யார் என்ன சொன்னாலும்,கிஞ்சித்தும் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.
முன்னர் அரசு வேலையென்றால் பின்னர் அது மறுக்கப்பட்டவுடன் வங்கிகளிலும்,வடக்கே தனியார் நிறுவனங்களிலும் பெருமளவில் நுழைந்தார்கள்.பின்னர் அரசு வங்கிகளில் இல்லைஎன்று ஆனவுடன்,தனியார் வங்கிகள். இன்னொரு குழு பெருமளவில் வெளி நாடு சென்றது.காரணம் கல்வி.அந்த நேரத்தில் வந்து சேர்ந்த ஐ.டி.துறைபெருமளவில் கைகொடுத்தது.இன்று உலகெங்கிலும் பரவியுள்ளார்கள்.
போகும் இடங்களில் எல்லாம் தங்களைநிறுவிக்கொண்டேஇருக்கிறார்கள்.வெறி,வேகம் என்றெல்லாம் இல்லை.எப்போதும் செய்வதையே,இன்னும் கொஞ்சம் முனைப்புடனும்,ஊக்கத்துடனும் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.செய்யச் செய்ய மேலேறிக்கொண்டேயிருக்கிறார்கள்.
போகும் இடங்களில் எல்லாம் கலைகளில் ஈடுபடுகிறார்கள்.ஏதோவொரு சங்கீதம்,நாட்டியம்,வாத்யம் என்று தொடர்ந்து செயலாற்றிக்கொண்டேஇருக்கிறார்கள்.எந்த நாட்டிலும் இந்தியச் சங்கீதக் குழுவென்றால் ஓரிருவராவது தென்படுவர்.ஏதோவொரு விதத்தில் செயலாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.நுண் கலைகளையும் தங்களுடன் மேலெடுத்துச் சென்றுகொண்டேயிருக்கிறார்கள்.
இதில் தங்களுக்குள் சண்டை,பொறாமையென்று எல்லாமும் உண்டு. ஆனாலும் கலை,கோவில்,பண்பாடு என்றால் எல்லாநாடுகளிலும் ஒன்றுகூடிவிடுகிறார்கள்.
தற்போதெல்லாம் தங்களுக்குத் தாய் நாட்டில் இழைக்கப்படுவதாகக் கூறப்படும் எந்த அநீதியைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லையென்று தோன்றுகிறது.ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி எதிர்ப்பு இருக்கும்.இப்போது வேறொரு மாதிரி.அவ்வளவுதான் என்கிற நினைப்பாக இருக்கலாமென்று நினைக்கிறேன்.எதையும் மாற்றவியலாது,எனவே,அதற்காக
எதற்கும் தயாராகவும்,எந்த நிலையிலும் கையைஊன்றிக் கொண்டு மேலெழும்பவும் தயாராக இருக்கிறார்கள்.புதியதாகவொரு தேர்வு வருகிறதென்றால்,ஈராண்டுகளுக்கு முன்னர் திட்டமிடத் துவங்குகிறார்கள்.புதிய வாய்ப்புகள் தோன்றும் பட்சத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வையேற்படுத்திக் கொண்டு,அவற்றுக்கான தயாரிப்புகளில் இறங்குகிறார்கள்.குறிப்பாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலோர் தற்போதைய பள்ளிக் கல்வியை நம்பாதவர்களாகத் தென்படுகின்றனர். பள்ளியென்று பெயருக்கு ஒன்றில் போட்டு,பின்னர் அத்தனைத் தேர்வுகளுக்கும் உதவும் பயிற்சி மையங்களில் சேர்க்கின்றனர்.வீடுகளில் அவற்றைப் பற்றிய பேச்சாகவேயுள்ளதைக் காண முடிகிறது.
இவர்கள் தங்களுக்குள் அதிகம் அரசியல் பேசிக்கொள்வதில்லை.முக்கியமாகப் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் இல்லை.அதையொரு அழுக்காகவேயெண்ணுகின்றனர்.பேஸ்புக்கை,இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலோர் பெரும் தீட்டு போலவேபார்க்கின்றனர்.’நான் அதில் எல்லாம் இல்லை.எதாயிருந்தாலும் மெயில் அனுப்புங்கோ’என்று சொல்பவர்களாக இருக்கின்றனர்.
இவர்களைப் பின்பற்றி,இன்னும் சில குழுக்களும் இப்படியேசெய்ய முனைவதைக் காண முடிகிறது.
வேகமாக மாறிவரும் உலகில் தங்களையின்னமும் மேம்மடுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இன்னும் சில சமூகங்களிலும் பரவி வருவதைக் காண முடிகிறது.இந்தப்போக்கு நாடு என்னும் அளவில் நன்மையளிக்கும் செயல்பாடே.
எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல்,கலை,பண்பாடு,கல்வி என்று மேம்பாடான செயல்களில் எல்லாச் சமூகங்களும் ஈடுபட வேண்டும்.அதுவேஅனைவர்க்கும் நன்மையளிப்பதாக அமையும்.
‘வாழிய செந்தமிழ்,வாழ்க நற்றமிழர்,வாழிய பாரத மணித்திரு நாடு.’