RSS

சிற்றஞ் சிறு காலே

13 Jan

‘சிற்றஞ் சிறு காலே’ பாசுரத்தில் திடீர்த் திருப்பம் ஒன்று நிகழ்கிறது.

28 பாடல்களில் ‘பறை வேண்டும்’ என்று கேட்ட ஆய்ச்சியர் இப்போது ‘பறை வேண்டும் என்பதற்காகவா வந்தோம்? இல்லையில்லை. உன் சேவடிக்குச் சேவை செய்யவே வந்தோம்’ என்று பேசும் இடம் இது.

முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று ‘ஏ’காரம் போட்டு மோக்ஷம் தரப்போவது யார் என்பதை உறுதி செய்த ஆண்டாள், இப்போது ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்கிறாள். இங்கும் ‘ஏ’காரம் இருக்கிறது. ‘உன்னைத்தவிர யாரிடமும் கையேந்த மாட்டோம்’ என்பதாக, பூரண சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது. ‘மறந்தும் புறந்தொழா மாந்தர்’ –

‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம்’ என்னுமிடத்தில் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். ‘எற்றைக்கும்’ என்பது வைகுண்டத்தை, பரமபதத்தைக் குறிக்கிறது. ‘ஏழேழ் பிறவி’ என்பது 49 பிறவிகளைக் குறிக்கிறது. ‘ஒருவேளை நீ எங்களுக்கு மோக்ஷம் அளித்தால் (‘பறை தருதியாகில்’) எற்றைக்கும் பரமபதத்தில் உனக்குக் கைங்கர்யம் செய்து வருவோம். ஒருவேளை நீ அங்கிருந்து கிளம்பி வேறு அவதாரங்கள் எடுத்தால், 49 பிறவிகளிலும் எங்களையும் கூட அழைத்து வா’ என்கிறார்கள். ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்னும் நம்மாழ்வார்ப் பாசுரம் நினைவிற்கு வரலாம். தற்போது 10 அவதாரங்கள் முடிந்துள்ளன. இன்னும் 39 இருக்கிறதோ என்கிற தோற்ற மயக்கத்தை இப்பாசுரம் அளித்தால் அதுவும் ஒரு சுவையே.

‘ஏழு பிறவிகள்’ என்பது தமிழர்களின் நினைவடுக்குகளில் ஆழப்பதிந்த ஒன்று. ‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ என்னும் வள்ளுவரின் வரிகளையும் நினைவில் கொள்வோம்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் உயர்வானவை. இப்பாசுரத்தில் பகவத் கைங்கர்யம் பேசப்படுகிறது. ‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் ‘வயிற்காப்போன்’, ‘ கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போன்’ என்று இரு பாகவதர்கள் ( ஆச்சார்யர்கள்) போற்றப்படுகிறார்கள். எனவே அப்பாசுரம் பாகவத கைங்கர்ய விசேஷத்தை உணர்த்துவதாய் அமைந்துள்ளது ஒரு சுவை.

‘சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து’ என்னுமிடத்தில், ‘பொழுது விடிவதற்குள் வந்து உன்னைத் தொழுதோம்’ என்னும் பொருள் தெரிகிறது. ஆனால் இதுவரை, ‘பொழுது புலர்ந்துவிட்டது, பறவைகள் கத்துகின்றன, ஆனைச்சாத்தன் கூவுகிறான்’ என்று சொன்னதெல்லாம் பொய்யுரையோ?’ என்னும் எண்ண மயக்கம் ஏற்படலாம். கண்ணனைச் சேர்ந்து, அவனது திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற அவாவினால் பொழுது புலர்வதற்கு முன்னரே நடுநிசியிலேயே ஆய்ச்சியர் எழுந்து வந்துவிட்டனர் என்பதாகப் பொருள் கொள்ளவும் இடமளிக்கும் பாசுரம் இது.

வைணவ மரபில், பெருமாளுக்கு அனைத்து வழிபாடுகளும் முடிந்தபின், அவனது மனதிற்கு இதமளிகும் வகையில் ‘சாற்றுமுறை’ என்று தமிழ்ப்பாசுரங்களைச் சேவிப்பார்கள். அவ்வழக்கின்படி  ‘சிற்றஞ்சிறு காலே’, ‘வங்கக்கடல் கடைந்த’ – இந்த இரு பாசுரங்களையும் சொல்வது இன்றும் நடைபெறும் வழக்கம்.

 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: