‘மேல படாத. போ அன்னண்ட. விழுப்பும் தீட்டுமா பாட்டின்னு என்ன ஈஷிக்க வேண்டியிருக்கு?’
பாட்டியின் சொற்கள் காதில் ரீங்காரமிடுகின்றன. அப்போதெல்லாம் பாட்டியை வேண்டும் என்றே வம்புக்கிழுப்பதற்காக மடியாக அமர்ந்திருக்கும் அவர் அருகில் சென்று அவர் உடுத்தியிருக்கும் நார்மடிப் புடவைக்கு அருகில் நான் அணிந்திருக்கும் டிரவுசர், சட்டை தென்படுமாறு நின்றால் மேற்சொன்ன ஆசீர்வாதங்கள் கிட்டும். நான் நீராடிவிட்டு வந்தாலும் அவர் மீது பட முடியாது.
பாட்டியின் இன்னும் சில பேச்சுக்களும் மனதில் மீண்டும் ஒலிக்கின்றன.
- ‘குதிகால் ஈரமாகாம என்ன கால அலம்பிண்டிருக்கே? சனீஸ்வரன் காத்துண்டிருக்கான் ஒட்டிக்கறதுக்கு. போய் நன்னா கால அலம்பிண்டு வா’
- ‘ஸ்கூல்லேர்ந்து வந்ததும் வராததுமா விழுப்போட தளிகைப் பண்ற உள்ளுக்குப் போகாத. கை, கால அலம்பிண்டு வேற சட்ட போட்டுண்டு வா. கூடத்துலயே நில்லு. அம்மா சாதம் போடுவா.’
- ‘ஆத்துக்கு வெளில போயிட்டு வந்தாலே கால அலம்பிக்கணும். நீ வெளி நாட்டுக்குப் போயிட்டு வந்திருக்க. தளீப்பண்ற உள்ளுக்கு வரணும்னா தீர்த்தமாடிட்டு பஞ்சகவ்யம் சாப்டுட்டு வா.’
- ‘நன்னாருக்கு. வராத மனுஷன் வந்திருக்கார். இடம் பண்ணி எல போடாம இதென்ன கையில குடுக்கறது? நன்னா ஒக்காண்டு சாப்பிட வேண்டாமோ?’
உணவு உண்ண இலை போடும் முன், இடத்தை நீர் தெளித்து சதுர வடிவில் சுத்தம் செய்வது ( இடம் பண்ணுவது) மிக முக்கிய நிகழ்வு. அது தான் மரியாதை. இடம் பண்ணாத இடத்தில் உண்ணக்கூடாது என்றொரு வழக்கம் உண்டு. ஒரு வயதுக் குழந்தைகளுடன் விளையாடும் கூட, அந்தக் குழந்தையின் உள்ளங்கையில் கிச்சுகிச்சு மூட்டும் விதமாக ‘இடம் பண்ணி, எல போட்டு, மம்மு போட்டு, நெய் குத்தி, ஆ அம், ஆ அம்..’ என்று குழந்தையைச் சிரிக்கச் செய்து உணவு ஊட்டுவது வழக்கம் ( ஸ்புன் ஃபீடிங் எல்லாம் ஏற்பட்டிராத பொற்காலம் அது).
உணவு உண்டு எழுந்தபின்னர் இலையை எடுத்து, உணவு உண்ட இடத்தைப் பசுஞ்சாணம் கொண்டு சுத்தப்படுத்துவர். தற்போது மாப் என்னும் நவீன உபரணம் உள்ளது. ஆனால் பசுஞ்சாணம் இல்லை. மொசைக், விட்ரிஃபைட் டைல்ஸ்களில் சாணம் எடுபடாது என்பதால் சில சமயங்களில் மஞ்சள் பொடி கொண்டு சுத்தம் செய்கின்றனர். அதுவும் எப்போதாவது.
விருந்தாளிகள் வந்தவுடன் நீர் உபசாரம் செய்யும் போது கூட, அவர்களின் உள்ளங்கைகளில் தண்ணிரை வார்த்து, அவர்கள் கையைச் சுத்தம் செய்துகொண்டபின்னர் டம்ளர் நீரைக் கொடுப்பது என்று ஒரு வழக்கம் இருந்தது. தற்காலத்தில் அவ்வாறு செய்தால் ‘மடிசிஞ்சி’ என்று நகைக்க வழியுண்டு. அப்படி ஒரு வழக்கம் இருந்ததே பலருக்கும் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
பாத்திரம் அலம்பும் போது சாணி, புளி போட்டு ‘சித்துப் பண்ணுவது’ என்றொரு வழக்கமும் இருந்தது. ‘சுத்தம் பண்ணுவது’ என்று இருந்திருக்கும் என்று தோன்றூகிறது. தற்போதைய நாகரீக பீங்கான் பாத்திரங்களில் இதைச் செய்ய முடியாது. பொணாய்க்கலன், சேஷம் என்று உணவு தயாரித்த, சேமித்து வைத்த பாத்திரங்களை வகைப்படுத்துவர். இப்போது இதெல்லாம் கூகுள் ஆச்சார்யனிடம் தான் கேட்க வேண்டும்.
பெரியவர்கள் இருந்தால் அவர்களிடமிருந்து சில அடிகள் தள்ளி நிற்பது ( தற்காலத்தில் Social Distance), பெரியவர்களை விழுந்து சேவிக்கும் போது கூட அவர்கள் மீது படாமல் இருப்பது என்பது மாதிரியான வழக்கங்களும் இருந்தன. பெண்கள் தொடர்பான Social Distance இன்னமும் அதிகம்.
குழந்தை பிறந்தால் விருத்தி தீட்டு என்று பல விலக்கங்கள், துக்க நிகழ்வென்றால் உறவு முறையைப் பொறுத்துத் தீட்டு நாட்கள் அமையும். பின்னர் புண்யாகவாசனம் என்று வீட்டைச் சுத்தப்படுத்தும் வைதீக கர்மா. வீடு முழுவதும் புனித நீர் தெளிப்பு என்று பலதும் இருந்தன. தற்போதும் சிலது பின்பற்றப்படுகின்றன.
ப்ளாஸ்டிக் என்னும் அசுர வஸ்துவை இல்லங்களில் சேர்ப்பது இல்லை. ‘ப்ளாஸ்டிக் டப்பால பட்சணம் குடுத்திருக்கா’ என்றால் அனாசாரம், பட்சணத்தை உண்ண மாட்டேன் என்று பொருள். எப்போதும் வாழை இலை அல்லது வாழை இலைச் சறுகுகள். கோவிலில் இருந்து பிரசாதத்தைக் கொண்டு வந்தாலும் அது ஒயர் கூடை என்னும் ப்ளாஸ்டிக் பையில் வந்தால் அது வாழை இலைச் சறுகில் சுற்றப்படாமல் இருந்தால் ஆசாரம் கிடையாது. எனவே உண்பதில்லை என்றொரு காலம் அது.
அம்மை முதலான தொற்று வியாதிகள் வந்தால் வீட்டின் வாசலில் வேப்பிலையைக் கட்டி வைப்பர். அந்த வீட்டிற்கு யாரும் செல்லாமல் சூசகமான Social Distance.
பூவோடு நேர்ந்த நாரும் மணம் பெறும் என்றே பழமொழி. தற்போது நூலும் மணம் பெறும் என்று கொள்ள வேண்டியுள்ளது. கோவில்களில் தெய்வங்களுக்குப் பூ வாங்கிச்சென்றால் இலையில் கட்டியே கொடுத்தனர். ப்ளாஸ்டிக் அசுரன் நுழைந்தபின் அந்த அனாசாரமும் தெய்வங்களையும் தொற்றிக்கொண்டது. நம்மைக் கெடுத்து நம்மைக் காக்கும் தெய்வங்களையும் கீழிறக்கினோம். கேட்டால் மாடர்ன் என்று அலட்டல்.
நீர் அருந்தும் போது டம்ளர் உதட்டில் படாமல் ‘தூக்கி சப்பிடுவது’, உள் பாத்திரம் என்னும் சமையல் உள்ளில் மட்டுமே இருக்கும் பாத்திரங்கள் ( ‘உள் பாத்திரத்த வெளில கொண்டு போகாத’) , வெளிப்பாத்திரம் என்று சமையல் அறைக்கு வெளியே மட்டுமே உள்ள பாத்திரங்கள், இவை இரண்டையும் இடிக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த காலம் இருந்தது.
அப்போதெல்லாம் கொரோனா இல்லை. #Corona
இந்த அனுபவம் எனக்கும் நிறைய உண்டு. அது ஒரு பொற்காலம். சிரார்த்த காலம் பற்றியும் சற்று சொல்லி இருக்கலாம். வாசித்து மகிழ்ந்தேன்
LikeLike
சிராத்தம் பற்றியும் எழுதியுள்ளேன்.
LikeLike
மிக்க மகிழ்ச்சி… வாய்ப்பு உள்ள போது அனைத்து பதிவுகளும் வாசிக்கிறேன்.
LikeLike