யோகா பற்றியெல்லாம் பெரிய அக்கறை இல்லாதவனாகவே தற்போது வரை வாழ்க்கையைக் கடத்திவிட்டேன்.
ஏதோ, யாரோ, யாருக்காகவோ சொன்னதை, யாரோ பொழுது போகாதவர்கள் செய்கிறார்கள். அந்த நேரத்தில் நல்லதாக ஒரு புஸ்தகம் வாசிக்கலாம். நெல்லி மரத்தில் ஏறி வனதுர்க்கை வருகிறாளா என்று பார்க்கலாம். கிச்சி, விஸ்கியோடு பேசிக்கொண்டிருக்கலாம் என்கிற எண்ணம் தான் பள்ளிப் பருவத்தில் இருந்தது.
நெய்வேலியில் தாஸன் அவ்வப்போது யோகா செய்வதைப் பார்த்து, ‘நேராக நிற்காமல் தலை கீழாக நிற்கவா இவர் விடியற்காலையில் எழுகிறார்?’ என்று அவரைப் பார்த்துப் பரிதாபப் பட்டதுண்டு. அவ்வப்போது தான் செய்துவரும் புதிய ஆசனங்களைப் பற்றிச் சொல்வார். புரியாவிட்டாலும் தலை ஆட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இல்லாவிட்டால் “’சிரஸாஸனா’ – ஸ்பெல்லிங் சொல்லு” என்று எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிவிடுவார் என்பதால் தலையாட்டுவதைப் பழக்கிக் கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு உதவுகிறது என்பது நிங்கள் அறிந்ததே.
அமெரிக்கா சென்றிருந்த போதெல்லாம் ‘ஐயங்கார் யோகா’ என்று மாமிகள் யோகா செய்வதைக் கண்டு ‘யாரோ பொழுது போகாத ஐயங்கார் மாமா கெழங்கட்டைக்கெல்லாம் யோகா சொல்லிக் குடுத்துட்டு, இப்ப எல்லாரும் யோகா பண்றேன்னு ஆடறதுகள்’ என்று நினைத்தது உண்மை. டெக்ஸாஸில் ஒரு முறை ‘ஐயங்கார் யோகா’ என்று ஒரு பலகையைப் பார்த்து, நல்லதாகத் தளிகையும் கிடைக்கும் என்று நம்பரைத் தட்டினேன். ‘Do you serve Iyengar lunch?’ என்று கேட்டு, அந்த அமெரிக்க மாமியிடமும் வாங்கிக் கட்டிக்கொண்ட பெருமை உண்டு. அதிலிருந்து யோகா மீது கோபம் தான்.
2004-5ல் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சில வாரங்கள் யோகா கற்றுக் கொடுத்தார். பயிற்சி முடிந்த பின்னர் அவர் 55 வயதானவர் என்று அறிந்து திடுக்கிட்டேன். யோகா செய்து எப்படியும் இளமையாகவே இருப்பது என்கிற வைராக்யத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து செய்து பின்னர் கழுதை கட்டெறும்பான கதை. பின்னர் யோகா, எக்ஸர்சைஸ் என்றால் காத தூரம். யோகா என்பது சினிமா நடிகைகள் செய்வது என்கிற எண்ணம் பல ஆண்டுகளாக மனதில் இருந்தது. ‘ஏதோ ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் போல’ என்கிற எண்ணம் இருந்தது.
பிரதமர் மோதியின் முயற்சியால் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்ட போது சிங்கப்பூரில் சீனப் பெண் பயிற்சியாளர் யோகா வகுப்பெடுத்தார். சேர்ந்த அனைவருமே இந்திய ஆண்கள் மற்றும் சீனப் பெண்கள். நான் சேரவில்லை. ஆனால், உலகமே வியக்கும் நம் நாட்டுப் பொக்கிஷத்தை நாம் செய்யவில்லையே என்று முதன்முதலில் தோன்றியது. பாரதம் குடி பெயர்ந்தேன்.
லாக்டவுன் வந்தது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்து இடுப்பு வலியும் சேர்ந்துகொண்டது. தாயார் காலமான நேரம். அதனால் மன உளைச்சல், கோபம் என்று பலதும் சேர்ந்து கொண்டன. அடிக்கடி தலைவலி. எப்போதும் வரும் வீசிங் பிரச்னை அவ்வப்போது. 2018 வரை ஒரு மணி நேரத்தில் 1500 சொற்கள் கொண்ட செறிவான கட்டுரைகள் எழுத முடிந்தது. 2019ல் குறைந்து 500 சொற்கள் என்று ஆனது. ‘வந்தவர்கள்’, ‘The Stalker’ என்று இரு நாவல்கள், ஆண்டாள் பற்றிய நூல் – இவை எல்லாம் அந்தரத்தில் நின்றன. ‘நெய்வேலிக் கதைகள்’ மட்டும் 2020ல் எழுதி 2021ல் வெளிவந்தது.
ஏப்ரல் 2021ல் திவாகர் அறிமுகமானார். Art of Living மூலம் ‘சுதர்ஸன் க்ரியா’ கற்க முடிவெடுத்தேன். உடற்பயிற்சி என்று எதுவுமே செய்ததில்லையே என்று சேர்ந்துகொண்டேன். ஆன்லைனில் வகுப்பு.
இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இடுப்பு, முதுகு வலிகள் இல்லை. இரண்டு மணி நேரமானாலும் தொடர்ந்து எழுத முடிகிறது. தேவையற்ற எதுவும் காதில் விழுவதில்லை. கொரோனா தொடர்பான / தொடர்பற்ற, அரசியல் தொடர்புடைய / தொடர்பற்ற எந்தச் செய்தியும், அது தொடர்பான விவாதங்களும் என் நினைவு இல்லாமலே என் செவிகளைச் சென்று சேர்வதில்லை. எந்த விதமான உபயோகமற்ற பேச்சோ, வாக்குவாதமோ எந்த ஊடகத்திலும் செய்வதில்லை. தெய்வாதீனமாக ஃபேஸ்புக் ப்ரொஃபைலை ஐந்தாவது முறையாக முடக்கினார்கள். ஆக, அதன் மூலமான சக்தி விரயமும் இல்லை. என் முயற்சி எதுவும் இல்லாமலே எனக்குத் தேவையற்ற எதுவும் என்னிடம் வந்து அடைவதில்லை. எந்தத் துக்கச் செய்தியும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மனம் ஒரு தனியான தளத்தில் உலவுவதை உணர்கிறேன். யாருக்கும் எந்தப் பிரச்னையிலும் எந்தச் சாய்வும் இல்லாமல், என் மனம் பாதிக்காத அளவில் அறிவுரை சொல்லவும் முடிகிறது. எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் என்பது தெரிவதில்லை. தோன்றும்போதெல்லாம் எழுத முடிகிறது.
மேற்சொன்னவற்றை நான் உணராமல் இருந்திருக்கிறேன். ‘உத்திரப் பிரதேசத்துல என்ன ஆகும். இப்ப ஏதோ பிரச்னையாமே’ என்று மனைவி கேட்டபோதுதான் பாஜகவில் ஏதோ குழப்பம் என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்த அளவிற்கு இந்தப் பயிற்சிகள் என்னை அன்றாட நிகழ் அரசியல் குழப்பங்களில் இருந்து விலக்கி வைத்துள்ளது என்பதை அறிந்துகொண்டேன்.
தற்போது வேறு புதிய பிறவியை அனுபவித்துவருகிறேன். காலை 8:30 முதல் மாலை 7:00 வரை அனேகமாக அலுவலக வேலை. அதன்மூலம் உண்டாகும் தலைவலி, சோர்வு. 7:30 – 8:30 க்ரியா, அதைத் தொடர்ந்து சிறிது தியானம். அன்றைய களைப்புகள், அயர்வுகள் அனைத்தும் பறந்துவிடுகின்றன. பின்னர் 10:00 மணி வரை எழுதுகிறேன், வாசிக்கிறேன்.
பெரியவனையும் சுதர்ஸன் க்ரியா பயிற்சி வகுப்பில் சேர்த்துவிட்டேன். அவனும் பலன் பெற்றுள்ளான்.
சர்வதேச யோகா தினத்தில் நீங்களும் இவ்வகையிலான நன்மைகளை அனுபவிக்க உங்களை அழைக்கிறேன். சுதர்ஸன் க்ரியா தொடர்புக்கு : திவாகர் – +91-94429-61540. என் பெயரைச் சொல்லுங்கள். பெருமாள் பெயரைச் சொன்ன புண்ணியம் கிட்டும். #Yogaday
பி.கு.: ‘வந்தவர்கள்’ நாவல் செப் 15 நிறைவுறும். பின்னர் விரைவில் வெளியீடு.
யோகா பற்றி அதன் நன்மைகள் பற்றி…படிப்பதிலும்…பிறருக்கு…அறிவுரை சொல்வதிலும் இருந்த…ஆர்வம்….அதைப் பயில்வதில் ….காட்டவில்லை! தங்கள் பதிவு…..உண்மையில்…அதுபற்றிய அரிய விளக்கம்…கொடுத்தது! நானும்…பயில ஆரம்பித்துவிட்டேன்!
LikeLike
தங்களின் சுயவேள்வி துவங்கியதற்கு பாராட்டுகள் .👏👏👏” 2021ல் திவாகர் அறிமுகமானார். Art of Living மூலம் ‘சுதர்ஸன் க்ரியா’ கற்க முடிவெடுத்தேன். உடற்பயிற்சி என்று எதுவுமே செய்ததில்லையே என்று சேர்ந்துகொண்டேன். ஆன்லைனில் வகுப்பு.”
LikeLike
தங்களின் சுயவேள்வி துவங்கியதற்கு பாராட்டுகள் .👏👏👏” 2021ல் திவாகர் அறிமுகமானார். Art of Living மூலம் ‘சுதர்ஸன் க்ரியா’ கற்க முடிவெடுத்தேன். உடற்பயிற்சி என்று எதுவுமே செய்ததில்லையே என்று சேர்ந்துகொண்டேன். ஆன்லைனில் வகுப்பு.”
LikeLike