண்டானை’ என்னும் திருப்பாவைப் பாசுரத்தில்  தமிழின் அழகும் வலிமையும் தெரிகின்றன. அழகிய, வலிமை வாய்ந்த சொற்கள் ஆண்டாளின் கைகளில் விளையாடுவதை இப்பாசுரத்தில் காணலாம்.

திருப்பாவை முழுவதும் ‘புள்’ என்று பறவையினத்தை அதன் பொதுப்பெயரால் குறிப்பிடும் #ஆண்டாள், இப்பாசுரத்தில் ‘புள்ளின் வாய்க்கீண்டானை’ என்னுமிடத்தில் கொக்கு உருவில் கண்ணனைக் கொல்ல வந்த பகாசுரன் வதையை உணர்த்துகிறாள். மூன்றே சொற்களின் மூலம் ஒரு பெரிய நிகழ்வைச் சொல்லி முடிக்கிறாள் ஆண்டாள்.

‘பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை’ என்னுமிடத்தில் இராவணன் என்னும் அரக்கனது கதை முடிந்த நிகழ்வு உணர்த்தப்படுகிறது. மிகப்பெரிய யுத்தத்தின் மூலம் முடிவுற்ற இராவணனின் கொடிய வாழ்வு, ‘கிள்ளிக் களைந்தானை’ என்னும் எளிய சொல்லாடலால் உணர்த்தப்படுகிறது. கீரையை ஆயும் போது, அதனுடன் இருக்கும் பூச்சி பட்ட கீரை இலைகளை எளிதாகக் கிள்ளிக் களைவது போல இராவணனது முடிவு சொல்லப்படுகிறது. படிப்போரின் உள்ளத்தில் எந்த வித எதிர்மறை எண்ணமும் தோன்றாத வகையில் தமிழ் விளையாடுகிறது.

இந்த இரு நிகழ்வுகளிலும் ‘கொல்லுதல்’ என்னும் சொல் பயன்படுத்தப் படவில்லை என்பது ஒரு சுவை. சென்ற பாடலில் ‘மனத்துக்கினியான்’ என்று இராமனை அழைத்துவிட்டு இப்பாடலிலும் அது போலவே மென்மையாகக் கையாண்டுள்ளாள் ஆண்டாள்.

‘போதரிக் கண்ணினாய்’ என்னும் பிரயோகம் ‘போது + அரி + கண்ணினாய்’ என்று பிரிந்து பல பொருள் தெரியும் படி வருகிறது. ‘அரி’ என்னும் சொல் பல பொருள் உடையது.

  1. அங்கும் இங்கும் அலைவதால், மான் போன்ற கண் உடையவளே
  2. எதிரி என்னும் பொருளில், மானின் கண்ணிற்கு எதிரி போல் அழகிய கண்ணை உடையவளே
  3. வண்டு என்னும் பொருளில், பூவில் பொதிந்த வண்டு போன்ற கண் உடையவளே

வைஷ்ணவ காலட்சேபங்களில் இப்படிச் சொல்வார்கள்:

‘காலையிலேயே பாவை நோன்பு நோற்கப் பெண்கள் பாவைக் களத்திற்குச் சென்று விட்டனர். உடனே எழுந்திரு.’

‘அவர்கள் சின்னப் பெண்கள். விபரம் அறியாதவர்கள். இன்னும் பொழுது விடியவில்லை. பிறகு செல்லலாம்.’

‘இல்லை. பொழுது புலர்ந்து விட்டது. எனவே எழுந்திரு.’

‘காலையின் அறிகுறிகள் வேறு ஏதாவது உண்டா?’

‘பறவைகள் கத்துகின்றன. அது ஒன்று போதுமே.’

‘ஒப்புக்கொள்ள இயலாது. வேறு  ஏதாகிலும்  பொழுது புலர்ந்ததற்கான அறிகுறிகள் உள்ளனவா? வெள்ளி (சுக்கிரன்) உதித்து விட்டதா? வியாழன் (குரு) அஸ்தமித்து விட்டதா?’

‘ஆமாம், வெள்ளி எழுந்து, வியாழன் உறங்கி விட்டது. அத்துடன் நாங்களும் வந்திருக்கிறோம். எனவே பொழுது புலர்ந்துவிட்டது.’

‘நம்பும்படி இல்லை. கிருஷ்ண அனுபவம் பெறுவதற்காக, இரவே நீங்கள் வந்து விட்டீர்கள், இராமனைக் காட்டிற்கு அனுப்பிய பரதன், விடியற்காலையில் நீராடச் சென்றால் ‘தன் அண்ணனைக் கானகத்துக்குத் துரத்திய பாதகன் செல்கிறான்’ என்று ஊரார் வசைச் சொல் உரைப்பர் என்பதால், நள்ளிரவே நீராடச் செல்வதைப் போல, நீங்களும் பொழுது விடியும் முன்னே வந்துவிட்டீர்கள்.’

‘மான் போன்ற அழகிய கண்களை உடையவளே, நீ மட்டும் தனியாகக் கிருஷ்ணானுபவம் பெற வேண்டி, அதானால் நாங்கள் எழுப்பியும் எழுந்து வராமல் படுத்துக் கிடக்கிறாயா? இந்தக் கள்ளத்தனத்தை விடுத்து எழுந்து வா’

இராமாயண நிகழ்வும், கிருஷ்ணாவதார நிகழ்வும் முதலிரண்டு வரிகளில் வந்துவிடுவது இப்பாசுரத்தின் சிறப்பு.

இப்படி ஆண்டாளின் அழகு தமிழ்ச் சொற்களையும், இதிகாச நிகழ்வுகளையும் கற்பனையை விரித்துச் சொல்லப்படும் வைஷ்ணவ காலட்சேபங்களினால் 1200 ஆண்டுகளாக ஆண்டாளின் திருப்பாவை மக்களின் வாழ்வோடு இணைந்த பெருங் கவிதையாகத் திகழ்ந்து வருகிறது என்பதில் சந்தேகமென்ன?

 

 

Tags: , ,

கனைத்திளங் கற்றெருமை

‘கனைத்திளங் கற்றெருமை’ பாசுரம் #திருப்பாவையின் திராட்சைப் பழம் கலந்த அக்கார அடிசில் போன்றது. அவ்வளவு சுவைகள்.

தனது கன்றை நினைத்தவுடன் எருமை மாட்டிற்குப் பால் தானாகச் சுரந்து வழிந்து, வீடு முழுவதும் பரவி, அதனால் சேறு நிறைந்த வீடாகக் காட்சியளிக்கிறதாம். ‘அத்தகைய செல்வம் பொருந்தியவனின் (நற் செல்வன்) தங்கையே’ என்று நோன்பிருக்கும் பெண்ணை விளிக்கிறாள் ஆண்டாள்.

அந்த நற்செல்வன் யார் என்று ஆராய்வதில் ஒரு சுவை உண்டு.

திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு ‘நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ண வேண்டும்’ என்று ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்.

‘நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்..’

ஆனால், அவளது பூவுலக வாழ்நாளில் அவளது விருப்பம் நிறைவேறவில்லை.

ஆண்டாளுக்குப் பின்னர் பிறந்த ஶ்ரீமத் இராமானுசர் அவளது உள்ளக்கிடக்கையை அறிந்து அவ்வாறு நூறு தடா கண்டருளப்பண்ணுகிறார். பின்னர் ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் இராமானுசரை ‘எம் அண்ணரே’ என்று ஆண்டாள் அழைக்கிறாள். 200 ஆண்டுகள் பிற்பட்ட இராமானுசரை ஆண்டாள் ‘அண்ணா’ என்று அழைத்ததால் அவள் உடையவருக்குத் தங்கையாகிறாள். ஆக, இவ்விடத்தில் ‘நற்செல்வன்’ என்று ஆண்டாள் குறிப்பிடுவது பின்னர் தோன்றப்போகும் உடையவரையே என்கிற நோக்கில் பார்த்தால் இப்பாசுரம் அக்கார அடிசில் என்பதில் சந்தேகம் என்ன?

சுவை அவ்வளவு தானா? மேலும் பாருங்கள்.

இராமபிரானைச் ‘சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்’ என்கிறாள் ஆண்டாள். ‘சினம்’, ‘தோற்கடித்தவன்/ வென்றவன்’ என்கிற சற்று கடுமையான அடைமொழிகளால் சொல்கிறாள் அவள். அப்படிச் சொன்னபின் மனம் கேட்காமல் ‘மனத்துக் கினியான்’ என்று சொல்லி ஒருவாறு சமன் செய்கிறாள்.

இலங்கை வேந்தனைக் கொன்றான் என்பது சரி. ஆனால், மனத்துக்கினியான் ?

இராவணனைக் கொன்றது உண்மை என்றாலும், அதற்கு முன் மனம் இறங்கி, அவன் உயிர் பிழைக்க வாய்ப்பளித்தான் அல்லவா ?

ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு

 நாளை வா என நல்கினன் நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்

என்று கம்பன் சொல்வது இதைத்தானே? போர் செய்வதாக இருந்தால் நாளை வா, இல்லையேல் இன்றே சரண் புகு, உனக்கு மோட்சம் அளிக்கிறேன் (மாம் ஏகம் சரணம் வ்ரஜ) என்றல்லவா சொல்கிறான் இராமன்?

ஆக மனத்துக்கினியான் என்பது சரிதானே.

அக்கார அடிசிலில் திராட்சைப் பழம் என்பது இது தான்.

 

Tags: , ,

கற்றுக் கறவை

‘கற்றுக் கறவைக் கணங்கள்’ என்னும் பாசுரத்தில் ‘புற்று அரவு அல் குல் புனமயிலே’ என்னும் பிரயோகமும், ‘முகில் வண்ணன்’ என்னும் சொல்லும் உற்று நோக்கத்தக்கன.

பாவை நோன்பை மேற்கொள்ளும் பெண்ணை மயிலுடன் ஒப்பிடுகிறாள் ஆண்டாள். அரவம் ( பாம்பு ), மயில் என எதிரிகள் இரண்டையும் ஒன்றாக, ஒரே பெண்ணிடம் கூறியிருப்பது ஒரு சுவை.

மயிலுடன் ஒப்பிட்டதுடன் நிற்கவில்லை. மயிலுக்குப் பிடித்த மழை மேகங்களின் நிறத்தில் உள்ளவன் கண்ணன் என்பதை உணர்த்தும் பொருட்டு, ‘முகில் வண்ணன்’ என்கிறாள் ஆண்டாள்.

கருமுகிலைக் கண்டதும் மயில் மகிழ்ச்சியுடன் எழுந்து ஆட வேண்டியதாகையால், மயிலைப் போன்ற அப்பெண் முகில் வண்ணக் கண்ணனின் அனுபவம் பெற உடனே உறக்கம் நீங்கி எழுந்திருக்க வேண்டும் என்பது சொல்லாமல் உணர்த்தப்படுகிறது .

#ஆண்டாள் #திருப்பாவை

 

Tags: , ,

நோற்றுச் சுவர்க்கம்

‘நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்’ #பாசுரத்தில் கர்ம வினை பேசப்படுகிறது. முற்பிறவியில் செய்த நற்செயல்களினால் இப்போது நல்வாழ்வு வாழ்கிறாய் என்கிறாள் ஆண்டாள்.  தமிழ்த்தேசத்தவரின் பண்டைய நம்பிக்கையான ஊழ்வினை கோடிகாட்டப்படுகிறது. திருவள்ளுவரும் ஊழ்வினையை ஆதரித்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

‘நோன்பு நோற்றதால் கிட்டும் நற்பதவி, சுகம்’ என்றும் பொருள் கூறுவதுண்டு.

இராமாயண நிகழ்வான கும்பகருணன் வதை ‘பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?’ என்பதன் மூலம் சுட்டப்படுகிறது.

‘தோற்றும் உனக்கே’ என்னும் பிரயோகத்தில் ‘உம்’ விகுதி உற்று நோக்கத்தக்கது. போரில் தோற்றபின்னும், இறந்துபட்ட போதும் தனது உறக்கத்தைத் தானமாகக் கொடுத்தான் என்பதால் கும்பகருணனின் வள்ளற்றன்மை உணர்த்தப்படுகிறது என்று பார்ப்பது ஒரு சுவை.

இரு சிற்பிகளுக்கிடையே நடைபெறும் சிற்பக்கலைப்போட்டியில் தோற்கும் சிற்பி ‘இனி சிற்பம் செதுக்க மாட்டேன். வெற்றி பெற்றவனுக்கே என் திறமையைக் காணிக்கை ஆக்குகிறேன்’ என்று சொல்வது போல், உறங்குதல் போட்டியில் கும்பகர்ணன் பாவை நோன்பிருக்கும் அப்பெண்ணிடம் தோற்றதால் அவன் தனது உறக்கத்தை அவளிடம் தந்து சென்றான் என்று சொல்வது #திருப்பாவைக் காலட்சேபங்களில் வரும் சுவையான இன்னொரு பார்வை.

#திருப்பாவை #ஆண்டாள்

 

Tags: , ,

தூமணி

‘தூமணி மாடத்து’ எனத் துவங்கும் #திருப்பாவைப் பாசுரத்தில் புதிய கோணத்தில் ஒரு பொருள் காண்போம்.

”ஊமையோ, அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ” என்கிற பிரயோகம் கவனிக்கத்தக்கது.

‘மாமியே, உனது மகள், வாய் பேச முடியாதவளோ, அல்லது காது கேளாதவளோ அல்லது மந்திரத்தால் கட்டுப்பட்டதால் உடல் இயக்கம் இல்லாதிருக்கும் / சோம்பல் உடைய பெண்ணோ? மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று அடியார்கள் பாடியவாறும் , சங்கங்கள் முழங்கியவாறும் இருந்தும் எழுந்து வராதிருக்கிறாளே’ என்று கேட்பதாக அமைந்துள்ளது.

கோணத்தை மாற்றிப் பார்ப்போம்.

‘மாயனை’ பாசுரத்தில் வரும் ‘தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனத்தினால் சிந்திக்க’ என்ற வரியையும், இன்றைய ‘தூமணி’ பாசுரத்தின் ‘ஊமையோ, அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ’ என்ற வரியையும் ஒப்பு நோக்கினால் வருவது தனிச்சுவை.

தூமலர் தூவித் தொழுது = Inverse ( ஏமப்பெருந்துயில் மந்திரப் பட்டாளோ)
நாவினால் பாடி = Inverse (ஊமையோ)
மனத்தினால் சிந்திக்க = Inverse ( அனந்தலோ = சோம்பல் உடையவளோ )

L.H.S.ல் உள்ளவற்றைச் செய்திருக்க வேண்டும். செய்யாததால் R.H.S. ஆனாள்.

நாக்கு, செவி, அறிவு, உடல் இவற்றின் பயன்கள் முறையே (மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று) கண்ணனின் நாமங்களைப் பாடுவது, பாடுவதைக் கேட்பது, அவன் நாமங்களை மனத்தினால் சிந்திப்பது, உடலால் தூமலர் தூவித் தொழுது விழுந்து சேவிப்பது என்பனவாகும்.

அப்படிச்செய்யாத நாக்கு, செவி, உடல் , பயனற்ற நா, செவி மற்றும் சோம்பல் உடைய, மந்திரத்தால் தன்னிலை மறந்த உடல்களாகும். மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் பலன்கள்.

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே

என்னும் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

#ஆண்டாள் #திருப்பாவை

 

Tags: , ,

கண்டனங்கள்

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஸ்ரீமத் இராமானுஜர், ஆதிசங்கர பகவத்பாதர், பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் படங்களைச் சேதப்படுத்திய பெரியாரிய, நாஸிச முழு மூடர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 
சமூக நீதி என்று பெரியாரிஸ்ட்டுகள் முழங்குவதற்கு 1000 ஆண்டுகட்கு முன்னரே அதைச் செயல் படுத்தியவர் ஸ்ரீமத் இராமானுஜர்.
 
செக்யுலர் காஞ்சி ரயில் நிலையத்தில் அவ்வூர் தொடர்புள்ள சனாதன தர்மப் பெரியவர்களின் படங்கள் இருக்க கூடாது என்றால், வேளாங்கண்ணி ரயில் நிலையம் தேவாலயம் போன்ற அமைப்பில் உள்ளது செக்யுலரிஸத்தில் எந்த அதிகாரத்தில் உள்ளது?
 
தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள பெரிய கோவில் ஓவியங்களை என்ன செய்வது? நமது வரலாற்றை விட்டுக்கொடுத்து, ஆண்மை நீங்கிய செக்யூலரிஸப் போர்வையால் நாம் இழக்கப்போவது இன்னும் எத்தனை?
 
சரி. செக்யுலர் ரயில் நிலையத்தில் ஹிந்து தர்மம் வேண்டாம். ஆனால், ஹிந்து தர்மக் கோவில்களில் செக்யுலர் அரசுக்கு என்ன வேலை? இதில் எங்குள்ளது பகுத்தறிவு ?
 
போகட்டும். பூலோக வைகுண்டமான திருவரங்கக் கோவில் முன் ஈ.வெ.ரா. சிலை இருப்பது என்ன ‘இஸம்’? நாஸிசம் தவிர வேறென்ன?
 
தார் பூசும் கலாச்சாரத்தைத் துவங்கியது தி.க. மற்றும் தி,மு.க. ஹிந்தி எழுத்துக்களின் மீது தார் பூசினார்கள், ஹிந்தி வளர்ந்தது. தற்போது சனாதனப் பெரியோர்களின் படங்களின் மீது தார் பூசியுள்ளார்கள். சனாதன தர்மம் தழைக்கும்.
 
நமது நாட்டில் மிச்சமிருப்பது நமது கலாச்சாரமும் வரலாறுமே. வேளாங்கண்ணி மாதாவை நினைவுபடுத்த அவ்வூர் ரயில் நிலையம் தேவாலய வடிவில் இருப்பது சரியே. அது போல் ஒவ்வொரு ஊரின் வரலாற்றையும் நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.
 
இன்னும் ஒருபடி மேலே போய், ஒவ்வொரு ஆழ்வாரின் / நாயன்மாரின் பிறந்த ஊரிலும் அவர்களது உருவத்துடன் கூடிய பெயர்ப்பலகை வைக்க ரயில்வே அமைச்சு முன் வர வேண்டும். இவர்கள் இல்லாவிட்டால் இன்று நாம் எழுதும் தமிழ் இல்லை.
 
பல இன, மொழி, மத மக்கள் வாழும் பரந்த நமது பாரத தேசத்தில், இம்மாதிரியாகச் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நிகழ்வுகளை மாநில / மத்திய அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
 
நல்லது நடக்கும் என்று நம்புவோம். 
 
 

Tags:

போவான் போகின்றாரை?

‘கீழ்வானம் வெள்ளென்று’ என்னும் #திருப்பாவைப் பாசுரத்தில் பொழுது விடிந்ததற்கான மேலும் சில அடையாளங்களைச் சொல்கிறாள் #ஆண்டாள்.

‘கீழ் வானம் வெளுத்துவிட்டது’ என்றும், ‘எருமைகள் பனிப்புல் மேயக் கிளம்பியுள்ளன’ என்றும் சொல்கிறாள். எருமைகள் பனிப்புல் மேய்ந்தால் பால் கறக்க உதவும் என்பதை ஆயர்கள் உணர்ந்திருந்தார்கள்.

‘போவான் போகின்றாரை’ என்னும் பிரயோகம் உற்று நோக்கத்தக்கது.

‘திருப்பதிக்குப் போகின்றாரை’, ‘ கண்ணனைச் சேவிக்கப் போகின்றாரை’ என்றால் பொருள் புரிகிறது. ஒரு ஊருக்கோ, ஒரு செயலைச் செய்யவோ போகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால் ‘போவான் போகின்றாரை’ என்பது எந்த இலக்கையும் குறிக்கவில்லை. ‘போவதற்காகவே போகிறார்கள்’ என்னும் பொருளில், எந்தப் பலனையும் எதிர்பாராமல் ‘போக வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்’ என்று புரிந்துகொள்ள முடிகிறது.

கண்ணனைச் சேவிக்க வேண்டும் என்பதல்ல, கண்ணனைச் சேவிக்கப் போதலே ( பயணப்படுதலே ) இங்கு ஒரு போக்கியமாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் உரையாசிரியர்கள். பலன் எதிர்பாராமல் கடமை ஆற்றுவது என்பதும் இத்துடன் ஒட்டி வருவது போல் தோன்றுகிறது அல்லவா? (Means has become the end)

மேலும் பாசுரத்தில் ‘தேவாதி தேவன்’ எனும் பிரயோகத்தால், எங்கள் ஊர் ஆமருவியப்பன் (எ) தேவாதிராஜன் உணர்த்தப்படுகிறார் என்று நாங்கள் சொல்லிக்கொள்வதுண்டு. ( காஞ்சிபுரம், திருவஹீந்திரபுரம் அன்பர்கள் சண்டைக்கு வரவேண்டாம். தேவப்பெருமாளும் , தேவநாதனும் இவருக்கு அண்ணன் தம்பி முறை என்று சொல்வதும் உண்டு)

‘கோதுகலம்’ என்னும் சொல் ‘கௌதூஹலம்’ என்னும் வடமொழிச்சொல்லின் திரிபு என்பது இன்னொரு சுவை. இதனால் தமிழின் சுவை கூடியுள்ளதே தவிர கெடவில்லை. தனித்தமிழ்ப் ‘போராளிகள்’ வேறு கடைக்குச் செல்லவும்.

 

Tags: , ,

 
%d bloggers like this: