அத்தி வரதரை சேவித்தேன்

வாழ்வில் இரண்டாம் முறையாக அத்தி வரதை சேவித்தேன். 1979ல் சேவித்தது நினைவின் அடுக்குகளில் அமிழ்ந்து பழுப்பேறிய புகைப்படம் போல் உள்ளது. எங்கோ வெகு நேரம் கூட்டமாச் சென்றது மாடுமே நினைவில் உள்ளது.

இன்று காலை 3 மணிக்குக் கிளம்பினோம். நல்ல மழை. மயிலையில் இருந்து காஞ்சி செல்ல 50 நிமிடங்கள் ஆனது. வழி நெடுகிலும் வரதரைக் காண பக்தர் குழுக்கள், காரிலும், பஸ்ஸிலும் என்று ‘சலோ காஞ்சி’ என்னும் விதமாக இருந்தது.

‘எங்கியாவது நின்னு டீ குடிக்கறியா தம்பி?’ என்று ஓட்டுனரிடம் கேட்டேன். ‘இல்ல சார். 10 நிமிஷம் நின்னா கூட 100 கார் போயிரும். உங்களக் கொண்டு விட்டுட்டு பிறகு சாப்டுக்கறேன்’ என்ற ஓட்டுனரின் கரிசனம் நெகிழச் செய்தது.

தந்தையார் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்குமே, எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்த போது, ‘வரதர் ஏன் குளத்துல இருக்கார்?’ என்ற ஓட்டுனரின் கேள்வி என்னை உசுப்பியது. கொஞ்சம் குளிர் காற்று, கொஞ்சம் வரலாறு என்று பேச வாய்ப்பாக இருந்தது. பாரதத்தின் சோக வரலாற்றை அசை போட்டால் குளிரூட்டப்பட்ட குருதியும் கூட கொதிக்கத் துவங்கும்.

காஞ்சியை நெருங்கி விட்டோம் என்பதை உணர்த்தின காவல்துறை வாகனங்கள். பச்சையப்பா கல்லூரிக்கு முன்னரே நிறுத்திவிட்டனர். ஆட்டோ மூலம் கோபுர வாயிலை அடைந்ததாக நினைத்துக் கொண்டோம். இறங்கிய இடத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் நடக்க வேண்டி இருந்தது. இறங்கி நடக்கத் துவங்கினோம்.

எங்கும் போலீஸ். சர்வ வ்யாபி என்பது தமிழக போலீசையே குறிக்கும் என்பது போல் அவர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். நெல்லை, மதுரை என்று பல மாவட்டத் தமிழ் வாசனைகளும் காதில் கேட்க அவர்கள் உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டும், பிறப்பித்துக் கொண்டும் இருந்தனர். மிக அதிக அளவில் பெண் போலீசார். யாரைக் கேட்டாலும் தளராமல் பதில் சொல்லிய வண்ணமே இருந்தனர். தந்தையாரின் வயதை ஊகித்து, ‘வீல் சேர் பயன் படுத்தலாம், ஆனா, அதுல போனா ரொம்ப நேரம் ஆகும். முடிஞ்ச வரைக்கும் நடந்து போங்க. வேணும்னா வீல் சேர் வெச்சுக்கலாம்’ என்று அறிவுரை கூறினர். மூத்த குடிமக்கள் வரிசையில் நானும் தந்தையாரும் நின்றோம் ( நான் அவருக்குத் துணை, எங்களுக்கு வரதன் துணை).

சிறிதளவு தள்ளு முல்லு இருந்தது. ஆங்காங்கே போலீசார் பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தனர். துப்புரவுப் பணியாளர்கள் மழை நீரை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். குப்பைகள் சேராமல் உழைத்துக் கொண்டிருந்தனர். அரசு மருத்துவர்களின் குழுக்கள் இருந்தன. கழிவறைகளும் இருந்தன. பேட்டரி காரினால் பலன் இல்லை. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கே செல்கிறது. அதனைப் பயன் படுத்தவில்லை.  ஒரு மணி நேரத்தில் பெருமாளைச் சேவித்தோம்.

அன்னியப் படைகளின் அழித்தொழிப்புகளைக் கடந்து பெருமாள் சயனக் கோலத்தில் காட்சியளித்தார். ‘உன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிவேன். ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல் வந்து பார்க்கிறாயா?’ என்று கேட்பது போல் தோன்றியது. காலங்களைக் கடந்து மிகப் பழங்காலத்தில் இருந்துகொண்டு பெருமாள் எங்களைப் பார்த்தார். பெருமாளை நாம் பார்க்கவா கோவிலுக்குச் செல்கிறோம்? அவன் நம்மைப் பார்க்கவன்றோ?

வெளியில் அனுமார் சன்னிதிக்கு அருகில் உள்ள அஹோபில மடத்தில் ஶ்ரீமான் சேஷாத்ரி என்பார் வெளியூர் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிக்கிறார். ஒரு நாளைக்கு ரூ.2 லக்ஷம் செலவாகிறது என்கிறார். யாராவது கொடுக்கிறார்கள். பெருமாள் நடத்திக்கறார் என்கிறார் அவர். அங்கு உணவு தயாரிப்பது முதல், பரிமாறுவது வரை தொண்டூழியர்கள். அனைவரும் வயதான ஶ்ரீவைஷ்ணவர்கள். உதவி செய்ய விரும்புபவர்கள் +91-99402-94908 என்னும் தொலை பேசிக்கு அழைத்து விபரம் கேட்டுக் கொள்ளலாம். அவரது வங்கிக் கணக்கு: எண்: 1257155000073013. Karur Vysya Bank. IFSC: KVBL0001276. ஒரு முறை அழைத்து, விபரம் பெற்றுக் கொண்டு பின்னர் உதவி செய்யலாம். 24 மணி நேரமும் உணவு அளிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆடிக் கிருத்திகை என்பதால் கூட்டம் குறைவு என்று ஒரு காவலர் சொன்னார். ஆனால், எள் போட்டால் எள் விழாது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மராட்டி, ஹிந்தி, ராஜஸ்தானி என்று பல மொழியுனரையும் பார்க்க முடிந்தது. ஊழிப் பெருவெள்ளம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய கூட்டத்தைக் கண்டால் தெரிந்துகொள்ளலாம் என்று தோன்றியது.

வசதிகள் போதுமானவையா? இன்னமும் செய்யலாமா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால், இத்தகைய ஜனத்திரளுக்கு இதற்கு மேல் என்ன செய்திருக்க இயலும் என்று தோன்றியது. அரசு என்னதான் செய்தாலும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நிற்க.

அத்தி வரதர் நிகழ்வில் யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. 12 மணி நேரத்திற்கும் மேல் பணி புரியும் காவலர்களுக்கா, மிகச் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்த இந்து அற நிலையத் துறையினருக்கா, துப்புரவுத் தொழிலாளர்களுக்கா, அன்னம் அளிப்பவர்களுக்கா? அல்லது இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, பாரதத்தின் பல கோடி மக்களை ஒரு சிறு நகருக்குள் வரவழைத்து, ஆன்மீகப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தி, இந்த மண் ஆழ்வார்களுடைய மண், இராமானுஜர் காலடி பட்டதால் புனிதமடைந்த மண், வேதாந்த தேசிகர் வாழ்ந்து சம்பிரதாயம் பரப்பிப் புனிதப் படுத்தியதால் புனிதமான மண் எனவே தேசிகரின் மண், இன்னும் எத்தனையோ ஆச்சார்ய புருஷர்களால் புனிதமடைந்த ஆன்மீக மண் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ள அத்தி வரதருக்கு நன்றி சொல்லிப் பணிவதா என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

மண்ணின் நிறம் தெரியா வண்ணம் அவ்வளவு கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கும் பக்தகோடிகளின் பாதங்களிலும் மானசீகமாக விழுந்து வணங்கி விடைபெற்றேன்.

‘அடுத்த வருஷம் அத்தி வரதர சேவிக்கப் போகணும். நீ வந்து அழைச்சுண்டு போ’ என்று அம்மா சொல்லியிருந்தாள். அதற்குள் அவளை வரதர் அழைத்துக் கொண்டுவிட்டார் என்பது மட்டுமே ஒரே சோகம்.

பாராட்டு:

  • போலீஸ் துறை – அதிலும் தூக்கக் கலக்கத்திலும் பணிபுரியும் பெண் போலீசார்
  • அற நிலையத் துறை
  • துப்புரவுத் துறை
  • அரசு மருத்துவர்கள்

கோபம்:

  • ஆட்டோ ஓட்டுனர்கள்

 

அதிகரிக்கவிருக்கும் ஒப்பாரிகள்

நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறுபவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வை எதிர்ப்பதாகக் கூறுவதில்லை. ஏனெனில் ஜே.ஈ.ஈ. தேர்வின் மூலம் தேர்வானவர்கள் அரசியல் வியாதிகள் நடத்தும் பொறியியல் (பொரியல்?) கல்லூரிகளில் சேர்வதில்லை. எனவே வியாதிகளின் டார்கெட் ஜே.ஈ.ஈ. மாணவர்கள் அன்று.
 
ஆனால் நீட் அப்படியானதன்று. அடி மடியில் கை வைப்பது. பணம் கொடுத்து சீட் வாங்கும் கூட்டத்தைப் பணம் கொடுக்காமல் தேர்வின் மூலம் சீட் பெறச் செய்தால் வியாபாரம் என்னாவது? எனவே நீட் வேண்டாம் என்று இவ்வளவு முழக்கம்.
 
நீட் தேர்வு மட்டுமில்லை, பொறியியல் படிப்புக்கும் அகில இந்தியத் தேர்வு தேவை. அதன் அடிப்படையில் தேர்வானவர்கள் பொறியியல் படிக்கலாம் என்று வரப்போகிறது என்கிறார்கள். அப்போது ஓலம் இன்னும் அதிகமாகும். ஏனெனில் முதலீடு என்னாவது? சில ஏக்கர் நிலமும் சில கோடிகளும் இருந்தால் பொறியியல் கல்லூரி திறக்கலாம் என்று ஆட்டுக் கொட்டிலைத் திறந்துவிட்டு, இப்போது கேட் கீப்பர் வருவார் என்றால் எப்படிக் கல்லா கட்டுவது? எனவே ஒப்பாரி அதிகமாகும்.
 
நீட் தேர்வு சரி. இப்போது எம்.பி.பி.எஸ். தேர்வு முடித்த பின்னரும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்று சட்டம் வர இருக்கிறது. அப்போது என்ன செய்வது? தமிழகத்திற்கு விலக்கு கோருவார்களோ? செய்தால் அதைவிடக் கேவலம் ஒன்றும் இருக்க முடியாது. என் மாநிலத்தைச் சார்ந்த மருத்துவ மாணவர்கள் அகில இந்தியத் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போன்றது அது.
 
சொந்த அனுபவம் ஒன்று. இந்தியாவில் எம்.டி.எஸ். (MDS) பயின்று 8 ஆண்டுகள் பல் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவத்துடன் உறவினர் சிங்கப்பூரில் என்.யூ.எஸ்.(National University of Singapore) ல் முனைவர் பட்ட மாணவராகச் சேர்ந்தார். முனைவர் பட்டம் ஆராய்ச்சியின் மூலம் பெறப்படுவது. வாரம் தோறும் பி.டி.எஸ். மாணவர்களுக்குச் சில மணி நேரங்கள் வகுப்பெடுக்க வேண்டும். ஆசிரியராகத் தகுதி உள்ளதே என்று ‘நான் பல் மருத்துவராகப் பணியாற்ற அனுமதி உண்டா?’ என்று என்.யூ.எஸ்.ஸிடம் கேட்டு எழுதினார். ‘அனுமதி உண்டு. அதற்கு நீங்கள் சிங்கப்பூரில் ஒரு முறை பி.டி.எஸ். பயில வேண்டும்’ என்று பதில் தந்தனர்.
 
பி.டி.எஸ். மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்க அனுமதி உண்டு, ஆனால் பல் மருத்துவராகப் பணியாற்ற இயலாது. இப்படி ஒரு சட்டம். இது முரணாக உள்ளது என்பது வெளிப்படை. ஆனாலும் நமது பி.டி.எஸ். ற்கு மதிப்பு அவ்வளவுதான். எம்.பி.பி.எஸ்.ம் அப்படியே என்று அறிகிறேன். ஆனாலும் எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் படித்த மருத்துவ மாணவர்கள் மருத்துவராகப் பணியாற்ற அனுபதி உண்டு என்று கேள்வி. மேற்படிப்பை இங்கிலாந்து, அமெரிக்காவில் படித்திருக்க வேண்டுமோ என்னவோ.
 
அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் அளவிற்கு ஏன் உயரவில்லை என்று கேட்டு அரசைப் பதிலளிக்க நிர்ப்பந்தம் செய்தால் அர்த்தம் உண்டு. அதில் சமூக அக்கறையும் நேர்மையும் இருக்கும். ஆனால் அதை நமது அரசியல் வியாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பது நிதர்ஸனம் என்பதை நினத்தால் மனம் கனக்கிறது.
 
ஆனால் ஒன்று. தேசியக் கல்விக் கொள்கை பற்றி சினிமா நடிகர் கேள்வி எழுப்புவதை முக்கிய நிகழ்வாக நினைக்கும் நமக்கு வேறு எப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் வாய்ப்பர்? #NEET

An analysis of two articles of The New Indian Express

I urge readers to go through this piece and then read the two articles in The New Indian Express about the new education policy. The articles are:
  •  ‘Caste aside? many worries over New Edu Policy’ by Sushmita Ramakrishnan.
  • ‘Draft NEP proposes a paradigm shift in education planning’ by J.Santosh.
 
It is not right for me to cast aspersions on the two writers. I don’t know them. Hence read this as an un-biased review of the two.
 
Sushmita’s article talks about why the word ‘reservation’ has appeared just once in the 484 page draft NEP document. She asks why elimination of caste has not been mentioned in the draft? She worries about addressing SC/ST education, quoting from the controversial Christmas Gandhi. She also quotes Prince Gajendrababu who questions the emphasis on vocational stream. Babu states that an emphasis on vocational streams would mean a potter’s son would be a potter while a singer’s son would only be a singer and deduces that this is an attempt to restrict the free flow of people from the supposedly lower echelons of trades to higher ones.
 
J.Santosh’s article compares the education policy of Sarvepalli Radhakrishnan who wanted a man-making education in the 1950s to a foreword by Prkash Javdekar on the focus of NEP on job skilling and meeting market demand. Santosh even questions why the policy is called Rashtriya Shiksha Aayog, and the acronym RSA is being emphasised in the draft. He further has problems with the Prime Minister chairing the committee that would oversee the implementation of the NEP. A reference to Hitler’s educational policy is seen.
 
Nowhere in these two articles do I see the analysis on education. I fail to understand why a draft NEP should look at caste issues. If caste has not been solved in the last 75 years by Radhakrishnan’s educational policy, why should we continue to adopt that, rather than look at a new way of solving it? While the world in general and Singapore in particular (I am citing Singapore because I know what is happening there), are emphasising on Skills Future, Re-skilling the workforce and introducing newer streams of education to meet the demands of the 21st century where much of the human jobs are going to be taken over by BOTs and automation, what is wrong in Javdekar’s recommendation to ‘eliminate shortage of manpower in science, technology, academics and industry’?
 
I am sad that both the writers have much to cover in terms of analysis, comparative analysis with what the world does and a wholistic approach to the NEP.
 
Again, I am not casting aspersions on the two writers nor concluding that they have written to suit an agenda. I would be happy if they write articles that look at the needs of the nation and see if the NEP addresses those rather than falling into the set retinue of leftist-dravidian-parochial trap.
Original articles :

நீதி இன்னமும் சாகவில்லை

விலை போன தமிழ் ஊடகம் வழக்கம் போல் தனது நபும்ஸகத் தன்மையைக் காட்டியுள்ளது..தனக்குக் காது கேட்காதது போல் நடித்து ஒரு முக்கிய நிகழ்வைக் கடந்து சென்றுள்ளது.
 
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திருமுருகன்(டேனியல்) காந்தியின் வழக்கு குறித்துச் சொல்லியுள்ள கருத்துக்கள் பெரிய அளவில் ஊடகத்தினரால் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமக்குத் தான் இதெல்லாம் தேவையில்லையே. நமக்குத் தேவை பரபரப்பு, கிரிக்கெட், புதிய சினிமா ரிலீஸ் பற்றிய செய்தி. தவிரவும் தேச துரோகத்துக்குத் துணை போதல் என்பதால் ஊடக வியாபாரிகள் வாய்களில் ஃபெவிகால் ஊற்றிக் கொண்டு வாளாவிருந்துவிட்டனர்.
 
நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார்?
 
1. FOE – Freedom of Expression – பேச்சுரிமை தேசத்திற்கு எதிராக இருத்தலாகாது. அதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் இடம் தரவில்லை.
 
2. டேனியல் காந்தியின் பேச்சுகள் சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை வளர்ப்பதாக உள்ளன.
 
3. குறிப்பிட்ட சமூகத்தைச் சாடியே பேசினால் ஒடுக்கப்பட்டவர்கள் உயர மாட்டார்கள்.
 
4. அவனது பேச்சு ஏதோ பாரத அரசும் அதன் நிறுவனங்களும் தமிழகத்தை வஞ்சிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளதைப் போன்று உள்ளது. இது தவறானது.
 
5. அவன் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையுமே கூட தவறாகவே பேசியுள்ளான்.
 
6. வெறுப்புப் பேச்சு கருத்துச் சுதந்திரம் ஆகாது.
 
7. இவன் யாருக்காக இவ்வாறு தூண்டி விட்டுப் பேசுகிறான் என்று விசாரணை செய்ய வேண்டும்.
 
மிக முக்கியமான கருத்துகள் இவை. எந்த நீதிபதியும், அதுவும் தமிழகத்தில், இவ்வளவு தூரம் சொன்னதாக நினைவில் இல்லை. ஜெயலலிதா வழக்கில் மறைந்த நீதிபதி ஶ்ரீநிவாசன் திருக்குறளைச் சுட்டி மிகக் கடுமையாகத் தீர்ப்பளித்தார். அவர் சொன்ன குறள்: ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரசு’ இந்த முறையில் ஜெயலலிதாவின் அரசு செயல்படவில்லை என்று அழுத்தமாகக் கூறினார் அவர். மறு நாள் அவர் வசித்து வந்த தி.நகர் சாலையில் கார்ப்பரேஷன் நீர் வரவில்லை என்பது வேறு விஷயம்.
 
அதற்குப் பிறகு மிகக் காட்டமான ஆணையாகவே நான் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பைப் பார்க்கிறேன்.
 
பி.கு.: கருத்துரிமை ஒரு வரம்பிற்கு உட்பட்டதே. ( within reasonable limits) என்று அவ்வுரிமைக்குப் பூட்டு போட்டவர் பண்டித நேரு. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம் (First amendment). நேரு செய்த நல்ல காரியம் அது.

சிங்கப்பூர் நாட்கள்

சிங்கப்பூரில் நான் வசித்த 9.5 ஆண்டுகளில் ஊரில் இருந்த நாட்களில் அனேகமாக எல்லா நாட்களும் நூலகம் சென்று வந்திருந்தேன். இந்த பாக்யம் எத்தனை பேருக்குக் கிட்டியிருக்கும் என்று தெரியவில்லை.
 
கிளிமெண்டி ரயில் நிலையத்தில் இறங்கி என் வீடு இருந்த வெஸ்ட் கோஸ்ட் டிரைவ் வரை 10 மணித்துளிகள் நடக்க வேண்டும். ரயில் நிலையத்திலேயே நூலகம் உள்ளது. பணி முடிந்து சுமார் 8:30 மணிக்குக் கிளிமெண்டியில் இறங்கினால் நூலகம் மூடும் 9:00 மணி வரை ஏதாவது மேய்ந்துகொண்டிருப்பது வழக்கம்.
 
‘புதியதாக வந்தவை’, ‘திருப்பப் பட்டவை’ என்று ஏதாவது புதிய நூல் கண்ணில் படும். அப்படி நான் வாசித்த நூல்கள் சுமார் 270 இருக்கும்.
 
நானாகத் தேடுப் போய்ப் பிடித்துப் படித்த நூல்கள் என்று சுமார் 120 இருக்கும்.
 
எதற்கும் இருக்கட்டும் என்று கொண்டு வந்து படித்த நூல்கள் பல உண்டு. அடிக்கடி சென்ற நூலகம் விக்டோரியா தெரு தேசிய நூலகம். அது ஒரு கருவூலம். அவ்வளவுதான்.
 
வெளிநாட்டுக்காரன் என்பதால் ஒவ்வொரு முறையும் 8 நூல்களே கடன் வாங்க இயலும். நிரந்தரவாசிகளுக்கு 16. சிங்கப்பூரர்கள் 32. பள்ளி விடுமுறை நாட்களில் இவை அப்படியே இரட்டிப்பாகும்.
 
img_0074பள்ளி விடுமுறையின் இறுதி நாளில் அவசியம் குடும்பமாகச் சென்று 16 நூல்களைஅள்ளிக் கொண்டு வந்ததுண்டு. மூன்று வாரங்கள் கழித்தே தர வேண்டும் என்பதால்.
 
ஒவ்வொரு வார இறுதியிலும் குடும்பத்துடன் நூலகம் செல்லும் வழக்கமும் இருந்தது. நூலகத்தில் சண்டை. எனக்கு ஒரு நூலே கிடைக்கும். பிள்ளைகளுக்கு 6. மனைவிக்கு 1.பெரியவன் பாரதத்தில் கல்லூரிக்குச் சென்ற பிறகு சண்டை கொஞ்சம் குறைந்தது.
 

இதைத் தவிர மின் நூல்களையும் Overdrive மூலம் கடன் வாங்க இயலும். பேச்சுப் புத்தகமும் கேட்கலாம்.

 
நூல் ஏதாவது தேடிக் கிடைக்கவில்லை என்றால் கிளிமெண்டி நூலக ஊழியர்களிடன் சொல்லிச் செல்வேன். அவர்கள்தொலைபேசியில் அழைத்து எடுத்துத் தருவார்கள். இதை அவர்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் சிங்கப்பூரர்கள் அப்படித்தான். கருமமே கண்ணாயினார்.
 
சிங்கப்பூரை விட்டு வந்ததில் எனக்கிருக்கும் ஒரே பெரிய வருத்தம் நூலக வசதி மட்டுமே. Library@Clementi Mall

பசுக்களின் மருத்துவர்

 

‘அப்பா, கண்ணு ப்ரவுன் கலர்ல இருக்குமே அதுப்பா’

‘எந்தக் கண்ணுமே ப்ரவுன் கலர்ல இருக்காது. எல்லாமே வெள்ளையா தான் இருக்கு’

‘இல்லப்பா, பேர் கூட புதுசா இருக்குமேப்பா’

‘ரங்கநாயகியா?’

‘இல்லப்பா, லட்சுமணன்?’

‘ஏய், லட்சுமணன் தோல் தாண்டா ப்ரவுன். கண் எங்கடா ப்ரவுன்?’

‘சரி போப்பா. அப்ப சீதாவா?’

‘சீதா கலரே வெள்ளைதானடா?’

‘பரமசாமி?’

‘சும்மா பொய் சொல்லாத. பரமசாமி வெள்ளையும் கருப்பும் இல்லையா?’

‘போப்பா, நீ சீட் பண்ற.’

பலராமன் (எ) வேத நாராயணன் (எ) யதீந்திர சரணன்  என்னும் பெயர்களால் அழைக்கப்படும் ஐந்துவயதுக் கிருஷ்ணன் கேட்க, அவனது தந்தை வீரராகவன் பதில் சொல்ல, நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது ‘அழகிய மணவாளன் ஆநிரைக் கூட’த்தில் வாழ்ந்துவரும் உடல் ஊனமுற்ற பசு / காளை மாடுகளைப்பற்றி. 

வீரராகவன் என்னும்  இளைஞர் ஶ்ரீரங்கத்தில் மேற்சொன்ன பெயரில் கோசாலைகளுக்கெல்லாம் கோசாலை நடத்தி வருகிறார். அதென்னவென்று கேட்கிறீர்களா? அவர் நடத்துவது கோசாலை அன்று. கோ-சானிடோரியம். காயம் பட்ட, உடல் ஊனமுற்ற, சொந்தக்காரர்களால் கைவிடப்பட்ட ஆநிரைகளை வைத்து அவைகள் உடல் சொஸ்தம் ஆகும் வரையிலும் வைத்துப் பாதுகாக்கிறார். உடல் நலம் அடைந்தவுடன் சொந்தக்காரர்கள் கேட்டால் மாடுகளைத் திருப்பித் தந்துவிடுகிறார். சில நேரங்களில் உடல் நலமில்லா மாடுகளுக்குப் பதிலாக நல்ல நிலையில் உள்ள மாடுகளையும் அளிக்கிறார். ‘மாடுகள்ளாம் கோசாலைல இருக்கலாமா? வீடுகள்ல தான் இருக்கணும்’ என்று பஞ்ச் டயலாக் வேறு. 

இந்த நவீன விவேகானந்தர் படிப்பு வராமல், வேறு வழி இல்லாமல் இந்த வேலையைச் செய்யவில்லை. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பயின்று, வேலை செய்து, தர்ம பரிபாலனமே உயர்வானது என்பதை உணர்ந்து 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் திரும்பிக் கோசம்ரக‌ஷணை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவருக்குத் தற்போது வயது 30.    

அன்னாருடன் ஒரு நாள் செலவிட எண்ணி ஶ்ரீரங்கம் சென்றிருந்தேன். பெருமாள் சேவை முடியும் முன்னர் கைப்பேசியில் அழைப்பு. ஶ்ரீரங்கத்திற்கு அருகில் மேலூர் சாலையில் ஒரு தோப்பில் பசுமாடு ஒன்றுக்கு முன்னங்கால்கள் இரண்டும் முறிந்துவிட்டன, உடனே வரவும் என்று செய்தி. விரைந்தோம். 

நெஞ்சை உலுக்கும் காட்சி. முன் கால்கள் இரண்டும் முறிந்த நிலையில் எழுந்திருக்க முடியாமல் பசு வெயிலில் படத்திருக்கிறது. அச்சமின்றித் தொட்டுத் தூக்குகிறார். உடனே அப்பகுதியில் கால் நடை  மருத்துவரை அழைக்கிறார். அவரும் இவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு வந்து மாட்டைக் கவனிக்கிறார். வலி குறைய ஊசி போடுகிறார். ‘இதுக்கு வைத்யம் நாமக்கல் காலெஜில தான் முடியும். ஒரு கால்னா ப்ளேட் வைக்கலாம். ரெண்டும் போயிருச்சு. வெட்டிட்டு கட்டைக் கால் வெக்கணும்’ என்று அறிவுரை வழங்கும் அவர், மாட்டுச் சொந்தக்காரர் தந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல் செல்கிறார். இத்தனைக்கும் அரசு மருத்துவர். அடுத்த சில நிமிடங்களில் மாடு உறங்குகிறது. கன்று பால் குடிக்க மடியில் வாய்வைக்கிறது. நம் மனம் வலிக்கிறது.

அடுத்த அரை மணி நேரத்தில் 25 செல் பேச்சுகள். பலரையும் தொடர்புகொண்டு மறு நாள் காலையில் பசுவை நாமக்கல்லுக்கு ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்கிறார். மாட்டின் சொந்தக்காரர்களையும் அதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறார். ‘எங்க வீட்டுல ஒரு உறுப்பினர்ங்க மாடு. அதுக்கு என்ன வேணா செய்யலாம்’ என்று கண்ணிர் மல்கக் கைகூப்புகிறார் சொந்தக்காரர்.

மாடு படுத்திருக்கிறது. நீர் வைக்கிறார்கள். அருந்த மறுக்கிறது. வெயிலின் கொடுமை வேறு. கன்று தாயை நக்கிக் கொடுக்கிறது. தாய் கன்றைக் கருணையுடன் பார்க்கிறது. மவுனப் பரிமாற்றம் நடக்கிறது.

நான் அவருடன் வீடு திரும்புகிறேன். உணவுக்குப் பின் என் நண்பரும் நாட்டு மாடுகளின் காதலருமான திருச்செங்கோடு கொக்கராயன் பேட்டை சசிகுமாரை அழைக்கிறேன். அடுத்த 3 மணி நேரத்தில் ஶ்ரீரங்கத்தில் வந்திறங்குகிறார் சசிகுமார். அவருடன் கோசாலை செல்கிறோம். மணவாள மாமுநிகள் திருவரசை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் உள்ளது கோசாலை.

‘திமில்’ நூலில் ஆசிரியரான சசிகுமார், வீரராகவனைப் பேட்டியெடுக்கிறார். நான் குறிப்பெடுக்கிறேன். 

வீரராகவன் சொல்வது: 

‘மாடுகள் தாமாகச் சென்று மேய்ந்து வர 4-5 ஏக்கர் மேய்ச்சல் நிலம். மாடுகளை ஒரே இடத்தில் அமர்த்தி உணவு கொடுத்தால் அவற்றுக்கு மேலும் உடல் உபாதைகளே வரும். அவை நடை பயில வேண்டும். இதுவரை 120 மாடுகளைக் காப்பாற்றியுள்ளோம். சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு ஊனம் அடையும் மாடுகள் அதிகம் காப்பாற்றப் பட்டுள்ளன. வீடுகளில் உள்ள மாடுளுக்கு நோய் ஏற்பட்டால், அவற்றைக் கவனிக்கச் சொந்தக் காரர்களால் இயலவில்லையென்றால் அவற்றையும் நாங்கள் பாதுகாக்கிறோம். வெட்டுக்குப் போகாத வகையில் மாடுகளின் இறுதிவரை காப்பாற்றுகிறோம். 

மாடுகளிடம் இருந்து நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. பால் கறப்பதில்லை. ஒருவேளை மாடுகள் பால் கறக்கும் நிலையில் இருந்தால் அவற்றின் கன்றுகளே அவற்றைக் குடிக்கின்றன. நாங்கள் பால் வியாபாரம் செய்வதில்லை.

வேத அத்யயனம், கோ சம்ரட்சனை – இவை நமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள். வேத அத்யயனம் செய்யவில்லை. மாடுகளையாவது பாதுகப்போமே என்று செயல்பட்ட வருகிறேன்.

முடியாத மாடுகள் தாமாக இறக்கும் வரை பாதுகாக்கிறேன். இவை அனைத்தும் ‘www.vedics.org’ என்னும் அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.’

நாம் செய்யக் கூடியவை யாவை? 

வீரராகவன் நம் ஹிந்து சமுதயத்தின் முக்கிய ஒளி. அந்த ஒளிக்கு நாம் எண்ணெய் வார்க்க வேண்டும். சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. ‘நான் இராமானுசன்’ நூல் விற்பனையில் ஒரு பகுதியை வேத சம்ரக்ஷணத்துக்கும், மீதியை இவரது கோசாலைக்கும் அளித்திருந்தேன். இன்னும் ஒரு முறை அவ்வாறு செய்திருந்தேன். சிறிய கைங்கர்யம் தான் என்பதை உணர்கிறேன். இதைப் படிப்பவர்கள் மேலும் உதவிகள் செய்யலாம். நூலாசிரியர்கள் தங்கள் நூல்களின் விற்பனைத் தொகையில் ஒரு பகுதியை கோசாலைக்கு அளிக்கலாம். மாதத்திற்கு இவ்வளவு என்று ஒதுக்கி, ஆண்டின் இறுதியில் ஒரு பெரும் தொகையாக அளித்து உதவலாம். வைக்கோல், புண்ணாக்கு, வேப்பெண்ணெய் என்று தந்து உதவலாம்.

அவரது மாடுகளுக்கு மேய்ச்சல் வெளி தேவை. நிலம் இருப்பவர்கள் அளிக்கலாம். குறைந்த விலைக்கு விற்கலாம்.  தங்களின் பிறந்த நாள், பிள்ளைகளின் பிறந்த நாள் என்று கணக்கு வைத்து மாடுகளுக்கான செலவைத் தந்து உதவலாம். பெரியோரின் ஈமக்கிரியைகளில் கோதானம் என்று உண்டு. அதனை இவரது கோசாலைக்கு அளிக்கலாம்.  விடுமுறைகளில் பிள்ளைகளை அவரது கோசாலைக்கு அழைத்துச் சென்று கன்றுகளுடன் பழகவிடலாம். நமது பாரம்பர்யத்தின் தொடர்ச்சிக்கான முதல் படி அது.

இவர் www.pracharam.in என்ற தளத்தின் மூலம் சம்பிரதாயம் செழிக்க நூல்கள் வெளியிடுகிறார். குழந்தைகளுக்கு வகுப்புகள், ஒன்றிணைவுகள் செய்துவருகிறார். இவரை அழைத்து Summer Camp முதலிய செய்யலாம். 

இவரே முன்னர் அடியேனுடன் ஜடேரிக்குப் பயணித்து அங்குள்ள திருமண் தயாரிப்பாளர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து திருமண் பெற்று, விற்பனை செய்து, லாபத்தை ஜடேரி மக்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

சில காணோளிகள் இங்கே: 

 

 

 

பி.கு.: 1. தனது கணவரின் இந்தப் பெரும் சேவைக்கு உறுதுணையாக உள்ள ஶ்ரீமதி. ஜானகி வீரராகவன் நமது வணக்கங்களுக்கு உரியவர். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவரும் கோசம்ரக்‌ஷணத்தில் ஈடுபட்டிருப்பது போற்றுதலுக்குறியது. 

2. நாமக்கல் கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளதால், பசுமாட்டைத் தனது கோசாலையிலேயே வைத்து அறுவை சிகிச்சையும் செய்துள்ளார் அவர். முன்னங்கால்கள் இரண்டும் நீக்கப்பட்டுள்ளன. தற்போது மாடு தேறிவருகிறது.

வீரராகவனை இந்த எண்ணில் தொடர்புகொள்ளலாம்:  +91 9655219245

பிற சுட்டிகள்:

Home