‘காமகோடி பீடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்தே; அதன் முதல் பீடாதிபதியும் அவரே; கி.மு.480ல் அவர் பதவி ஏற்றார்; அன்றுதொட்டு இன்று வரை காஞ்சி காமகோடி பீடம் தொடர்ச் சங்கிலியாய் 2000 ஆண்டுகளாகப் பீடாதிபதிகளைக் கொண்டுள்ளது; ஆனால் சிருங்கேரி மடம் அப்படிப்பட்டதன்று’ என்பதை நிறுவ முயன்று வெற்றியும் பெற்றுள்ளார் ஆசிரியர் வித்துவான் வே.மகாதேவன், ‘காஞ்சி மடம் வரலாறு’ என்னும் நூலில்.
மேற்சொன்ன அனைத்தையும் நிறுவ இலக்கியச் சான்றுகள், வரலாற்றுச் சான்றுகள், செப்பேடுகள், கடந்த 2000 ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகளின் சமகால எழுத்துச் சான்றுகள் என்று பெரும் முயற்சி தெரிகிறது. சுமார் 10 ஆண்டுகள் இதற்கான ஆராய்ச்சியில் ஆசிரியர் ஈடுபட்டிருந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது இந்த நூல்.
ஆதிசங்கரரின் காலம் கி.மு. 509-477 என்று உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர். இதற்காகத் தர்க்க ரீதியிலான பார்வைகள் பலதையும் வைக்கிறார். அதற்கு மேல் ஆதிசங்கரர் காஷ்மீரம் சென்றது, அங்கு லிங்கப் பிரதிஷ்டை செய்தது, பின்னர் காஞ்சிபுரம் வந்து சித்தியடைந்தது என்று பல நிகழ்வுகளுக்கும் வரலாற்று, இலக்கிய ரீதியிலான சான்றுகளைக் காட்டுகிறார் ஆசிரியர். இதற்காக சிவரஹஸ்யம், ப்ருஹத்சங்கரவிஜயம், ப்ராசீன சங்கரவிஜயம், ஆனந்தகிரி சங்கரவிஜயம், வியாசாசல சங்கரவிஜயம், கேரளீய சங்கரவிஜயம், கூடலிச் சிருங்கேரியின் குருரத்னமாலா, மார்க்கண்டேய சம்ஹிதை, ஜைன நூலான ஜீன விஜயம் முதலான நூல்களில் இருந்து சான்றகளைக் காட்டுகிறார் ஆசிரியர்.
ஆதிசங்கரரின் காலத்தை நிறுவுவதற்கு ஆசிரியர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வியக்க வைப்பன.
ஆதி சங்கரரர் துவங்கி, தற்போதுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் வரை இடைவிடாத தொடர்ச் சங்கிலியாய்க் குருபரம்பரையை எடுத்துரைக்கிறார். குறிப்பிடத்தக்க செயல்கள் புரிந்த பல பீடாதிபதிகளின் வாழ்க்கைக் குறிப்பை எழுதும் இடங்களில் அந்த பீடாதிபதி வாழ்ந்த காலத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ இயற்றப்பட்ட குருபரம்பரை தனியன்களைக் குறிக்கிறார். பெரும்பாலும் ‘குருரத்னமாலா’ என்னும் ஸ்தோத்திரத்தையும், ‘புண்ய ஸ்லோக மஞ்சரி’ என்னும் நூலையும் கையிலெடுக்கிறார். பின்னர் அவற்றில் உள்ள ஏதாவதொரு வரலாற்று நிகழ்வுக் குறிப்பையோ, அல்லது அந்த பீடாதிபதியின் குருவைப் பற்றிய குறிப்போ இருந்தால் அதையும் எடுத்துக் கொண்டு, தொடர்ச் சங்கிலியை உறுதிப்படுத்துகிறார். இன்னொரு வகையில், அந்தப் பீடாதிபதியின் காலத்தில் இருந்த அரசன் பற்றிய குறிப்புகள், அவற்றுக்கான செப்புப் பட்டைய ஆதாரம், அல்லது அவ்வரசன் காஞ்சி பீடத்திற்குக் கொடுத்த நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டு ஆவணம் என்று ஏதாவது ஒன்றையாவது முன்னிறுத்தி, பீடாதிபதியின் காலத்தை உறுதிப்படுத்துகிறார். இந்தத் தலைப்பில் முன்னரே வெளிவந்த சில வரலாற்று நூல்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, பல தளங்களிலிருந்தும் ஒளியைப் பாய்ச்ச முயன்றுள்ளார் ஆசிரியர்.
ஆதிசங்கரர் ஸ்தபித்த ஐந்து மடங்களில் தெற்கில் இரண்டு இருந்திருக்க வேண்டும் என்று நிறுவுகிறார். அதில் ஆம்னாய பீடமாகக் காஞ்சியை முன்னிறுத்துகிறார். கர்னாடகப் பகுதியில் கூடலி சிருங்கேரி என்னும் மடம் ஆதிசங்கரருடன் தொடர்புடையது என்றும், தற்போது சிருங்கேரி சாரதா பீடம் என்று அறியப்படுவது துங்கா சிருங்கேரி என்பதாகவும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறார். அத்துடன், தற்போதைய சிருங்கேரி பீடத்தின் குரு பரம்பரையில் 800 ஆண்டுகள் இடைவெளி இருப்பதையும், ஆகவே, இந்த பீடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததன்று எனவும் நிறுவுகிறார்.
தற்போது காஞ்சி காமகோடிப் பீடத்தைக் கும்பகோணம் மடம் என்று அழைப்பது பேச்சுவழக்கில் உள்ளது. இதற்கான காரணத்தையும் தகுந்த சான்றுகளுடன் நிறுவும் மகாதேவன், காஞ்சியில் இருந்த மடாதீசர்கள் கும்பகோணத்திற்குச் சென்றதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
காஞ்சி பீடத்தின் குரு பரம்பரை பற்றிய செய்திகளில், அப்பீடத்தில் வீற்றிருந்த மஹான்களைப் பற்றியும், அவர்களது சமகாலத்தில் நடந்து வந்த ஆட்சியாளர்கள் பற்றியும் சான்றுகளுடன் அறிந்துகொள்ள முடிகிறது. முக சங்கரர் என்று அறியப்பட்ட காஞ்சி மடத்தின் 20வது சங்கராச்சார்யர் செய்த அருட்செயல்கள் பெருவியப்பளிப்பன.
மடத்தின் 38வது சங்கராச்சார்யரான அபிநவ சங்கரேந்திர சரஸ்வதியே காஷ்மீர மன்னனின் குருவாகவும் விளங்குகிறார். வியத்தகு செயல்கள் பல செய்த அவர் காஷ்மீரத்தில் சித்தியடைகிறார். இவரையே ஆதிசங்கரர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தவறாகக் கருதுகிறார்கள். எனவே தான் ஆதிசங்கரரின் காலத்தை கி.பி.8ம் நூற்றாண்டாகக் காட்டுகிறார்கள் என்கிறார் ஆசிரியர்.
கி.பி. 1297-1385 வரை காஞ்சி மடத்தில் கோலோச்சிய வித்யா தீர்த்தேந்திர சரஸ்வதியே கர்னாடகத்தில் வித்யாரண்யர் என்பாரின் குருவென்றும், தனது குருவின் ஆணைப்படி வித்யாரண்யர் சிருங்கேரியில் எட்டு மடங்களை நிர்மாணம் செய்தார் என்றும் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்படப் பெரிதும் காரணமானவர் வித்யாரண்யர் என்று நாம் அறிந்ததுதான் என்றாலும், அந்த வித்யாரண்யர் உருவாகக் காரணமே காஞ்சி மடம் தான் எனும் போது நமது வரலாற்றுக் கற்பிதங்களின் தவறுகள் புரிகின்றன.
காஞ்சி மடமே சிருங்கேரி மடத்தின் கும்பகோணம் கிளை தான் என்று பரப்புரை செய்யப்பட்டு, அதுவே உண்மை என்னும் எண்ணம் பலரிடம் இருக்கும் நிலையில், சிருங்கேரி மடம் நிலைபெறுவதற்கே கூட காஞ்சி காமகோடி பீடமே காரணம் என்னும் விதமான ஆதாரங்களை அளித்துள்ள ஆசிரியரின் உழைப்பு மெச்சப்படவேண்டியதே.
பின்னாட்களில் துங்காச் சிருங்கேரி மடத்தார் தமிழகத்திற்குள் தமது ஆளுமையைப் பரப்ப முயன்றதையும், அதற்காகக் கிழக்கிந்தியக் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடர்ந்ததையும் தகுந்த ஆதாரங்களுடன் விவரிக்கிறார் ஆசிரியர். அதிகாரத்தில் பங்கு என்னும் விதமாகப் பார்க்கத் தூண்டும் இடங்கள் இவை.
ஒரு மடம் அமைந்துள்ள சாலையில் பிறிதொரு மடத்தின் தலைவர்கள் செல்வதற்கில்லை என்று அன்னாட்களில் ஒரு விதி இருந்துள்ளது. அவ்விதியை அன்னாளைய அரசும் அமல் படுத்தப் பெருமுயற்சிகள் எடுத்துள்ளது. இந்த வழக்கத்தைக் குறிக்கக்கூடிய ஆங்கில அரசின் ஆவணங்களையும் ஆசிரியர் சுட்டுகிறார். இவற்றின் மூலமும் காஞ்சி மடத்திற்கென்றே இருந்த உரிமைகள், பாத்யதைகள் முதலியவற்றை நிறுவுகிறார். கும்பகோணத்தில் சஞ்சாரம் செய்யவும், மஹாமஹத்தில் பங்கேற்கவும் துங்காச் சிருங்கேரி, ஆமனிச் சிருங்கேரி மடாதீசர்கள் அரசாங்கத்திடம் செய்த விண்ணப்பங்கள், அதற்கு அரசிடமிருந்து ‘நீங்கள் கும்பகோணம் சங்கராச்சார்யார் மடம் வழியாகப் பயணித்தல் கூடாது’ என்கிற மாதிரியான உத்தரவுகள் என்று பல ஆவணங்கள் இந்நூலுக்கு வலுவூட்டுகின்றன.
திருவானைக்காவில் அம்பாளுக்குத் தாடங்கப் பிரதிஷ்டை செய்வதில் ஏற்பட்ட குழப்பங்கள், துங்காச் சிருங்கேரி மடத்தார் தமக்கே உரிமை என்று தொடர்ந்த வழக்குகள் முதலியன புதிய தகவல்கள்.
19ம் நூற்றாண்டின் இறுதியில் கும்பகோணத்தில் இருந்து ஶ்ரீமடம் சென்னைக்கும், காஞ்சிக்கும் இடம் பெயர்ந்த நிகழ்வையும் விவரித்துள்ள ஆசிரியர், அதற்கான காரணங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிடத் தவறவில்லை.
இந்த நூல் ஆசிரியரின் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிப் படிவம். செப்புப் பட்டைய ஆதாரங்கள், அரசாங்க ஆணைகள், கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கியங்களில் உள்ள ஆதாரங்கள் என்று பலதையும் மேற்கோள் காட்டி, பெரும் முயற்சியின் விளைவாக உருவானவொன்று. நூலில் மெய்ப்புப் பார்க்கப் பட வேண்டிய இடங்கள் பல உள்ளன – குறிப்பாக ஆண்டுகளைக் குறிக்கும் இடங்களில்.
ஏராளமான ஆதாரங்கள், பழைய நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று பலதையும் சுட்டி எழுதப்பட்டுள்ள இந்த நூல், காஞ்சி மட வரலாற்றில் வெளியில் பெரிதும் அறியப்படாத காலங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
இதனால் ஒரு மடம் உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்பது போன்ற பிம்பங்கள் வேண்டாம். இந்த நூல் ஒரு மடத்தின் வரலாற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறது. இந்த நூலின் கருத்துக்கள், ஆதாரங்கள் பலதையும் மருதலித்து இன்னும் சில நூல்கள் இருக்கலாம். ஒரு ஆய்வாளன் இப்படிப் பல நூல்களையும் இன்ன பிற ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டே தனது கருத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நூலின் பால் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் மட்டுமே கருத்தை உருவாக்கிக் கொள்ளுதல் பாரதீய தர்க்க சாஸ்திர மரபன்று. இந்த நூல் மூலம் ஆதிசங்கரர் ஸ்தாபித்த பீடங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் இறங்க வேண்டுமே தவிர, நூலின் அடிப்படையில் மடங்களின் தரத்தையோ, ஆச்சார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் முதலியவற்றையோ மதிப்பிடுதல் தவறானது.
தமிழ் பாரதீயர்கள் அவசியம் ஊன்றி வாசிக்கவேண்டிய நூல் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு ஆராய்ச்சி நூலை வாசிக்க முடிந்தது.
‘ஶ்ரீ சங்கர மடம் வரலாறு – ஆழ்வியல் ஆய்வு’ – வித்துவான் வே.மகாதேவன்.
பி.கு.: இந்த நூல் கிடைக்குமிடம் அருள் பதிப்பகம் +91 97890 72478
Like this:
Like Loading...