தமிழகத்திற்கு மட்டும் நீட் விலக்கு வேண்டும் என்று மாநில அமைச்சர் மத்திய அரசிடம் கேட்டுள்ளார். தமிழர்கள் தலைகுனிய வேண்டிய தருணம் இது.
நீட் விலக்கக் கோரும் முன்னர், இவ்வாறு சிந்திக்கலாம்:
1. தமிழக மாணவர்களுக்கு நீட் அநியாயம் இழைப்பதாகக் கூறும் அரசியல்வியாதிகளும், தனியார் பள்ளித்தாளாளர்களும் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பை இலவசமாக நடத்த முன்வருவார்களா?
2. தமிழ் நாட்டிற்கு மட்டும் விலக்கு வேண்டுமென்றால், தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தில் ஏதாவது பிழையா?
3. தமிழக அரசின் பாடத்திட்டத் தரம் பீஹார், உபி முதலிய மாநிலங்களை விடத் தாழ்ந்துள்ளதா ?
4. அப்படித் தாழ்ந்துள்ளதெனில், 40 ஆண்டுக்கால தீராவிட ஆட்சிகள் கல்வித்துறையில் சாதித்தது என்ன?
5. கல்வித்தர வீழ்ச்சிக்கு யார் காரணம்? ஆசிரியர்களா? ஆட்சியர்களா? பாடத்திட்டமா?
6. ஆசிரியர்கள் காரணம் எனில் அவர்களைப் பணியில் அமர்த்தியது யார்? ஆசிரியர்களை யார் கண்காணித்தார்கள்?
7. ஆசிரியர்கள் பணியாற்றாததால் இவ்வாறு ஆனதா? உண்மையெனில், பள்ளிக் கல்வித்துறை என்ன கிழித்து செய்துகொண்டிருந்தது? ஆசிரியர்களைத் தட்டிக் கேட்கத் திராணி இல்லையா?
8. கேள்வி கேட்கத் திராணி இல்லாதவர்களை அப்பதவிகளில் அமர்த்தியது யார்? ஏன்?
9. பாடத்திட்டம் காரணமென்றால், அப்பாடத்திட்டத்தைக் கொண்டு வந்த அரசுகள் யாருடையவை? அவ்வரசுகளின் கல்வி அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?
10. ஆட்சியர்கள் காரணம் எனக் கொள்ளலாமா? ஆட்சியர்களூக்குக் கல்வித் தகுதி இல்லை என்று பொருள் கொள்ளலாமா?
11. ஆட்சியர்களுக்குக் கல்வித் தகுதி இல்லை என்றால், காமராஜரின் ஆட்சியில் கல்வியில் தமிழகம் மேன்மையுற்றது எங்ஙனம்?
12. ஆளும் கட்சியினர் நடத்தும் நடுவணரசுப் பாடத்திட்டப் பள்ளிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளித்து உதவினால் மாணவர்கள் வேண்டாம் என்பார்களா என்ன?
13. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகத்தில் மனுச் செய்துள்ள கம்யூனிஸ்டுக் கட்சி, தான் ஆளும் கேரளத்தில் நீட்டை எதிர்க்காதது ஏன்?
14. தமிழகத்தில் நீட்டை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தான் ஆளும் மாநிலங்களில் எதிர்க்கவில்லையே? தமிழர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று காங்கிரஸ் கருதுகிறதா?
15. ‘பானி பூரி விற்கத் தேவையான அறிவு மட்டுமே கொண்டுள்ள பீஹாரிகள்’ என்று முழங்கும் தமிழ்ச் சிங்கங்கள், அத்தகைய பீஹாரிகள் தமிழ் நாட்டு மாணவர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் CLAT எழுதுவது ஏன் என்று சிந்திக்க முன்வருவார்களா?
16. ஜவஹர் நவோதய பள்ளிகள் நாடு முழுவதும் இயங்குகின்றன. இதில் இலவசமாகப் பயிலும் ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என்று அடிக்கடி செய்திகள் வருகின்றன ( சமீபத்தில் புதுச்சேரியில் கூட நடந்துள்ளது). தமிழக மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு அம்மாதிரியான இலவசக் கல்வி அளிக்கத் தடையாக இருப்பது யார்?
17. ராஜீவ் காந்தியின் திட்டமான ஜவஹர் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் வருவதற்குத் தமிழகக் காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சி போடும் முட்டுக் கட்டையை நீக்க உதவுமா?
கிராமங்களில் உள்ள ஏழை மாணவன் தேர்வுகளில் இருந்து விலக்கு கேட்கவில்லை. தேர்வுகளைச் சந்திக்க நல்ல கல்வி கொடுங்கள் என்றே கேட்கிறான். தரமான ஆசிரியர்களை அளியுங்கள் என்று கேட்கிறான். ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பணிகு வர வேண்டும் என்று கேட்கிறான். இவற்றை அளிக்கத் திராணியில்லயெனில் கல்வியை முழுவதும் தனியார் மயமாக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த மதுபானத் தொழிலைக் கவனிக்கச் செல்லுங்கள்.
தமிழக மாணவர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களாக இருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ள் வேண்டிய கேள்விகள்:
1. கடந்த 40 ஆண்டுகளில் எத்தனை தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் சேர்ந்தனர்?
2. IMSc, Raman Research Institute, Saha Institute of Nuclear Physics, Indian Statistical Institute, IISER முதலிய உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் / கல்லூரிகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்த 40 ஆண்டுகளில் சேர்ந்தனர்?
3. CLAT தேர்வில் வெற்றிபெறும் தமிழக மாணவர்கள் எத்தனை பேர்? பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அத்தேர்வுக்கு எத்தனை மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்? தமிழகத்தில் இருந்து எத்தனை பேர்? அதிலும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை விழுக்காடு?
4. KVPY என்றொரு தேர்வு நடப்பது பற்றி எத்தனை தமிழக அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் அறிந்துள்ளனர் ?
இந்த நான்கு கேள்விகளுக்கான விடை உங்கள் தீராவிடக் கல்விக் கொள்கையின் வெற்றியைப் பறைசாற்றும்.
தமிழர்களின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக நீங்கள் செயல்படுவீர்கள் எனில், நீங்கள் செய்ய வேண்டியவை:
1. தமிழ்ப் பிள்ளைகள் இனி SAT தேர்வு எழுதித் தமிழகக் கல்லூரிகளில் இடம் பிடிப்பார்கள்.
2. GRE எழுதியே தமிழகப் பொறியியல் கல்லூரிகளுளில் மேல் படிப்பிற்குப் போட்டியிடுவர்.
3. தமிழகப் பள்ளி இறுதித் தேர்வு இனி IGCSE பாடத்திட்டத்தின் தரத்தில் நடத்தப்படும்.
4. மேற்சொன்ன தேர்வுகளுக்குப் பிள்ளைகளைத் தயார் செய்ய ஆசிரியர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
5. இதன் மூலம் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நீட்(NEET), க்ளாட்(CLAT), ஜேஈஈ(JEE) முதலிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, மற்ற மாநிலக் கல்லூரிகளில் அதிக இடம் பிடிப்பர்.
மேற்சொன்ன ஐந்தையும் நிறைவேற்றினால் நிஜமாகவே விடியல் ஏற்பட்டு, தமிழகம் கல்வித்துறையில் முன்னோடியாகத் திகழும்.
இவற்றைச் செய்யாமல், இனிமேல் ‘கல் தோன்றி மண் தோன்றா’ என்று இழுத்துப் பண்டைய தமிழர்களின் மானத்தை வாங்காதீர்கள். பஹுத் அறிவுப் புண்ணியமாகப் போகும்.
தமிழக அரசின் மாநில பாடத்திட்டம் பல வகையில் தரமில்லாதது என்பது உண்மை. அதை மேம்படுத்த வேண்டும் என்னும் வாதம் சரி. ஆனால் அதற்காக நீட் தேர்வை ஆதரிக்க முடியாது. ஒரு மாணவர் சிபிஎஸ்சி கல்விமுறையில் படித்து இருந்தாலும் ஒரு ஆண்டாவது கோச்சிங் நிறுவனத்தில் பயிற்சி எடுத்தால் தான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். அதற்கு பணம் செலவு செய்ய வேண்டும். ஏழை மாணவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்னணி இதற்கு இடம் கொடுக்காது. பள்ளிகளில் 11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் நுழைவு தேர்வுக்கான கோச்சிங் மட்டுமே நடக்கும். முறையான கல்வி நடக்காது. ஆந்திராவிலும் மற்ற மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது. அதனால் நீட் தேர்வு சாமானிய பின்னணி கொண்ட மாணவர்களுக்கு நிச்சயம் பாதகமானது. மேலும் இரண்டு முறை அல்லது மூன்று முறை நீட் தேர்வு எழுதிய மாணவர்களே அதிகம் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடிகிறது. இதனால் நிறைய மாணவர்களின் உயர்கல்வியில் சேரும் வயதும் தள்ளிப்போகிறது. இந்த விஷயம் தெரிந்து இருந்தும் நீட்டை ஆதரித்து கட்டுரை எழுதுவது என்னவிதமான மனசாட்சி என தெரியவில்லை.
LikeLike
புரியவில்லை. ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் பாதகம் என்பது என்ன பகுத்தறிவு ?
LikeLike
2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்னும் மாணவி +1 மற்றும் +2 படிப்புக்கு பள்ளிக்கூடமே போகவில்லை. பிளஸ்-1 படிப்புக்கு பீகாரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் போய் அட்மிஷன் போட்டதோடு சரி. . நேராக தில்லியில் இருக்கும் ஆகாஷ் கோச்சிங் நிறுவனத்தில் வந்து உட்கார்ந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கோச்சிங் நிறுவனத்தில் கழித்து விட்டு பிளஸ் டூ தேர்வு எழுதுவதற்கு மட்டும் பள்ளிக்கூடம் போனார். இந்தியாவில் உயர்கல்வி என்பதை லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் கோச்சிங் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன. 12 ஆண்டு காலம் பள்ளிக்கூடத்தில் பெறும் கல்வி அனுபவம் அல்ல. இதில் தமிழ் நாட்டு கல்வி நிலைமையை மட்டும் தனியாக குற்றம் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறதோ! ஆயிரம் குறைகள் இருந்தாலும் தமிழகத்தின் கல்வி சூழ்நிலை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பரவாயில்லை என தான் சொல்ல முடியும்.
LikeLike