பக்தி இலக்கியத்தில் பெண்கள்

‘பக்தி இலக்கியத்தில் பெண்கள்’ என்னும் தலைப்பில் சிங்கப்பூர் சங்கப்பலகை நிகழ்வு 9 இன்று தேசிய நூலகத்தில் நடந்தேறியது. 40 பேர் வந்திருந்தனர். ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் முதலியோரைப் பற்றி திருமதி. மாதங்கி, திருமதி. மீனாட்சி சபாபதி, திருமதி. உஷா சுப்புசாமி பேசினர்.

கேட்டவர்களை மேலதிகத் தகவல்களைத் தேடிப் போக வைத்ததாக இருந்தன பேச்சுக்கள். அதற்கான தரவுகளையும் பேச்சாளர்கள் அளிக்கத் தவறவில்லை.

பயனுள்ள நிகழ்வாக அமைந்த மாலைப்பொழுது இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் என்று விரிந்து, தமிழ் என்னும் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைந்தது.

வரவேற்பு – ஆமருவி

ஔவையார் உரை – திருமதி. மாதங்கி

காரைக்கால் அம்மையார் – திருமதி. மீனாட்சி சபாபதி

ஆண்டாள் – திருமதி.உஷா சுப்புசாமி

 

சுஜாதா – 1974

1974ல் சுஜாதா எழுதிய ‘காணிக்கை’ சிறுகதை மனதின் ஆழத்தில் புதைந்து போன ஒன்று. அவ்வப்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும். சில நேரங்களில் பெரும் கோபத்தை உண்டு பண்ணி, நாவின் சொற்சூட்டை அதிகரிக்கும். அச்சமயத்தில் ஏதாவது எழுதினால் சொற்கள் கடுமையாக வந்து விழுவதும் உண்டு.

அறச் சீற்றம் , இயலாமையினால் ஏற்பட்ட கழிவிரக்கத்தினால் உண்டான சூடு என்று இன்னதென்று வகைப்படுத்தப்பட முடியாத உணர்வு என்று சில சமயங்களில் தோன்றும். அந்தக் கதை நினைவிற்கு வரும்பொதெல்லாம் ( பெயர் நினைவில் இராது), இதே மாதிரியான உணர்வுகள் தோன்றுவதும், தற்காலத்தில் அவ்வளவு மோசம் இல்லை என்கிற நினைவும் வந்து சமன்படுத்துவதும் உண்டு.

இன்று நூலகத்தில் அக்கதையை எதேச்சையாகப் படித்தேன். மீண்டும் அதே நினைவுகள். மனம் ஒரு நிலையில் இல்லை. தற்காலத் தமிழகத்தின் நிதர்சனம் ஏற்படுத்தியிருக்கும் மனதின் வலியும் சேர்ந்துகொண்டு, 1974ல் இக்கதை எழுதும் போது சுஜாதா கொண்டிருந்திருக்கக் கூடிய மன நிலையை என்னுள் உண்டாக்கின.

70-களில் பிராம்மண சமூகம் இருந்த நிலை, பிரபந்தம் படித்து, வைதீகத்திலும் சோபிக்க முடியாத நிலையில், சமூகத்தின் பொருளியல் அழுத்தங்கள் ஏற்படுத்தும் வாழ்வின் நிதர்ஸனக் கசப்புகள்,  கோவிலை மையமாகக் கொண்ட வாழ்வில் பொருளியல் சமாளிப்புக்களுக்காகச் செய்யவேண்டிய குரங்கு வேலைகள் என்று அன்றைய வாழ்வைப் படம்பிடித்திருப்பார் சுஜாதா.

முத்தாய்ப்பாக, அபாரமான தொடர்புகொண்ட பாசுரம். அத்துடன் கதை முடியும். தனது மனப் பாரத்தைப் பாசுரத்தின் வழியே இறக்கி வைத்திருப்பார் கதை சொல்லி.  ஆனால் நம் மனதில் அந்த பாரம் ஏறிக்கொள்ளும்.  இறக்கி வைப்பது கடினமே.

படித்துப் பாருங்கள். ‘ஸ்ரீரங்கத்துக் கதைகள்’ தொகுப்பில் முதல் கதை – ‘காணிக்கை’.

தாய் மண்

இந்தியன் வங்கியில் ஊழியர்கள் ஏன் இவ்வளவு அசமஞ்சமாக வேலை செய்கிறார்கள் என்று நொந்துகொண்டே அந்த அம்மையாரின் முன் அமர்ந்திருந்தேன். 15 மணித்துளிகள் கடந்திருந்தன. அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பேசினார். 2 நிமிடங்கள்.
‘சரி, உங்களுக்கு என்ன வேணும்?’
‘மேடம், அந்த லாக்கர ஓப்பன் பண்ணனும். சொன்னேனே.’
‘ஆங், சொன்னீங்களே. அக்கவுண்ட் விஷயம் முடிச்சுட்டு பண்ணலாமா?’
‘சரி. என்ன டாக்குமெண்ட்ஸ் வேணும்? பாஸ்போர்ட், விஸா?’
‘லாக்கருக்கு அதெல்லாம் வேணாம் சார்.’
‘இல்ல அக்கவுண்ட் பத்தி பேசறேன். எஸ்.பி.அக்கவுண்ட்ட என்.ஆர்.ஓ ஆக்கணுமே, அது..’
‘அதான் லாக்கர் முடிச்சுட்டு பண்ணலாம்னு சொன்னேனே’
‘இல்ல மேடம், நிங்க தான்..’
‘ஸார், நான் ரொம்ப தடுமாறறேன் இல்ல? ரொம்ப ஸாரி’
‘…’
‘இல்ல. நீங்க வெளிலேர்ந்து வந்திருக்கீங்க. ஆயிரம் வேலை இருக்கும். ஆனா என்ன பண்றது? கொஞ்சம் பர்சனல் பிராப்ளம். அதான் இன்னிக்கி காலைலேர்ந்து தடுமாறறேன்.’
‘ஸாரி மேடம். டேக் யுவர் டைம்’
‘இல்லை, பிரதர் -இன்லா இப்ப காலைல காலமாயிட்டார். இப்ப கிளம்பணும். அடுத்த வாரம் அவர் பொண்ணுக்குக் கல்யாணம். மேனேஜ் பண்ணவே முடியல்ல. அட்டன்ஷன் ரொம்ப டைவர்ட் ஆகுது’
‘ஓ, ஐ ஆம் ஸாரி.. ‘
‘இல்ல உங்கள முடிச்சுட்டு போறேன்.’
‘வேண்டாம் மேடம். நீங்க கிளம்புங்க. வேற ஆபீசர் பார்க்கட்டும்’
‘இல்ல சார். நீங்க வெயிட் பண்ணினீங்களே. நானே அட்டண்ட் பண்ணிட்டுப் போறேன்.’
‘நீங்க ஆபீசுக்கு வந்திருக்கவே வேணாமே. எதுக்கு வந்தீங்க?’
‘இல்ல, காலைல அவருக்கு உடம்பு முடியலன்னு போோன் வந்துது..டிஸ்டர்ப் ஆயிட்டேன்.போயிட்டார்னு இப்பதான் போன் வந்தது.இருக்கட்டும்.நீங்க டாக்குமெண்ட்ஸ் எடுங்க..’
தயவு செய்து முதல் வரியைப் படிக்காதீர்கள்.#பாரதம்