சிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை

சிங்கப்பூர் இலக்கியத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடலாமா? என் பார்வை.

சுனீல் கிருஷ்ணன் சிங்கப்பூர் இலக்கியம் பற்றி விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜெயமோகனும் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு மறுப்பு, விளக்கம் அளித்து நண்பரும் சிங்கப்பூர் எழுத்தாளருமான சித்துராஜ் பொன்ராஜ் இரண்டு பதிவுகள் எழுதியிருந்தார்.

சிங்கப்பூருக்கு வரும் எந்தத் தமிழக எழுத்தாளரும் சிங்கப்பூர் இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்து, எழுத்தாளர்களை விதந்தோத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. (இதைப்பற்றி 2016ல் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன்.) அவ்வாறு செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் இருந்து எழுதுபவர்களும் நினைக்கவில்லை என்பதை நான் அறிவேன்.

சுனீல் மற்றும் ஜெயமோகனின் விமர்சனத்திற்கு ஆட்பட்டுள்ள சிங்கப்பூர் எழுத்தாளர்களை நான் அறிவேன். Both ends of the spectrum உண்டு. அருமையாக எழுதுபவர்களும் அவ்வாறு எழுதாதவர்களும் என்று இரு துருவங்கள் சிங்கையிலும் உண்டு. நிற்க.

சூர்யரத்னா எழுதுவது இலக்கியம் அன்று, ராணிமுத்துவில் வரும் பத்திக் கதை போன்றது என்ற ஜெயமோகனின் கூற்று அவரளவில் சரியே. ஆனால், சூர்யரத்னா ஜெயகாந்தன் கிடையாது. அவர் எழுதும் சூழல் ஜெயகாந்தன் எழுதிய சூழலை ஒட்டியது அன்று. அன்றாட வாழ்க்கைத் துன்பங்கள் அற்ற சமூகம் சிங்கப்பூர் சமூகம். பிரச்னைகள் அற்ற சமூகத்தில் ஜெயகாந்தன் தர இலக்கியம் எழுவது எங்ஙனம் சாத்தியம்? சூரியரத்னா அவர்களது நடைமுறை வாழ்க்கையை ஒட்டி எழுதுகிறார். அந்த நாட்டின் அளவில் அது அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. ஆகவே அது சிங்கப்பூர் இலக்கியமே.

ஷானவாஸ் உணவுக் கடைகள், உணவு தொடர்பான தொழில் செய்து வருபவர். தனது தொழில் சார்ந்த ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். அவர் தனது தொழில் வழியாகக் காணும் சிங்கப்பூரைத் தனது எழுத்தில் காட்டுகிறார். ஆகவே அதுவும் சிங்கப்பூர் இலக்கியமே.

ஜெயந்தி சங்கர் பாவனைகள் இல்லாமல் எழுதுபவர். மொழிபெயர்ப்புகள் செய்கிறார். சிங்கப்பூர் தொடர்பான சீன மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறார். சிங்கப்பூர்க் கதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கிறார். அவரது பார்வையில் தென்படும் சிங்கப்பூரை அவர் நமக்குக் காட்டுகிறார். சிங்கப்பூரைப் பொறுத்தவரை அதுவும் இலக்கியமே.

சித்துராஜ் பொன்ராஜின் வீச்சு அதிகம். அதிகம் வாசிப்பவராகவும், உலக இலக்கியங்களில் பயிற்சி உடையவராகவும், தமிழ், சம்ஸ்க்ருதம், கன்னடம், ஸ்பானிஷ் என்று பல மொழிகளில் தேர்ச்சி உடையவருமான சித்துராஜ் பொன்ராஜ் தனது பார்வையில் சிங்கையின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார். பக்தி இலக்கியங்களிலும் ஆர்வம் உடைய அவரது பார்வை விசாலமானது.

மாதங்கி யதார்த்த வாழ்க்கையைச் சித்தரிப்பவர். இவரும் ஜெயந்தி சங்கரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கையில் குடியேறியவர்கள். நடுத்தர மக்களின் வாழ்வைச் சித்தரிப்பதாக இவர்களது எழுத்தைப் பார்க்கிறேன்.

சித்ரா ரமேஷ், குமார், அழகு நிலா என்று பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சித்ரா பெண்ணியம் தொனிக்க எழுத வேண்டும் என்று பிரயத்னப்பட்டு எழுதுகிறார். குமார் கவிதைகள் எழுத முயன்று தனது பார்வையைப் பதிவு செய்கிறார். அழகுநிலாவின் எழுத்துகள் நேர்மையானவை. புனைவு, அபுனைவு என்று இரண்டையும் எழுதும் அவர், தனது கட்டுரைகளுக்குச் செறிவூட்டுவதற்காகப் பெரும் முயற்சி செய்பவர்.

கவிதைகள் எழுதுபவர்கள் பலர் உள்ளனர். நான் கவிதையின் பக்கம் போவதில்லை. பலதும் வேண்டும் என்றே பொய்யுரைப்பதாகத் தோன்றுவதால் அப்படி.

இத்தனை பேர் தான் எழுதுகிறார்களா என்கிற கேள்வி எழலாம். மொத்த நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம். இதில் இந்தியர்கள் 7%. சுமார் 3,85,000 இந்தியர்களில் தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களில் இருந்து வந்து தற்போது எழுதுபவர்கள் மேற்சொன்னவர்கள். இன்னும் சிலரும் எழுதுகின்றனர். அவர்களை நான் வாசித்ததில்லை.

எழுதும் பிறர் திருமுறைகள், கம்பன் சார்ந்து எழுதுகிறார்கள். இவர்கள் அறிஞர்கள் என்னும் வகையினர்.இலக்கியவாதிகள் அல்லர். பெரியவர் அ.கி.வரதராசன் இவ்வகையைச் சேர்ந்தவர்.

எழுதுபவர்கள் முதலில் வாசிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தீவிரமாக வாசித்தபின் எழுத்து வாய்க்கும். மேற்சொன்ன எண்ணிக்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் தீவிர வாசிப்பு வாய்த்தவர்கள், அப்படி வாய்த்தவர்களில் இருந்து கிளர்ந்து எழுந்து எழுதுபவர்கள், எழுதியதைப் புத்தகமாக வெளியிடுபவர்கள் என்று எண்ணிக்கை Drill Down Effectல் குறைந்துகொண்டே வந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை 15 என்று நின்றால் வியப்பதற்கில்லை.

எழுதும் 15 பேரில் யாரும் ஜெயகாந்தன் போல், புதுமைப் பித்தன் போல் எழுதவில்லை, எனவே இலக்கியம் இல்லை என்று சொல்வது சரியா?

அப்படி எழுதும் 15-20 பேரும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு, ஒரு சட்டகத்தின் உள்ளே இருந்தபடியே எழுதுகிறார்கள். சிலதை எழுத இயலாது. உதா: ‘காவி கார்ப்பரேட் மோதி’ என்று கீழைக்காற்று பதிப்பகத்தின் நூல் உள்ளது. நெற்றியில் திலகத்துடன் மோதி, கையில் சூலம், அதில் காவிக் கொடி, அதன் மேல் மண்டையோடு. இப்படிப்பட்ட அட்டைப்படத்துடன் தமிழகத்தில் வெளியிட முடியும். சிங்கையில் அதைப் போன்ற நூல்கள் வெளிவர வாய்ப்பில்லை. பணமதிப்பிழப்பை முன்வைத்துத் தமிழில் நாவல் எழுத முடியும். அங்கு அதைப் போன்று செய்ய வாய்ப்பு குறைவே. சுத்திகரிக்கப்பட்ட கருத்துகளையே எழுத முடியும். ஆக, கற்பனை விரிவது எங்ஙனம்? கற்பனை + நிகழ் அரசியல் விமர்சனங்கள் அற்ற பண்படுத்தப்பட்ட பார்வையுடனேயே எழுத முடியும் எனும் போது இலக்கிய ஆழம் கிடைப்பதெப்படி?

கடல் அளவு கருத்துக்களஞ்சியம் இல்லை. சிறிய, சுத்திகரிக்கப்பட்ட குளத்தின் அளவே உள்ளது. குளமும் ஆழமில்லை, நீர் வரத்து கட்டுப்பாடிற்குள். சுத்தப்படுத்தப்பட்ட நீர். குளத்தில் உள்ள மீன்கள் சுவை குறைவாக இருக்கலாம். ஆனால் அவை மீன்கள் அன்று என்பது சரியா?

சிங்கை அரசு எப்போது விழிப்புடன் இருக்கின்றது. சமூக நல்லிணக்கம், மொழி, இன வேறுபாடுகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுதல், தீவிரவாதம் தலையெடுக்காமல் கண்காணிப்பு, மதங்களுக்கிடையே சமரசப் போக்கையே முன்னிறுத்துதல் என்று எந்தப் பிளவும் நிகழா வண்ணம் உற்று நோக்கிக்கொண்டே இருக்கிறது. சுருக்கமாக ஒரு No-Nonsense அரசு. ஏனெனில் சமூக நல்லிணக்கம் தானாக நிகழந்ததன்று என்பதை அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே உள்ள அரசு அந்நாட்டரசு. தமிழகத்தில் உள்ளதைப் போல எந்தக் குப்பையையும் எழுதலாம், எந்த இனத்தாரையும், மொழியாரையும் கேவலப்படுத்தலாம் என்பதற்கான சூழல் அங்கு இல்லை. இனங்களுக்கு இடையேயான பிளவுகளைப் பயன்படுத்தி ஒப்பாரிக் காவியம் படைக்க வழியில்லை. எனவே ‘உயர்ந்த’ இலக்கியம் உருவாக வழியில்லை ( உயர்ந்த என்றால் என்ன என்பது தனியாக ஒரு கட்டுரைக்கான பொருள்).

உதரணமாக: தமிழகத்தில் தீப்பொறி பறக்கப் பேசும் பேச்சாளர்கள் சிங்கை சென்றால் வழவழவென்று ‘ஒற்றுமை’, ‘நல்லிணக்கம்’ என்றே ஜல்லியடிக்கவே வேண்டும். அது தான் சிங்கை. மீண்டும் தமிழகம் வந்து ‘சுடுகாடாக மாறும், ஆயுதம் ஏந்துவோம்’ என்று முழக்கம் இடுவர். அது தான் தமிழகம்.

உண்மையை ஒப்புக்கொள்வோம். சிங்கப்பூரில் தமிழ் இல்லாமல் தினமும் வாழ்ந்துவிட முடியும். அன்றாட வாழ்க்கைக்குத் தமிழின் தேவை இல்லை. பெருவாரியான சிங்கைத் தமிழர்கள் சிங்லிஷ் கொண்டே வாழ்ந்துவிட முடியும். பள்ளிகளிலும் தமிழை -Functional Tamil – என்கிற அளவிலேயே கற்பிக்கிறார்கள். Higher Tamil உண்டு. அதை விருப்பப்பட்டு எடுத்துப் பயில வேண்டும். அத்துடன் தமிழுடனான தொடர்பு அறுந்துவிடுகிறது. இதைத் தவிர்க்கவும், தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கவும் சிங்கைத் தமிழர்களும் அரசும் முனைந்து இலக்கியத்திற்கான பரிசுகள், கோப்பைகள், ஊக்கத் தொகைகள் என்று வழங்கித் தமிழைத் தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர். இதுவே சிங்கையில் தமிழின் நிலை. இதில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் முதலியோர் உருவாக வாய்ப்பில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. இதுவே நிதர்ஸனம்.

இன்னும் 50 ஆண்டுகளில் சிங்கப்பூரில் தமிழில்  பேசுவார்களா என்கிற கேள்வி அம்மக்களின் நினைவுகளில் என்றும் உள்ளது. அதற்கான முயற்சிகளில் அவர்கள் இருக்கிறார்களே தவிர, இலக்கியத்தை ஜெயகாந்தன் அளவிற்கு மேம்படுத்த அவர்கள் முயற்சிப்பதில்லை. அதற்கான சூழலும், தேவையும் அங்கு இல்லை.

இதெப்படி உனக்குத் தெரியும் என்று வினவலாம். சிங்கையில் 10 ஆண்டுகள் வசித்துள்ளேன். அங்குள்ள குறிப்பிடத்தக்க பெரியோருடன் பழகியுள்ளேன். அளந்தே பேசும் அப்பெரியோர் மனதில் ‘தமிழை வாழும் மொழியாக்குவதெப்படி? சிங்கையின் 100வது விடுதலை ஆண்டில் தமிழில் பேசுவோர் இருப்பரா? தமிழ் சிங்கையில் தொடர்ந்து திகழ வேறென்ன செய்ய வேண்டும்?’ என்ற எண்ணமே ஓடுகின்றது.

இந்த நிலையில் சிங்கப்பூரின் இலக்கியத் தரத்தைத் தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு. ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவது சரியன்று.

பி.கு.: ‘நீ என்ன இலக்கியவாதியா? உன்னை யார் கேட்டார்கள்?’ என்போர் வேறு பாத்திரக் கடைக்குச் செல்லவும். ஜெயமோஹன் 2016ல் சிங்கை வந்திருந்த போது செய்திருந்த சில இலக்கிய விமர்சனங்கள் பற்றி அப்போது நான் எழுதியது இங்கே.

அதிகரிக்கவிருக்கும் ஒப்பாரிகள்

சில ஏக்கர் நிலமும் சில கோடிகளும் இருந்தால் பொறியியல் கல்லூரி திறக்கலாம் என்று ஆட்டுக் கொட்டிலைத் திறந்துவிட்டு, இப்போது கேட் கீப்பர் வருவார் என்றால் எப்படிக் கல்லா கட்டுவது? எனவே ஒப்பாரி அதிகமாகும்.
#NEET

நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறுபவர்கள் ஜே.ஈ.ஈ. தேர்வை எதிர்ப்பதாகக் கூறுவதில்லை. ஏனெனில் ஜே.ஈ.ஈ. தேர்வின் மூலம் தேர்வானவர்கள் அரசியல் வியாதிகள் நடத்தும் பொறியியல் (பொரியல்?) கல்லூரிகளில் சேர்வதில்லை. எனவே வியாதிகளின் டார்கெட் ஜே.ஈ.ஈ. மாணவர்கள் அன்று.
 
ஆனால் நீட் அப்படியானதன்று. அடி மடியில் கை வைப்பது. பணம் கொடுத்து சீட் வாங்கும் கூட்டத்தைப் பணம் கொடுக்காமல் தேர்வின் மூலம் சீட் பெறச் செய்தால் வியாபாரம் என்னாவது? எனவே நீட் வேண்டாம் என்று இவ்வளவு முழக்கம்.
 
நீட் தேர்வு மட்டுமில்லை, பொறியியல் படிப்புக்கும் அகில இந்தியத் தேர்வு தேவை. அதன் அடிப்படையில் தேர்வானவர்கள் பொறியியல் படிக்கலாம் என்று வரப்போகிறது என்கிறார்கள். அப்போது ஓலம் இன்னும் அதிகமாகும். ஏனெனில் முதலீடு என்னாவது? சில ஏக்கர் நிலமும் சில கோடிகளும் இருந்தால் பொறியியல் கல்லூரி திறக்கலாம் என்று ஆட்டுக் கொட்டிலைத் திறந்துவிட்டு, இப்போது கேட் கீப்பர் வருவார் என்றால் எப்படிக் கல்லா கட்டுவது? எனவே ஒப்பாரி அதிகமாகும்.
 
நீட் தேர்வு சரி. இப்போது எம்.பி.பி.எஸ். தேர்வு முடித்த பின்னரும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்று சட்டம் வர இருக்கிறது. அப்போது என்ன செய்வது? தமிழகத்திற்கு விலக்கு கோருவார்களோ? செய்தால் அதைவிடக் கேவலம் ஒன்றும் இருக்க முடியாது. என் மாநிலத்தைச் சார்ந்த மருத்துவ மாணவர்கள் அகில இந்தியத் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போன்றது அது.
 
சொந்த அனுபவம் ஒன்று. இந்தியாவில் எம்.டி.எஸ். (MDS) பயின்று 8 ஆண்டுகள் பல் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவத்துடன் உறவினர் சிங்கப்பூரில் என்.யூ.எஸ்.(National University of Singapore) ல் முனைவர் பட்ட மாணவராகச் சேர்ந்தார். முனைவர் பட்டம் ஆராய்ச்சியின் மூலம் பெறப்படுவது. வாரம் தோறும் பி.டி.எஸ். மாணவர்களுக்குச் சில மணி நேரங்கள் வகுப்பெடுக்க வேண்டும். ஆசிரியராகத் தகுதி உள்ளதே என்று ‘நான் பல் மருத்துவராகப் பணியாற்ற அனுமதி உண்டா?’ என்று என்.யூ.எஸ்.ஸிடம் கேட்டு எழுதினார். ‘அனுமதி உண்டு. அதற்கு நீங்கள் சிங்கப்பூரில் ஒரு முறை பி.டி.எஸ். பயில வேண்டும்’ என்று பதில் தந்தனர்.
 
பி.டி.எஸ். மாணவர்களுக்கு ஆசிரியராக இருக்க அனுமதி உண்டு, ஆனால் பல் மருத்துவராகப் பணியாற்ற இயலாது. இப்படி ஒரு சட்டம். இது முரணாக உள்ளது என்பது வெளிப்படை. ஆனாலும் நமது பி.டி.எஸ். ற்கு மதிப்பு அவ்வளவுதான். எம்.பி.பி.எஸ்.ம் அப்படியே என்று அறிகிறேன். ஆனாலும் எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் படித்த மருத்துவ மாணவர்கள் மருத்துவராகப் பணியாற்ற அனுபதி உண்டு என்று கேள்வி. மேற்படிப்பை இங்கிலாந்து, அமெரிக்காவில் படித்திருக்க வேண்டுமோ என்னவோ.
 
அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளின் அளவிற்கு ஏன் உயரவில்லை என்று கேட்டு அரசைப் பதிலளிக்க நிர்ப்பந்தம் செய்தால் அர்த்தம் உண்டு. அதில் சமூக அக்கறையும் நேர்மையும் இருக்கும். ஆனால் அதை நமது அரசியல் வியாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பது நிதர்ஸனம் என்பதை நினத்தால் மனம் கனக்கிறது.
 
ஆனால் ஒன்று. தேசியக் கல்விக் கொள்கை பற்றி சினிமா நடிகர் கேள்வி எழுப்புவதை முக்கிய நிகழ்வாக நினைக்கும் நமக்கு வேறு எப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் வாய்ப்பர்? #NEET

சிங்கப்பூர் நாட்கள்

சிங்கப்பூரில் நான் வசித்த 9.5 ஆண்டுகளில் ஊரில் இருந்த நாட்களில் அனேகமாக எல்லா நாட்களும் நூலகம் சென்று வந்திருந்தேன். இந்த பாக்யம் எத்தனை பேருக்குக் கிட்டியிருக்கும் என்று தெரியவில்லை.
 
கிளிமெண்டி ரயில் நிலையத்தில் இறங்கி என் வீடு இருந்த வெஸ்ட் கோஸ்ட் டிரைவ் வரை 10 மணித்துளிகள் நடக்க வேண்டும். ரயில் நிலையத்திலேயே நூலகம் உள்ளது. பணி முடிந்து சுமார் 8:30 மணிக்குக் கிளிமெண்டியில் இறங்கினால் நூலகம் மூடும் 9:00 மணி வரை ஏதாவது மேய்ந்துகொண்டிருப்பது வழக்கம்.
 
‘புதியதாக வந்தவை’, ‘திருப்பப் பட்டவை’ என்று ஏதாவது புதிய நூல் கண்ணில் படும். அப்படி நான் வாசித்த நூல்கள் சுமார் 270 இருக்கும்.
 
நானாகத் தேடுப் போய்ப் பிடித்துப் படித்த நூல்கள் என்று சுமார் 120 இருக்கும்.
 
எதற்கும் இருக்கட்டும் என்று கொண்டு வந்து படித்த நூல்கள் பல உண்டு. அடிக்கடி சென்ற நூலகம் விக்டோரியா தெரு தேசிய நூலகம். அது ஒரு கருவூலம். அவ்வளவுதான்.
 
வெளிநாட்டுக்காரன் என்பதால் ஒவ்வொரு முறையும் 8 நூல்களே கடன் வாங்க இயலும். நிரந்தரவாசிகளுக்கு 16. சிங்கப்பூரர்கள் 32. பள்ளி விடுமுறை நாட்களில் இவை அப்படியே இரட்டிப்பாகும்.
 
img_0074பள்ளி விடுமுறையின் இறுதி நாளில் அவசியம் குடும்பமாகச் சென்று 16 நூல்களைஅள்ளிக் கொண்டு வந்ததுண்டு. மூன்று வாரங்கள் கழித்தே தர வேண்டும் என்பதால்.
 
ஒவ்வொரு வார இறுதியிலும் குடும்பத்துடன் நூலகம் செல்லும் வழக்கமும் இருந்தது. நூலகத்தில் சண்டை. எனக்கு ஒரு நூலே கிடைக்கும். பிள்ளைகளுக்கு 6. மனைவிக்கு 1.பெரியவன் பாரதத்தில் கல்லூரிக்குச் சென்ற பிறகு சண்டை கொஞ்சம் குறைந்தது.
 

இதைத் தவிர மின் நூல்களையும் Overdrive மூலம் கடன் வாங்க இயலும். பேச்சுப் புத்தகமும் கேட்கலாம்.

 
நூல் ஏதாவது தேடிக் கிடைக்கவில்லை என்றால் கிளிமெண்டி நூலக ஊழியர்களிடன் சொல்லிச் செல்வேன். அவர்கள்தொலைபேசியில் அழைத்து எடுத்துத் தருவார்கள். இதை அவர்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனாலும் சிங்கப்பூரர்கள் அப்படித்தான். கருமமே கண்ணாயினார்.
 
சிங்கப்பூரை விட்டு வந்ததில் எனக்கிருக்கும் ஒரே பெரிய வருத்தம் நூலக வசதி மட்டுமே. Library@Clementi Mall

மன்னனும் மடலும் – பேருரை

இந்த உரையைப் போன்றே மாதந்தோறும் கோவிலில் திருமால் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெற சிங்கப்பூர் அரசின் இந்து அறக்கட்டளை வாரியம் முடிவெடுத்துள்ளது. அறிஞர்கள் பெருமளவில் பங்குபெற வேண்டும்.

‘மன்னனும் மடலும்’ பேருரையில் இன்று முனைவர்.செல்லக்கிருஷ்ணன் திருமங்கையாழ்வாரின் ‘சிறிய திருமடல்’ பற்றி உரையாற்றினார்.
 
வைணவத்தில் திருமாலை வழிபடும் ஐந்து நிலைகளைச் சொல்லி, அர்ச்சையில் நிறுத்தினார். திருமங்கையாழ்வார் 82 திவ்யதேசங்களைப் பாடியுள்ளார். அவரே நமக்கு அர்ச்சாவதாரத்தின் பெருமையை அதிக அளவில் சொல்லிச் சென்றார் என்று இணைத்தார் செல்லக்கிருஷ்னன்.
 
பெண்கள் மடல் ஏறுவது வழக்கம் இல்லை. வள்ளுவரும் இதையே சொல்கிறார். ஆனால், பரகால நாயகி பாவத்தில் திருமங்கைமன்னன் சிறிய திருமடலில் தனக்கும் பெருமானுக்குமான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
 
இராமன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான் என்று சிறிய திருமடல் சொல்கிறது. ஆனால் இராமாயணம் இலக்குவன் அறுத்தான் என்கிறது. இந்த முரணை வியாக்யான கர்த்தர்கள் ‘இலக்குவன் இராமனின் கை போன்றவன். எனவே இராமன் அறுத்தான் என்பது சரியே’ (வாம ஹஸ்தம்) என்று நிறுவினார்.
 
தற்போது அவரது உரையின் காணொலி தயாராகிக்கொண்டிருக்கிறது. கிடைத்ததும் வெளியிடுகிறேன்.
 
இந்த உரையைப் போன்றே மாதந்தோறும் கோவிலில் திருமால் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெற சிங்கப்பூர் அரசின் இந்து அறக்கட்டளை வாரியம் முடிவெடுத்துள்ளது. அறிஞர்கள் பெருமளவில் பங்குபெற வேண்டும்.
 
சிங்கப்பூரில் நான் பங்கெடுக்கும் இறுதி நிகழ்ச்சியாகத் திருமங்கையாழ்வார் குறித்த சொற்பொழிவு நடந்தது அடியேன் செய்த பேறு.திருமங்கையாழ்வார் சொற்பொழிவு

கல்யாணம் (எ) நிதர்ஸனம்

ஆனால், குடும்பம் எப்படிப் போனாலும், பெற்றோர் எந்த இழிச்சொல்லுக்கு ஆட்பட்டாலும், சமூகம் என்ன சொன்னாலும், என் இஷ்டப்படிதான் நடப்பேன், ஏனெனில் நான் ஒரு ‘லிபரேட்டட்’ பெண் என்று நினைக்கும் பெண்கள் இருக்கும் வரை, புத்திர பாசத்தால் தலை குனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட எத்தனையோ சுதாக்கள் மற்றும் ரகுநாதன்கள் தினம் தினம் மனம் புழுங்கிச் செத்துக்கொண்டேயிருப்பார்கள். இதுவும் நிதர்ஸனம்.

‘இன்னும் எழுதல்லையே, உங்கடவாளா இருக்கறதால எழுதல்லையா?’

 
‘ஏண்டாம்பி, பருப்பு சாதம் சாப்டுட்டு ‘நீட்’டுக்கு நீட்டி மொழக்கிண்டு ** விட்டுண்டே வந்தியே, இப்ப எங்க இருக்கே? அவான்னா மூடிண்டுடுவேளா?’
 
நேற்றும் இன்றும் வந்த கேலிகளில் வெளியிடத் தகுந்த இரண்டு இவை. இவர்கள் பாடகி ஶ்ரீமதி.சுதா ரகுநாதன் விஷயம் பற்றிக் கேட்கிறார்கள்.
 
ஒரு குடும்பத்தின் நிகழ்வு என்பதால் வாளாவிருந்தேன். கடமையை ஆற்றி விடுகிறேன். பரம வைதீகர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் வேறு பாத்திரக் கடைக்குச் செல்லலாம். 
 
இது ஒரு குடும்பம் தொடர்பான விஷயம். மூன்றாமவர் தலையிடுதல் தவறு மட்டுமன்று, அசிங்கமும் கூட.
 
இனங்கள் கடந்த காதல், மனங்கள் கடந்த உறவு, மதங்கள் கடந்த சேர்க்கை என்பது கேட்க நன்றாக இருக்கும். நடைமுறையில் பிரச்சனைகளே அதிகம். நிற்க.
 
சோனியா காந்தி பற்றி எழுத்தாளர் சோ சொன்னதாகக் குருமூர்த்தி சொன்னது: ‘ நான் சொல்வது கசக்கும். ஆனால் நிதர்ஸனம் இதுதான். ராஜீவின் மனைவி கறுப்பினப் பெண்ணாக இருந்திருந்தால் அவரைக் கட்சித் தலைவராகவும் பிரமர் வேட்பாளராகவும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்றிருக்க மாட்டார்கள்.’ இதை மனதில் கொண்டும், நமது குருதியில் ஊறியுள்ள கறுப்பு / வெளுப்பு மீதான வெறுப்பு / விருப்புப் பார்வையை கொண்டும் பார்த்தால், மணமகன் வெளுப்பு அமெரிக்கனாக இருந்திருக்கும் பட்சத்தில் நமது அறச்சீற்ற அந்தணர்கள் சற்று அடக்கியே அதிர்ந்திருப்பர்.’ சொன்னால் விரோதமிது, ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ’ ரகம் தான். வைபவர்கள் வையட்டும். நிற்க.
சிங்கப்பூரின் தந்தை அமரர் லீ குவான் யூவை விட ஒரு முற்போக்காளரைக் காண முடியுமா? அவரது மகள் ( பிரபல நரம்பியல் மருத்துவர் Dr.Lee Wei Ling) திருமண விஷயத்தில் திரு.லீ சொன்ன அறிவுரை நியாயமானது. (அவரது சுய சரிதையில் உள்ளது). இதனால் அவரைப் பிற்போக்காளர் என்று ஒதுக்க இயலுமா?
 
சுதா ரகுநாதன் பெண் விஷயத்தில் மணப்பெண் மதம் மாறி (மாற்றி), பின்னர் திருமணம் நடந்திருந்தால் வேறு விஷயம். ஆனால் இங்கு மணமகன் ஹிந்து தர்மத்தை விரும்பி ஏற்கிறான் என்கிறார்கள். இதை வரவேற்க வேண்டும். இதற்கான சம்ஸ்காரங்கள் இருக்கலாம். அவற்றைச் செய்து சம்பிரதாயதுக்குள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. நிற்க.
 
ஆனால்.. ஆனால்.. ஆனால்…
 
லவ் ஜிகாத் என்பது எத்தனை உண்மையோ, சில குடும்பத்துப் பெண்களைக் குறிவைத்து, பெரும் பண பலத்துடன் செய்யப்படும் ‘காதல் யுத்தங்கள்’ எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை பிராம்மணப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் Orchestrated காதல் கல்யாணங்கள். இதில் சமீபத்திய வரவு பண்ருட்டி, விழுப்புரம் பகுதகளைச் சார்ந்த செட்டியா, ரெட்டியார் சமூகப் பெண்களை மையப்டுத்திச் செய்யப்படும் காதல் பிரயத்னங்கள்.
 
பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த செட்டியார் குடும்பங்கள் மகள் கல்லூரிக்குச் செல்லும் முன் திருமணம் செய்து விடுகிறார்கள். படிப்பு முடிந்தவுடன் பெண் புக்ககம் செல்வாள் என்பது புரிந்துணர்வு ஒப்பந்தம். இதை நேரில் கண்டிருக்கிறேன். அப்படி அந்தச் சமூகம் த்னது பெண்களைக் காக்கிறது. சில லவ் ஜிகாத், Orchestrated காதல் பிரயத்னங்களால் பல குடும்பங்கள் அழிந்த பின் வந்துள்ள எச்சரிக்கை உணர்வு.
 
இதில் பிராம்மணக் குடும்பங்கள் விதிவிலக்கு. அவர்களுக்குத் தங்களை முற்போக்காகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். ‘இல்லை, நாங்க ப்ராமின்ஸ் இல்லை. எல்லாம் சாப்பிடுவோம். ரொம்ப சோஷ்யல் டைப். அப்ப மாதிரி மடிசிஞ்சி கிடையாது. ஆஃபீசுக்கெல்லாம் திருமண் இட்டுண்டு வரமாட்டோம். எங்க சம்பிரதாயம் நாலு சுவத்துக்குள்ள தான். நாங்களும் செக்யூலர் தான். வாங்க, ஒரு பெக் போடலாம்’ என்று வேஷம் போட்டே ஆக வேண்டிய நிலையில் இருப்பதாகவே பிராம்மண சமூகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை முன்னேறியதற்கான அடையாளமாக, ‘I have arrived’ என்பதற்கான அடையாளக் கொடியாகக் கொண்டுள்ளது. இதுவும் நிதர்ஸனம்.

பிற்போக்கு என்று ஏசப்படுவேன் என்றாலும் சொல்கிறேன்.

படிப்பு தேவைதான். நல்ல படிப்பு அவசியம் தேவை தான். ஆனல், சம்பிரதாயப் படிப்பும் தேவையே. பிள்ளைகளுக்கு அவற்றையும் சொல்லிவைப்பது அவசியம். செக்யூலர் கல்வி என்கிற ஹோதாவில் சம்பிரதாயம் வேண்டாம், பண்டைய  நெறிகள் வேண்டாம், அவை பிற்போக்கு என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தால் இவ்வாறான விளைவுகளே ஏற்படும்.

இப்படிச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. ஏனெனில் எந்த முற்போக்குப் பத்திரிக்கையும், இலக்கியக் கழகமும் எனக்கு விருதளிக்கப் போவதில்லை. அதனால் என் கருத்துக்களை மாற்றிக் கொள்ள எனக்கு அவசியம் இல்லை. சபரி மலை விஷயத்திலும் நான் சம்பிரதாய நம்பிக்கைக்கே வாக்களிக்கிறேன். பெண்ணீயம் என்று வெற்றுக் கூச்சல் இட எனக்குத் தேவை இருக்கவில்லை. ஒரு அடையாளம் ஏற்படுவதற்காக கலாச்சார விழுமியங்களை மறுதலித்துப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.

‘கல்யாணப் பையன் சந்தியாவந்தனம் பண்றான், மடிசிஞ்சி’ என்று ஒதுக்கும் பிராம்மணப் பெண்கள், ‘இதப்பாருங்கோ, மாமியார், நாத்தனார்னு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கப்படாது’ என்று கட்டளை விதிக்கும் பெண்கள், ‘பொண்ணு மாடர்ன். அதுனால ஜீன்ஸ் போட்டுண்டே கோவிலுக்கு வருவா. சும்மா புடவை கட்டிக்கோ, சமையல் பண்ணுன்னு தொந்தரவு பண்ணாத இடமா பாருங்கோ’ என்று கேட்கும் பெண்ணின் தாயார்கள்,  ‘தீட்டு, மடி, ஆசாரம்னு நாட்டுப்புறமா இருக்கப் படாது. மாடர்னா சோசியலா இருக்கற ஃபேமிலியா பாருங்கோ’ என்று கேட்கும் பெண்ணின் பெற்றோர் இருக்கும் சமுதாயத்தில், ஒரு சுதா ரகுநாதன் தனது மகளுக்கு இந்துவாக விரும்பும் ஆப்பிரிக்க அமெரிக்கரைத் திருமணம் செய்ய அனுமதித்தது குற்றமில்லை.

ஆனால், குடும்பம் எப்படிப் போனாலும், பெற்றோர் எந்த இழிச்சொல்லுக்கு ஆட்பட்டாலும், சமூகம் என்ன சொன்னாலும், என் இஷ்டப்படிதான் நடப்பேன், ஏனெனில் நான் ஒரு 'லிபரேட்டட்' பெண் என்று நினைக்கும் பெண்கள் இருக்கும் வரை, புத்திர பாசத்தால் தலை குனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட எத்தனையோ சுதாக்கள் மற்றும் ரகுநாதன்கள் தினம் தினம் மனம் புழுங்கிச் செத்துக்கொண்டேயிருப்பார்கள். இதுவும் நிதர்ஸனம்.

இப்படியான பெற்றோர்கள் தாங்களும் புண்பட்டு, தங்களது பிள்ளைகளின் செயல்களை அங்கீகரிக்க முடியாமல், அதே சமயம் அங்கீகரித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அங்கீகரிப்புக்காகத் தங்களது குல குருக்களையும் அவர்கள் வகிக்கும் ஆஸ்தானங்களையும் கூட வம்புப் பேச்சிற்கு ஆளாக்குவதும் கூட நிதர்ஸனமே.

மேற்சொன்ன அனைத்து நிதர்ஸனங்களையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய நிதர்ஸன உலகத்தினரான நாம், அடுத்த நிதர்ஸனக் கல்யாணம் நடைபெறும் வரையில் வெறும் வாயை மென்றுகொண்டிருப்போம்.

அதுவே நமது நிதர்ஸனம்.

பி.கு.: பருப்பு சாதம் தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் ரோஷம் உண்டு. எனக்கெனக் கருத்துகள் உள்ளன. முற்போக்காகத் தெரிவதற்காகக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளத் தேவையில்லாத அளவிற்குத் தன்மானம் உள்ளது. நன்றி.

நெஞ்சு பொறுக்குதில்லையே

மாணவர்களே, உங்களை அரசியல் பக்கம் திருப்ப எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், தேச துரோகி ஒருவனது ஈடச் செயல் கண்டு, கொதித்து, அவனை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று இதைப் பற்றி எழுதுகிறேன்.

அவன், இவன் என்று ஏக வசனத்தில் எழுதுவது இதுவே முதல் முறை. அவனுக்கு என்னை விட ஒரு வயது அதிகம். அவ்வளவு தான். ஆகையால் அவன் என்றால் தவறீல்லை.

ஒருவேளை படித்தவனாக இருந்தால், அறிவாளியாக இருந்தால், சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவனாக இருந்தால், வயதில் குறைந்தவனாயினும் மரியாதை செய்ய வேண்டும். அதுவும் இவனுக்கு வரவில்லை. சரஸ்வதியும் அவனைக் கண்டு ஓடி ஒளிந்துகொண்டாள்.

ஆனால், ஊர்ப்பட்ட சொத்து உள்ளது, எல்லாம் அப்பாவும், அம்மாவும், பாட்டியும் சேர்ந்து ஊரை அடித்து உலையில் போட்டு அடித்த கொள்ளையால் வந்த பணம். அது கொடுக்கும் திமிர் மட்டுமே உள்ள, சாதாரண அறிவு கூட அற்ற, சுய புத்தி வேலை செய்யாத, எடுப்பார் கைப்பிள்ளையாகவே ஆள் மட்டும் வளர்ந்துவிட்ட ஒரு பணக்கார தடித் தாண்டவராயன் என்பதால் அவனை ‘அவன்’ என்று சொல்வது தவறில்லை.

அவன் என்ன செய்துள்ளான் என்பதைப் படத்தைப் பார்த்தாலே தெரியும். இன்று #yogaday2019. உலகெங்கிலும் உள்ள நாடுகள் யோகாவைக் கொண்டாடுகின்ற்ன. இஸ்லாமிய நாடுகள், கிறித்தவ நாடுகள், பவுத்த, ஷிண்டோ, கடவுள் இல்லை நாடுகள் கூட யோகாவைக் கொண்டாடி, இன்று தத்தமது நாடுகளில் நடந்துள்ள் யோக உற்சவங்களைக் குறித்துப் படங்களை வெளியிட்டுள்ளன.

உலக அளவில், பிரதமர் மோதியின் முயற்சியால் யோகாவும், அதனால் பாரதமும் பெரும் புகழாரத்துடன் போற்றப்படுகின்றன.

@rahulgandhi on Yoga Dayஆனால், இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டை ஆள வேண்டும் என்று தகுத்திக்கு மீறி ஆசைப்பட்ட அந்த முழு முட்டாள், இந்த நாட்டையும், நாட்டக் காக்கத் தம் உயிரையே தரத்துணிந்துள்ள வீரர்களையும், அவர்களுக்கு உற்ற துணையாக நின்று தேசத்தைக் காக்கும் நாய்களையும் இழிவு படுத்தும் விதமாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளான். ராணுவ நாய்களும், வீரர்களும் யோகா செய்யும் படத்தை வெளியிட்டு, ‘இதுவே புதிய பாரதம்’ என்று கேலியாக வெளியிட்டுள்ளான்.

பிறந்த நாட்டின் புனிதத்தையும் மதிக்கத் திராணியில்லை, நாட்டைக் காக்கும் வீரர்களையும் மதிக்க வக்கில்லை, ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நின்று பாரதத்தைக் காக்கும் நாய்களின் சேவையையும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அறிவில்லை. இப்படி எந்தத் தகுதியும் அற்ற ஒரு அரை வேக்காடு தேசத்தை ஆள வேண்டும் என்று தேர்தலின் போது கத்திய கத்து இன்னமும் காதில் ஒலிக்கிறது.

பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததுவே என்றான் பாரதி.

தேசத்தையும் மதிக்கத் தெரியாது, ராணுவத்தையும் போற்றத் தெரியாது. அப்புறம் என்ன கண்றாவிக்கு நாட்டை ஆளத் துடிக்க வேண்டும்?

தேசத்தை இழிவு படுத்துவதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பதெப்படி? இவன் ஏதோ அரைகுறைக் கல்வி சீமானோ, முழுப் பைத்தியம் கமலஹாசனோ அல்லன். மதவெறி பிடித்த ஒவ்வாசியும் அல்லன். காஷ்மீரத்தின் தீவிரவாதியும் அல்லன். ஆனால், இந்த தேசத்தின் விடுதலைக்காக சுமார் எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தி.

நேருவின் கொள்கைகள் பலது தவறானவை தான். ஆனால் தேசத்தின் பாதுகாவலர்களை அவர் இங்ஙனம் சித்தரிப்பதைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டார். இந்திரா காந்தி இதைக் கண்டிருந்தால் வெகுண்டெழுந்திருப்பார்.

காங்கிரஸ் அழியக் கூடாது, ஆனால் இந்தக் குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சி காப்பாற்றப் பட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் யாராகிலும் உப்பிட்டுச் சோறுண்ணுபவர்களாக இருந்தால், பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை அழைத்து அவரிடம் காங்கிரசை ஒப்படைக்கச் செய்ய வேண்டும்.

தேசத்தையும், ராணுவத்தையும் மதிக்கத் தெரியாத முழு மூடர்கள் பாங்காக் சென்று பூரண ஞானம் அடைந்து வரலாம். காமராஜர் வளர்த்த காங்கிரஸ் இன்று தேச துரோகக் கபோதிகளின் கையில் உள்ளது. பச்சை தேசத் துரோக கம்யூனிஸ்டுகள், படு அயோக்கிய சிகாமணி திராவிடக் குஞ்சுகள் கூட செய்யமாட்டாத ஒரு இழிச்செயலை ச் செய்துள்ளான் ராகுல்.

இந்திரா காந்தியின் பேரன் தானா என்று கேட்கவைத்துள்ளான் அவன்.

ராகுல் காந்தி காங்கிரஸின் சாபக்கேடு, தேசத்தின் அவமானம்.

ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – வெளிப்படையாக, தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னிலையில், ராணுவத்தையும், நாய்களையும் குறிப்பிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். முடிந்தால் ராணுவ வீரர் ஒருவரையும் அவர் பழக்கியுள்ள நாய் ஒன்றையும் அழைத்து இருவர் காலிலும் விழுந்து தனது பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்.

தேச நலனில் அக்கறை கொண்ட காங்கிரஸ்காரர்கள் புடவை கட்டிக் கொண்டு சப்பைக் கட்டு கட்டி நபும்ஸகர்களாக இல்லாமல், ராகுல் காந்தியை இவ்வாறு மன்னிப்பு கேட்க வற்புறுத்த வேண்டும்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.

யோகா தினம்

யோகப் பயிற்சிகள் உலகம் முழுமைக்குமானவை. மொழி, மதம், இனம், இடம், கண்டம் கடந்து உலகம் முழுவதற்கும் நன்மை பயக்கும் அரிய பரிசு யோகப் பயிற்சி.

மாணவர்களே, இன்று ஒரு முக்கியமான நாள்.
உலகிற்குப் பாரதத்தின் கொடையான யோகப் பயிற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து, உலக யோகா தினம் என்று அறிவித்த நாள்.
யோகப் பயிற்சிகள் உலகம் முழுமைக்குமானவை. மொழி, மதம், இனம், இடம், கண்டம் கடந்து உலகம் முழுவதற்கும் நன்மை பயக்கும் அரிய பரிசு யோகப் பயிற்சி.
யோகப் பயிற்சிகள் ஹிந்து மதத்திற்கு உரியன, ஆகவே அதனை அனுசரிக்க வேண்டாம் என்று பாரதத்தில் உள்ள பிற்போக்கு சக்திகள் சிறுபான்மையினரைத் தூண்டி விட்டன. ஆனால், இஸ்லாமியர்களுக்குப் புனிதமான நாடான சவூதி அரேபியா முதலாக 47 இஸ்லாமிய நாடுகள் யோகக் கலையை அங்கீகரித்து, அவற்றைப் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளன.
உங்களிடமும் சிலர் யோகப் பயிற்சிகள் ஹிந்து மதத் தொடர்புடையன என்று சொல்லலாம். அதனால் என்ன பரவாயில்லை என்று அவர்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி, யோகப் பயிற்சிகளை நல்ல ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு பின்பற்றி வாருங்கள்.
இந்தப் பயிற்சிகளை எதிர்ப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்தி யோகக் கலைக்கு அங்கீகாரம் வாங்கித் தந்தது நமது பிரதமர் நரேந்திர மோதி அவர்கள். இதே அங்கீகாரத்தை முந்தைய பிரதமர் மன்மோஹன் சிங் வாங்கிக் கொடுத்திருந்தால் இவ்வளவு எதிர்ப்புகள், கேலிகள் வந்திருக்காது.
எதிர்ப்பவர்களின் நோக்கம் யோகம் அன்று. நரேந்திர மோதி.
இந்தக் கீழ்த்தரமான அரசியல் பார்வைகளால் கவனம் சிதறாமல், சரியான குருவிடம் யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, மன அமைதியுடனும், ஒருமைப்பாட்டுடனும் கல்வி பயின்று வாழ்வில் வளம் பெறுவீற்களாக. (போட்டோ : இணையத்திலிருந்து)
371571-yogamuslim7

சிங்கப்பூர் – ஒரு சிந்தனை

சில ஆண்டுகளுக்கு முன், மணி சங்கர் ஐயர் என்னும் காங்கிரஸ் உறுப்பினர் மயிலாடுதுறையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சுப்பிரமணியன் சுவாமி சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். அவர்கள் மாற்றவைல்லை என்பது தெரியும். ஆனாl, உலகில் உள்ள இத்தனை நாடுகளை விடுத்து, சிங்கப்பூரை ஏந் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?

மாணவர்களே,  இங்கு நீங்கள் பார்க்கும் படங்கள் சிங்கப்பூர்ல் Changi City Point, Singapore என்னும் இடம். கட்டாந்தரையாக இருந்த நிலம். இன்று இயற்கையும் செயற்கையும் கொஞ்சும் இடமாக உள்ளது.
 
Singapore Expo
செயற்கையாக, மனிதனால் உருவாக்கப்பட்ட வியக்கவைக்கும் ஒரு ரயில் நிலையம், வானளாவ நிற்கும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊழியர்கள் அமைதியாக நடந்து சென்று வேலை செய்ய ஏதுவான நிலை, எப்போதும் கொட்டும் தண்ணீர், எப்போதுமே போகாத மின்சாரம். இவை ஏதோ தற்செயலாக நிகழ்ந்தவை அன்று. ஆட்சியாளர்களாலும் கடுமையாக உழைக்கும் அறிவுடை மாந்தர்களாலும் உருவாக்கப்பட்டவை.
IMG_0979
 
ஏன் நிலத்தை அபகரிக்கிறார்களே, நிலத்தில் குழாய் பதிக்கிறார்களே, கட்டடம் எழுப்புகிறார்களே என்று யாரும் ஓலமிடுவதில்லை. அரசு நல்லது செய்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.
 
img_0162
தடையில்லா மின்சாரம் வேண்டும், குழாய் திறந்தால் நீர் வேண்டும், இருக்க இடம் வேண்டும், நள்ளிரவிலும் பெண்கள் தனியாக வேலைக்குச் சென்று திரும்ப வேண்டும் என்றால் அதற்கு அரசின் முயற்சி மட்டும் போதாது, மக்களின் ஒத்துழைப்பும் தேவை.
img_0129
சிங்கப்பூரை விட பல ஆயிரம் மடங்குகள் பெரிய அளவுள்ள அருகாமை நாடுகள் ‘சிங்கப்பூர் செய்வதை நம்மால் ஏன் செய்ய முடிவதில்லை? சிங்கப்பூர் போன்று நமது குடிமக்களுக்கும் எவ்வாறு வீடுகள் அமைத்துத் தருவது? அனைத்துலக வங்கிகளை எப்படி ஈர்ப்பது? தொழில் துவங்க இலகுவான இடமாக எப்படி மாறூவது?’ என்று யோசிக்கின்றன. காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இவற்றையெல்லாம் சிங்கப்பூர் செய்துகாட்டியுள்ளது. மூன்றாம் தர நாடாக இருந்து, 30 ஆண்டுகளில் முதல்தர நாடாக முன்னேறியுள்ளது.
 
உலகில் Per Capita Income மிக அதிக அளவில் உள்ள ஒரு நாடாகச் சிங்கப்பூர் திகழ்கிறது.
 
காரணம்: போராட்டங்கள் இல்லை, வெற்று வாய்ச்சவடால்கள் இல்லை, வன்முறை இல்லை. இவற்றில் எல்லாம் ஈடுபட மகக்ளுக்கு நேரமோ தேவையோ இல்லை.
 
அடுத்த முறை உங்களைப் போராட்டத்துக்கு யாரேனும் அழைத்தால் மேற்சொன்ன கேள்விகளைக் கேளுங்கள்.
 
சிங்கப்பூர் விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் கியூபாவும் விடுதலை பெற்றது. அப்போதே உலக அளவில் சர்க்கரை ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது கியூபா. இலங்கை 1948ல் விடுதலை பெற்றது. தற்போது இந்த மூன்று நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
 
சில ஆண்டுகளுக்கு முன், மணி சங்கர் ஐயர் என்னும் காங்கிரஸ் உறுப்பினர் மயிலாடுதுறையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். மதுரையை சுப்பிரமணியன் சுவாமி சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். அவர்கள் மாற்றவைல்லை என்பது தெரியும். ஆனாl, உலகில் உள்ள இத்தனை நாடுகளை விடுத்து, சிங்கப்பூரை ஏந் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?
 
காரணம்: மனித முயற்சியால், ஊழல் அற்ற அரசியலால், மக்களின் கடின உழைப்பால் இரண்டு தலைமுறைகளுக்குள் செழிப்பாக வளர்ந்த தேசம் சிங்கப்பூர் மட்டுமே.
 
சிந்தித்துப் பாருங்கள். வெற்றுப் போராட்டங்கள் வீணாக முடியும். தேச நலன் பேண, உங்களை வாழ்வில் முன்னேற்றிக் கொள்ள, அரசியல்வாதிகள் அறிவிக்கும் போராட்டங்களைத் தவிர்த்துக் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
 
நாளைய உலகம் உங்கள் கையில். தொடர்ந்து பேசுவோம். வாழ்த்துக்கள்.

தம்பட்டம் 3

ஆகவே, அடிப்படை ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. ஆவணத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தாத்பர்யத்தை அறிந்துகொள்ள அடிப்படை ஜப்பானிய மொழியறிவு தேவையாக இருந்தது.

மாணவர்களே,  பம்பாயில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்தேன். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அங்கு ஜப்பானியக் கம்பெனிக்கு மென்பொருள் எழுதும் நிறுவனம்.

எதைப் பார்த்து மென்பொருள் எழுதுவது? Functional Specifications என்று ஒரு ஆவணம் கொடுப்பார்கள். அதில் உள்ள தேவைகளின் படி மென்பொருள் எழுத வேண்டும். ஒரு விஷயம் மட்டுமே கடினமாக இருக்கும். அந்த ஆவணம் ஜப்பானிய மொழியில் இருக்கும்.

ஆகவே, அடிப்படை ஜப்பானிய மொழி கற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. ஆவணத்தை முழுமையாகப் படிக்க முடியாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தாத்பர்யத்தை அறிந்துகொள்ள அடிப்படை ஜப்பானிய மொழியறிவு தேவையாக இருந்தது.

ஆகவே ஜப்பானிய மொழி பயிலத் துவங்கினேன்.

முழுவதும் பயில இயலவில்லை. ஓரளவிற்கு அடிப்படையாகப் பேச வந்தது. ஜப்பானிய நிறுவனத்தார் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பக்க அளவிற்கு எழுத முடிந்தது ( தவறுகள் இருந்தன என்பது  வேறு விஷயம்).

சில நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, ஜப்பான் சென்றேன். அங்கு சாட்சிக்குக் கூட ஆங்கிலம் இல்லை. மேலாளர் ஜப்பானிய மொழியிலேயே பேசுவார். மொழி மாற்றிக் கருவி கொடுத்தார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தார்கள். இருந்தாலும் சரளமாகப் பேச முடியவில்லை.

ஜப்பானில் பகுதி நேரமாக சிறு பள்ளியில் சேர்ந்து படித்தேன். 2 மாதங்களில் நல்ல முன்னேற்றம். ஆனாலும் தாய்மொழியில் அவர்கள் பேசும் போது அவர்கள் அளவிற்கு என்னால் பேச முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் அதிக அளவு புரியத் துவங்கியது.

பணி அழுத்தம் காரணமாக மேலும் ஜப்பானியம் பயில முடியவில்லை. ஆனால், சாதாரணமாகப் பேசும் போது ஜப்பானிய மொழியில் 4 வரிகள் பேசிவிட்டு, அவர்கள் ஆச்சரியம் அடந்தவுடன் ஆங்கிலத்திற்கு மாறுவது என்று ஒரு உத்தியைக் கையாண்டேன். தங்களது மொழியில் அன்னியன் பேச முயல்வதை அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். தவறுகளைத் திருத்தினார்கள். ‘நீ பேசுவது குழந்தை பேசுவது போல் உள்ளது’ என்று சொன்னார்கள். (கொதமோதாச்சி)

ஜப்பானிய மொழி எனக்குத் திறந்துவிட்ட கதவுகள் பல.

தற்போது 12 ஆண்டுகளாக அம்மொழியுடன் தொடர்பில் இல்லை. ஆகையால் தற்போது மொழி என்னைவிட்டு விலகிவிட்டது. மேலோட்டமாகவே புரிகிறது. மீண்டும் பயிலலாமா என்று யோசித்து வருகிறேன். தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இலக்கண முறையில் தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது. யாராவது மொழியியலாளர்கள் ஆராயலாம்.

இதற்கிடையில் சிங்கப்பூரில் சீனம் பயில முயன்று தோற்றேன். கடினமான மொழி. எனக்கு வயதும் ஆகிவிட்டது என்று புரிந்தது.

ஜப்பானியத்தாலும் எனது தமிழறிவு அழியவில்லை. மேலும் மெருகேறியது என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு மொழியும் சிறந்த அனுபவங்களுக்கான கதவே. நாம் தட்ட வேண்டும். உலகம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

அதிகக் கதவுகளைத் தட்டுங்கள். உலகெங்கிலுமிருந்து தென்றல் உங்களைத் தழுவட்டும்.

வாழ்த்துக்கள். #மொழி

பி.கு.: சென்னையில் ஜப்பானிய மொழி பயில ABK AOTS DOSOKAI என்று தேடிப்பாருங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..

ஊழியர்கள் என்னிடம் சந்தேகம் கேட்டாலோ, வேறூ ஏதாவது பேசினாலோ முதலில் அவர்கள் பேசும் வார்த்தைகளை உற்று கவனிப்பேன். கொஞ்சம் புரிந்தால் இந்தி, ஒன்றுமே புரியவில்லை என்றால் மராத்தி என்று ஒரு கணக்கு. புரிந்தால் உடைந்த ஹிந்தியில் பேசி, சமாளித்து அனுப்புவேன். புரியவேயில்லை, மராத்தியென்றால் என்ன செய்வது?

மாணவர்களே,

பம்பாயில் வேலைக்குச் சேர்ந்த போது இந்தி பேசினால் ஓரளவு புரியும். எழுதப் படிக்கத் தெரியும்.

Voltasல் பணிமனை(Workshop)ல் முதல் சுற்று. TATA கம்பெனிகளில் அனைத்து பொறியாளர்களும் எல்லாத் துறைகளிலும் சிறிது காலம் பணியாற்ற வேண்டும். மின் பொறியியலாளனான என்னை மின் தூக்கி/ மின் மாற்றி (Transformer/Switchgear) உற்பத்தி செய்யும் பணிமனைக்கு அனுப்பினார்கள்.

பூராவும் மராத்திய தொழிலாளர்கள். சிவ சேனை யூனியன் அங்கத்தினர்கள். தென்னிந்தியா என்றால் அப்போது அவ்வளவாக ஆகாது. இவர்களை நான் மேற்பார்வை செய்ய வேண்டும். அவர்களிடமிருந்து பணியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக அவர்களுடன் நான் பேசியே ஆக வேண்டும். அங்குள்ள சூபர்வைசர்கள் டிப்ளமா படித்தவர்கள். ஓரளவு ஆங்கிலம் புரியும். பெரும்பாலும் மராத்தி, இந்தி, கொஞ்சம் குஜராத்தி.

ஊழியர்கள் என்னிடம் சந்தேகம் கேட்டாலோ, வேறு ஏதாவது பேசினாலோ முதலில் அவர்கள் பேசும் வார்த்தைகளை உற்று கவனிப்பேன். கொஞ்சம் புரிந்தால் இந்தி, ஒன்றுமே புரியவில்லை என்றால் மராத்தி என்று ஒரு கணக்கு. புரிந்தால் உடைந்த ஹிந்தியில் பேசி, சமாளித்து அனுப்புவேன். புரியவேயில்லை, மராத்தியென்றால் என்ன செய்வது?

சூபர்வைசர் சாளுங்கே என்னும் மராத்தியரிடம் சென்று ‘எனக்கு மராத்தி தெரியாது. இந்தியில் சொல்லுங்கள்’ என்பதை மராத்தியில் எப்படிச் சொல்வது என்று கேட்டுக்கொண்டேன். ஆச்சரியம் அவருக்கு. ‘எனக்கு மராத்தி தெரியாது’ என்பதை மராத்தியிலேயே சொன்னதால் ஊழியர்கள் ஆச்சர்யத்துக்குள்ளானார்கள். இந்த வழிமுறை ஊழியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்னொரு உத்தியையும் கையாண்டேன்.

மதிய உணவை ஊழியர்களுடன் சேர்ந்து உண்டேன். மேனேஜர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அங்கெல்லாம் சாதி வேறுபாடு உண்டு. எனக்குக் கவலை இல்லை. ஒரு மாதம் இப்படிச் சென்றது.

ஒரு மாதத்தில் மராத்தியில் அடிக்கடி பயன்படும் கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். பயன் படுத்துவதற்கன்று. அவையே அதிகமாகப் புழங்கியவை.

இரண்டு மாதங்களில் ஊழியர்கள் சகஜமாகப் பழகத் துவங்கினார்கள். அடிக்கடி OT – Overtime – கேட்பார்கள். ஓரிரு முறை கொடுப்பேன். பின்னர் மறுக்கத்துவங்கினேன். ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் போது மற்ற ஊழியர்களுடன் அவர்களது பேருந்திலேயே சென்று வந்தேன். முடிந்தவரை மராத்தியிலேயே பேச முயன்றேன். மொழி ஓரளவு கைகூடியது.

மதிய உணவு இடைவேளையில் அவர்களுடன் அமர்ந்து சிவ சேனையின் பத்திரிக்கையான சாம்னா படிக்கத் துவங்கினேன். அப்போது பால் தாக்கரே தலையங்கம் எழுதுவார். பெரும்பாலும் எளிமையாகவே இருக்கும். ஒரு கட்டத்தில் ஊழியர்கள் எனக்காகவென்று சாம்னா எடுத்து வந்தார்கள். நானும் சாம்னா படிக்கிறேன் என்பதால் இன்னமும் ஒன்றிப்போனார்கள்.

வந்த புதிதில் அவர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களுக்குள் ஹிந்தியில் பேசிக்கொண்டது ‘யெ மதராஸி சாப் நஹி, சாம்ப் ஹை’ ( இவன் மதராசி ஆபீசர் இல்லை, மதராசிப் பாம்பு). அதே ஊழியர்கள் 2-3 மாதங்களில் சொன்னது ‘இக்கட யே மதராஸி சாஹேப். துமி அத்த மராதி மானுஸ் ஆஹெ. துமி ஃக்த பஸா. அமி காம் கர்தோ, துமி பகா’  ( இங்க வாங்க மதராசி ஆபீசர். இப்ப நீங்க மராத்தி மனிதர், சகோதரர், இங்க வெறுமெனே உக்காருங்க, நாங்க வேலை செய்யறோம், நீங்க பாருங்க’ ).

இத்தனைக்கும் நான் அவர்களுக்கு ஒன்றும் அதிகப்படியாகச் செய்யவில்லை. அவர்களின் மொழியைப் படித்தேன். அவ்வளவு தான்.

இரண்டு ஊழியர்கள் மிகவும் நெருக்கமானார்கள். தங்கள் வீடுகளின் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள். அதில் ஒருவர் பின்னாளில் சிவசேனை சார்பில் ஏதோ அரசுப் பதவியும் பெற்றார் என்று தெரிந்துகொண்டேன்.

6 மாதங்களில் வேறு பணிமனைக்கு மாற்றினார்கள். ஊழியர்கள் கண் கலங்கியதைப் பார்க்க முடிந்தது.

சிவசேனை அலுவலகங்கள் (ஷாகா) எனப்டும். அனேகமாக பேட்டைக்கு இரண்டு இருக்கும். விடுமுறை நாட்களில் அங்கும் சென்று பேச்சுக் கொடுப்பேன் – மொழியறிவு பெற வேண்டி. ‘மி நாதுராம் கோட்ஸே போதோயே’ என்ற மராத்திய நாடகம் பார்த்தேன். பிரமிப்பு தான். தமிழ் நாடகம் எவ்வளவோ முன்னேற வேண்டும் என்று புரிந்துகொண்டேன்.

நான் பம்பாயில் பணியாற்றியது மூன்றாண்டுகளே. இந்தி சரளமாகவும், மராத்தி சமாளிக்கக் கூடிய அளவிலும், குஜராத்தி ரொம்பவும் மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக் கூடிய அளவிலும் கற்றுக் கொண்டேன். தற்போது குஜராத்தி மறந்துவிட்டது. ஆனாலும் மராத்தி நினைவில் உள்ளது. ‘அஸ்து’ என்னும் மராத்தி திரைப்படத்தைப் பற்றிய விமர்சனமும் எழுதியிருக்கிறேன். சிங்கப்பூரிலும் மராத்திய நண்பர்களிடம் திக்கித் திணறி மராத்தியில் பேச முயல்கிறேன். அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

மராத்தி கற்றுக் கொண்டதால் தமிழ் மறந்துவிடவில்லை. குறுஞ்செய்திகள் முதற்கொண்டு தமிழிலேயே அனுப்புகிறேன். எந்தெந்த இடத்தில் எந்தெந்த மொழியைப் பயன்படுத்த முடியுமே அங்கங்கே அவற்றைப் பயன் படுத்துகிறேன். மிக அதிகமாகத் தமிழ் உபன்யாசங்களைப் பம்பாயிலேயே கேட்டிருக்கிறேன்.

எந்த மொழியுமே அழகானது தான். அதன் இலக்கண அமைப்பு என்னை வசீகரப்படுத்தியே உள்ளது. ஒன்றினது அமைப்பைப் பிறிதொரு மொழியுடன் பொருத்திப் பார்த்தால் போதும். மொழி கைகூடிவிடும்.

மாணவர்களே, மொழிகளைக் காதலியுங்கள். அவை உங்களைக் கைவிடா.

ஜப்பானிய மொழி கற்றுக் கொண்ட விஷயத்தைப் பின்னர் ஒருமுறை சொல்கிறேன்.

%d bloggers like this: