‘பொழச்சுக் கெடந்தா நாளைக்கு வரேன்’.
நமது பேச்சு வாக்கில் நடைபெறும் சாதாரண வழக்கு இது. ‘நாளை’ என்பது அநித்யம் என்பதை மீண்டும் மீண்டும் நமது உள்ள அடுக்குகளில் பதிய வைத்துக் கொண்டே இருந்த உத்தி என்று தோன்றலாம். அதைப் போலவே, அடிக்கடி கடும் பஞ்சங்களின் தாக்கத்திலேயே இருந்ததால் ‘யார் இருப்பார், யார் போவார், எப்போது காண்போம்’ என்னும் தகவல் தெரியாததால் வந்துள்ள வழக்காகவும் இருக்கலாம்.
இன்றைய நிலையில் எதையுமே சொல்வதற்கில்லை. பிழைத்திருந்தால், அப்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப, இருக்கும் நபர்களுக்கு ஏற்க சிந்திக்கலாம் என்கிற எண்ணம் பலரிடம் தற்சமயம் காணப்படுகிறது. என்னிடமும் தான்.
பேராசிரியர் ஒருவரிடம் உரையாடினேன். அவர் சொன்னது: ‘இப்ப இருக்கோம். நாளைக்கு இதெல்லாம் முடிஞ்சப்பறம் யார் இருக்கமோ, ஒரு போர் வந்து நாடே துவம்ஸம் ஆனப்புறம் எப்பிடி இருக்குமோ அப்பிடி இருக்குமோ என்னவோ. அப்ப ஊர் எப்பிடி இருக்கோ, அதுக்கு ஏத்த மாதிரி வாழ்ந்துக்கணும். இன்னிக்கி, இந்த அளவுக்கு இருக்கோம். இது தான் உண்மை. நாளைக்கி sex ratio எப்பிடி இருக்கும்னு தெரியல்ல. இன்னிக்கி இதைக் கடந்து போகணும். அப்புறம் ஒரு புது உலகம். இப்ப நடக்கற உண்மையெல்லாம் அப்ப இருக்க வாய்ப்பு இருக்கான்னு தெரியல்ல. பார்ப்போம்’ என்றார்.
வங்கிகளில் கடன் வைத்துவிட்டுக் காலமாகும் இளம் வயதினரின் வாரிசுகள் என்ன செய்வார்கள்? இவர்களுக்குச் சாட்சிக் கையெழுத்து போட்டுள்ளவர்கள் என்ன ஆவார்கள்? வங்கிகள் என்ன நிலை எடுக்கப் போகின்றன? நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது.
35 வயதில் 80 லட்சம் வீட்டுக் கடன் வைத்துவிட்டுக் கொரொனாவிற்குப் பலியான ஐ.டி.ஊழியரின் மனைவி, பிள்ளைகளின் நிலை என்ன? இந்தக் கடனை என்ன செய்வது? யார், எப்படி அடைப்பது? அரசு என்ன செய்ய வேண்டும்? பெரும் குழப்பமாகவே உள்ளது.
திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன தம்பதி. கணவன் தலைவலி என்று படுத்தான். ஒரே நாளில் காணாமல் ஆனான். அந்தப் பெண் செய்வது யாது? அவள் இன்னும் வாழவே துவங்கவில்லை. இந்தப் பெண்களின் நிலை? இருவரின் பெற்றொரின் நிலை? ஒருவேளை அந்தப் பெண் கருவுற்றிருந்தால்? திடீரென்று என்ன மாதிரியான ஒரு உலகத்திற்கு வந்துவிட்டோம்.
பெரியவர்கள் போய்ப் பிள்ளைகள் வாழ்வது ஓரளவு சாத்தியம். 23 மற்றும் 24 வயதுப் பிள்ளைகள் இருவரைத் தொலைத்த 55+ வயதுத் தம்பதிக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது? என்ன கேடு இழைத்தார்கள் இவர்கள். மிச்சம் மீதி இருக்கும் புதிய உலகத்தில் இவர்கள் இருந்தால், எப்படி வாழ்வது? அன்றாட வாழ்க்கை நரகமாகாதா? இந்த இடத்தில் ஆன்மீகவாதிகளின் பங்கு என்னவாக இருக்கும்? ஆன்மீக போதகர்கள் அறிவுரை சொல்லும் நிலையில் இருப்பார்களா? அணுகக்கூடிய ஆன்மீக போதகர்கள் மிச்சம் இருப்பார்களா? தெரியவில்லை. கூட்டாகச் சிந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஒரு வேளை அதிரடியாக நாஸ்திக சமுதாயமாக மாறிவிடுவோமோ? எதிலும் பற்றில்லாத ஹிப்பி சமுதாயம் ஏற்படுமோ? உலகம் கொதி நிலையின் உச்சத்தில் இருந்த 1960களுக்குச் சென்றுவிடுமோ ? நாஸ்திகவாத நாடுகள் வாழ்ந்தனவா? வாழ்வது போல் மேலேறி வீழத்தானே செய்தன? அடக்குமுறை, வன்முறை, பட்டினி.. இவை எப்போதுமே இல்லாத நாஸ்திகவாத நாடுகள் உண்டோ? பட்டினியே இல்லாத ஆஸ்திக நாடுகள் உண்டோ? ஜன நாயகம் மட்டுமே சோறு போடுமா? வல்லூறுத்தனங்கள் அற்ற ஊடகங்கள் உள்ள ஜனநாயகம் ஒரு வேளை மக்களைக் காக்கலாம். சமுதாயச் சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டாகச் சிந்திக்க வேண்டும்.
தத்துவங்களின் வீழ்ச்சியின் துவக்க நிலையோ இது? அன்னியப் படையெடுப்பில் ஒரு சமூகம் அழிந்தது. பஞ்சங்களில் சில லட்சங்கள் சரிந்தன. இந்தக் கொரோனாவில் சமூக, மத, மொழி, இன, சாதி, பாலின வேறுபாடுகள் எதுவும் இல்லாத பேரழிவின் மறுபக்கம் எப்படி இருக்கும்? பார்க்க எஞ்சியிருப்போமா?
மேலும் எழுத மனம் வரவில்லை. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது. அரவணைப்பு மற்றும் அன்பு. Empathy. அது ஒன்றுதான் இன்றைய தேவை.
மேலும் சிந்திப்போம்.
கோதுமைப் பயிரை மேயும் வெட்டுக்கிளிகள் போன்று மனிதர்களை மேய்கின்றன வைரஸ்கள். அறிவியல் ஊடகங்களில் எழுதப்படும் கோவிட் செறிவு படுத்தும் செயல்திட்டங்கள் நம்பிக்கையைக் குலைக்கின்றன. எதுவும் செய்வதற்கில்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருப்போம். இக்காலத்தைக் கடப்போம்.
LikeLike