இக்கட்டுரை உங்களுக்கு உகக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அல்லது உகக்காதது போன்று பாவனை செய்துகொள்வத்ற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. வெளியில் பேசாத சமுதாயத்தின் உள்ளக்கிடக்கையை அறிந்து எழுதுவதாகவே இதனைச் செய்கிறேன்.
‘நீ மார்க் வாங்காம, சாதாரணமா ஏனோதானோன்னு எதையோ படிச்சா கரண்டி ஆபீஸ்தான். சாதாரண படிப்புக்கு பிராமணனுக்கு இங்க ஒண்ணும் கெடைக்காது. நீ பார்த்துண்டே இருக்கறச்சே, உன்ன விட மார்க் கம்மியா வாங்கினவன் மேல போயிண்டே இருப்பான். கவர்மெண்டுல வேலைக்கி சிங்கியடிக்கணும். அதுனால முட்டி, மோதி எண்ட்ரன்ஸ்ல நன்னா பண்ணி நல்ல கவர்மெண்ட் இஞ்சினியரிங் காலேஜ் போனா உனக்கு நல்லது. கேப்பிடேஷன் ஃபீ எல்லாம் என்னால் முடியாது. உன் எதிர்காலம் உன் கையில. அவ்ளோதான் சொல்லிட்டேன்’ 80, 90களில் நெய்வேலியில் கீழ்நடுத்தர பிராமணக் குடும்பங்களில் அனேகமாகத் தினமும் புழங்கிய சொற்கள் இவை. அடிக்கடி கேட்டவை.
30 ஆண்டுகள் கழித்து, தற்போது இவற்றை நான் சொல்வதில்லை. ஏனெனில் யதார்த்தம் ரத்தத்தில் ஊறி, மரபணுக்களில் ஏறிவிட்டது. அரசு வேலை என்பது சாதாரண பேச்சுகளில் கூட இல்லை. அனேகமாக ராணுவம், நிதி, அன்னிய தேச உறவுகள் என்பதற்கு மட்டும் அரசு என்ன சொல்கிறது என்று கவனிக்கிறேன். மற்ற எதற்கும் அரசின் எந்தச் சலுகையையோ, கொள்கையையோ அல்லது அவற்றுக்கான அறிவிப்புகளையோ எதிர்பார்ப்பதும் இல்லை, காதில் வாங்கிக் கொள்வதும் இல்லை.
தற்போது பல பிராமணக் குடும்பங்களில் நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் 8ம் வகுப்பில் இருந்தே துவங்கிவிடுகின்றன. அரசு சலுகை, அரசு சார்ந்த கல்லூரி / வேலை வாய்ப்பு எதிலும் ஏதோ ஒரு இடம் என்பதைக் கூட எதிர்பார்க்காத, அப்படி ஒன்று உள்ளது என்கிற பிரக்ஞையே கூட இல்லாத சமூகமாக மாறியுள்ள தமிழ் பிராமணச் சூழலைக் காண்கிறேன்.போட்டிகள், நுழைவுத்தேர்வுகள் முதலியவையே வாழ்க்கையின் நிதர்ஸனங்கள் என்பதை நன்கு உணர்ந்துகொண்டு அதற்கான வேலைகளில் இவர்கள் இறங்கிப் பல காலம் ஆகிவிட்டது.
யாரைக் கேட்டாலும் அவர்கள் குடும்பத்தில் குறைந்தது ஒருவர் அமெரிக்காவின் ஏதோ ஒரு பல்கலையில் ஏதோ ஒரு பிரிவில் தலைவராக இருக்கிறார், அல்லது உயர் தொழில் நுட்பத்தில் சிறந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார், அல்லது மருத்துவத்தில் ஏதோ ஒரு நாட்டில் பரிமளிக்கிறார். பலர் சிறு நிறுவனங்களை நடத்துகின்றனர். நான் அறிந்த சிலர் அமெரிக்க அரசியல் தளத்தில் உள்ளனர். பள்ளியில் என் சீனியர் இன்று அமெரிக்க மாகாணம் ஒன்றின் தலைவருக்குத் தொழில் நுட்ப ஆலோசகர். அனேகமாகத் தேர்தலிலும் நிற்பார் என்றும் பேச்சு.
பாரதத்தில் சந்திக்கும் தமிழ் பிராமணர்கள் இவ்விடத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பதை ஒரு குறையாகக் கூடச் சொல்வதில்லை. ஏனெனில் அவர்களின் பார்வையில் அந்த வாய்ப்புகள் இருப்பதே தெரிவதில்லை. அவற்றைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளிலும் இறங்குவதில்லை. குறை சொன்னது எனது தலைமுறையோடு போய் விட்டது போல. அப்போதும் 69% இருந்தது.
நாடு விட்டுப் போனவர்கள் சென்ற இடங்களில் கலாச்சாரத் தூதுவர்களாகவே உள்ளனர். இசை, நாட்டியம் என்று செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். வெளி நாடுகளில் இலக்கியச் சூழலில் மட்டும் ஓரளவு பின்தங்கியே உள்ளனர். அதிலும் தமிழ் நாட்டுப் பாரம்பர்யம் தொடர்கிறது என்பதை என் சொந்த அனுபவங்களால் அறிவேன். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் என்று மூன்று நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அங்குள்ள நிலைமை என்னவென்று அறிந்தே இதை எழுதுகிறேன்.
பிராமணர்களை ஒதுக்கினால் அவர்கள் வீறு கொண்டு எழப் போவதில்லை. இட ஒதுக்கீடு கேட்டுப் போராடப் போவதில்லை. சண்டை பிடிக்கவும் போவதில்லை. வாய்ப்பு தராத இடங்களை உதசீனப்படுத்திவிட்டுப் புறப்பட்டுவிடுவார்கள், உதாசீனப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் ஓரிரு தலைமுறைகளில் பலதையும் புறக்கணிக்கத் துவங்கிவிடுவர். உதா: சிபிஎஸ்ஈ பள்ளிகளில் பயிலும் பலரும் தமிழகக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதில்லை. அவர்களை ஒதுக்குவதால் அவர்களுக்கு நஷ்டமில்லை.
அவ்வப்போது திருப்பித் தாக்குவது போலத் தோன்றும்படியாகச் சில குரல்கள் எழும். ஆனால், அதுவும் பொருட்படுத்தப்படமுடியாத ஒன்றாகவே கரையும். உதா: எஸ்.வி.சேகர். சேகர் முதலியோர் தமிழ் பிராமணர்களின் குரலன்று. தமிழ் பிராமணர்கள் பேசுவ்தில்லை. பேச்சுச் சுரைக்காய் வாழ்க்கைக் கறிக்கு உதவாது என்பதை இவர்கள் அறிந்தே உள்ளனர்.
இது ஏதோ ‘மேட்டிமைவாதம்’ என்று திராவிடீய-போஸ்ட் மார்டனிஸ்ட்-லிபரல் மந்தைகள் போல் இருமைக் (binary) குட்டைகளில் உழலும் எருமைகள் போல் சிந்திக்காமல், மேற்கூறிய கருத்துகளை உற்றுப் பார்ப்போம்.ஜெயமோகன் சொல்வது போல இவர்கள் கலாச்சாரத்தைத் தாங்கியவர்களாக இருந்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தில் இருந்து பிராமணர்களின் வெளியேற்றம் தமிழ்கத்தின் கலை, கலாச்சாரம் முதலியவற்றின் இறங்குமுகத்திற்கான நிமித்தங்களில் முக்கியமான ஒன்று.
இந்த purgeஐத் தடுத்து நிறுத்த முடியுமா? என்கிற கேள்விக்குத் தற்போது விடை ‘இல்லை’ என்பதே. இது நடைபெறுகிறது உண்மைதானா என்றும் பார்க்க, 30 ஆண்டுகட்கு முந்தைய மயிலாப்பூர், திருவல்லிக்கேணியையும் அவற்றின் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். 60 ஆண்டுகட்கு முந்தைய தஞ்சை அக்கிரஹாரங்கள், அவை தற்போது இருக்கும் நிலை. இந்த ஒப்பீடு போதுமானதாக இருக்கும். தஞ்சையில் NIA செய்துள்ள கைதுகள் ஏன் என்பதையும் இத்துடன் சேர்த்துப் பார்த்தால் ஒரு முழுமையான சித்திரம் கிட்டும்.அமெரிக்கக் கோவில்களில் உற்சவங்களின் எண்ணிக்கை கூடியுள்ளதையும் கணக்கில் கொள்வோம்.
இடஒதுக்கீடு, ஊடகத்தில், அரசியலில், அரசுத் துறைகளில், நீதித் துறையில் வெளிப்படையான பாரபட்சம் என்று எத்தகைய இடைஞ்சல்கள் இருந்தாலும், அந்த இடைஞ்சல்களுக்குப் பாரதத்தின், தமிழகத்தின் அரசுகள் வழிசெய்து கொடுத்தாலும், பெற்ற தாயும், பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்கிற எண்ணம் மேலோங்க, நாட்டைப் பழிக்காமல், ‘எழுதிச் செல்லும் விதியின் கை, எழுது எழுதி மேற்செல்லும்’ என்னும் சூத்திரத்தின் படி தத்தமது நிகழுலகின் மௌன சாட்சிகளாகச் செயலாற்றி வருகின்றனர் தமிழ் பிராமணர்கள்.

தற்போது ஓய்வு பெற்றுவிட்டவரும், கொண்டாடப் படத்தக்க பொறியாளருமான எனது முன்னாள் மேலாளர், தனது மகனின் கல்விக்காகப் பல வெளி நாட்டு வேலைகளைப் புறந்தள்ளிவிட்டு பாரதத்திலேயே இருந்து, நிர்வாகத்தில் பல படி நிலைகள் கீழேயே தன்னை இருத்திக் கொண்டார். மகன் (ராமன்) ஐந்தாண்டுகள் அசுரத்தனமாகத் தயார் செய்து, ஐஐடிக்களில் நல்ல பொறியியல் துறைகளில் நுழையத் தேர்வானான். ஆனால், இயற்பியலே தனது தேர்வு என்பதால், சென்னையை விட்டுத் தொலைவில் உள்ள ஒரு ஐஐடியில் கடினமான ஐந்தாண்டு எம்.எஸ்.சி பயின்றான்.
கணினித்துறை எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள, கலிஃபோர்னியாவில் வேலையில் இருந்தான். ஒரு நாள் வேலையை உதறிவிட்டு, உலகின் சிறந்த வானியல் இயற்பியல் விஞ்ஞானியிடம் உதவியாளனாகச் சேர்ந்தான். ஈராண்டுகள் பணிக்குப்ப்பின், அவரது பாராட்டுடனும், பரிந்துரையுடனும் உலகின் பிரமிக்கத்தக்க அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில், சூரியனில் இருந்து உமிழப்படும் சிலவகைக் காந்தக் கதிர்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளான். தற்போது அங்கேயே பணியாற்றவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
ராமனை அவனது 8ம் வகுப்பு முதல் நான் அறிவேன். தன் தந்தையைப் போலவே கடின உழைப்பாளி. தமிழக அரசின் எந்தச் சலுகையும் கிட்டாதவன். எதிர்பார்க்காதவன் என்றும் சொல்லலாம். சில ஆண்டுகளில் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பைச் செய்யவும் வழி உண்டு. தனது கல்வியின் தரத்தாலும், ஐரோப்பிய ஆராய்ச்சிப் பல்கலைகளில் அவனுக்குள்ள வரவேற்புகளாலும் அவன் தமிழகத்தில், ஏன் பாரதத்தில் உள்ள எந்தப் பல்கலையிலும் பணியாற்றப்போவதில்லை.
தற்போது இஸ்ரேலியப் பல்கலையிலும் ஆராய்ச்சி செய்ய அழைப்பு வந்துள்ளது. எண்ணிப் பார்க்க முடியாத வசதிகள். (வசதிகள் எனில் பணம் அன்று.) தாய்ப் பல்கலையில் வேலையில் இருந்தாலோ, உலகின் முன்னணி வானியல் சாஸ்திர நிபுணர்களுடன் தோளோடு தோள் பணியாற்றும் வாய்ப்புகள். Spoilt for choices என்பது போல் உள்ளது அவனது நிலை.
ஒருவேளை அவன் ‘அண்ணா பல்கலையில் பணி செய்ய விருப்பம்’ என்று வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இஸ்ரேலிய வானியல் ஆராய்ச்சிக்கூடத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் அவனுக்குக் கொடுப்போமா? அவனது தகுதிகளில் நாம் முதலில் தேடப்போவது அவனது சாதியைத் தவிர வேறென்ன? அவனை வெளிநாட்டு ஆராய்ச்சிப் பல்கலைக்கு விட்டுக்கொடுப்பதால் நமக்கு லாபம் இல்லை என்றாலும், அவன் வெளியில் பணியாற்றினாலே அவனால் உலகிற்கு லாபம் கிட்டும். ராமன் எஃபக்ட் – 2 என்று நாளை ஒரு கண்டுபிடிப்பு வந்தால் பெருமையடித்துக்கொள்ள மட்டும் நமக்கு உரிமை உண்டு.
இன்னும் எத்தனை நட்சத்திரங்களை மாற்றான் வானில் ஒளி விச அனுமதிக்கப் போகிறோம் ?
சிந்திப்போம்.
(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
Thanks Aamaruvi; I was thinking about this for some days now and you have written. Worldwide opportunities more open to us, Brahmins and we have no other choice than going for it. Yet such unabashed discriminations in home state TN also needs some action. Still most live there not abroad. Most of our temples are there and needs our participation. We are now new kind of Jews and we have insider enemies also. Must take all legal, strategic steps to defend just fairness . I represent a parent you talk about with my son doing well in the US daughter doing well outside TN and me living in Gurgaon for 20plus years and in fact out of TN since 74! I hope we dont enjoy keeping quiet as those living in TN are the majority of us still.
LikeLike
The effect of brain-drain in the long run is dispassionately analysed. Looking for greener pastures is an irresistible natural human tendency. But preferable is to explore the ways and means of our own environment the greenest. It is a humongous task but can be accomplished with patience, perseverance and a sense of altruism. Example: Mr Sridhar Vembu of Zoho. He is known for his sense of nativity without being either jingoistic or xenophobic. Anyway, our scriptures say LOKAA SAMASTAA SUKHINO BHAVANDU.
LikeLike
Sir, நீங்கள் எழுதியிருப்பது…நிஜம்தான்…ஆனால்….கல்வியில்…ஆவரேஜ் ஆக இருக்கும்…பிராமணன் நிலை…எல்லா கதவுகளும்…மூடப்பட்டுள்ளன…பிராமணர்களாக…இருப்பவர்களும்…அவனுக்கு கை கொடுக்க முன்வருவதில்லை….அவனின் நிலை…அவனை நம்பியிருக்கும்…குடும்பத்தினர் நிலை!?
LikeLike
இது கொடுமை. கருணை உள்ளம் மறைந்து வருகிறது. அவ்வளவுதான்.
LikeLike