அன்றிவ்வுலகம்

‘அன்றிவ்வுலகம் அளந்தாய்’ #பாசுரம், துயில் எழுந்த கண்ணனைத் துதிப்பதாய் அமைந்துள்ளது. துதியுடன் பெருமாளின் அவதாரங்கள் குறிப்பிடப்படுகின்றன.

‘உலகம் அளந்தாய் என்பதால்’ திரிவிக்கிரம அவதாரமும், ‘தென் இலங்கைச் செற்றாய்’ என்பதால் இராமாவதாரமும், ‘குன்று குணிலா வெறிந்தாய்’, ‘கன்று குடையாவெடுத்தாய்’ என்பதால் கிருஷ்ணாவதாரமும் குறிக்கப்படுகின்றன. ‘மாரி மலை’ பாசுரத்தில் நரசிம்மாவதாரம் குறிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இப்பாசுரத்தின் மூலம் உணர்த்தப்படுவன:

 1. திருவடியின் சிறப்பு-  உலகம் அளந்தது
 2. இறைவனின் திறன் – இராவணன் அழிப்பு
 3. பெருமாள் புகழ் – சகடம் உதைத்தது
 4. கண்ணனின் ஆற்றல் – கன்றினை விளவின் மீது எறிந்தது
 5. கண்ணனின் குணம் – குன்றைக் குடையாய் எடுத்து ஆநிரைகளைக் காத்தது

முதலில் திருவடியின் பெருமை, பின்னர் திருக்கைகளின் பெருமை என்பதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

‘பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்னுமிடத்தில் திடீரென்று வேல் எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழலாம். முதல் பாசுரத்தில் ‘கூர் வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்’ என்று வேல் உடைய நந்தகோபனின் மகன் என்று கண்ணனைக் குறிக்கிறாள். எனவே கண்ணனிடத்தில் வேல் இருந்தது நியாயமே.

திரிவிக்கிரமாவதாரம் பேசப்படும் இப்பாசுரம் போலவே ‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்திலும், ‘அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த’ என்று இன்னொரு பாசுரத்திலும் அதே அவதாரம் பேசப்படுவது ஒரு சுவை. தனது அனைத்துப் பாசுரங்களின் வழியாகவும் பெருமாளின் பல அவதாரங்களைப் பேசுகிறாள் ஆண்டாள்.

ஒவ்வொருவராக எழுப்பி, திருமகளையும் எழுப்பி, அவளை முன்னிட்டு எம்பெருமானை அடைந்து, அவனையும் எழுப்பி ( நரசிம்ம அவதாரத்தின் மூலமாக), அவன் எழுந்தவுடன் பறை வேண்டி, அவனைத் துதிக்கத் துவங்குகிறார்கள். இது சரணாகதிக்குப் பின் நாம் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை உணர்த்துவதாக உள்ளது.

‘என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் வந்தோம்’ என்பதால், ‘வேறு ஒன்றும் தேவை இல்லை, உன் கைங்கர்யமே பிரதானம்’ என்பது உணர்த்தப்படுகிறது.

மாரி மலை முழைஞ்சில்

ஶ்ரீவைஷ்ணவ சரணாகதித் தத்துவத்தின் குறியீடு இப்பாசுரம்.

‘மாரி மலை முழைஞ்சில்’ பாசுரத்தில் பெருமாள் எழுப்பப்பட்டுக் கண்விழிக்கிறார் என்பது பொதுப்பொருள். எவ்வாறு எழுந்து வருகிறார், அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஆய்ச்சியர் விரும்புகிறார்கள் என்பது இப்பாசுரத்தில் தெளிகிறது.

விடாது பெய்யும் மழையின் காரணகாகக் குகைக்குள் கிடந்து உறங்கும் ஆண் சிங்கம், மழை நின்றவுடன், சோம்பல் முறித்து, பிடரி மயிர் சிலிர்க்க, கண்களில் தீப்பொறி பறக்க எழுந்து வருவதைப்போல் கண்ணனே நீ எழுந்து வருக. அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரணத்தை ஆராய்ந்து அதற்கேற்றவாறு அருள்வாயாக என்று ஆய்ச்சியர் வேண்டுவதாய் அமைந்துள்ள இப்பாசுரத்தில் திருமாலின் முக்கிய அவதாரமான நரசிம்மாவதாரம் சுட்டப்படுவது ஒரு சுவை.

கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் குழந்தையாய் வளர்ந்து, விளையாடி, வாலிபம் எய்தி, பின்னர் பாரதப் போரில் பெரும் பங்காற்றி நீதியை நிலைநாட்டுகிறான்.  இராமாவதாரமும் அப்படியே. ஆனால், நரசிம்மாவதாரத்தில் பெருமாள் தோன்றி, உடனே பேருருக்கொண்டு, இரணியனை அழித்து, பிரகலாதனுக்கு அருள் புரிந்து சென்றான். தோற்றத்தின் காரணம் மிகச்சிறிய காலத்திலேயே நிறைவடைகிறது. அதுபோல், நீ இராமனாகவோ, கண்ணனாகவோ எழுந்து வராமல், நரசிம்மனாய் வந்து, உடனே சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்று. கால தாமதம் வேண்டாம் என்று ஆய்ச்சியர் வேண்டுவது போல் அமைந்துள்ளது பாசுரம்.

இன்னொரு சுவை, கொடிய சீற்றத்துடன் துலங்கும் சிங்கம், தனது குட்டிகளிடம் அன்புடனே இருக்கும். அதுபோல், கொடிய இரணியனை வதம் செய்யும்போது கடுஞ்சினத்துடன் இருந்த நரசிங்கம், பிரகலாதனைப் பார்த்தவுடன் மனம் கனிந்துருகி அவனுக்கு அருள் மாரி பொழிந்து நின்றது. அதுபோல் நீயும் எங்களுக்கு அருள் புரிவாய் என்று ஆய்ச்சியர் வேண்டுகிறார்கள்.

ஆண்டாள் கண்ணனை நரசிம்மமாகவே பார்க்கிறாள் என்பது திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே தெரிகிறது. ‘ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனை அழைக்கிறாள்.

‘மாரி மலை’ பாசுரத்தில் ‘மன்னிக் கிடந்து உறங்கும்’ என்னுமிடத்தில் ‘மன்னி’ ( பொருந்தி இருந்து ) என்னும் பயன்பாடு உற்று நோக்கத்தக்கது. பல ஆழ்வார்களுக்கு இந்த ‘மன்னி’யின் பால் ஒரு ஈர்ப்பு உள்ளது.

தேரழுந்தூர்ப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் ‘அடியார்க்கு ஆ ஆ என்றிரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவன்’ என்றும், நம்மாழ்வார் ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்றும் பாடுகிறார்கள்.

எழுந்து வந்த சிங்கம் நீதி பரிபாலனம் செய்வது போல் அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து என்ன செய்ய வேண்டும்? ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ’ என்று ‘எமது சரணாகதி விஷயமான விண்ணப்பத்தைச் சற்று ஆராய்ந்து முடிவெடுப்பீர். பிரகலாதனின் பக்திக்கு இரங்கி அவனுக்கு அருள் புரிந்தது போல், எமக்கும் அருள்வீர்’ என்று ஆய்ச்சியர் வேண்டுகின்றனர்.

என்னதான் ஆசார்யர்கள், திருமகள் என்று இவர்களை முன்னிட்டு சரணாகதி செய்துகொண்டாலும், பெருமாள் தானும் ஆராய்ந்தே முடிவெடுக்கிறான் என்பது போல் அமைந்துள்ள இப்பாசுரம் ஶ்ரீவைஷ்ணவ சரணாகதி தத்துவத்தின் குறியீடு.

அங்கண் மாஞாலத்து அரசர்

‘அங்கண் மாஞாலத்து அரசர்’ பாசுரத்தில் நோன்பு நோற்பவர்கள் கண்ணனைச் சென்று சேர்ந்து, ‘எங்களைக் கடாக்ஷித்தருள வேணும்’ என்று வேண்டுகிறார்கள் என்பது பொதுப்பொருள். சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது என்பது வெளிப்படை.

இப்பாசுரத்தில் உள்ள சில சொற்கள் ஆழ்ந்த பொருளுடையவை. சிலவற்றைப் பார்ப்போம்.

‘அங்கண்’ என்னும் சொல்லை இருமுறை பயன்படுத்துகிறாள் ஆண்டாள். பெரிய இடத்தை உடைய உலகம் என்னும் பொருளிலும், அழகிய கண்கள் என்னும் பொருளிலும் வந்து ‘அங்கண்’ அழகு சேர்க்கிறது.

‘உலகின் பல இடங்களிலும் அரசாட்சி செய்யும் அரசர்கள் தங்கள் கர்வத்தை விட்டொழித்து உன் வாசலில் வந்து நிற்பது போல் நாங்கள் வந்து நிற்கிறோம்’ என்பது ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் அடி நாதத்தைத் தொடுகிறது. பெருக்காரணை ஸ்வாமி என்னும் வைணவ அடியாரின் திருப்பாவை காலட்சேபத்தில் எட்டு வகையான கர்வங்களை / குற்றங்களைச் சொல்கிறார். ‘இவை அனைத்தையும் விட்டு உன்னிடம் நாங்கள் வந்து சரணாகதி செய்துகொண்டுள்ளோம்’  என்று ஆய்ச்சியர் வடிவிலான அடியார்கள் தெரிவிக்கிறார்கள் என்கிறார்.

எட்டு வகையான குற்றங்கள்:

 1. உடலும் ஆத்மாவும் ஒன்றே என்ற எண்ணம்
 2. ஜீவாத்மாக்கள் சுதந்திரமானவர்கள் என்கிற எண்ணம்
 3. திருமால் தவிர ஏனைய தெய்வங்களால் / தேவதைகளால் மோக்ஷம் அளிக்க முடியும் என்கிற எண்ணம்
 4. திருமாலைத் தவிர இன்னொருவரிடம் நாம் அடிமைகளாய் இருக்கலாம் என்னும் எண்ணம்
 5. சரணாகதி தவிர மற்றைய வழிகளிலும் மோக்ஷம் பெறலாம் என்பது
 6. சிற்றின்பத்தில் ஈடுபாடு
 7. நமது சுய சக்தியாலேயே நாம் செயல்படுகிறோம் என்கிற எண்ணம்
 8. திருமால் அடியாருக்கு உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்துவது

‘நாங்கள் அகந்தை அழிந்து, தூயோமாய், தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனத்தினால் சிந்தித்தபடியே உன் வாசல் வந்து விட்டோம். எனவே அழகிய, சிவந்த உன் கண்களை மெல்லத் திறந்து எங்களைக் காண்பாய் ( ‘செங்கண் சிறுச்சிறுதே எங்கள் மேல் விழியாவோ’)’ என்கின்றனர் ஆய்ச்சியர். பெருமாளின் கண்ணொளி பூரணமாய்த் தங்கள் மேல் பட்டால் அதன் அருள் வெள்ளத்தைத் தாங்க முடியாது என்பதால் சிறிது சிறிதாக எங்களைக் கடா‌க்ஷித்து அருள வேணும்’ என்று ஆய்ச்சியர் கூறுகிறார்கள் என்பர் உரையாசிரியர்.

பாசுரத்தில் இன்னும் சில சுவைகள் உள்ளன.

‘திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்’ என்னுமிடத்தில், சூரியனும் சந்திரனும் போன்ற உன் இரு கண்களாலும் எங்களை நோக்குக என்று வேண்டுகிறார்கள் என்று கொள்வது ஒரு சுவை. ‘கதிர் மதியம்’ என்று அவனது முகத்தை இன்னொரு பசுரத்தில் சொல்கிறாள் ஆண்டாள்.

‘ஒரே நேரத்தில் சூரியனும், சந்திரனும் எழுந்தால் சிவந்த தாமரை மலர் தனது இதழ்களை முழுவதும் திறவாமலும் அதே நேரம் முழுவதும் மூடாமலும், பாதி திறந்து பாதி மூடிய வகையில் இருக்கும். அதைப் போல்,உன்னுடைய  கரியவாகிப் புடை பறந்து மிளிர்ந்து செவ்வரியோடிய நீண்ட அப்பெரியவாய கண்கள் (அமலனாதிபிரான்) பாதி திறந்த நிலையிலும் பாதி மூடிய நிலையிலும் இருக்கும் வகையில் எங்களைக் கண்டு அருள் புரிவாய். ஏனெனில் உன் முழுப் பார்வையையும் நாங்கள் தாங்க மாட்டோம்’ என்பதாகக் கொள்வது இன்னொரு சுவை.

பெரியாழ்வாரும் கண்ணன் தனது மகளைத் (ஆண்டாள்) திருமணம் செய்துகொண்டதைக் குறிக்கும் வகையில் இவ்வாறு ‘செங்கண் மால் கொண்டு போனான்’ என்கிறார்:

‘ஒரு மகள் தன்னை உடையேன்  உலகம் நிறைந்த புகழால் 
திருமகள் போல வளர்த்தேன்  செங்கண் மால் தான் கொண்டு போனான்’

கண்ணனின் பாதி மூடிய கண்கள் அடியார்களின் குற்றங்களைக் காணாத நிலையையும், பாதித் திறந்த கண்கள் அடியாரின் பக்தி / சரணாகதி இவற்றை மட்டும் கண்ணுறும் நிலையிலும் இருக்கின்றன என்று கொள்வது இன்னொரு சுவை. ‘குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’ என்னும் வள்ளுவர் பார்வையும் ஈண்டு நோக்கத்தக்கது.

கண்ணன் அடியாரை ஏன் நோக்க வேண்டும்? சென்ற பாடலில் திருமகள் வழியாகக் கண்ணனை அடைந்தாகிவிட்டது. மீதம் இருப்பது கண்ணனின் அருள் பெறுதல் மட்டுமே. சரணாகதிக்கான அத்தனை கிரியைகளையும் செய்தாகிவிட்டது. ஆச்சார்யர்கள எழுப்பி. திருமகளையும் வேண்டி இவர்களை முன்னிட்டு ‘பறை’ கேட்டாகிவிட்டது. இனி கண்ணன் அருள் / மோக்ஷம் மட்டுமே கிட்ட வேண்டும். அதற்குக் கண்ணன் துயில் எழ வேண்டும். துயில் எழுவதற்கு அடையாளமாக அவன் கண்களைத் திறக்க வேண்டும். அதே நேரம் கண்களை முழுதுமாகத் திறந்துவிடவும் கூடாது. ‘செங்கண் சிறுச் சிறுதே எம்மேல் விழியாவோ’ என்று சிறிது சிறிதாகத் திறக்க வேண்டும். அதற்கான பாசுரம் இது.

‘பள்ளி’ என்னும் சொல்லும் கவனிக்கத்தக்கது. ஜைனத் துறவியர் உண்டு, உறங்கிக் கல்வி போதித்த இடங்கள் பள்ளி என்று அறியப்பட்டன. உறங்குதல் என்னும் பொருளில் ‘பள்ளிக் கட்டின் கீழே’ என்று ஆண்டாளும் பாடுகிறாள். ( நமது பள்ளிகளில் நாம் உறங்குவதும் இதனால் தானோ?)

பி.கு.: எங்கும் உள்ள கடவுளைக் காணக் கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? விஸ்வரூப தரிசனம் எதற்கு என்று கேட்பவர்களுக்கு இப்பாடலைக் காட்டலாம். கோவிலுக்குப் போவது நாம் பெருமாளைப் பார்க்க அல்ல, அவன் நம்மைப் பார்க்க. ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்குப் ‘பகுத்தறிவு’ தடுக்கிறது. ஹூம்.

ஏற்ற கலங்கள்

பாசுரத்தில் ஆய்ப்பாடியின் பால் வளம் தெரிகிறது என்கிற பொதுப்பொருளை விட, என்பதை விட ‘மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்னும் தொடர் வேறுபாடில்லாமல் அனைவர்க்கும் அருள் சுரக்கும் கண்ணனின் பெருங்கருணையை உணர்த்துகிறது.

‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்தில் முதல் முறையாகப் பெருமாளைத் துயில் எழுப்புவதாய் அமைந்துள்ளது என்பது பொதுப்பொருள்.

பாசுரத்தில் ஆய்ப்பாடியின் பால் வளம் தெரிகிறது என்கிற பொதுப்பொருளை விட, என்பதை விட ‘மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்னும் தொடர் வேறுபாடில்லாமல் அனைவர்க்கும் அருள் சுரக்கும் கண்ணனின் பெருங்கருணையை உணர்த்துகிறது.

ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து’, ‘கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று’ என்று பெரியாழ்வார் சொல்வது போல், முன்னர் எக்குலமாயிருந்தாலும், சங்கு சக்கரப் பொறி பெற்று அடியார் குழாத்தில் ‘இராமானுஜ தாசர்’களாய் ஆனபின், கண்ணனின் பார்வையில் அனைவரும் ஒருவரே என்கிற சமன்வயப் பார்வை இவ்விடத்தில் பேசப்படுகிறது. பெரிய, சிறிய கலன்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லாக் கலன்களுக்கும் ஒரே பாவனையில் பால் சொரியும் பசுக்கள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமே.

‘ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்’ என்னுமிடத்தில் நந்தகோபனின் மகனே என்று கண்ணனை விளிக்க என்ன காரணம் ? கண்ணனுக்கு நினைவு படுத்துகிறார்களாம். ‘நீ தோற்றமாய் நின்ற சுடர் தான். தனி முதல்வன் தான். ஆனாலும் இம்முறை நந்தகோபனின் மகனாய் இன்று பூவுலகில் அவதரித்துள்ளாய். எனவே வந்த வேலையைச் செய், எங்களுக்குப் பறை வழங்கு’ என்று சூசகமாகச் சொல்கிறார்களாம் ஆய்ச்சியர்.

‘மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் வந்து அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம்’ என்னும் பிரயோகம் சுவையானது. எதிரிகள் உன் முன்னர் வந்து, தங்கள் வலிமை இழந்து உன்னிடம் சரண் அடைவது போல் நாங்கள் அடைக்கலம் தேடி வந்தோம்’, என்னும் பொருள் போல் தெரிந்தாலும் சொல்ல வந்த பொருள் அது இல்லை. ‘எதிரிகள் தங்கள் வலிமை இழந்து நின்று உன்னிடம் அடைக்கலம் புகுந்தது போல் அல்லாமல், நாங்கள் எப்போதுமே உன்னை எம் தலைவனாகக் கொண்டு செயல்படுகிறோம். எனவே எங்களுக்குச் சரணாகதி அளிப்பாய்’ என்று பொருள் சொல்கிறது ஶ்ரீவைஷ்ணவ உரை.

‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்தில் வரும் வள்ளல் பெரும் பசுக்கள் குடத்தை வாங்கி வைப்பதற்குள் பால் சொரிந்து நிரப்பிவிடுகின்றன. பின்னர் எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்தவுடன் மடிகளில் பால் சுரந்து இல்லத்தைச் சேறாக்குகின்றன என்பது ‘கனைத்திளங் கற்றெருமை’ பாசுரம். இன்றைய ‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்தில் கொள்ளும் கலத்தின் அளவுக்கேற்ப இல்லாமல் அனைத்து கலங்களுக்கும் ஒருபோலவே பால் சொரியும் பசுக்களைக் குறிக்கிறது. பால் சொரிதலை அருள் புரிதல் என்ற வகையில் பார்த்தால், கண்ணனின் பெருங்கருணை புலப்படும்.

முன் வந்த பாசுரங்களில் பல ஆச்சார்யர்கள் எழுப்பப்பட்டனர். பின்னர் வந்த சில பாசுரங்களால் திருமகள் எழுப்பப்பட்டாள். தற்போது பெருமாளே எழுப்பப்படுகிறார். பின்வரும் பாடல் நமக்கு நினைவூட்டுவதும் இதையே :

‘என்னுயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கு
யான் அடைவே யவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை யவர்க்கு உரைத்த வுய்யக் கொண்டார்
நாத முனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே

முப்பத்து மூவர்

‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில் மறுபடியும் துயில் எழுப்பும் முயற்சியே தெரிவது பொதுப்பார்வை. இருப்பினும் கண்ணனைத் துயிலெழுப்ப இன்னமும் முயலவில்லை, பிராட்டியையே எழுப்புகிறாள்.

வைஷ்ணவ முறையான ‘இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே’ என்று குருபரம்பரை ஆச்சார்யர்கள், நம்மாழ்வார், திருமகள் என்று இவ்வரிசையில் வேண்டி, இவர்கள் வழியாகப் பெருமாளை அடைவது என்பது காட்டப்படுகிறது.

‘அம்பரமே’ பாசுரத்தில் உள்ள ‘அ’கரம், ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் உள்ள ‘உ’கரம், இன்றைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில் உள்ள ‘ம’ கரம் இவை மூன்றும் ‘அ + உ + ம் = ஓம் ‘ என்று ஓங்காரத்தை உணர்த்திடுவதாகப் பார்த்து மகிழ்வது வைஷ்ணவ காலட்சேப மரபு.

‘உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை’ என்னுமிடத்தில் ‘உன் மணாளனுக்குரிய சேவைகள் செய்து ( விசிறியும், கண்ணாடியும்), அவனது ஸ்வரூப சௌந்தர்யத்தை அவனுக்கு உணர்த்தி, மனங்குளிரச் செய்து, அதனால் எங்களுக்கு மோக்ஷம் தரச் செய்ய வேண்டும் என்று ஆச்சார்ய முகமாக சரணாகதி செய்துகொள்வது என்கிற சித்தாந்தம் பேசப்படுகிறது.

‘இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்’ என்னுமிடத்தில், மோக்ஷம் பின்னர் வேண்டாம், உடனே, இப்போதே வேண்டும். அதற்காகப் பெருமாளிடத்தில் பரிந்துரை செய்க என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘ஸமாச்ரயணம்’, ‘பார-நியாசம்’ முதலியவை உணர்த்தப்படுகின்றன என்பது கற்றறிந்த பெரியோர் பார்வை.

‘முப்பத்து மூவர் அமரர்’ என்று தேவர்கள் உணர்த்தப்படுவது ஏனெனில், அவர்கள் பிறவாப் பேறு பெற்றவர்கள்,
அவர்களுக்கே நீ அருள் மிக செய்தாய். ஆனால் நாங்களோ மானிடர்கள், உன் அடியார்கள். தேவர்கள் போன்ற சக்திகள் இல்லை. உன் சரண் தவிர எங்களுக்குக் கதி இல்லை என்பதாகப் பூரண சரணாகதித் தத்துவம் பேசப்படும் பாடல் இது.

#ஆண்டாள் #திருப்பாவை

குத்து விளக்கெரிய

‘குத்துவிளக்கெரிய’ பாசுரத்தில் பறை வேண்டிப் பாடும் பெண்களிடம் சென்று சேர விடாமல் கண்ணனை இறுகத் தழுவிக்கொண்டிருக்கும் நப்பின்னையிடம் ‘அவனை விட்டுவிடு, எங்களுக்கும் கிருஷ்ணானுபவம் வேண்டும்’ என்று அப்பெண்கள் கெஞ்சுகிறார்கள் என்பது பொதுப்பார்வை.

ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெருமாள் காட்சிக்கு, அணுகுவதற்கு எளியவன். மதுரைக் கூடல் அழகர் பெருமாள் சன்னிதியில் வீற்றிருக்கும் சுந்தர ராஜப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் ‘வா, வந்து மடியில் அமர்ந்துகொள்’ என்று அணுகுதற்கும் அருள் வழங்குதற்கும் எளியனாய்க் காட்சியளிக்கிறான். அடியார்கள் எளிதாகச் சென்று அருள் பெற வழிசெய்பவனாய் அமர்ந்திருக்கிறான். ஆனால் அவன் அப்படி இருந்தும் அவனை எளிதில் அணுக விடாமல் அவனுக்கும் நமக்கும் இடையில் யாராவது இருப்பின் அவரிடம் நாம் வேண்டுவது என்ன? ‘நீங்கள் அனுபவம் பெற்றுவிட்டீர்கள். நாங்களும் பெற வேண்டும். எனவே கண்ணனை விடுவித்து அனுப்புங்கள்’ என்பதாக இருக்கலாம்.

சென்ற பாசுரங்களில் ‘நென்னலே வாய் நேர்ந்தான்’ என்று ‘நேற்றே எங்களுக்குப் பறை தருவதாகச் சொல்லியிருந்தான். அதற்காக நாங்கள் வந்துள்ளோம். நீங்கள் மட்டுமே அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு எங்களுக்கு மறுக்காதீர்கள். உங்கள் பணிவிடைகளால் கண்ணனைக் கட்டிப் போடாதீர்கள். நாங்களும் பறை பெற வேண்டும்’ என்னும் பொருள் ‘குத்து விளக்கெரிய’ பாடலின் மூலம் காணும் போது கிடைக்கிறது.

இன்னொரு பார்வையும் உண்டு.

திருக்கோஷ்டியூரில் தனக்கு அளிக்கப்பட்ட உய்யும் வழியை அனைவரும் உய்ய வேண்டி, தானே அனைவருக்கும் உகந்தளித்த எம்பெருமானார் நினைவும் இப்பாசுரத்தில் வரலாம். இறை நிலையைச் சில அமைப்புகள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டிராமல், அனைவர்க்குமானதாக ஆக்கிய யதிராஜரின் அணுகுமுறை இப்பாடலில் மறைபொருளாகத் தெரிகிறது.

நப்பின்னை உறங்கும் பஞ்சசயனம் என்பது அழகு, குளிர்ச்சி, மென்மை, பரிமளம், வெண்மை என்கிற ஐங்குணகளை உடையது என்பது ஒரு பொருள்.

பி.கு: இப்பாசுரத்தினால்,  கோவில்களில் பெருமாளை நம்மிடமிருந்து பிரிக்கும் அறம் நிலையாத்துறை நினைவிற்கு வந்தால் அடியேன் காரணமில்லை.

உந்து மதகளிற்றன்

‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் பொழுது விடிந்ததற்கான மேலும் பல அறிகுறிகள் சொல்லப்படுகின்றன.

‘கோழி அழைத்தன காண்’ என்று அழைக்கும் பெண் கூறுகிறாள். உரையாசிரியர்கள் இந்தப் பிரயோகத்தை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். ‘கோழி’ என்பது காலையில் கூவும் சேவல் இல்லையாம். இரவில் கூவும் சாமக்கோழியாம். எனவே பொழுது விடியவில்லை என்று உள்ளிருப்பவள் கூறினாளாம்.

பொழுது உண்மையிலேயே விடிந்துவிட்டது என்பதை உணர்த்த வேறு ஏதாகிலும் சாட்சிகளைக் காட்டுமாறு உள்ளிருப்பவள் கேட்டாளாம். அதற்காக ‘மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்’ என்று பதில் அளித்தார்கள் போலும் என்பது உரையாசிரியர்கள் பார்வை.

‘அக்குயிலினங்கள் மாதவிப் பந்தல் மேல் இருந்து கூவின’ என்று கூற வேண்டிய தேவை என்ன? ‘குயிலினங்கள் கூவின’ என்றால் போதாதா? என்றால், இரவு நேரத்தில் குயில்கள் மாதவிப் பந்தல் மேல் உறங்குமாம். எனவே பொழுது விடிந்தவுடன் அவை சிலிர்த்தெழுந்து அப்பந்தல் மேலிருந்தே கூவின என்பதால், ஒருவேளை சாமக்கோழி அழைத்திருந்தாலும், குயில்கள் பொழுது புலர்ந்தமையை மாதவிப் பந்தல் மேலிருந்து உணர்த்திவிட்டன என்பது பெரியோர் பார்வை.

இப்பாடல் தொடர்பான சுவையான செய்தி ஒன்றுண்டு.

திருவரங்கத்தில் எம்பெருமானார் தினமும் காலையில் மாதுகரம் ( பிக்‌ஷை) பெறுவதற்குச் செல்லும் போது, ஒரு நாள் பெரிய நம்பிகளின் இல்லத்தின் முன் நின்று பிக்‌ஷை வேண்ட, நம்பிகளின் பெண் அத்துழாய் கதவைத் திறந்தவுடன் அவளைக் கண்ட மாத்திரத்தில் எம்பெருமானர் மூர்ச்சை அடைந்து விட்டார். பயந்து போன அத்துழாய், தன் தந்தையிடம் கூற, அவர் பதற்றமில்லாமல் ‘உந்து மதகளிற்றன்’ என்றார்.

குழப்பத்தில் ஆழ்ந்த அத்துழாயிடம்,’ எம்பெருமானார் எப்போதும் போல் இன்றும் திருப்பாவை சேவித்தவாறே பிக்‌ஷைக்கு எழுந்தருளியிருப்பார். நம் இல்லத்திற்கு வரும் போது ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் இருந்திருப்பார். நீ உன் கை வளைகள் ஒலிக்கக் கதவைத் திறந்தவுடன் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பட் வந்து திறவாய்’ என்கிற பாசுர வரியின்படி, உன்னையே ஆண்டாளாய்க் கண்டிருப்பார். உடனே மூர்ச்சை அடைந்திருப்பார்’, என்று சமாதானம் சொன்னதாகக் குருபரம்பரையில் வருகிறது.

ஶ்ரீமத் இராமானுசருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்கிற பெயர் இருப்பது நாம் அறிந்ததே.

#திருப்பாவை #ஆண்டாள்

வருக வருக …

புதியவரே,

ஆழ்வார்களும் நாயன்மார்களும் நடந்து, அவர்கள் கால் தூசி படிந்த தமிழகத்தில் புதிய முயற்சி செய்வதாகக் கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

உங்களுக்குச் சில யோசனைகள். தேர்தல் அறிக்கையில் இவற்றை இடம் பெறச் செய்து 40 ஆண்டுகால இருளை அகற்றுங்கள்.

தமிழகக் கோவில்கள்:

 1. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கம்
 2. கோவில் நிலங்களைக் கோவில்களுக்கே மீட்டுக்கொடுத்தல்.
 3. கோவில் நிலங்களின் குத்தகை வசூல் விபரங்கள், வாடகை செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடுதல்.
 4. திருட்டுப் போன விக்கிரங்களை / பொக்கிஷங்களை மீட்க தனி அமைச்சு
 5. கோவில் திருட்டுக்கு பிணையில் வர முடியாத 14 ஆண்டுகள் காவல் தண்டனை
 6. கோவில்களில் நுழைவு வரி ரத்து

அரசுப் பள்ளிகளில்:

 1. ஆசிரியர்களுக்கு மின்னிலக்கக் கைரேகை வருகைப் பதிவேடு
 2. அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை
 3. ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணினி வழித் தகுதித் தேர்வு
 4. ஆய்வறிக்கை சமர்ப்பித்தால் மட்டுமே பதவி உயர்வு
 5.  ஆராய்ச்சியின் மூலம் முனைவர் பட்டம் பெற்றால் தான் பள்ளி முதல்வர் பதவி
 6. சி.பி.எஸ்.ஈ. க்கு இணையான மாநிலப் பாடத் திட்டம்
 7. மாவட்டங்களில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி

போக்குவரத்து:

 1. போக்குவரத்து மீறல் சிறைத் தண்டனைக்குரிய சட்டமாதல்
 2. ஓட்டுனர் உரிமம் பெறுவது பயிற்சி / சோதனை அடிப்படையிலேயே
 3. ஆதார் அட்டையை ஓட்டுனர் உரிமத்துடன் இணைப்பது
 4. பெண்களுக்கெதிரான குற்றங்களுக்குப் பிணையில் வர முடியாத தண்டனை

அரசூழியர்கள்:

 1. கையூட்டு பெறும் அரசூழியர் உடனுக்குடன் பணி நீக்கம், சிறைவாசம், சொத்து பறிமுதல்
 2. தினமும் பார்த்த / முடிவெடுத்த கோப்புகள் விபரம் இணையத்தில் வெளியீடு
 3. சம்பள உயர்வு செய்த வேலையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே
 4. பணி நிரந்தரம் இல்லை என்ற அறிவிப்பு
 5. தனியார் துறையின் திறமையாளர்கள் அரசூழியர்களாவது

வீடு / வீட்டு மனைகள்:

 1. ஏரிகளில் வீடுகட்டுவது 14 ஆண்டுகள் காவல் தண்டனைக்குரிய குற்றமாதல்
 2. வீடு கட்டும் ஒப்புதல் ஆன்லைனில் நடைபெறுதல்
 3. வீடுகளை ஒப்படைக்காத நிறுவனத் தலைவர்களுக்கு சிறைத்தண்டனை
 4. வீடு / நிலம் விற்பனை காசோலைகளில் மட்டுமே நடைபெறுதல்

காவல் துறை:

 1. கையூட்டு பெறுவது = உடன் பணி நீக்கம் + சொத்து பறிமுதல்
 2. மனித உரிமை மீறல் = உடன் பணி நீக்கம் + 14 ஆண்டுகள் சிறை
 3. காவலர்களுக்கு வாரம் ஒருமுறையாவது ஒரு நாளாவது முழு ஓய்வு
 4. காவலர்களுக்குப் பணியிடங்களில் கழிவறை வசதிகள்
 5. காவலராகத் தேர்வாவதைக் கடினமாக்குவது = பணியில் பெருமை
 6. காவலர் சம்பளம் உயர்வு

பொது:

 1. மொழி, மதம், சாதி இவற்றின் பெயரால் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நபர்கள் / நிறுவனங்கள் தடை + கடும் சிறைத் தண்டனை
 2. திரைப்படத்துக்கு வரி விலக்கு என்னும் கீழ்மையை நீக்குதல்
 3. 4-5 தெருக்களுக்கு ஒரு நூலகம்

இவை சாத்தியமா என்கிற கேள்வி எழலாம். இவற்றை நடைமுறைப்படுத்த சில வழிகள் உள்ளன. பல நாடுகளில் இவ்வாறே நடைபெறுகிறது. உங்களின் அபிமான தலைவர் லீ குவான் யூ இவ்வாறு பலவற்றைச் செயல்படுத்தியுள்ளார். மேலும் தெரிந்துகொள்ளத் தொடர்புகொள்ளுங்கள், விவரங்கள் அளிக்கிறேன்.

நன்றி

ஆமருவி

அம்பரமே தண்ணீரே

‘அம்பரமே தண்ணீரே’ பாசுரத்தில் பலர் எழுப்பப்படுகிறார்கள். நந்தகோபாலன், யசோதை, பலராமன், கண்ணன் என்கிற வரிசைப்படி அனைவரும் எழுப்பப்படுகிறார்கள் என்பது பொதுப்பார்வை.

‘அம்பரமே, தண்ணிரே, சோறே’ என்கிற வரிசை நமக்கு ‘உண்ணும் சோறு பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்கிற வழக்கை நினைவுபடுத்தலாம். அதனினும் இதில் வேறொரு சுவை உண்டு.

அம்பரம் (ஆடை), நீர், சோறு என்று இவற்றை எல்லாம் அளிப்பவனே என்பதுடன் நிற்காமல் இவற்றை எல்லாம் எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல் அறமாகச் செய்யும் நந்தகோபாலனே என்பதாய் ‘அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் நந்த கோபாலா’ என்று அழைக்கிறாள் #ஆண்டாள்.

இப்பாடலில் ‘செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா’  என்று சிறப்பு அடைமொழியுடன் பலராமன் அழைக்கப்படுவது உற்று நோக்கத்தக்கது. இராமாவதாரத்தில் ராமனுக்குப் பின்னர் தோன்றிய ஆதி சேஷனான லக்‌ஷ்மணன், கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்கு முன் பிறந்து முன் போலவே சேவை செய்தமையால் ‘உம்பியும் நீயும்’ என்று முதலில் பலதேவன் சொல்லப்படுகிறான். கண்ணனின் அண்ணன் என்று சொல்லாமல், பலதேவனின் தம்பி என்று பலராமனுக்குச் சிறப்பு செய்யப்படுகிறது.

பின்வரும் பாசுரமும் அரவணையின் சிறப்பை உணர்த்துவது ஈண்டு நோக்கத்தக்கது.

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்

புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம், திருமாற் கரவு

மூன்றாம் பாசுரத்தில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று போற்றப்படும் கண்ணன் இங்கு ‘ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்’ என்று தேவாதிராஜன் என்கிற அர்ச்சாவதார மூர்த்தியை உண்ரத்துவது போல் உள்ளது ஒரு சுவை.

‘அம்பரம்’ என்னும் சொல் இருமுறை வந்துள்ளது. முதலில் ‘ஆடை’ என்னும் பொருளிலும், பின்னர் ‘ஆகாசம் / வானம்’ என்னும் பொருளிலும் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இரு இடங்களிலும் ஆடை என்றே வருகிறது என்றும் சொல்வர். கண்ணன் ஆகாசத்தையே ஆடையாய் அணிந்துள்ளான் என்கிற பொருளில் இதுவும் ஒரு பார்வையே என்று கொள்வது ஒரு சுவை.

#ஆண்டாள் #திருப்பாவை

%d bloggers like this: