உ.வே.சா. தனது தந்தையாரின் காலத்தில் நடந்த உபன்யாசங்களைப் பற்றி ‘என் சரித்திரம்’ நூலில் எழுதுகிறார்.
அவரது தந்தையார் ஆற்றிய இராமாயண பிரசங்கம் பற்றி அனுபவித்து எழுதுகிறார். அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வரும் முன்பு இருந்த நிலையைப் பற்றிய வர்ணனையில் சாதாரண மக்களும் பெரும் பாதிப்படைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் என்கிறார். அனுமன் வருகைக்குப் பிறகு மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் என்கிறார். மக்களின் உற்சாகம் உபன்யாசகரையும் பீடித்தது என்கிறார்.
நான் இந்த நிலையைப் பல முறைகள் அனுபவித்துள்ளேன். நெய்வேலியில் புலவர் கீரன் உபன்யாசங்களின் போது கூட்டம் ஒரு பரவச நிலையிலேயே இருக்கும். வில்லிபாரதம் உபன்யாசத்தில் அவர் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தையும் கொண்டு வந்து தக்க இடத்தில் சேர்த்து பெரும் உணர்ச்சி பொங்க ‘மாமனே மாமனே, யார் சொல்வார் இந்த ஆலோசனை?’ என்று துரியோதனன் சொல்வது போல பேசி நடித்து உரையாற்றுவார். ‘தாயம் உருட்டலானான், ஆங்கே சகுனி வென்று விட்டான்’ என்று ஒவ்வொன்றாக வைத்துத் தோற்கும் போதும் சொல்வார். என் பாட்டி கண்ணீர் விட்டதைப் பார்த்திருக்கிறேன்.
ஒருமுறை பாரத உபன்யாசத்தின் போது கூட்டத்தில் ஒரு பூரான் வந்துவிட, மக்கள் எழுந்து நின்றனர். ‘அப சர்ப்ப சர்ப்ப’ ஸ்லோகம் சொல்லுங்கோ. பூரான், உள்ளே பூரான்’ என்றூ சிலேடையாக அவர் பேசி நிலைமையைச் சமாளித்தார்.
அடியேனின் பெரியப்பாவின் உபன்யாசத்தில் பக்தி பெருகி வழியும். வால்மீகியில் துவங்கி, கம்பனில் திளைத்து, துளசியில் மூழ்கி, ஆழ்வார்களில் அமிழ்ந்து, நாராயணீயத்தில் நீந்தி அவர் சொல்லும் பாங்கே தனியாக இருக்கும். பலமுறை பாக்யம் பெற்றிருந்தேன். நெய்வேலியைத் தொடர்ந்து பம்பாயிலும், சென்னை வீனஸ் காலனியிலும்.
நெய்வேலிக்குக் கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். ஸத்ஸங்கம் மணித்வீபம் வராமல் தபோவனம் செல்வார். மணித்வீபக்காரர்கள் கீரனை அழைப்பார்கள். இப்படி ஒரு போட்டி நடக்கும். குழந்தைகளாக இருந்த எங்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – மணித்வீபத்தில் கீரன், முடிந்தவுடன் தபோவனத்தில் வாரியார். வாரியார் கேள்வி கேட்டுப் பதில் சொன்னால் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் பரிசளிப்பார். இதற்காக முன் வரிசையில் சென்று அமர்ந்துகொள்வதுண்டு.
ஒருமுறை சுவாமி சின்மயானந்தா வந்திருந்தார். பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினார். கீதை பற்றிப் பேசினார் என்று நினைவு.
80களின் இறுதியில் ஶ்ரீவத்ஸ ஜெயராம சர்மா வந்திருந்தார். நாராயணீயம் பெரும் அமர்க்களமாக நடப்பதுண்டு. ந்ருஸிம்ஹாவதரம் அன்று தூண் பிளக்கும் நேரத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்படும். தீபாராதனை மட்டும் உண்டு. அப்போது ந்ருஸிம்ஹாவதார சுலோகம் உச்ச ஸ்தாயியில் சர்மா அவர்கள் சொல்ல, அந்த நேரம் அங்கு ந்ருஸிம்ஹன் வருவான். மயிற்கூச்செறியும். இருமுறை அனுபவித்துள்ளேன். சிலர் மீது ந்ருஸிம்ஹன் வந்து கர்ஜனை செய்வான். பின்னர் அடங்கும்.
இவர்கள் தவிர, கருணாகரன் அவர்களின் உபன்யாஸம் நடந்ததுண்டு. ஆச்சாரிய ஸ்வாமிகள் வரும்போதெல்லாம் 10 நாட்களும் உபன்யாஸங்கள் உண்டு. ஸ்வாமிகள் செய்வதும், பண்டிதர்கள் செய்வதும் என்று ஜேஜே என்று ஸ்டோர் ரோடு மணித்வீபம் களைகட்டும்.
ராதா கல்யாணம், வினாயகர் சதுர்த்தி, ராம நவமி என்று ஆண்டு தோறும் உபன்யாசத் திருவிழாதான்.
இக்காலப் பிள்ளைகளுக்கு அம்மாதிரியான அனுபவங்கள் இல்லையே என்று பலமுறை எண்ணி வருந்தியதுண்டு.
அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை என்று தெரிகிறது. ஆனாலும் மனம் கேட்க மறுக்கிறது.
balajimarkandeyan
November 3, 2018 at 11:33 pm
Hmmmm.,not only current children, we too not as such the way you narrated!
LikeLike