உத்தமதானபுரம் தெரிகிறது தானே? உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்.
அந்த ஊருடன் சேர்த்து நான்கு அக்ரஹாரங்களைப் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் 17ம் நூற்றாண்டில் உருவாக்கினார். அவை கோபுராஜபுரம், அன்னிக்குடி மற்றும் திருமால்புரம்.
உத்தமதானபுரத்தில் ஸ்மார்த்த பிராமணர்கள் மற்றும் மூப்பனார் சமூகத்தவரையும், கோபுராஜபுரத்தில் ராயர் மற்றும் வன்னியர் சமூகத்தவரையும், அன்னிக்குடியில் தெலுங்கர் மற்றும் படையாச்சி சமூகத்தவரையும், திருமால்புரத்தில் வைஷ்ணவர்கள் மற்றும் அம்பலக்காரர்களையும் குடியமர்த்தினார் மன்னர். அக்கிரஹாரத்தின் மேற்குத் திக்கில் பெருமாள் கோவிலும், கிழக்குத் திக்கில் சிவன் கோவிலும் ஏற்படுத்தி, ஸ்மார்த்த, வைஷ்ணவ அந்தணர்கள் குடியிருந்து, வேதம், பிரபந்தம் என்று தழைக்க வழி செய்த மன்னர், நான்கு ஊர்களிலும் ஒரு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் கட்டுவித்து வைதீக நெறி தழைக்க வழி செய்தார்.
அத்துடன் நிற்காமல், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அக்ஷயதிருதி அன்று இந்த நான்கு கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் கோபுராஜபுரத்தில் உள்ள ஐயனார் குளத்திற்கு எழுந்தருளி உற்சவம் கண்டருள வேண்டும் என்று பணித்திருந்தார் அன்னாளைய மன்னர்.
கோட்டச்சேரி என்னும் கிராமத்தையும் நிர்மாணித்து, அங்கு வேத பண்டிதர்களைக் குடியமர்த்திய மன்னர், கோட்டச்சேரி வேத பண்டிதர்கள் அனைவரும் நான்கு ஊர்களிலும் உள்ள கோவில்களில் வேத பாராயணம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக அவர்களுக்கு முதல் தீர்த்தம் தரப்பட வேண்டும் என்றும் ஏற்பாடு செய்துவைத்திருந்தார்.
தற்போது ‘எல்லாரும் இன்னாட்டு மன்னர்’ என்னும் உயரிய கொள்கையால் கோவில்கள் மற்றும் அக்ரஹாரங்கள் அழிந்து, கோட்டச்சேரியில் வேத பிராமணர்கள் இல்லாமல் ஆகி, நான்கு அக்ரஹாரங்களிலும் மக்கள் ஊரை விட்டு வெளியேறி, கோவில் பாழானது.
திருமால்புரம் என்னும் ஊர் காலப்போக்கில் மால்புரம் என்று மாறி, தற்போது மாளாபுரம் என்று வழங்கி வருகிறது. பாபநாசத்திற்கு அருகில் உள்ளது இந்தச் சிற்றூர். மாளாபுரம் கோவில் பரசுராமரின் தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது. இதனைக் குறிக்கும் தனிப்பாடல் பாடல் ஒன்றும் உள்ளது:
அலைகடற் பிறந்த நங்கை
அணைகிலாப் பிறப்பில் மன்னர்
தலைமுறை இருபத்தொன்றும்
தகர்த்தற்கிரங்கி மாயோன்
கொலை பழி தீர்க்க எண்ணிக்
கோமள வல்லியோடும்
மலைநிகர் சான்றொர்ப் பேணி
மாளாபுரத்துள்ளானே
மாளாபுரம் அக்ரஹாரம் காலியாக, நிதி நிலைமை பாதாளத்தில் சரிய, கைங்கர்யம் செய்வதற்கும் ஆளின்றி, கோவில் செடிகள், புதர்கள் மண்டிய காடானது. இந்து அற நிலையத் துறையின் ‘ஒரு கால பூஜை’ திட்டத்தின் கீழ் தற்போது பெருமாளுக்குக் கைங்கர்யங்கள் நடந்து வருகின்றன.
பெருமாள் ஒரு பக்தையின் கனவில் தோன்றி, தன் கோவிலைக் கட்டுமாறு ஆணையிட, பல ஆண்டுகளாகச் சிதிலமாகவே இருந்த லக்ஷ்மீநாராயணப் பெருமாள் கோவில் தற்போது புனருத்தாரணம் செய்யப்பட்டு வருகிறது. உடையவருக்கும், ஆண்டாளுக்கும் தனியாக சன்னிதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கோவில் புனருத்தாரணத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.
பக்தர்கள் தங்களால் இயன்ற அளவிற்குப் பொருளுதவி செய்யலாம்.
தமிழகத்திற்கு மட்டும் நீட் விலக்கு வேண்டும் என்று மாநில அமைச்சர் மத்திய அரசிடம் கேட்டுள்ளார். தமிழர்கள் தலைகுனிய வேண்டிய தருணம் இது.
நீட் விலக்கக் கோரும் முன்னர், இவ்வாறு சிந்திக்கலாம்:
1. தமிழக மாணவர்களுக்கு நீட் அநியாயம் இழைப்பதாகக் கூறும் அரசியல்வியாதிகளும், தனியார் பள்ளித்தாளாளர்களும் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பை இலவசமாக நடத்த முன்வருவார்களா?
2. தமிழ் நாட்டிற்கு மட்டும் விலக்கு வேண்டுமென்றால், தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தில் ஏதாவது பிழையா?
3. தமிழக அரசின் பாடத்திட்டத் தரம் பீஹார், உபி முதலிய மாநிலங்களை விடத் தாழ்ந்துள்ளதா ?
5. கல்வித்தர வீழ்ச்சிக்கு யார் காரணம்? ஆசிரியர்களா? ஆட்சியர்களா? பாடத்திட்டமா?
6. ஆசிரியர்கள் காரணம் எனில் அவர்களைப் பணியில் அமர்த்தியது யார்? ஆசிரியர்களை யார் கண்காணித்தார்கள்?
7. ஆசிரியர்கள் பணியாற்றாததால் இவ்வாறு ஆனதா? உண்மையெனில், பள்ளிக் கல்வித்துறை என்ன கிழித்து செய்துகொண்டிருந்தது? ஆசிரியர்களைத் தட்டிக் கேட்கத் திராணி இல்லையா?
8. கேள்வி கேட்கத் திராணி இல்லாதவர்களை அப்பதவிகளில் அமர்த்தியது யார்? ஏன்?
9. பாடத்திட்டம் காரணமென்றால், அப்பாடத்திட்டத்தைக் கொண்டு வந்த அரசுகள் யாருடையவை? அவ்வரசுகளின் கல்வி அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?
10. ஆட்சியர்கள் காரணம் எனக் கொள்ளலாமா? ஆட்சியர்களூக்குக் கல்வித் தகுதி இல்லை என்று பொருள் கொள்ளலாமா?
11. ஆட்சியர்களுக்குக் கல்வித் தகுதி இல்லை என்றால், காமராஜரின் ஆட்சியில் கல்வியில் தமிழகம் மேன்மையுற்றது எங்ஙனம்?
12. ஆளும் கட்சியினர் நடத்தும் நடுவணரசுப் பாடத்திட்டப் பள்ளிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளித்து உதவினால் மாணவர்கள் வேண்டாம் என்பார்களா என்ன?
13. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் மனுச் செய்துள்ள கம்யூனிஸ்டுக் கட்சி, தான் ஆளும் கேரளத்தில் நீட்டை எதிர்க்காதது ஏன்?
14. தமிழகத்தில் நீட்டை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தான் ஆளும் மாநிலங்களில் எதிர்க்கவில்லையே? தமிழர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று காங்கிரஸ் கருதுகிறதா?
15. ‘பானி பூரி விற்கத் தேவையான அறிவு மட்டுமே கொண்டுள்ள பீஹாரிகள்’ என்று முழங்கும் தமிழ்ச் சிங்கங்கள், அத்தகைய பீஹாரிகள் தமிழ் நாட்டு மாணவர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் CLAT எழுதுவது ஏன் என்று சிந்திக்க முன்வருவார்களா?
16. ஜவஹர் நவோதய பள்ளிகள் நாடு முழுவதும் இயங்குகின்றன. இதில் இலவசமாகப் பயிலும் ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்று அடிக்கடி செய்திகள் வருகின்றன ( சமீபத்தில் புதுச்சேரியில் கூட நடந்துள்ளது). தமிழக மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு அம்மாதிரியான இலவசக் கல்வி அளிக்கத் தடையாக இருப்பது யார்?
17. ராஜீவ் காந்தியின் திட்டமான ஜவஹர் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் வருவதற்குத் தமிழகக் காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சி போடும் முட்டுக் கட்டையை நீக்க உதவுமா?
கிராமங்களில் உள்ள ஏழை மாணவன் தேர்வுகளில் இருந்து விலக்கு கேட்கவில்லை. தேர்வுகளைச் சந்திக்க நல்ல கல்வி கொடுங்கள் என்றே கேட்கிறான். தரமான ஆசிரியர்களை அளியுங்கள் என்று கேட்கிறான். ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பணிகு வர வேண்டும் என்று கேட்கிறான். இவற்றை அளிக்கத் திராணியில்லயெனில் கல்வியை முழுவதும் தனியார் மயமாக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த மதுபானத் தொழிலைக் கவனிக்கச் செல்லுங்கள்.
தமிழக மாணவர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக இருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ள் வேண்டிய கேள்விகள்:
1. கடந்த 40 ஆண்டுகளில் எத்தனை தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் சேர்ந்தனர்?
2. IMSc, Raman Research Institute, Saha Institute of Nuclear Physics, Indian Statistical Institute, IISER முதலிய உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் / கல்லூரிகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்த 40 ஆண்டுகளில் சேர்ந்தனர்?
3. CLAT தேர்வில் வெற்றிபெறும் தமிழக மாணவர்கள் எத்தனை பேர்? பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அத்தேர்வுக்கு எத்தனை மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்? தமிழகத்தில் இருந்து எத்தனை பேர்? அதிலும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை விழுக்காடு?
4. KVPY என்றொரு தேர்வு நடப்பது பற்றி எத்தனை தமிழக அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் அறிந்துள்ளனர் ?
இந்த நான்கு கேள்விகளுக்கான விடை உங்கள் தீராவிடக் கல்விக் கொள்கையின் வெற்றியைப் பறைசாற்றும்.
தமிழர்களின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக நீங்கள் செயல்படுவீர்கள் எனில், நீங்கள் செய்ய வேண்டியவை:
1. தமிழ்ப் பிள்ளைகள் இனி SAT தேர்வு எழுதித் தமிழகக் கல்லூரிகளில் இடம் பிடிப்பார்கள்.
2. GRE எழுதியே தமிழகப் பொறியியல் கல்லூரிகளுளில் மேல் படிப்பிற்குப் போட்டியிடுவர்.
3. தமிழகப் பள்ளி இறுதித் தேர்வு இனி IGCSE பாடத்திட்டத்தின் தரத்தில் நடத்தப்படும்.
4. மேற்சொன்ன தேர்வுகளுக்குப் பிள்ளைகளைத் தயார் செய்ய ஆசிரியர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
5. இதன் மூலம் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நீட்(NEET), க்ளாட்(CLAT), ஜேஈஈ(JEE) முதலிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, மற்ற மாநிலக் கல்லூரிகளில் அதிக இடம் பிடிப்பர்.
மேற்சொன்ன ஐந்தையும் நிறைவேற்றினால் நிஜமாகவே விடியல் ஏற்பட்டு, தமிழகம் கல்வித்துறையில் முன்னோடியாகத் திகழும்.
இவற்றைச் செய்யாமல், இனிமேல் ‘கல் தோன்றி மண் தோன்றா’ என்று இழுத்துப் பண்டைய தமிழர்களின் மானத்தை வாங்காதீர்கள். பஹுத் அறிவுப் புண்ணியமாகப் போகும்.
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில் இந்திய நேரம் காலை 6:30-8:00 ‘உயர் வள்ளுவம்’ வகுப்பெடுக்கிறார்கள். கம்பவாரிதியால் பயன்பெற்றுவரும் பல நூறு பேர்களில் அடியேனும் ஒருவன்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் திருப்புகழ் பதிகத்தைப் பண் சேர்த்து இசைக்கிறார்கள். தமிழே சுவை. அதில் திருப்புகழ் என்னும் பஞ்சாமிர்தம் சேர்த்து, அதில் பண் என்னும் தேனையும் கலந்து அளிக்கிறார்கள். வார இறுதிக் காலை வேளைகளில் என்ன ஒரு இனிமை!
திருக்குறள் பாயிரம், தொகுப்புரை, இரண்டு குறட்பாக்களுக்கான பரிமேலழகரின் உரைக்கான விளக்கம், அவற்றில் வரும் இலக்கணக் குறிப்புகள், ஒப்பு நோக்க வைக்கும் கம்பராமாயணச் செய்யுள் வரிகள், சில நேரம் திருமுறைகளில் இருந்தும், மூதுரை முதலிய பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் என்று பிரதி வாரமும் காலை நேரம் அருமையாகத் துவங்குகிறது.
தவிரவும், சுமார் 20 மணித்துளிகள் கேள்வி பதில் நிகழ்வு. உலகெங்கிலும் இருந்து கேள்விகள், அனுபவக் குறிப்புகள் என்று பலரும் பேசுவர். பலரது வாழ்க்கையை இந்தக் குறள் வகுப்பு மாற்றியமைத்துள்ளதைப் பயன்பெற்றவர்களின் வாயிலாகவே அறிந்துகொள்கிறேன்.
இன்று சிங்கப்பூரில் இருந்து பேசிய தமிழக உடல் உழைப்பாளர் ஒருவர் தான் பெண்களின் மீதான அதீத காமம் உட்பட தீய பழக்கங்கள் அனைத்திற்கும் அடிமையாக இருந்ததையும், அவற்றையெல்லாம் விடுத்துத் தற்போது பரிமேலழகருக்குக்கோவில் கட்டும் எண்ணத்துடன் முயன்றுவருவதாகவும், தன் கிராமத்திலும் தன் வீட்டிலும் அனைவரும் குறள் பயில ஏற்பாடு செய்துள்ளதாகவும் மனமுருகித் தெரிவித்தார்.
இவ்வாறும் பல முறை பலர் பேசியுள்ளனர் என்றாலும், இந்த அன்பரின் குரல் வள்ளுவரின் வாழ்வாங்கு வாழும் தன்மையை உணர்த்துவதாக இருந்தது.
அவசியமான இரு பயணங்கள் வந்தன. எனினும், வகுப்பு நடைபெறுவதால், பயண நேரத்தை ஒத்திப் போட்டேன் என்பதில் எனக்குப் பெருமை. கம்பவாரிதி நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம் கடமை.
இப்படியான குறள் நெறியைப் பயிலும் வாய்ப்பு தமிழர்களுக்குக் கிட்டியுள்ளது. மற்றைய மொழிகளில் இருந்து மொழிபெயர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. உலகமே வியக்கும் குறள் எழுதப்பட்ட மொழியே நம் தாய்மொழியாகவும் அமைதுள்ளது நமது நல்லூழ் தவிர வேறென்ன?
ஜூம் செயலி எண்: 846 5100 5685 சனி, ஞாயிறு காலை 6:30-8:00
6ம் வகுப்பிற்கான விடியல் அறிவியல் + விடியாத கணித + சமூக அறிவியல் வினாத்தாள். நன்றி : படாத பாடு படுத்தும் தீராவிடப் பங்கு நூல் நிறுவனம்.
1. விஞ்ஞான ஊழல் என்றால் என்ன? சர்க்காரியாவுக்கும் சர்க்கரைக்கும் என்ன தொடர்பு ?
2. ஒரு எறும்பு ஒரு சர்க்கரைத் துகளை உண்ண 2 மணி நேரம் ஆகும் எனில், ஒரு மூட்டையில் உள்ள சர்க்கரையை உண்ண 10 எறும்புகளுக்கு எத்தனை நாட்களாகும் ?
3. கரையான் கூட்டம் ஒரு சர்க்கரைப் பையை உண்ண ஒரு வாரம் ஆகுமெனில், நாலாயிரம் சர்க்கரைப் பைகளை உண்ண எத்தனை நாட்களாகும்? அத்தனை பைகளையும் ஒரு மாதத்தில் உண்டுவிட்டால் கரையான் கூட்டத்தில் எத்தனை கரையான்கள் இருக்கும்?
4. சாதாரண மீனாலேயே உயிர் வாழ முடியாத, எப்போதும் நின்றுகொண்டேயிருக்கும் நதி ஒன்றில் ஒரே ஒரு முதலை வாழ்கிறது என்பதைக் கொண்டு நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்?
5. உண்டு செரிப்பதற்கு 3 மணி நேரம் ஆகும் எனில், அரை மணி நேரம் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதில் உள்ள அறிவியல் கோட்பாடு யாது?
6. ரயில் ஓடாத போது தண்டவாளத்தில் தலை வைத்தால் தலைக்குள் இருப்பது என்ன ?
7. ‘வரும் ஆனா வராது’ என்பதற்கும் ‘விலையைக் குறைப்பேன். ஆனால் தேதி சொல்ல மாட்டேன்’ என்பதற்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை ?
8. காலஞ்சென்ற தலைவர்களின் நினைவிடங்களில், அவர்கள் பிறந்த, இறந்த நாட்களில் ஏற்படும் பகுத்தறிவு அறிவியல் மாற்றங்கள் யாவை?
9. மே 7, 2021 முதல் அணில்கள் பல்கிப்பெருகியதற்கான காராணங்கள் யாவை?
10. கேள்வி எழுதியவருக்கே கேள்வி புரியவில்லை என்பதால் இந்தக் கேள்விக்கான விடையை ‘பகுத்தறிவு’ என்று எழுதவும். எழுதாவிட்டாலும் மதிப்பெண் உண்டு.
பிகு: பதில்கள் அனைத்திலும் #அவியல் என்று குறிப்பிட்டு எழுதவும்.
1. மேற்சொன்ன குறளில் தளை தட்டும் பகுதிகள் யாவை? 2. ‘லாலாக்க்கு’ என்பதில் எந்த உருவக அணி தென்படுகிறது? 3. திரும்பிப் பாரம்மா என்று சொல்லாமல், கவிஞர் ‘இடுப்பச் சுத்தித் திரும்பிப் பாரம்மா’ என்று சொல்வதில் உள்ள பொருள் நயம் யாது? 4. இந்தப் பாடலில் நடித்த நடிகைகுப் பதிலாக, நயந்தாரா நடித்திருந்தால் நீட் தேர்வு விலக்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டிருக்குமா? 5. தன் இடுப்பைத் தானே சுற்றிப் பார்க்க முடியாத நடிகைகளுக்கு, சமூக நீதியின் அடிப்படையில் என்ன சலுகைகள் கொடுக்கலாம்? 6. மேற்ச்சொன்ன பாடல் வரிக்கு ஒப்பாகக் கலைஞர் கவிதைகள் வரிசையில் உள்ள ஏதேனும் கவிதை வரிகளை எழுதவும். 7. மேற்கண்ட பாடல் வரிக்கும், ‘ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல’ பாடல் வரிக்கும் உள்ள பொருள், இலக்கண ஒற்றுமைகள் யாவை? 8. ‘உளியின் ஓசை’ படத்தில் வரும் ஏதாவது ஒரு பாடல் வரிக்கும் மேற்சொன்ன பாடல் வரிக்கும் சித்தாந்த ரீதியான தொடர்பு தென்படுகிறதா? விளக்கவும். 9. ‘இடுப்பு’ என்னும் சொல் இடம்பெறும் மற்ற பாடல்கள் யாவை? ஆங்கிலப் பாடல்களாக இருந்தாலும் எழுதலாம். ஹிந்தி மட்டும் கூடாது. 10. ‘மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா’ செய்யுள் வரியையும், ‘ரெண்டுல நீ ஒண்ணத் தொடு மாமா’ என்கிற சங்க இலக்கியச் செய்யுள் வரியையும் மேற்சொன்ன பாடல் வரியுடன் சேர்த்து ‘ எகத்தாள தேச உருவக அணி’ தொனிக்க ஒரு செய்யுள் எழுதவும். 11. உங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போடும்படியாக செல்ஃபி எடுத்து vidiyal_textbookchief at gmail dot com என்கிற முகவரிக்கு அனுப்பவும்.
பி.கு.: மறக்காமல் ‘விடியல்’ என்று ஹேஷ்ட்டேக் போட்டுப் பதில் எழுதவும்.
தேரழுந்தூர் அமரர் டாக்டர் இராமபத்திராச்சாரியார் அவர்கள் தேரழுந்தூர் ஆமருவியப்பன் விஷயமாகத் திருமங்கையாழ்வார் அனுபவித்த வகையை 1985ல் ஒரு சிறிய அளவிலான உபந்யாஸம் மூலமாகத் தெரியப்படுத்தினார். அதனைச் செவியுற்றுப் பயன்பெறுங்கள்.
இக்கட்டுரை உங்களுக்கு உகக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அல்லது உகக்காதது போன்று பாவனை செய்துகொள்வத்ற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. வெளியில் பேசாத சமுதாயத்தின் உள்ளக்கிடக்கையை அறிந்து எழுதுவதாகவே இதனைச் செய்கிறேன்.
‘நீ மார்க் வாங்காம, சாதாரணமா ஏனோதானோன்னு எதையோ படிச்சா கரண்டி ஆபீஸ்தான். சாதாரண படிப்புக்கு பிராமணனுக்கு இங்க ஒண்ணும் கெடைக்காது. நீ பார்த்துண்டே இருக்கறச்சே, உன்ன விட மார்க் கம்மியா வாங்கினவன் மேல போயிண்டே இருப்பான். கவர்மெண்டுல வேலைக்கி சிங்கியடிக்கணும். அதுனால முட்டி, மோதி எண்ட்ரன்ஸ்ல நன்னா பண்ணி நல்ல கவர்மெண்ட் இஞ்சினியரிங் காலேஜ் போனா உனக்கு நல்லது. கேப்பிடேஷன் ஃபீ எல்லாம் என்னால் முடியாது. உன் எதிர்காலம் உன் கையில. அவ்ளோதான் சொல்லிட்டேன்’ 80, 90களில் நெய்வேலியில் கீழ்நடுத்தர பிராமணக் குடும்பங்களில் அனேகமாகத் தினமும் புழங்கிய சொற்கள் இவை. அடிக்கடி கேட்டவை.
30 ஆண்டுகள் கழித்து, தற்போது இவற்றை நான் சொல்வதில்லை. ஏனெனில் யதார்த்தம் ரத்தத்தில் ஊறி, மரபணுக்களில் ஏறிவிட்டது. அரசு வேலை என்பது சாதாரண பேச்சுகளில் கூட இல்லை. அனேகமாக ராணுவம், நிதி, அன்னிய தேச உறவுகள் என்பதற்கு மட்டும் அரசு என்ன சொல்கிறது என்று கவனிக்கிறேன். மற்ற எதற்கும் அரசின் எந்தச் சலுகையையோ, கொள்கையையோ அல்லது அவற்றுக்கான அறிவிப்புகளையோ எதிர்பார்ப்பதும் இல்லை, காதில் வாங்கிக் கொள்வதும் இல்லை.
தற்போது பல பிராமணக் குடும்பங்களில் நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் 8ம் வகுப்பில் இருந்தே துவங்கிவிடுகின்றன. அரசு சலுகை, அரசு சார்ந்த கல்லூரி / வேலை வாய்ப்பு எதிலும் ஏதோ ஒரு இடம் என்பதைக் கூட எதிர்பார்க்காத, அப்படி ஒன்று உள்ளது என்கிற பிரக்ஞையே கூட இல்லாத சமூகமாக மாறியுள்ள தமிழ் பிராமணச் சூழலைக் காண்கிறேன்.போட்டிகள், நுழைவுத்தேர்வுகள் முதலியவையே வாழ்க்கையின் நிதர்ஸனங்கள் என்பதை நன்கு உணர்ந்துகொண்டு அதற்கான வேலைகளில் இவர்கள் இறங்கிப் பல காலம் ஆகிவிட்டது.
யாரைக் கேட்டாலும் அவர்கள் குடும்பத்தில் குறைந்தது ஒருவர் அமெரிக்காவின் ஏதோ ஒரு பல்கலையில் ஏதோ ஒரு பிரிவில் தலைவராக இருக்கிறார், அல்லது உயர் தொழில் நுட்பத்தில் சிறந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார், அல்லது மருத்துவத்தில் ஏதோ ஒரு நாட்டில் பரிமளிக்கிறார். பலர் சிறு நிறுவனங்களை நடத்துகின்றனர். நான் அறிந்த சிலர் அமெரிக்க அரசியல் தளத்தில் உள்ளனர். பள்ளியில் என் சீனியர் இன்று அமெரிக்க மாகாணம் ஒன்றின் தலைவருக்குத் தொழில் நுட்ப ஆலோசகர். அனேகமாகத் தேர்தலிலும் நிற்பார் என்றும் பேச்சு.
பாரதத்தில் சந்திக்கும் தமிழ் பிராமணர்கள் இவ்விடத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பதை ஒரு குறையாகக் கூடச் சொல்வதில்லை. ஏனெனில் அவர்களின் பார்வையில் அந்த வாய்ப்புகள் இருப்பதே தெரிவதில்லை. அவற்றைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளிலும் இறங்குவதில்லை. குறை சொன்னது எனது தலைமுறையோடு போய் விட்டது போல. அப்போதும் 69% இருந்தது.
நாடு விட்டுப் போனவர்கள் சென்ற இடங்களில் கலாச்சாரத் தூதுவர்களாகவே உள்ளனர். இசை, நாட்டியம் என்று செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். வெளி நாடுகளில் இலக்கியச் சூழலில் மட்டும் ஓரளவு பின்தங்கியே உள்ளனர். அதிலும் தமிழ் நாட்டுப் பாரம்பர்யம் தொடர்கிறது என்பதை என் சொந்த அனுபவங்களால் அறிவேன். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் என்று மூன்று நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அங்குள்ள நிலைமை என்னவென்று அறிந்தே இதை எழுதுகிறேன்.
பிராமணர்களை ஒதுக்கினால் அவர்கள் வீறு கொண்டு எழப் போவதில்லை. இட ஒதுக்கீடு கேட்டுப் போராடப் போவதில்லை. சண்டை பிடிக்கவும் போவதில்லை. வாய்ப்பு தராத இடங்களை உதசீனப்படுத்திவிட்டுப் புறப்பட்டுவிடுவார்கள், உதாசீனப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் ஓரிரு தலைமுறைகளில் பலதையும் புறக்கணிக்கத் துவங்கிவிடுவர். உதா: சிபிஎஸ்ஈ பள்ளிகளில் பயிலும் பலரும் தமிழகக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதில்லை. அவர்களை ஒதுக்குவதால் அவர்களுக்கு நஷ்டமில்லை.
அவ்வப்போது திருப்பித் தாக்குவது போலத் தோன்றும்படியாகச் சில குரல்கள் எழும். ஆனால், அதுவும் பொருட்படுத்தப்படமுடியாத ஒன்றாகவே கரையும். உதா: எஸ்.வி.சேகர். சேகர் முதலியோர் தமிழ் பிராமணர்களின் குரலன்று. தமிழ் பிராமணர்கள் பேசுவ்தில்லை. பேச்சுச் சுரைக்காய் வாழ்க்கைக் கறிக்கு உதவாது என்பதை இவர்கள் அறிந்தே உள்ளனர்.
இது ஏதோ ‘மேட்டிமைவாதம்’ என்று திராவிடீய-போஸ்ட் மார்டனிஸ்ட்-லிபரல் மந்தைகள் போல் இருமைக் (binary) குட்டைகளில் உழலும் எருமைகள் போல் சிந்திக்காமல், மேற்கூறிய கருத்துகளை உற்றுப் பார்ப்போம்.ஜெயமோகன் சொல்வது போல இவர்கள் கலாச்சாரத்தைத் தாங்கியவர்களாக இருந்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தில் இருந்து பிராமணர்களின் வெளியேற்றம் தமிழ்கத்தின் கலை, கலாச்சாரம் முதலியவற்றின் இறங்குமுகத்திற்கான நிமித்தங்களில் முக்கியமான ஒன்று.
இந்த purgeஐத் தடுத்து நிறுத்த முடியுமா? என்கிற கேள்விக்குத் தற்போது விடை ‘இல்லை’ என்பதே. இது நடைபெறுகிறது உண்மைதானா என்றும் பார்க்க, 30 ஆண்டுகட்கு முந்தைய மயிலாப்பூர், திருவல்லிக்கேணியையும் அவற்றின் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். 60 ஆண்டுகட்கு முந்தைய தஞ்சை அக்கிரஹாரங்கள், அவை தற்போது இருக்கும் நிலை. இந்த ஒப்பீடு போதுமானதாக இருக்கும். தஞ்சையில் NIA செய்துள்ள கைதுகள் ஏன் என்பதையும் இத்துடன் சேர்த்துப் பார்த்தால் ஒரு முழுமையான சித்திரம் கிட்டும்.அமெரிக்கக் கோவில்களில் உற்சவங்களின் எண்ணிக்கை கூடியுள்ளதையும் கணக்கில் கொள்வோம்.
இடஒதுக்கீடு, ஊடகத்தில், அரசியலில், அரசுத் துறைகளில், நீதித் துறையில் வெளிப்படையான பாரபட்சம் என்று எத்தகைய இடைஞ்சல்கள் இருந்தாலும், அந்த இடைஞ்சல்களுக்குப் பாரதத்தின், தமிழகத்தின் அரசுகள் வழிசெய்து கொடுத்தாலும், பெற்ற தாயும், பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்கிற எண்ணம் மேலோங்க, நாட்டைப் பழிக்காமல், ‘எழுதிச் செல்லும் விதியின் கை, எழுது எழுதி மேற்செல்லும்’ என்னும் சூத்திரத்தின் படி தத்தமது நிகழுலகின் மௌன சாட்சிகளாகச் செயலாற்றி வருகின்றனர் தமிழ் பிராமணர்கள்.
தாரகை
தற்போது ஓய்வு பெற்றுவிட்டவரும், கொண்டாடப் படத்தக்க பொறியாளருமான எனது முன்னாள் மேலாளர், தனது மகனின் கல்விக்காகப் பல வெளி நாட்டு வேலைகளைப் புறந்தள்ளிவிட்டு பாரதத்திலேயே இருந்து, நிர்வாகத்தில் பல படி நிலைகள் கீழேயே தன்னை இருத்திக் கொண்டார். மகன் (ராமன்) ஐந்தாண்டுகள் அசுரத்தனமாகத் தயார் செய்து, ஐஐடிக்களில் நல்ல பொறியியல் துறைகளில் நுழையத் தேர்வானான். ஆனால், இயற்பியலே தனது தேர்வு என்பதால், சென்னையை விட்டுத் தொலைவில் உள்ள ஒரு ஐஐடியில் கடினமான ஐந்தாண்டு எம்.எஸ்.சி பயின்றான்.
கணினித்துறை எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள, கலிஃபோர்னியாவில் வேலையில் இருந்தான். ஒரு நாள் வேலையை உதறிவிட்டு, உலகின் சிறந்த வானியல் இயற்பியல் விஞ்ஞானியிடம் உதவியாளனாகச் சேர்ந்தான். ஈராண்டுகள் பணிக்குப்ப்பின், அவரது பாராட்டுடனும், பரிந்துரையுடனும் உலகின் பிரமிக்கத்தக்க அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில், சூரியனில் இருந்து உமிழப்படும் சிலவகைக் காந்தக் கதிர்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளான். தற்போது அங்கேயே பணியாற்றவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
ராமனை அவனது 8ம் வகுப்பு முதல் நான் அறிவேன். தன் தந்தையைப் போலவே கடின உழைப்பாளி. தமிழக அரசின் எந்தச் சலுகையும் கிட்டாதவன். எதிர்பார்க்காதவன் என்றும் சொல்லலாம். சில ஆண்டுகளில் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பைச் செய்யவும் வழி உண்டு. தனது கல்வியின் தரத்தாலும், ஐரோப்பிய ஆராய்ச்சிப் பல்கலைகளில் அவனுக்குள்ள வரவேற்புகளாலும் அவன் தமிழகத்தில், ஏன் பாரதத்தில் உள்ள எந்தப் பல்கலையிலும் பணியாற்றப்போவதில்லை.
தற்போது இஸ்ரேலியப் பல்கலையிலும் ஆராய்ச்சி செய்ய அழைப்பு வந்துள்ளது. எண்ணிப் பார்க்க முடியாத வசதிகள். (வசதிகள் எனில் பணம் அன்று.) தாய்ப் பல்கலையில் வேலையில் இருந்தாலோ, உலகின் முன்னணி வானியல் சாஸ்திர நிபுணர்களுடன் தோளோடு தோள் பணியாற்றும் வாய்ப்புகள். Spoilt for choices என்பது போல் உள்ளது அவனது நிலை.
ஒருவேளை அவன் ‘அண்ணா பல்கலையில் பணி செய்ய விருப்பம்’ என்று வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இஸ்ரேலிய வானியல் ஆராய்ச்சிக்கூடத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் அவனுக்குக் கொடுப்போமா? அவனது தகுதிகளில் நாம் முதலில் தேடப்போவது அவனது சாதியைத் தவிர வேறென்ன? அவனை வெளிநாட்டு ஆராய்ச்சிப் பல்கலைக்கு விட்டுக்கொடுப்பதால் நமக்கு லாபம் இல்லை என்றாலும், அவன் வெளியில் பணியாற்றினாலே அவனால் உலகிற்கு லாபம் கிட்டும். ராமன் எஃபக்ட் – 2 என்று நாளை ஒரு கண்டுபிடிப்பு வந்தால் பெருமையடித்துக்கொள்ள மட்டும் நமக்கு உரிமை உண்டு.
இன்னும் எத்தனை நட்சத்திரங்களை மாற்றான் வானில் ஒளி விச அனுமதிக்கப் போகிறோம் ?