உங்களுக்கு உண்மையிலேயே ஒர்க் ஃப்ரம் ஹோம் கணவர்கள் மீது அக்கறை உண்டா? மேலே வாசியுங்கள்.
கொரோனா இரண்டாவது அலை வந்துள்ளது கஷ்டம் தான் பிராணவாயுவுக்கே ததிகிணத்தோம் தான். இந்த பயம் எல்லாம் இருக்கிறதுதான். இதையெல்லாம் விடப் பெரிய பயம் ஒன்று உண்டு. அதுதான் கபசுர பயம்.
காலை எழுந்தவுடன் அது காஃபியா அல்லது கபசுர நீரா என்று தெரியாத அளவிற்குப் போய்க்கொண்டிருக்கிறது. ‘இது காஃபி தானா?’ என்று கேட்க பயம். ஒரு வேளை அது காஃபியாக இல்லாமல் கபசுரக் குடி நீராக இருந்தால் ‘உனக்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு? நான் போடற காஃபி க.சு.கு.நீர் மாதிரியா இருக்கு? இந்த அழகுல பேப்பர் வேற’ என்று மோவாக்கட்டையை இடித்துக் கொண்டு சென்றால் என்ன செய்வது? காலை டிஃபனுக்குத் தாளம் போட வேண்டுமே என்கிற பயம் இருக்கிறது.
ஒரு வேளை அது நிஜமாகவே காஃபியாக இருந்து ‘இன்னிக்கி ஒரு நாளாவது க.சு.கு.நீர் வேண்டாமே? ரெண்டு ஊசி போட்டாச்சே’ என்று உளறிவிட்டால் என்ன செய்வது? மத்தியான தளிகை சாப்பாட்டுக்கும் பிரச்னை வந்துவிடும். வீட்டில் டிஃபன், சாப்பாடு இல்லை என்றால் வெளியில் செல்லவும் வழி இல்லை. முழு அடைப்பு என்று பிராணனை வாங்குகிறார்கள்.
இதாவது போகட்டும், மற்ற நேரங்களிலாவது நல்லதாகக் காஃபி சாப்பிடலாம் என்றால், இந்த வாட்ஸப் என்கிற வஸ்து வந்து சகலரின் கழுத்தையும் அறுக்கிறது. மாங்கொட்டை கறமிது, காயவைத்த மாங்காய்த் தோல் சாத்துமுது, புளியங்கொட்டைப் பொடி, கடுக்காய் துவையல், அத்தி வேர் கஷாயம், சபீனா சாம்பார், பவழமல்லி பச்சடி, பனை நுங்குத் தோல் கஷாயம், நெல்லி மரப்பட்டை சாதம், கோலப்பொடி ரஸம் என்று என்ன கண்றாவியையாவது யாராவது எழுதி அனுப்பிவிடுகிறார்கள். இந்த அழகில் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேறு. ஊரடங்கு. சாப்பிடவும் முடியாது. சாப்பிடாமல் இருக்கவும் வழி இல்லை. ஹவுஸ் ஹஸ்பண்ட் நிலை என்ன என்று யாருக்காவது கவலை உண்டா?
இதெல்லாம் முடிந்து ஒருவழியாக ராத்திரி சாப்பாட்டுக்கு உட்கார்ந்தால் ‘எதிராளாத்து மாமி சொன்னா. பிரண்டைத் துகையலையும், கொட்டாங்குச்சிப் பொடி பச்சடியும் சேர்த்து சாப்பிட்டா சளி, தும்மலே வராதாம்’ என்று புதியதாக ஒரு பிரம்மாஸ்திரம் வந்து இறங்குகிறது.
இப்போதெல்லாம் ஆக்ஸிஜனுக்குப் புதிய வழிகள் எல்லாமே கூட வாட்ஸப்பில் வருகிறது. என்னவோ திரிகுண பிராணாயாமம் என்று சொல்லி, முதுகை அஷ்ட கோணலாக வளைத்து, கையால் முதுகை வளைத்துச் சுற்றி வந்து வயிற்றைத் தொட்டவாறு மூன்று நிமிடம் மூச்சை இழுத்துப் பிடித்து வேகமாக வெளியிட்டால் உடல் தானே ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துகொள்ளும் என்று யாரோ புண்ணியவான் எழுத, ‘இந்தட்சணம் பண்ணினாலே ஆச்சு, நீங்கதான் ஆர்ட் ஆஃப் லிவிங்ல பிராணாயாமம் எல்லாம் பண்றேளே’, இதையும் பண்ணிப் பாருங்கோ’ என்று மிரட்டி, முதுகுப் புறமாகச் சென்ற கையை மறுபடியும் எடுக்க முடியாமல் போய், பையன் வந்து கையைப் பிடித்து நார்மல் பொசிஷனில் விட வேண்டிய நிலையெல்லாம் ரொம்ப ஓவர்.
இவை தவிர அவ்வப்போது சிறூதானியப் பைத்தியம் பிடித்து ஆட்டி, கம்புக் களி, சிவப்பரிசிக் கஞ்சி, சோள உப்புமா, குதிரைவாலி பொங்கல், கேவுரு கூழ் என்று திடீர் திடீர் என்று மாறும் பெட்ரோல் விலை மாதிரி வந்து விழுகிறது. அவ்வப்போது இஞ்சி, மிளகு, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, வெட்டிவேர் பட்டை, பாகல் இலை என்று இரட்டை இலை தவிர எல்லா இலைகளையும் போட்டு அறைத்துக் கொதிக்கவைத்து ‘குடிச்சாலே ஆச்சு’ தலைகீழாக நின்று அடம் பிடித்தவளிடம் ‘இதுக்கு என்ன பேர்’ என்றால், ‘ இன்னும் வெக்கல. நீங்க சாப்ட்ட அப்பறம் என்ன நடக்கறதுன்னு பார்த்துண்டு புண்யாகவாசனம் பண்ணி பேர் வெக்கலாம்னு இருக்கேன்’ என்பவர்களை எந்தச் சட்டத்தில் கொண்டுவருவது?
வாட்ஸப்பைப் பார்த்தோமா வேறு வேலைக்குப் போனோமா என்று இல்லாமல் இதென்ன சாப்பாட்டுப் பயங்கரவாதம்? நிஜமாகவே இதையெல்லாம் செய்து சாப்பிடுகிறார்களா என்ன? அவர்கள் வீட்டுக் கணவன்மார்கள் நிலையை நினைத்துக் கண்ணீருடன் அமர்ந்திருந்தேன்.
‘போறுமே, குதிரைவாலி பொங்கல் + தேங்காய் நார் பச்சடி நன்னாயிருக்குன்னு சொன்னா போறாதோ? இதுக்கெல்லாம் ஆனந்தக் கண்ணீர் விடணுமான்ன?’ என்று கேட்பவளை என்ன செய்வது?
இந்த விஷயங்களில் உங்கள் அனுபவம் என்ன? சொல்லுங்களேன். ஒர்க் ஃப்ரம் ஹோம் கணவர்களுக்குப் பயன்படும்.
Work from home என்ற பெயரில்…சுடச்சுட…கிடைக்கிறதே…என்று சந்தோஷப்படுங்கள்! இல்லாட்டி..காலங்காத்தால…4 மணிக்கே…எழுந்து…சமைச்ச….சாம்பார், ரசம், பொரியல், கூட்டு…..இல்லன்னா….ஏதாவது ஒரு கலந்த சாதம்….இல்லன்னா…இட்லி, தோசை…இப்படி ஏதாவது ஒண்ணுதான்…லஞ்ச்சுக்கு…கெடைச்சிருக்கும்!
LikeLike
யாதார்தத்தை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.
LikeLike