சாப்பாடு

நாராயணா மிஷனுக்குத் தொண்டூழியத்துக்கு அழைப்பு வந்திருந்தது. கிருஷ்ணன் குறுஞ்செய்தி வந்தவுடனேயே அலுவலகத்தில் தெரிவித்துவிட்டான் – அந்த வார இறுதியில் அலுவலகப்பணி செய்ய இயலாது என்றும் தொண்டூழியம் இருப்பதாகவும் மேலாளருக்கு மின்-அஞ்சல் அனுப்பி விட்டான்.

வார இறுதிப் பணி வருமானம் ஈட்ட உதவும். ‘ஓட்டி’ என்று அழைகப்படும் அப்பணிக்கு இரண்டு மடங்கு நாள் ஊதியம் உண்டு. ஆனாலும் மிஷனுக்கு வாக்கு கொடுத்து விட்டதால் அவனால் தட்ட முடியவில்லை. சென்ற வாரமும் ‘சிண்டா’ ஆதரவில் நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் தொண்டூழியம் செய்திருந்தான் கிருஷ்ணன்.

நாராயணா மிஷன் அவனுக்கு மன நிறைவு அளிக்கும் ஒன்று. வயதான, உடல் நலிவுற்ற பெரியவர்கள் பலர் அங்கு தங்கியிருந்தனர். அவர்களைப் பார்த்துக்கொள்ள தாதியர் இருந்தாலும் கிருஷ்ணன் போன்றவர்கள் செல்வது சிறு சிறு துப்புரவுப் பணிகள், சுவற்றிற்கு வெள்ளை அடித்தல் போன்ற வேலைகள் செய்யவே.

ஒவ்வொரு முறை கிருஷ்ணன் மிஷன் போகும் போதும் தனது நெடு நாள் கடமை ஒன்று முடிவது போல் உணர்வான். அந்த உணர்வுக்காகவே அவன் மிஷன் ஊழியம் என்றால் உடனே ஒப்புக் கொள்வான்.

சனி முழுவதும் மிஷனில் வேலை இருந்த்து. மின் விளக்குகளைச் சுத்தம் செய்வது, மிஷன் உள் இருக்கும் பெரியவர்களுக்கு வெளியில் இருந்து உணவு வாங்கி வருவது என்று இடுப்பொடிய வேலை. ஆனால் இது ஒரு சுகமான சுமை என்பதை அவன் உண்ர்ந்தே இருந்தான்.

சிராங்கூன் சாலையில் இந்திய உணவுக் கடைக்குச் சென்று உணவு வாங்கி வருவது மட்டுமே இதில் பெரிய வேலை. உணவை அங்கிருந்து கொண்டுவருவது கிருஷ்ணனுக்கு எரிச்சலூட்டியது. எம்.ஆர்.டி, நிலையம் சென்று, தொடர் வண்டியில் உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வர முடியுமோ முடியாதோ. ஏதாவது புது விதி வந்திருந்தால் என்ன செய்வது? திரும்பவும் எம்.ஆர்.டி. நிலையத்திற்கு வெளியே வந்து டாக்ஸி எடுக்க வேண்டும்.

டாக்ஸி கிடைப்பது சிராங்கூன் சாலையில் கொஞ்சம் சிரமமான ஒன்று தான். அதுவும் சனிக்கிழமை டாக்ஸி கிடைப்பது ‘சிங்கப்பூர் பூல்’ மூலம் கோடீஸ்வரராவது போன்றது. பெரும்பாலும் நடக்காது.

அப்படித்தான் சில நாட்கள் முன்பு எக்ஸ்போ விற்பனையகத்தில் 42 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிக்கொண்டு வந்தான். ஆனால் எக்ஸ்போ எம்.ஆர்.டி. நிலையத்தில் ஏற்ற விட வில்லை. ஏதோ டாக்ஸிப் பயன்பாட்டை அதிகப்படுத்தவென்றே செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு என்று அப்போது தோன்றியது கிருஷ்ணனுக்கு.

ஆனால் மிஷன் தொண்டூழியத்தில் டாக்ஸி செலவு பற்றி கிருஷ்ணன் கவலைப்படவில்லை. அதற்கான நேரம் மட்டுமே அவனை வாட்டியது. எவ்வளவோ செலவு செய்கிறோம், டாக்ஸி செலவு ஒன்றும் பெரிதில்லை என்றுதான் நினைத்தான்.

ஒருவழியாக உணவுப்பொட்டலங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்த்து, உணவைப் பங்கிட்டுப் பெரியவர்களுக்கு அளித்து, அவர்கள் உண்பதை நிறைந்த மனதோடு பார்த்தபடி நின்றிருந்தான். இரவு மணி 9 ஆனது தெரியவில்லை.

தொண்டூழியம் முடித்து ஜூராங் வந்து தன் வீவக வீட்டை அடைந்த போது மணி 10:30. படுக்கையில் சாய்ந்தபடியே கைத் தொலைபேசியை எடுத்தான். 28 அழைப்புகள் வந்திருந்தன. அனைத்தும் சென்னையிலிருந்து.

வந்திருந்த எண்ணை அழைத்தான் கிருஷ்ணன். மறு முனையில் ‘எஸ்.எஸ்.எம். ரெசிடென்சி ஃபார் எல்டர்லி கேர் பெருங்களத்தூர்’ என்றது பெண் குரல். ‘அறை எண் 400’ என்றபடி எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்.

‘ஏண்டா கிருஷ்ணா, கார்த்தாலேர்ந்து போனே பண்ணலையேன்னுதான் நான் பண்ணினேன். இன்னிக்கி யரோ பெரியவாள்ளாம் வந்து எங்க ஹோம்ல இருக்கறவாளுக்கெல்லாம் அன்ன தானம் பண்ணினா.  ஆமாம், நீ என்ன சாப்டே ?”, என்றாள் அம்மா.

உபகாரம்

வெயிலின் கடுமையால் காகங்கள் கூட காணாமல் போயிருந்தன.மரங்கள் மூச்சு விடுவதை மறந்து தலை தாழ்ந்து நின்றிருந்தன. சூரியன் மறந்து போய் ஊருக்குள் வந்துவிட்டானோ என்று எண்ணத் தோன்றும் வெப்பம். அக்ரஹார வீதியில் வெண்மணல் தகித்தது. மனித நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனம் போல் தெரிந்தது வீதி.

‘யாரோ சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. ஊர்ல யாருமே இல்லியே’ என்று எண்ணியவாறு சைக்கிளை மிதித்தேன். பெயர் தான் நவாபு. ஆனால் அலுமினிய பாத்திரங்கள் விற்றுத்தான் சோறு. வாப்பா சொன்னபோதே படித்திருக்கலாம். தொழில் கற்றுக்கொள்ள வேண்டி பாத்திரக்கடை காதரிடம் வேலைக்குப் போனது
எவ்வளவு பெரிய தவறு? இப்போது நினைத்துப் பயனில்லை. ‘அம்பது வயசில வந்துச்சாம் அறிவு’ என்று அம்மா சொல்லும். வயிறு என்று ஒன்று இருக்கிறது. அதற்குத் தன்மானம் எல்லாம் கிடையாது. இந்த வயதில் அரேபியாவுக்கெல்லாம் போய் ஒட்டகம் மேய்க்க முடியாது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஊரே அரேபியா போல் கொதிக்கும் போல் தெரிகிறது. அவ்வளவு வெயில்.

சைக்கிளை விட்டு இறங்கி ஒரு மர நிழலில் நின்றேன். ஒரு வாய் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் இருந்தது.அக்கிரஹாரத்தில் யார் தண்ணீர் தரப் போகிறார்கள் ? வாப்பா காலத்தில் தெருவில் நடக்கவே விட மாட்டார்கள். இப்போது எவ்வளவோ மேல். வியாபாரம் செய்யும் அளவு முன்னேறி உள்ளது.

அப்போது தான் கவனித்தேன். எதிர் வீட்டில் வாசல் திண்ணையில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். 4, 5 சின்னப் பையநன்கள் கீழே உட்கார்ந்திருந்தர்கள். ஏதோ பாடம் படிப்பது போல் தெரிந்தது. பெரியவருக்கு உடம்பு ரொம்பவும் தள்ளாமையாக
இருந்தது. உடம்பு முழுவதும் நாமம் போட்டிருந்தார் போல் தெரிந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கைலியை இறக்கிவிட்டேன். பெரியவர் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார்.

எதற்கு வம்பு என்று சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு நடந்தேன். சொல்ல மறந்துபிட்டேன். வீதியில் நுழைந்ததும் டயர் பஞ்சரானது. எனவே தள்ளியபடியே தான் நடக்க வேண்டும்.

வீதியின் கிழக்குக் கோடிவரை நடந்தேன். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கதவு திறந்தே இருந்தது. ஆனால் வெளியில் யாரும் தென்படவில்லை. ‘பாத்திரம், அலுமினிய பாத்திரம், இண்டோலியப் பாத்திரம், பாத்திரம்..’ என்று கூவிப் பார்தேன்.

ஒரே ஒரு வீட்டு உள்ளிருந்து ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆண் எட்டிப் பார்த்தார்.’ நன்னாருக்கு, துலுக்கன் அக்ரஹாரத்துலெ அலுமினியப் பாத்ரம் விக்கறான் கைலி கட்டிண்டு.. கலி நன்னா வேலை செய்யறது..’ என்று காதுபட பேசிச் சென்றார். என்னைப் பார்த்தாலே தீட்டுப் பட்டுவிடும் என்று நினைத்தாரோ என்னவோ. நாட்டு ஜனாதிபதி துலுக்கனாக இருக்கலாம் போல, தெருவுலெ மட்டும் வரக்கூடாது என்பது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்திரா காந்தி கொஞ்சம் இந்தப்பக்கம் பார்த்தால் தேவலாம்.

அப்போதுதான் அது உறைத்தது. அடச்சீ .. தப்பு செஞ்சுட்டோமே.. அக்ரஹாரத்துலே அலுமினியப் பாத்திரம் யாரும் வாங்க மாட்டாங்களே ! இதுக்குப் போயா இங்கே வந்தோம் இந்த வெய்யில்லே ..

வந்த வழியே நடந்து சென்றேன். வெயில், தண்ணீர் இல்லை, பாத்திரம் விற்கவில்லை, சைக்கிள் பஞ்சர், பசி, தாகம்.. பாழாப்போன கிராமத்துலே சோத்துக்குக்கூட ஒரு கடை இல்லை. காலையில் குடிச்ச கஞ்சி தான்.

மெள்ள தெருமுனைக்கு வந்துவிட்டேன். இன்னும் அரை மணி நடந்தால் மெயின் ரோடு வந்துவிடும். பிறகு சைக்கிள் தள்ளுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

‘யோவ் பாத்திரம், பாத்திரம்..’ என்று கத்திக்கொண்டே ஒரு பிராமணப்பையன் அந்தப் பெரியவர் இருந்த வீட்டில் இருந்து ஓடி வந்தான். ‘உடனே வாப்பா.. பெரியவர் கூப்பிடுறார்’, என்றான். பெரியவருக்கு அவன் என்னவோ பெயர் சொன
்னார். எனக்குப் புரியவில்லை

என்ன தப்புப் பண்ணினேன் என்று நினைத்துப் பார்த்தேன். கைலியைக் கூட இறக்கித் தானே விட்டிருந்தேன் ?ஒரு வேளை அந்த வீட்டுக்கு முன்னால் நிற்கக் கூடாதோ! அதான் கூப்புடுறாங்களோ ! என்று பலவித சிந்தனைகள்.

வந்தது வரட்டும்னு வண்டியைத் தள்ளீக்கொண்டு பெரியவர் இருந்த வீட்டு வாசலுக்குப் போனேன். அப்போது தான் பார்த்தேன். பெரியவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். ஒரு பீடம் மாதிரி இருந்தது. அதன் மேல் உட்கார்ந்திருந்தார்.
மார்பு, வயிறு, கை, நெற்றி என்று நாமம் போட்டிருந்தார். நெற்றி நாமம் மட்டும் சற்று தடிமனாக இருந்தது.

வீட்டுக்கு உள்ளே இன்னும் பலர் இருந்தாங்க. வேட்டி மட்டும் கட்டி இருந்தாங்க. நாமம் போட்டிருந்தாங்க. பல பிராமணப் பையங்க வேதமோ இல்ல வேற ஏதோ ஓதிகிட்டிருந்தார்கள்.

பெரியவர் என்னை உட்காரச்சொன்னார். ஒரு ஓரமா உட்கார்ந்தேன். அதுக்குள்ளே ஒரு ஐயரு வந்து,’ கொஞ்சம் தள்ளி உக்காருப்பா..’, என்று அதட்டினார். என்னைப் பெரியவர் உட்காரச் சொன்னது அந்த ஐயருக்குப் பிடிக்கவில்லை போல.

பெரியவர் அந்த ஐயரை கோவமா ஒரு பார்வை பார்த்தார். ஐயரு, ‘அடியேன்..’ , என்னு தொடங்கி என்னமோ சொல்லிப் போனார். பின்னாடி போய் நின்னுக்கிட்டார்.

அப்பத்தான் கவனிச்சேன். எல்லாரும் வெள்ளை வேட்டி தார்பாச்சி வடக்கத்திக்காரங்க மாதிரி கட்டி இருந்தாங்க. பெரியவர் மட்டும் காவி கலர்ல துண்டு கட்டி இருந்தாரு. கையிலே மூணு கழிங்கள ஒண்ணாக் கட்டி, அது உச்சிலெ
ஒரு துணிலெ கொடி போல இருந்துச்சு. அந்தக் கழிங்களெ கையிலெ வெச்சிருந்தாரு.

‘தமிழ் தெரியுமா?’,ன்னு ஒரு கம்பீரமான குரல் கேட்டுச்சு. தலை நிமிர்ந்து பார்தேன். பெரியவர் தான் பேசியிருந்தார்.

தெரியும்னு தலை ஆட்டினேன். என்னமோ அவ்ர்கிட்டே பேசுறதே கொஞ்சம் பயமா இருந்துச்சு. அவரு முள்ளு மாதிரி தாடிவெச்சிருந்தார். தலைலேயும் வெள்ளை முடி. அசப்புல சிங்கம் மாதிரி இருந்துச்சு.

‘எந்த ஊர் உனக்கு?’
‘பக்கத்துலே வேலூர் பக்கம் சாமி’
‘சாப்டாச்சா ?’
‘ஆச்சுங்க சாமி. கருக்கல்ல கஞ்சி குடிச்சேங்க’.

பெரியவருக்குப் புரியவில்லை. அருகில் இருந்த நாமம் போட்ட இன்னொரு ஐயரு,’ அவன் கார்தாலே கஞ்சி சாப்டானாம் அடியேன்..’, என்று சொன்னார்.

பெரியவர் உள்ளே பார்த்து,’ததீயாராதனம் ஆயிடுத்தா?’, என்று கேட்டார்.

இன்னொரு ஐயர் உள்ளே இருந்து ஓடி வந்து ஏதோ சொன்னார். பெரியவர் கேட்க அந்த ஐயர் ஏதோ சொன்னார். பாஷை புரியவில்லை.

இரண்டு நிமிஷம் நிசப்தம். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தேன். இன்று நேரமே சரியில்லை. டயர் பஞ்சர், வெயில், பாத்திரம் விற்கவில்லை, இப்போது இங்கு மாட்டிக்கொண்டிருக்கிறேன்.

மேலே அண்ணாந்து பார்த்தேன். இடி இடிப்பது போல் பெரியவர் உள்ளே இருந்து வந்த ஐயரிடம் ஏதோ உத்தரவு போட்டார். அந்த ஐயர் உடனே கீழே விழுந்து வணங்கி உள்ளே சென்றார்.

‘எத்தனை பிள்ளை குட்டி உனக்கு?’, பெரியவர் என்னிடம் கேட்டார்.
‘மூன்று பெண்கள் சாமி’, என்றேன். கொஞ்சம் பயமாகவே இருந்தது.
‘வீடு வாசல் இருக்கா?’
‘அப்பா வைத்த வீடு ஒண்ணு இருக்கு சாமி, பாத்திரம் வியாபாரம் தான் தொழில்’, என்றேன்.

என்னவோ அந்தப் பெரியவர் பிடித்துப் போய் விட்டார். இந்தக் கேள்விகளை யாரும் என்னிடம் கேட்டதில்லை. ஏதோ ஒரு அக்கறையுடன் கேட்பது போல் தோன்றியது.

‘பொண்கள் படிக்கறாளா?’, என்றார்.
‘ஆமாங்கையா, ஸ்கோலு போவுறாங்க’, என்றேன். வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக என் பயம் குறையத் தொடங்கியது. என் குரல் சற்று வெளியே வருவது போல் உணர்ந்தேன். மற்ற ஐயர்கள் எல்லாரும் பெரியவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே மரியாதையுடன் இருப்பது போல்
ட்டது. ஓரிடத்தில் தீ எரியும் போது அதிலிருந்து விலகி இருந்து பார்ப்பது போல் நின்றிருந்தார்கள்.

‘இங்கே சாதம் போட்டா சாப்பிடறியா?’

அவர் அது தான் கேட்டாரா அல்லது பசி மயக்கத்தில் அப்படிக் காதில் விழுந்ததா தெரியவில்லை. குழப்பத்துடன் அவரையே பார்த்தேன்.

‘சோறு போட்டா சாப்புடுவியான்னு கேக்குறாரு..’, என்றார் இன்னொரு ஐயர். அவர் குரலில் சற்று எரிச்சல் தெரிந்தது.

‘சாப்புடுறேன் சாமி’; என்றேன் நன்றியுடன். ஏனோ எனக்கு நெஞ்சை அடைத்தது. காலையில் கஞ்சி குடித்தது.

பக்கத்தில் ஒரு கொட்டகையில் சோறு போட்டார்கள். இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிட்டேன். மறு முறை இவ்வளவு சோறு எங்கே கிடைக்கும்னு தெரியவில்லை. உப்பு, காரம் எதுவும் இல்லை. ஐயமாரெல்லாம் இப்படித்தான் சாப்பிடுவார்கள் போல.

சாப்பிட்டு முடித்ததும் பெரியவர் கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.

‘சாப்டாச்சா?’ என்றார் புன்முறுவலுடன். தலையை ஆட்டினேன். இவ்வளவு சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது !

‘நன்னா இருந்துதா?’, என்று சிரித்தபடியே கேட்டர் பெரியவர். பதில் சொல்லாமல் மையமாக நின்றேன்.

‘பாத்திரம் எல்லாம் வித்துடுமா?’, என்று மறுபடியும் அவரே கட்டார்.

‘காலைலேர்ந்து ஒண்ணும் விக்கலீங்கையா. இங்கே ஐயமாரு இடம்னு தெரியாம வந்துட்டேன். அலுமினியம் வாங்க மாட்டாங்க. இனிமே வேற ஊர் தான் போகணும்’, என்றேன்.

‘மொத்தமா என்ன விலை?’, என்றார்.

புரியாமல் நின்றேன்.

‘எல்லாப் பாத்திரமும் வித்தா என்ன விலை கிடைக்கும்?’, என்று வேறொருவர் கேட்டார்.

‘100 ரூபா பெயரும் சாமி. அதுக்கு 2, 3 நாள் ஆகும்’, என்றேன் புரியாமல்.

பெரியவர் அதிகாரி போல் இருந்த ஒருவரைப் பார்த்தார். அவர் உடனே 120 ரூபாய் எடுத்துக் கொடுத்து,’எல்லாத்தையும் நாங்களே வாங்கிக்கறோம்’, என்றார்.

ஒன்றும் புரியவில்லை. இது ஏதோ மடம் போல் தெரிகிறது. ஐயமார் மடம். அலுமினியம் வாங்கறாங்களே.

நம்பவும் முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்துவிட்டார்கள்.

அப்போது பெரியவர் பேசினார்.

‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். இந்த பாத்திரங்களை எல்லாம் கொண்டு போய் வடக்கு வீதிக்குப் பின்னாடி குடியானவத் தெரு இருக்கு. அங்க ஆத்துக்கு ஒரு பாத்திரம்னு குடுக்கணும். குடுக்கறயா ?’, என்று சொல்லி என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

இறைவன் கருணை வடிவானவன் என்று வாப்பா அடிக்கடி சொல்வார்
——————————————————————————————
அஹோபில மடம் 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் முக்கூரில் தங்கியிருந்த போது நடந்த சம்பவம்.

புறப்பாடு

இந்நேரம் மணி கிளம்பியிருப்பான்.

விமான நிலையம் வரை கொண்டு விட்டு வந்தேன்.

வெள்ளி என்றாலே கொண்டாட்டம் தான். மாலையில் பாட்மிண்டன் விளையாடுவோம். சரியாக ஆறரை முதல் எட்டரை வரை எங்கள் ஆட்டம் உண்டு. கடந்த 8 ஆண்டுகளாக அப்படித்தான். திருமணம் ஆகாமல் இருந்த போதிருந்து எங்களுக்கு இந்தப் பழக்கம் உண்டு. பின்னரும் தொடர்ந்தது.

ஆனால் இனிமேல் இந்த ஆட்டம் தேவை இல்லை. ஆட முடியாது.

ஏனென்றால் மணி ஊருக்குப் போகிறான்.

சொல்ல மறந்து விட்டேன். நேற்று அவன் அலுவலகம் வரும் வழியில் மழையில் வண்டி வழுக்கி சாலையில் விழுந்து அடிபட்டது.

எனவே ஊருக்குப் போகிறான்.

விமான நிலையம் வரை கொண்டு விட்டு வந்தேன் என்றா கூறினேன் ?

சிறிய தவறு நடந்துவிட்டது. மன்னிக்கவும்.

விமானத்தில் ஏற்றி விட்டு வந்தேன்.

அவன் படுத்திருந்த பெட்டியை.

வண்டி சீராக ஓடவில்லை. வளைவுகளில் ரொம்பவும் சிரமப்பட்டது. மாருதி வேனை ஆம்புலன்ஸ் என்று சொல்லி மாயவரத்தில் தொழில் செய்து வந்தார்கள். ஒவ்வொரு வளைவிலும் வேகம் இழந்து மெல்லத் திரும்பி மீண்டும் வேகம் எடுத்து மறுபடியும் குறைந்து திரும்பி கர்ப்பிணிப்பெண் போல் பெருமூச்சு விட்டுக்கொண்டே சென்றது.

உள்ளே இருந்த எனக்குத்தான் தலை சுற்றியது. படுத்திருந்த ஸாருக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூக்கில் செருகியிருந்த ஆக்ஸிஜன் சீராக காற்றை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல. ஸாருக்கு நினைவில்லை. அவரை மாயவரத்திலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தேன். அவருக்கு நினைவு தப்பிப் பல மணி நேரம் ஆகியிருந்தது.

காலை நான்கு மணி அளவில் சிறுநீர் கழிக்கச் சென்ற அவர் திரும்பவில்லை. படுக்கையில் காணவில்லையே என்று தேடிப்பார்த்ததில் அவர் பாத்ரூமில் நினைவில்லாமல் கிடந்திருக்கிறார். உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். டாக்டர் இல்லை. ஒரு பதின்ம வயது போல் தெரிந்த நர்ஸ் தூக்கக் கலக்கத்துடன் வந்து பல்ஸ் பார்த்தாள். பின்னர் யாருடனோ போனில் பேசினாள். மாயவரத்தின் பெரிய மருத்துவமனைக்குப் போகச் சொன்னாள்.

ஸாரின் மனைவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு போன் செய்தார்.

பெரிய மருத்துவமனையில் சாரை உள்ளே தூக்கிச் செல்லக் கூட ஆள் இல்லை. இரவுப் பணி முடிந்து பணியாளர் சென்றுவிட்டார். காலைப் பணியாளர் இன்னும் வரவில்லை என்றார்கள். இரண்டு பேராகத் தூக்கி ஸாரை ஒரு கட்டிலில் கிடத்தினோம். மூச்சு இருந்தது. ஆனால் நினைவில்லை.

‘இங்கெல்லாம் படுக்க வைக்கக் கூடாது, பெரிய டாக்டர் வந்தால் சத்தம் போடுவார்’, என்றபடி வயதான நர்ஸ் பல்ஸ் பார்த்தாள்.

‘டாக்டர் எப்ப வருவார்?’

”மேல வார்டுலே இருக்கார். அஞ்சு மணி தானே ஆவுது. ஏழு மணிக்கு வருவார். கொஞ்சம் இங்கேயே இருங்க’, என்றபடி நர்ஸ் சென்றுவிட்டாள்.

பின்னாலேயே ஓடி இருக்கிறார்கள். ‘ஏம்மா இப்பிடி ஓடறீங்க. இப்போ என்ன வேணும்?’, என்றாள் நர்ஸ்.

‘இல்லே, இவருக்கு என்ன ஆச்சு ? ஏன் மயக்கமாயிருக்கார் ?’, என்றிருக்கிறார் ஸாரின் மனைவி.

‘அதெல்லாம் டாக்டர் சொல்லுவார்’.

‘டாக்டர் எப்ப வருவார்?”

‘இதோ பாருங்கம்மா விடிகாலைலே டாக்டரெல்லாம் வர மாட்டாங்க. ஏழு மணியாவது ஆகும்’.

ஒரு வழியாக டாக்டர் வந்தார். 28 வயது இருக்கும்.

‘விஷயம் கொஞ்சம் சீரியஸ் போல இருக்கு. எதுக்கும் தஞ்சாவூர் கொண்டு போயிடுங்க’, என்று சொன்னார் டாகடர்.

ஒரு மணி நேர அலைச்சலுக்குப் பின் ஆம்புலன்ஸ் போல இருந்த ஒரு மாருதி வேன் கிடைத்தது. தஞ்சாவூர் போகாமல் கும்பகோணம் ஆஸ்பத்திரி போகலாம் என்று முடிவாயிற்று.

கும்பகோணத்தில் பிரபல மருத்துமனையில் கடிந்து கொண்டார்கள். உடனே சென்னை அல்லது பாண்டிச்சேரி கொண்டு செல்லவும் என்று சொன்னார்கள். அத்துடன் ஆக்ஸிஜன் மாஸ்க் ஒன்றையும் கொடுத்தார்கள்.

இப்படியாக ஸார் ஒரு நான்கு மணி நேரமாகப் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்.

ஸாரின் மனைவியும் என்னுடன் மாருதி வேனில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு வயது 65 இருக்கலாம். ஸாருக்கு இன்னமும் வயது அதிகம்.எனக்கு ஐந்து ஆண்டுகள் பாடம் நடத்தியவர் அவர். பள்ளி முடிந்து கல்லூரி சென்று இப்போது வேலையிலும் சேர்ந்து விட்டேன். ஆனாலும் ஒவ்வொரு முறை மாயவரம் செல்லும் போதும் அவரைச் சந்திப்பேன்.

முந்தின நாள் இரவு தான் சென்னையில் இருந்து வந்திருந்தேன். மறு நாள் அவரைச் சந்திப்பதாக இருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி அவரைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

வேனின் ஆட்டத்திற்கு ஏற்ப அவரது தலையும் ஆடிக்கொண்டிருந்தது.

அவரது முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சில சமயம் அவர் கண் திறந்து பார்ப்பது போல் இருக்கும். மூன்று முறை அப்படி ஆகி விட்டது.

அவரது பாதங்கள் சற்று வளைந்திருக்கும். பாதத்தின் அடியில் பல திட்டு அழுக்கு தென்பட்டது. நேற்று எங்கோ வெளியே போய்விட்டு வந்து சரியாகக் கால் அலம்பவில்லை போல் பட்டது. சற்று உற்றுப் பார்த்தேன். குதி கால் ரொம்பவும் தேய்ந்திருந்தது. இந்தப் பாதங்கள் இந்திய தேசம் முழுவதும் நடந்துள்ள தூரம் எவ்வளவு இருக்கும் என்று கணக்குப் போட முயன்றேன். எண்ணங்கள் வேறு எங்கோ சென்றன.

ஸார் எங்களுக்கு ஒரு ஆதர்ஸ சக்தி. அவரது மாணவர்கள் யாரும் அவரை அன்னியமாகப் பார்த்ததில்லை. அவர் பேசத் துவங்கினால் அமைதி உடனே எற்படும். மிகவும் அறுவையான பாடமாக இருந்தாலும் அவரது தமிழ் எங்களை உசுப்பிவிடும். கம்பன் அவரது விருப்பமான கவி. திருக்குறள் நடத்தும்போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கம்பனில் இருந்து உதாராணம் காட்டாமல் இருக்க மாட்டார்.

ஒரு முறை நான் கேட்டே விட்டேன். திருக்குறள் நடத்தும்போது கம்பனும் ஆழ்வார்களும் எதற்கு என்று. அன்று அவர் சொன்ன பதில் நெஞ்சில் ஆணி அடித்தாற்போல் இருந்தது.

‘கேள்வி சரி தான். நீங்கள் திருக்குறள் மட்டும் படித்து பாஸ் பண்ணிவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துவிடுவீர்கள். ஆனால் நாளை ஒரு காலம் வரும். நாற்பது வயது நெருங்கும்போது வாழ்வில் ஒரு வெறுமை வரும். அப்போது கம்பனும் ஆழ்வாரும் சிலம்பும் வாழ்வின் வெறுமையைப் போக்க உதவி செய்யும். மீண்டும் ஒரு முறை இவற்றுள் செல்லத் தோன்றும். அறிமுகம் இல்லை என்றால் உள்ளே நுழைய வழியே இல்லை.

அது மட்டும் அல்ல. நமது பாரம்பரியம் பெரியது. ஆழமானது. அது திருக்குறள் மட்டும் அல்ல. அதையும் தாண்டி இன்னும் பல ஆழங்களைத் தன்னுள் கொண்டிருப்பது. இவற்றின் நுனியையாவது நீ அறிந்துகொள்ள வேண்டும். இவை இல்லை என்றால் நமக்கு முகவரி இல்லை’, என்று கூறினார்.

பள்ளி விட்டவுடன் நேரே நூலகம் செல்வார். பல அரிய நூல்களில் இருந்து குறிப்புக்கள் எடுத்துக்கொண்டிருப்பார். வட்டாரத்தில் எந்தப் பட்டிமன்றம் என்றாலும் இவர்தான். பல கோவில்களிலும் இவரது பேச்சு இருக்கும். ஆனால் ரொம்ப நாட்களாக எனக்குப் புரியாதது என்னவென்றால் தமிழ் மொழிக்கான விழாக்களில் இவர் அழைக்கப்படுவதில்லை. அந்த நாளில் ஊரை விட்டு தூரத்தில் ஏதாவது ஒரு பழைய கோவில் உள்ள ஊரில் ஏதாவது சொற்பொழிவு இருக்கும் அவருக்கு.

சில வருடங்களாக ‘அறிவோம் ஆன்மீகம்’ என்ற ஒரு அமைப்பில் மிக உயிர்ப்புடன் சிறு பிள்ளைகளுக்குத் தமிழும் ஆன்மீகமும் சேர்த்துப் புகட்டினார். சனி, ஞாயிறு மாலை வேளைகளில் ஊரின் குளக்கரை மண்டபத்தில் ஒரு இருபது பிள்ளைகளுக்கு தேவாரம், பாசுரம் என்று பாடம் நடத்துவார். திருப்பாவை ஒப்பித்தல் போட்டிகள் தன் கைக்காசு செலவழித்துச் செய்வார். இவரது பள்ளி ஆசிரியர்கள் ‘தனி வகுப்பு’ என்று சொல்லி மாணவர்களிடம் பணம் வசூல் செய்துகொண்டிருக்கும் போது இவர் மண்டபத்தில் ‘சங்க இலக்கியத்தில் திருமால்’ என்று ஏதாவது வகுப்பு எடுத்துக்கொண்டிருப்பார்.

‘நம்ம நாட்டுலெ தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிச்சுட்டாங்க. செக்யூலர் என்ற போர்வையில் தமிழின் ஆன்மாவை அதனிடமிருந்து பிரித்துவிட்டார்கள். இதை எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மொழி அழிந்துவிடும்’, என்று பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பக்தி இலக்கியம் இல்லை என்றால் தமிழ் இல்லை. லத்தீன் மொழி சட்டத்திற்காக அறியப்படுவது. ஜெர்மன் மொழி தத்துவத்திற்காக அறியப்படுவது. ஆங்கில மொழி வியாபாரத்திற்காக அறியப்படுவது. தமிழ் ஒன்று மட்டுமே பக்திக்காக அறியப்படுவது என்ற கருத்தில் ஆணித்தரமாக இருந்தார் ஸார்.

பதவி ஓய்வு பெறும் வருடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் யாரும் இல்லை.

மாணவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் போதிக்கக் கூடாது என்பதில் ரொம்பவும் ஆணித்தரமாக இருந்தார் ஸார். பெண்கள் கல்வியில் அதிக அக்கரை செலுத்தினார். வகுப்பில் சரியாகப் படிக்காத சில பெண்களைத் தனியாக அழைத்து கல்வியின் தேவையை அவர்களுக்கு உணர்த்தினார். இதனால் பல பெண்கள் நன்மை அடைந்தனர் என்பதைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

சென்னையின் பிரபல ஆஸ்பத்திரியில் சொல்லியாகி விட்டது. அவர்கள் தயாராக் இருந்தார்கள்.

ஒருவழியாகச் சென்னை வந்து சேர்ந்தோம். உடனேயே ஐ.சி.யூ.வில் சேர்த்து விட்டார்கள்.

வேலைகள் துரித கதியில் நடந்தன. எங்கள் யாரையும் உள்ளே விடவில்லை.

சரியாகப் பத்து நிமிடத்தில் சீனியர் டாக்டர் வந்தார். அரைமணி நேரம் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்து சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

‘ஸீரியஸ் ப்ரைன் ஹெமரேஜ் அண்ட் ஸ்ட்ரோக். வீ ஆர் அப்சர்விங் த சிசுவேஷன். நெக்ஸ்ட் 72 ஹவர்ஸ் ஆர் க்ரூஷியல்’

மூளையில் ரத்த நாளம் வெடித்துள்ளது. இதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. 72 மணி நேரம் கழித்துத் தான் எதுவும் சொல்ல முடியும். இது தான் முதல் செய்தி..

பின்னர் வந்தது தான் பேரிடி. உடனடியாக ஒரு லட்சம் கட்ட வேண்டும் என்று பில்லிங் செக்ஷனில் இருந்து சொல்லி அனுப்பினார்கள். ஸாரின் அட்டெண்டர் உடனடியாக பில்லிங் செக்ஷன் வரவும் என்று ஒலி பெருக்கியில் சொன்னார்கள்.

அப்படி இப்படி என்று இரண்டு மணி நேரத்தில் ஒரு லட்சம் புரட்டி விட்டேன். ஸாரின் மகன் அப்போதுதான் வேலைக்குச் சென்றிருந்தான். அவனிடம் அவ்வளவு பணம் இல்லை.

முதல் இரண்டு வாரம் ஸார் கண் திறக்க வில்லை. பின்னர் ஒருவாரு நினைவு வந்தது. ஆனால் பேரிடி ஒன்று வந்தது  அவருக்குப் பேச்சு வரவில்லை. வலது கையும் காலும் செயல்படவில்லை.

அவர் அபாயக் கட்டம் தாண்டி விட்டார் என்று ஒரு மாதம் கழித்து அறிவித்தார்கள். அதற்குள் பல முறை பில்லிங் செக்ஷன் சென்று வந்திருந்தேன்.

ஸார் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். ஐ.சி.யூவிலிருந்து வார்டுக்கு மாற்றி விட்டர்கள். அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்கவும், கை கால் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்று தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் அந்த ஆஸ்பத்திரியிலேயே கிடந்தோம். அவ்வப்போது ஸாரிடம் முன்னேற்றம் போல் தெரியும். அவரைப் பேசச் செய்யும் முயற்சி சற்று வெற்றி அடைவது போல் தெரியும். ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் வெறும் காற்று மட்டுமே வருவது உணர முடியும். ‘இன்னும் கொஞ்சம் கத்திப் பேசுங்க ஸார்’ என்று இடைவிடாமல் கத்துவது தான் ரொம்பவும் கொடுமையான ஒன்று. உபன்யாச மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் சிம்மம் போல் கர்ஜித்த அவரது குரல் வெறும் காற்றாய் வெளி வந்தது ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் விதியின் முன்னர் ஏதும் செய்ய இயலாத, கையறு தன்மை விஸ்வரூபம் எடுத்து நின்றது.

பேசுவதையும், எழுதுவதையும் நாம் எவ்வளவு இயல்பாக எடுத்துக்கொள்கிறோம் ! ஆனால் பேச்சும் எழுத்துமே மூலதனமாகக் கொண்ட ஒருவர், அதுவும் பல நூல்கள் எழுதிய ஆசிரியர் பேசவும் எழுதவுமே முடியாமல் போனால் ? இந்த நினைப்பு இதுவரை வந்ததில்லை. ஸாரைப் பார்த்ததும் மனித வாழ்வில் நமது ஆளுமை எவ்வளவு குறைவு என்பது புரியத் துவங்கியது. மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது.

பல முறை பில்லிங் செக்ஷன் சென்று வந்தேன் அல்லவா ? அவர்களிடம் பணம் கட்ட மேலும் அவகாசம் கேட்டிருந்தேன் பணம் கொஞ்சம் பெரியது. என்ன 10 லட்சம் ஆகியிருந்தது. நாளாக நாளாக அது வளர்ந்து வந்தது. ஆனால் ஸாரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. பேச்சு அப்படியே தான் இருந்தது.

ஒரு வாரம் கழிந்தது. இந்த முறை கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள். உடனடியாக 5 லட்சம் கட்டியாக வேண்டும் என்று. தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்டோம். ஸாரின் மகனின் அலுவலகத்தில் 50,000 கொடுத்து மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்வதாகச் சொன்னார்கள். வந்தவரை லாபம் என்று வாங்கிக்கொண்டோம்.

இரண்டு வாரங்கள் கழித்துக் கடுமையான எச்சரிக்கை வந்தது. அந்த வாரத்திற்குள் 8 லட்சம் கட்டவேண்டும். இல்லாவிட்டால் மருத்துவமனை வேறுவிதமாகக் கையாளும் என்று சொன்னார்கள்.

ஸாரின் தம்பியும் நானும் தமிழ் மொழி தொடர்பான பலரிடம் ஸாரின் நிலை குறித்து உதவி கேட்டோம். பெயர் குறிப்பிட விரும்பவில்லை. பலரும் இன்று நல்ல நிலையில் தான் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தொலைபேசியை எடுப்பதைத் தவிர்த்தனர். சிலர் எடுத்து அனுதாபம் தெரிவித்தனர்.

இது தவிர யாரிடமும் சொல்லாமல் நான் ஒரு காரியம் செய்தேன். ஸாரின் பழைய மாணவர்களுக்கு ஒரு மின்-அஞ்சல் அனுப்பினேன். கணிசமான தொகை வந்தது. ஆனாலும் மருத்துவமனையின் யானைப் பசிக்கு சோளப்பொறி போல் இருந்தது அது. இந்த என் செய்கை ஸாரின் குடும்பத்தினரை சங்கடப்படுத்தியது. ‘ஸார் நினைவு பெற்று பேசினால் இந்த செயலை அங்கீகரிக்க மாட்டார்’, என்று ஆதங்கப்பட்டனர். உண்மை தான். ஆனால் ஸார் எழுந்து பேசவே இந்தப் பணம் தேவை இல்லையா என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். வெளியில் பேசி அவர்கள் மனதை நோகடிக்க விருப்பமில்லை.

ஒரு பக்கம் ஸாரின் நிலை. இன்னொரு பக்கம் ஸாரின் மருத்துவச் செலவு. மூன்றாவது பக்கம் அவரது குடும்பம் படும் துன்பம். சமாளிக்கமுடியாமல் தனிமையில் அழுதேன். பல மாணவர்களை உருவாக்கிய ஒரு முன்னோடி, பலரது வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் இப்படிப் படுத்துக்கிடக்கிறாரே என்று என்ன சொல்வது என்றே தெரியாமல் மனதிற்குள் புகைந்துகொண்டிருந்தேன்.

அவரது கால்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு; வாழி, கேசனே!’

என்று அவர் தனது உபன்யாசங்களில் சொல்லும் கும்பகோணம் ஆராவமுதன் பற்றிய ஒரு ஆழ்வார் பாசுரப் பாடல் நினைவுக்கு வந்தது.

ஸாரின் நிலை பற்றி யோசிக்கும் போது கடவுள் பற்றிய எண்ணமும் வரும். அவர் பெயரையே பாடிய இந்த வாய் இப்படிப் பேச முடியாமல் கிடப்பது என்ன ஒரு நிலை ? கடவுள் என்பது உண்மையில் இருக்கிறதா ? என்றெல்லாம் எண்ணங்கள் ஓடின.

ஆனால் இப்படி நான் நினைப்பது ஸாருக்குத் தெரிந்தால் கோபிப்பார் என்று எனக்குத் தெரியும். ‘பூர்வ ஜென்ம கர்மான்னு ஒண்ணு இருக்கே, ப்ராரப்த கர்மான்னு சொல்லுவா. அதை அனுபவிச்சே தீரணும்’, என்று அவர் பேச்சில் சொல்வது போல் பட்டது. முன்னர் ஒருமுறை அவர் எப்போதோ சொல்லியிருக்கக் கூடும்.

‘உனக்கு வேணுங்கறத நீ போய் ஏன் அவங்கிட்டே கேட்கறே ? உன்னோட மனசு சின்னது. அவனோடது பெருசு. நீயா கேட்டா சின்னதா கேப்பே. அவனா குடுத்தா பெருசா குடுப்பான். அதோட அவங்கிட்டே உனக்கு என்ன செய்யணும்னு சொல்ல நீ யாரு?’, என்பது போல் முன்பு ஒரு முறை அவர் பேசியது நினைவிற்கு வந்தது.

அந்த முரணை நினைத்து சிரித்தேன். ஸாரைத் திரும்பிப் பார்த்தேன். ஆக்ஸிஜன் குமிழ் கீழ் இருந்த அவரது கண் ஓரத்தில் சிறிது கண்ணீர் தெரிந்தது. ஒருவேளை என் மனதில் உள்ளதை உணர்ந்திருப்பாரோ என்று எண்ணியது மனம்.

ஸாரின் ஓய்வூதியம் இருந்ததால் குடும்பம் ஒருவாறு ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் ஆடிக்கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். பையனுக்கு வேறு ஊரில் வேலை. ஒரு வாரத்தில் இரண்டு நாள் வேலைக்குச் சென்றுவிட்டு மீத நாட்களில் சென்னை வந்து விடுவான். அவனது குடும்பம் ஊரில் தனியாக இருந்தது. ஸாரின் மனைவி சென்னையில் உறவினர் வீட்டில் இருந்தார். தினமும் காலையில் மருத்துவமனை வந்து இரவு கடைசிப்பேருந்தில் திரும்பிச் செல்வார். இரவு ஸாருடன்  நானோ, ஸாரின் தம்பியோ இருப்போம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து அவருக்கு ஏதாவது வேண்டுமா என்று பார்த்துக்கொள்வோம்.

ஒரு முறை அவர் வந்து ஓய்வூதியப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அதன் பின்னர் தான் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஒரு கடிதம் வந்தது. அவர் சென்னையில் இருக்கும் நிலையில், மயிலாடுதுறை சென்று கையெழுத்திட வேண்டுமாம். நிகழ் காலத்தின் இரக்கமற்ற நிலையைப் பார்த்தேன். அந்த அரசு அலுவலருக்கு நீண்ட ஒரு கடிதம் எழுதினோம்- அவரால் வர முடியாது, மருத்துவமனையில் இருக்கிறார் என்று சொல்லி எழுதி இருந்தோம். அவர்களிடமிருந்து ஒரு மாதம் கழித்து பதில் வந்தது. ‘அரசு சட்டத்தின் படி ஓய்வூதியக் காரர் இன்னனும் உயிருடனேயே உள்ளார் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆகவே அவர் வந்து தான் ஆக வேண்டும் …’ என்கிற ரீதியில் கடிதம் வந்தது.

‘நான் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறேன். ஒருவேளை போய்விட்டால் மகன் சொல்லியனுப்புவான்..’ என்கிற ரீதியில் பதில் போட்டுவிடலாமா என்று பற்றிக்கொண்டு வந்தது. ஸாரின் குடும்பம் இருக்கும் நிலையில் அவரது ஓய்வூதியம் மிகவும் அவசியமானதாக இருந்தது. அதனால் ‘கெத்து காட்டுவது’ முதலானவை வேண்டாம் என்று மனதை அமைத்திப்படுத்திக் கொண்டேன். நிதர்சனம் பல்வரிசை அனைத்தும் காட்டி நின்றது.

ஒரு நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி ஒருவாறு ஓய்வூதிய பிரச்சினை தீர்ந்தது.

மருத்துவமனை பயமுறுத்தியது.  ஒரு வாரம் கெடு கொடுத்தது.

உதவி கேட்டுப் படையெடுப்பு துவக்கினோம். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த ஒரு பெரிய அமைச்சர் ஒருவரிடம் இந்தக் கடிதம் கொடுத்தோம். மீண்டும் அழைப்பதாகக் கூறினார். பதில் இல்லை. சொல்லாமலேயே அவர் வீட்டுக்குச் சென்றோம். வாசலிலேயே தடுத்து வைக்கப்பட்டோம். பிறகு பார்ப்பதாகக் கூறி அனுப்பினார் அவர். இன்று வரை பதில் இல்லை.

மருத்துவமனை இருந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒரு முன்னாள் நடிகர். அவரைச் சென்று சந்தித்தோம். மன்னிக்கவும். சந்திக்க முயற்சி செய்தோம். பல அலைக்கழிப்புகளுக்குப் பின் அவர் ஒரு நாள் காலை ‘நடைப் பயிற்சி’ செய்ய வீட்டை விட்டு வெளியே வரும் போது ஓடிச்சென்று பேசினோம். சரியாக ஒரு நிமிடம் பேசினார். ‘ இதப் பாருங்க, நான் ஒன்று செய்ய முடியும். முதல்வருக்கு ஒரு கடிதம் கொடுக்க முடியும். ஆனால் பயன் ஒன்றும் இல்லை. ஒரு வாரம் கழித்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’, என்று வேகமாகச் சொல்லி காரில் ஏறிச் சென்று விட்டார். 67 வயதான ஸாரின் தம்பியும் நானும் விதியையும் எங்கள் நிலையையும் கண்டு மயிலாப்பூர் வீதியில், சொல்லப்போனால் நடுத்தெருவில், கையாலாகத் நிலையில் நின்றுகொண்டிருந்தோம். ஸாரின் தம்பி ஒரு அரசு நிறுவனத்தில் பணி ஓய்வு பெற்றவர். சுதந்திர இந்தியாவில், தமிழ் மொழியை வாழ வைக்கவே பிறப்பெடுத்த தமிழகத்தில், தமிழ்ப் புலவர் ஒருவர் மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தார். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தெருவில் நின்றோம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஸார் அதே மயிலாப்பூரில் ஒரு கோவிலில் ‘நாராயணீயம்’ உபன்யாஸம் செய்தார். கோவிலில் ஒரே கூட்டம். பாராட்டு எல்லாம் கிடைத்தது. அதே சாலை வழியாக அவரைக் காரில் அழைத்து வந்து கொண்டு விட்டார்கள். ஆனால் அதே தெருவில் நாங்கள் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தோம்.

அடுத்த அஸ்திரம் தயாரித்தார் ஸாரின் தம்பி. ஒரு சமயத் தலைவரிடம் சென்று அவர் மூலமாக ஒரு முன்னாள் அரசு அதிகாரியைப் பிடித்து, அவரது மூலமாக அந்த மருத்துவமனையின் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். ‘உங்கள் மருத்துவமனையில் இருக்கும் ஸார் ஒரு நல்லாசிரியர் விருது பெற்றவர். 18 தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். பல பல்கலைக்கழகங்களில் பேருரை ஆற்றியுள்ளார். ஆகவே அவரது மருத்துவச் செலவை சற்றுக் குறைத்துக் கொள்ளவும்’, என்ற ரீதியில் பல சான்றுகள் இணைத்து மனு போல் எழுதிக் கொண்டு சென்றார். மருத்துவமனையின் தலைவரின் மகளின் உதவியாளருக்கு வேண்டியவரின் மனைவி மூலமும் சொல்லப்பட்டது. மருத்துவத்தின் செலவு ஒரு லட்சம் இறங்கியது. ஆனாலும் 18 லட்சத்திற்கு எங்கே போவது ? ஸாரும் குணம் அடையவில்லை. ஆனால் பணமோ கட்டியாக வேண்டும்.

‘நீங்கள்ளாம் படிச்சவங்க. இந்த பேஷன்ட் இப்படியே தான் இருப்பார். இங்கே இருந்து அழைத்துக்கொண்டு போகவும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நீங்களாகவே முடிவு செய்து கொள்ள வேண்டியது தான். இது நீங்கள் படும் கஷ்டம் பார்த்து நானாகச் சொல்கிறேன்’, என்று பீகாரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சொன்னார். ஸாரைப் பார்த்துக்கொண்ட நரம்பியல் துறைத் தலைமை மருத்துவர்,’எனக்கு ஃபீஸ் ஒன்றும் வேண்டாம். என்னால் இப்படித்தான் உதவ முடியும்’, என்று தனது ஊதியம் சுமார் 1 லட்சத்தை விட்டுக்கொடுத்தார்.

இப்படியாக மொத்த செலவு 16 லட்சமாகக் குறைந்தது. இதுவும் எட்டாக் கனியே. ஆனால் 18 ஐக் காட்டிலும்  குறைவுதான். இருந்தது போனது என்று பலதையும் விற்று, கடனும் வாங்கி அவரது மகன் மருத்துவமனைப் பணம் பங்கீடு செய்தான்.

ஆனது ஆகட்டும் என்று ஸாரை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டோம்.

வீட்டிலேயே வைத்து வைத்தியம் செய்தார்கள்.

மூன்று ஆண்டுகள் படிக்கையிலேயே இருந்தார் ஸார். பேச்சும் வரவில்லை. அவரது பழைய பேருரைகளை அவர் காதுகளில் விழும்படி பெரிய சத்தத்தில் ஒலி பெருக்கியில் வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். பல முறை என்னவெல்லாமோ சொல்ல வந்தார். ஆனால் எங்களுக்குப் புரியவில்லை.

பின்னர் ஸார் மூன்று வருடங்கள் கழித்து 2010-ல் இறைவனடி சேர்ந்தார் என்று கேள்விப்பட்டேன்.

சென்று பார்க்கத் திராணி இல்லாததால் நான் போகவே இல்லை.

அதன் பிறகு நான் மாயவரத்திற்குச் செல்லவில்லை.

ஸாருடன் நடந்தபடி பாடம் கேட்ட தெருக்களிலும், அவர் நடந்த புழுதிகளிலும் நான் மட்டும் தனியாக நடக்க எனக்குத் தைரியம் இல்லை.

தரிசனம்

‘டேய், அப்பா இருக்காளாடா ?’, சைக்கிளில் இருந்தபடியே இரண்டு முறை இருமிவிட்டுக் கேட்டார்  சி.எஸ். மாமா. (நெய்வேலியில் பலருக்கும் ஆஸ்துமா பிரச்சினை உண்டு.)

அவரை நாங்கள் அப்படித்தான் அழைப்போம். சி.எஸ். என்பது சந்திர சேகரன் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். ஆனால் யாரும் அவரை அப்படி அழைத்து நான் கேட்டதில்லை.

அப்பாவை விட பல வருஷங்கள் மூத்தவர். எப்போது பார்த்தாலும் மணித்வீபத்திலேயே இருப்பார். மணித்வீபம் என்பது நெய்வேலியில் ஒரு கோவில் போன்றது. கோவிலே தான். ஆனாலும் அத்துடன் ஒரு பஜனை மடமும் இருக்கும். பல பெரியவர்களும் வந்து உபன்யாஸங்கள் செய்வது வழக்கம்.

சி.எஸ். மாமா வேலைக்குச் சென்று நான் பார்த்தது கிடையாது.

அப்பா அவரை ‘ஸார்’ என்று தான் அழைப்பார். சி.எஸ். மாமா அழைத்தார் என்றால் மட்டும் அப்பா உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடுவார். பல வருஷங்கள் முன்னே அப்பா நெய்வேலியில் வேலைக்குச் சேர்ந்த போது அவருக்கு மேலதிகாரியாக இருந்தார் சி.எஸ்.மாமா என்று அப்பா ஒரு முறை சொல்லி இருக்கிறார்.

சி.எஸ். மாமாவைக் கண்டால் எங்களுக்குக் கொஞ்சம் பயம் தான். குரல் கொஞ்சம் கறாராக இருக்கும். நீண்ட நெடிய தோற்றம். தடிமனான கண்ணாடி அணிந்திருப்பார். மணித்வீபத்தில் எப்போதும் யாரையாவது விரட்டிக்கொண்டே இருப்பார்.ஏதாவது உபன்யாஸ ஏற்பாடாக இருக்கும் அல்லது ராதா கல்யாண விழாவாக இருக்கும்.

புலவர்.கீரன், கிருபானந்த வாரியார் முதலானோரது உபன்யாசங்கள் என்றால் மட்டும் சுமாரான வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டிருப்பார். மற்ற நேரம் எல்லாம் ஒரு அழுக்கான வேஷ்டியும் ஒரு அங்க வஸ்திரமும் தான். ஒரு நாளில் 18 மணி நேரம் மணித்வீபத்தில் ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பார்.

பிள்ளையார் சதுர்த்தியின் போது ரொம்பவும் ஓடுவார். பத்து  நாட்கள் உற்சவம் நடக்கும். சதுர்த்தி அன்று இரவு பிள்ளையார் நகர்வலம் வருவார். பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வரும் போது தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் பிறந்த நாள் வரும். ‘ஸ்டோர் ரோடு’ என்ற சந்திப்பில் ஈ.வெ.ரா.வின் சிலை ஒன்று இருக்கும். அது மணித்வீபத்தைப் பார்த்தபடி இருக்கும். பிள்ளையார் சதுர்த்தியின் போது அந்தப் பத்து நாளும் ஈ.வெ.ராவின் பிறந்த நாளும் கொண்டாடப்படும். மேடை போட்டு, ஸ்பீக்கர் கட்டி வசை மழை பொழிவார்கள். சதுர்த்தி அன்று யாராவது பெரிய நாஸ்திகப் பேச்சாளரைக் கொண்டுவருவார்கள். பிள்ளையாருக்குப் பால் அபிஷேகம் நடக்கும் போது இவர்களிடமிருந்து வார்த்தைகளால் அர்ச்சனை நடக்கும்.

இத்தனைக்கும் நிலைமை சீர் குலையாத வகையில் சி.எஸ்.மாமா மணித்வீபத்தின் வெளியில் நின்றிருப்பார்.ஈ.வெ.ரா. கட்சிக்காரர்களும் எத்தனை தான் ஆவேசமாக இருந்தாலும் சி.எஸ்.மாமா நிற்பதால் அவரிடம் எகிற மாட்டார்கள். அவர்களில் பாதிப்பேர் சி.எஸ். மாமாவிடம் வேலை கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள். நெய்வேலியில் அது தான் விசேஷம். அனைவருக்கும் அனைவரையும் தெரியும்.

சி.எஸ். மாமா பணி ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் ஆகியும் மணித்வீபம் வேலையாக நெய்வேலியிலேயே தங்கியிருந்தார். நெய்வேலியின் அரசு வீடு காலி செய்ய வேண்டி இருந்ததால் மணித்வீபத்தின் உள்ளேயே ஒரு சிறு குடில் போல அமைத்துத் தங்கிக்கொண்டார். அப்போது 24 மணி நேரமும் ஆலயப் பணிதான்.

அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவருடன் அவரது மனைவியும் வயதான தாயாரும் இருந்தனர்.

இப்படிப்பட்ட சி.எஸ்.மாமா தான் அப்பாவைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்.

அப்பாவும் அவரும் பேசிக்கொண்டதில் ஒன்று புரிந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் நெய்வேலி வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதே அது.

அதன் பின் எவ்வளவு நாட்கள் கழிந்தது என்று தெரியவில்லை. ஒரு நாள் காலை 7 மணி அளவில் நெய்வேலி ஆர்ச் கேட் ( Arch Gate )  என்னும் நுழைவாயிலில் நாங்கள் திரண்டிருந்தோம். பெரிய அதிகாரிகள் எல்லாம் வந்திருந்தனர். போலீஸ் வாகனம் முன்னே வந்தது. பின்னே ஒரு திறந்த வேன் போன்ற வண்டியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயெந்திரர் முகம் முழுவதும் சிரிப்பாய், கையைச் தூக்கி ஆசீர்வதித்தபடி நின்றிருந்தார். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் என் செவிப் பறைகளைப் பிளந்தது. அது புதிய அனுபவமாக இருந்தது.

மணித்வீபத்தில் சாரதா தேவிக்கு ஒரு கோவில் கட்டியிருந்தார் சி.எஸ்.மாமா. அதன் கும்பாபிஷேக விஷயமாகவே சங்கராச்சாரியார் வந்திருந்தார். அவர் தங்கியிருந்த நான்கு நாட்களும் எங்களுக்கு அங்கே தான் உணவு. ஏனோ பள்ளிக்குச் செல்ல யாரும் வற்புறுத்தவில்லை.

இரவு வந்த கனவில் ஜெயேந்திரர் சிரித்தபடியே வந்தார். ஏதோ சொல்வது போல் பட்டது. 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் அந்த முறை தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பேன் என்று மட்டும் தோன்றியது.

இன்னொரு முறை சிருங்கேரி சங்கராச்சாரியார் வந்திருந்தார். அப்போதும் சி.எஸ். மாமா அலைந்துகொண்டிருந்தார்.

சி.எஸ். மாமாவுக்கென்று பெரிய செலவுகள் எல்லாம் இல்லை. எப்போதும் ஒரு கறை படிந்த வேஷ்டியுடனேயே இருப்பார். ஆனால் நெய்வேலியின் பல உயர் அதிகாரிகள் அவரிடம் அலுவலக விஷயமாக அறிவுரைகள் கேட்க வந்ததை நேரில் பார்த்திருக்கிறேன்.

இப்படியான ஒரு நாளில் தான் வடலூர் மாமி எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கையில் ஒரு அழுக்குப் பை வைத்திருந்தார். 50 வயது இருக்கும். சி.எஸ்.மாமா அனுப்பினார் என்று அப்பாவைப் பார்க்க வந்திருந்தார்.அவர் பெயர் இறுதி வரை எனக்குத் தெரியவில்லை.

‘எங்க ஆத்துக்காரர் நெய்வேலி லிக்னைட்லெ வேலைல இருந்தார். இப்போதும் இருக்கார். ஆனா எங்கே இருக்கார்னு தெரியல்லே. ஆத்துக்கே வரதில்லை. வேற யாரோடையோ இருக்கார்னு பேசிக்கறா. நீங்க கொஞ்சம் விசாரிச்சுச் சொல்லணும்’, என்று உருக்கமான குரலில் சொன்னார்.

அவரது கதை இது தான். அவரது கணவர் குடிகாரர். இரண்டு பெண்கள், ஒரு ஆண் என்று மூன்று பிள்ளைகள். மனைவியையும் பிள்ளைகளையும் நெய்வேலிக்கு அருகில் உள்ள வடலூரில் தங்க வைத்துவிட்டு இவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். வீட்டிற்கும் பணம் தருவதில்லை. வடலூர் மாமி வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்தும், சமையல் வேலை செய்தும் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். இவர்களது பெரிய பெண்ணிற்கு 18 வயது. கணவரின் பி.எஃப். பணம் தன் குடும்பத்துக்குத் தான் வேண்டும் என்று மேல் அதிகாரிகளிடம் கோர அப்பாவைப் பார்க்க மாமி அடிக்கடி வர ஆரம்பித்தார்.

மாமியின் கதை என் மனதை உருக்கியது. பள்ளி முடிந்து வந்த பல நாட்களில் மாலை வேளைகளில் மாமி தன் பையைத் தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டில் அமர்ந்திருப்பார். அப்பா வீட்டிற்கு வர 6 மணி ஆகும். பின்னர் சுமார் 8 மணி அளவில் நான் மாமியைக் கொண்டு பஸ் ஏற்றி விட்டு வருவேன்.

இந்த நிலையில் அவரது கணவரைப்பற்றி ஒரு தகவலும் இல்லாமல் போனது. ஓய்வு பெற்று விட்டார் என்று தெரிந்தது. ஆனால் ஆளைக் காணவில்லை.

பெரிய பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டிய காலம் வந்தது. அப்போது நான் 10-ம் வகுப்பு என்று நினைக்கிறேன். மாமியிடம் ஒரு காசும் இல்லை.

அப்போது தான் சி.எஸ்.மாமா ஒரு வழி சொன்னார். காஞ்சிபுரம் சென்று ஸ்வாமிகளைப் பார்த்து வரவும் என்று வழி காட்டினார். அப்பாவும் அந்த மாமியையும், அவரது பெண்ணையும் அவரது மகனையிம் அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்றார். நான் உடன் சென்றேன்.

அந்த நாள் என் வாழ் நாளில் ஒரு மிகத் திருப்புமுனையான நாள் என்று உணர்ந்திருக்கவில்லை.

காலை 8 மணிக்கு ஸ்வாமிகள் தரிசனம் என்று சொன்னார்கள். எங்களைப்போல் இன்னும் பலர் இருந்தனர்.

அனைவரும் அமர்ந்திருந்தோம். சங்கர கோஷம் அரங்கை நிறைத்தது. சிறிது நேரத்தில் ஸ்வாமிகள் வந்தார்.

அப்பாவைப் பார்த்ததும் ,’தேவநாத ஐயங்கார் சங்கர மடத்துக்கு வந்திருக்கேளே, வாங்கோ’, என்று கையைத்தூக்கி ஆசீர்வதித்தபடி ஆரம்பித்தார்.

‘இல்லே, ஒரு கல்யாண விஷயம்’, என்று சொல்லி அப்பா வடலூர் விஷயம் முழுவதும் சொன்னார்.

ஸ்வாமிகள் முகம் வாட்டம் கண்டது. ‘பெரியவாள தரிசனம் பண்ணிட்டு வாங்கோ’, என்று ஒரு ஊழியரிடம் ஏதோ சொன்னார். அவர் ‘பெரியவா’ என்று சொன்னது பரமாச்சாரியாரை. மனித உருவில் நடமாடிய தெய்வம் அப்போது ஒரு பத்து ஆண்டுகள் மௌன விரதம் பூண்டிருந்த காலம் அது.

பரமாச்சாரியாரைத் தரிசிக்கச் சென்றோம். மடத்தின் ஊழியர் பெரியவரின் காதுகளின் அருகே சென்று பவ்யமாக ஏதோ சொன்னார்.

பெரியவர் தலை தூக்கி எங்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். வலது கை அசைவினால் முன்னால் இருந்த ஒரு மாம்பழத்தை அந்தப் பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார். மாமி அழுதுவிட்டாள்.

பெரியவர் அப்பாவை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தார். தனது தடித்த கண்ணாடியின் வழியாக அவர் பார்த்தது பல ஆயிரம் ஆண்டுகள் முன்னிருந்து எங்களைப் பார்ப்பது போல் பட்டது. பாரத தேசத்தின் அனைத்து ஆன்மிக சக்தியும் ஒன்று திரண்டு அந்தக் கண்ணாடி வழியாக எங்கள் மீது விழுந்ததாக நினைத்துக்கொண்டேன்.

பின்னர் மீண்டும் ஜெயேந்திரரை சந்தித்தோம். அவரது உதவியாளர் ஒரு தட்டில் பழங்களுடன், சில பூக்கள் மத்தியில் ஒரு சின்ன பொட்டலம் போல் இருந்த ஒன்றை எங்களிடம் தந்தார்.

மாமி அதைப் பிரித்துப் பார்த்தார். ஒரு பவுனில் திருமாங்கல்யம் இருந்தது. அத்துடன் கல்யாண செலவுகளுக்காக  5,000 ரூபாய்க்கான ஒரு செக் இருந்தது.

‘ஒரு குறையும் வராது. சந்திர சேகரன் அனுப்பியிருக்கார் உன்னை. சந்திர சேகரர் கிட்டே ஆசீர்வாதமும் ஆயிடுத்து. அப்புறம் என்ன அழுதுண்டு?’, என்று சிரித்தபடியே கூறினார். அவர் இரண்டாவது முறை சந்திர சேகரர் என்று சொன்னது பரமாச்சாரியாரை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.

பின்னர் அப்பாவைப் பார்த்து,’ நீ பண்ற காரியம் ரொம்ப உசத்தியானது. பரோப காரார்த்தம் இதம் சரீரம். ஆசீர்வாதம். நாராயண நாராயண’, என்று கை நிறைய குங்குமம் அளித்தார்.

அதன் பிறகு சங்கர மடம் குறித்த என் பார்வை சற்று உன்னிப்பானது. அவர்களது பல நற்காரியங்கள் கண்ணில் பட்டன. கோ-சாலை பராமரிப்பு, கண் வைத்தியம் முதலியன என்னை ஈர்த்தன. அவற்றைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினேன்.

இப்படி இருக்கையில் ஒருமுறை சி.எஸ். மாமாவுக்கு உடம்பு முடியாமல் போனது. ஆனாலும் மணித்வீபத்தில் வளையவந்து கொண்டிருந்தார். வடலூர் மாமி கதை போல் இன்னும் எவ்வளவு பேருக்கு நல்லது செய்தார் என்று சி.எஸ். மாமாவுக்கு மட்டுமே தெரியும்.

‘இதென்னடா, நான் என்ன பண்றேன் ? கை காட்டி விடறேன். அனுக்ரஹம் இருந்தா தானா நடக்கும்’, என்று அதட்டலாக யாரிடமோ என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு வடலூராக இருக்கும் என்று அப்பா சொன்னார். இந்த முறை இருமல் சற்று கடுமையாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் ஆருத்ரா தரிசனம் அன்று மெனக்கெட்டு சிதம்பரம் செல்வார் சி.எஸ்.மாமா. அவரது சொந்த ஊரும் அது தான்.

சில வருடங்கள் கழித்து நான் பம்பாயில் வேலையில் இருந்தேன்.

அப்பா அழைத்திருந்தார். ‘சி.எஸ்.மாமா காலமாயிட்டார் டா. சிதம்பரம் போனார். அங்கேயே போய்ச் சேர்ந்துட்டார்’

காலண்டர் பார்த்தேன். அன்று ஆருத்ரா தரிசனம் என்று போட்டிருந்தது.

அனுமன் சொன்ன கதை

Hanuman Tzrதேர் கட்டியது போக மிச்சம் இருந்த மரக் கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். பழைய எரிந்த தேரின் சில மரச் சட்டங்களும் இருந்தன. பழைய தேரின் மர ஆணிகள் நன்றாக இருந்ததால் அவற்றில் சிலவற்றைப் புதிய தேரிலும் சேர்த்திருந்தோம். இரு தேர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கட்டும் என்று அவ்வாறு செய்திருந்தோம்.

பழைய மரக்கட்டைகளை எடுத்து விறகில் சேர்க்கலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தார் ராமு ஆசாரி. காலில் ஆணி குத்தியது போல் இருந்தது. குனிந்து எடுத்தேன். ஒரு மரக்கட்டையில் பழைய ஆணி போன்று இருந்தது. கட்டையை எடுத்துப் பார்த்தேன். பழைய உளுத்துப்போன கட்டையாக இருக்கும் என்று நினைத்து திருப்பிப் பார்த்தேன். அது ஒரு அனுமன் வடிவம். கை சஞ்சீவி மலை தூக்கிய நிலையில் இருந்தது.

சரி எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துச் சென்று வீட்டில் என் அலமாரியில் வைத்தேன்.

எதிர் வீட்டு கிச்சாமி ‘இது ஆயிரங்காலத்து அனுமன் வடிவம். தேரில் இருந்தது. வீட்டில் வைக்கலாமோ கூடாதோ’, என்று ஒரு குண்டு போட்டுச் சென்றான். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு அகல் விளக்கு எற்றி வைத்தேன்.

அப்போது தான் பார்த்தேன் அதை. அனுமன் கால் அடியில் சிறிய எழுத்துக்கள். தமிழ் போலவும் தெரிந்தது.ஆனால் வடிவங்கள் புரியவில்லை.

சட்டென்று உரைத்தது. வட்டெழுத்துக்கள். அட, இவை சோழர் கால எழுத்துக்கள் ஆயிற்றே என்று பட்டது.

உடம்பில் ஒருமுறை அதிர்ந்தது.

மனதில் பல சிந்தனைகள் ஒடின.

‘யார் செய்திருப்பார்கள் இந்தச் சிலையை ? ராஜ ராஜனின் தாத்தன் வழியில் கரிகாலன் கட்டிய கோவில் என்று தெரியும். ஆனால் தேரை யார் கட்டியது என்று தெரியவில்லை.ஒருவேளை கரிகாலன் காலத்துத் தேர்ச் சிற்பமா இந்த அனுமன் ? இவன் எத்தனை சாம்ராஜ்யங்களைக் கண்டிருப்பான் ? கரிகாலன் முதல், கண்டராதித்தன், ஆதித்த கரிகாலன், பராந்தகன், அரிஞ்சயன், ராஜ ராஜன், ராஜேந்திரன் என்று எவ்வளவு பேரைப் பார்த்திருப்பான் இந்த அனுமன் ?

அல்லது இந்தச் சிற்பம் கரிகாலனுக்கு முந்தையதோ ? அவன் அதன் அழகில் மயங்கி அப்படியே தேரில் பதித்து விட்டானோ ? அப்படியென்றால் என் வீட்டில் உள்ள சிற்பம் பல நூற்ராண்டுகளைக் கண்டிருக்குமே !

அனுமனே பழைய ஆள். திரேதா யுகம் அவனது காலம். ஆனால் யுகங்கள் பல தாண்டி இன்று அவன் வடிவம் என் கையில்.

இந்த அனுமனின் எதிரில் நான் யார் ? இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஒரு துளியில் நின்றுகொண்டிருக்கும் ஒரு தூசி. என் காலமே சில பத்து ஆண்டுகள் மட்டுமே. என் காலம் முடிந்த பின்னும் இந்த அனுமன் இருப்பான். அப்போது வேறொரு தூசியின் கையில்,அவனைப் பார்த்தபடி, அவனது அற்ப ஆயுளைக் கணக்கிட்டபடி மோனச் சிரிப்புடன்.

இவன் பார்த்துள்ள சம்பவங்கள் என்னவெல்லாம் இருக்கும் ? முகலாயர் ஆட்சி, வெள்ளையர் ஆட்சி, அதற்கும் முன்னர் நம்மவரின் பல வகையான ஆட்சிகள்.

இவன் இருந்த எரிந்த தேரின் வழியாக எவ்வளவு மாந்தர் சென்றிருப்பர் ? சில லட்சம் பேர் இருக்க மாட்டார்கள் ?

எத்தனை பஞ்ச காலங்களையும் வளம் கொழித்த காலங்களையும் கண்டிருப்பான் இவன் ? எதுவாக இருந்தாலும் அதே மோனப் புன்னகையுடன், நடக்கும் அத்துணை நிகழ்வுகளுக்கும் சாட்சியாக, மௌனமாக நின்றிருப்பான் இவன் ?

இவனுக்கு முன் நான் எம்மாத்திரம் ? வெறும் எண்பது ஆண்டுகள் வாழும் நான் இவனைப் பொறுத்தவரை ஒர் புழு. அவ்வளவே.

இப்படி புழுவாக இருந்தாலும் எத்தனை ஆட்டம் ஆடுகிறேன் நான் ? உசத்தி தாழ்த்தி என்ன , மேதாவி பாமரன் என்ன ? எத்துணை வெற்று ஏக்களிப்புகள் ?

இத்துணை யுகங்கள் கடந்து வந்துள்ள இவன் முன்னர் நான் எம்மாத்திரம் ?

எனக்கு முன்னர் இந்த ஊரில் இருந்த மாந்தர் கொக்கரித்த சொற்கள் என்னவாயின ? அவர்களே என்னவானார்கள் ? அவர்கள் இருந்த இடமே தெரியவில்லையே ?

சாதாரண மனிதர் இருக்கட்டும். எத்துணைத் தலைவர்கள் இருந்துள்ளனர் ? அவர்கள் இருக்கும் வரை அவர்களும் அவர்களது சூழமும் செய்யும் அளப்பரைகள் எத்துணை? இவனுக்கு முன்னர் அவர்கள் எல்லாம் யார் ?

சமுதாயத்தையே மாற்றியதாகக் கூறிக் கொண்ட அரசுத் தலைவர்கள் இப்போது இருக்கும் இடம் எங்கே ? அவர்கள் இருந்ததற்கான தடங்களே அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் இந்த அனுமன் என் கைகளில் நிற்கிறான்.

‘என்ன, நிலையாக இருக்கப்போவதாக எண்ணமோ? உன்னைப்போல் எத்துனை பேரைக் பார்த்திருக்கிறேன்?’என்று என்னைக் கேலி பேசுவதாகத் தோன்றியது.

அப்போதுதான் அது நடந்தது. பதுமை பேசியது.

“என்ன பார்க்கிறாய்? உன்னையும் எனக்குத் தெரியும், உன் பரம்பரையையே நான் அறிவேன். நான் அதற்கெல்லாம் முற்பட்டவன். உன் வாழ்வில் நீ பார்க்கப்போவது நான் பார்த்ததில் ஒரு நெல் மணி அளவு கூட இருக்காது.

நான் பார்த்ததில் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். உன் தாத்தாவைப் பற்றியது. முக்கியமாக அவருக்கு என்னைப் பிடிக்கும். நான் இருந்த பழைய தேர் எரிந்த வருஷம் அவர் ரொம்பவும் மன வருத்தம் அடைந்தார். அவருக்குப் பல எதிரிகள் இருந்தனர்.

நல்ல மனுஷர் அவர். என்ன, ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுவார்.பேசுவது போலவே நடக்கவும் வேண்டும் என்று சொல்லி வந்தார். இதனாலேயே அவருக்குப் பல எதிரிகள் உண்டாயினர்.

உன் தாத்தாவின் தந்தை கோவிலில் கைங்கைர்யம் செய்து வந்தார். மீத நாட்களில் வேறு ஊர்களுக்கு வேத பாராயணம் செய்யச் சென்று விடுவார். பூ கைங்கர்யம், தளிகை என்றால் கூட நன்கு கற்றிருக்க வேண்டும் அப்போதெல்லாம்.

ஒரு நாள் அவரால் தளிகை பண்ண மடப்பளிக்குள் செல்ல முடியவில்லை. அதனால் உன் தாத்தாவை தளிகை பண்ண அனுப்பினார். அப்போது அவருக்கு இருபது வயது இருக்கும். பதினான்கு வருடம் வேதப் பயிற்சி முடித்து அப்போதுதான் திருக்கண்ணபுரம் பாடசாலையிலிருது திரும்பி இருந்தார்.மடப்பளிக்குள் செல்ல நந்தவனம் வழியாகச் செல்ல வேண்டும். அப்போது தான் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல முடியும். நந்தவனத்திற்குள் இருப்பதால் ஆள் அரவம் இருக்காது.

கிணற்றடியில் ஊர் பெருந்தனக்காரர் நந்தவனக் காவல்காரன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டார். ஆனால் இருவரும் பேசிக் கொள்ள மட்டும் வரவில்லை என்று உன் தாத்தாவிற்குப் புரிந்தது.

பெருந்தனக்காரர் தான் ஊரில் ஆசார நியமங்களை வகுப்பவர். ஊரில் உற்சவத்தின் போது யாருக்கு முதல் மரியாதை என்பது முதல் அவர் வைப்பதே சட்டம். ஆனால் இவ்வளவு சட்டம் பேசும் அவர் காவல்காரன் மனைவியுடன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது உன் தாத்தாவிற்கு வியப்பளித்தது.

ஆனால் உன் தாத்தா பார்த்ததை பெருந்தனக்காரர் பார்த்துவிட்டார். ஏதோ வேலை சொல்வது போல் அவளை அதட்டி அனுப்பினார்.அவரது அதட்டல் உண்மை இல்லை என்று உன் தாத்தாவிற்குத் தெரியும் என்று பெருந்தனக்காரர் அறிந்திருந்தார்.

என்ன தோன்றியதோ தெரிய்வில்லை உன் தாத்தா பெருந்தனக்காரரை ஓங்கி ஒரு அறை விட்டார். வயது சற்று கூடின பெருந்தனக்காரர் அப்படியே சுருண்டு விழுந்தார். ஒன்றுமே நடவாதது போல் உன் தாத்தா மடைப்பளி சென்றுவிட்டார்.

அதுவரை அரசல் புரசலாக இருந்தது வெளியே கசியத் துவங்கியது.

அந்த வருஷம் உற்சவம் அவ்வளவு சௌஜன்யமாக இல்லை. முதலில் இருந்தே தகராறு.

முதல் நாள் உற்சவம் அன்றே முதல் மரியாதை தனக்கே வர வேண்டும் என்று பெருந்தனக்காரர் பேசினார். எதிர்த்து யாரும் பேசவில்லை. சிறிது மௌனம் நிலவியது. யாருக்காவது மாற்றுக் கருத்து உண்டா என்று சபையில் கேட்கப்பட்டது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. சபை தேர்முட்டி ‘வழி காட்டிப் பிள்ளையார்’ மண்டபத்தில் நடந்ததால் நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

சபையின் ஓரத்தில் சிறிது சல சலப்பு கேட்டது. சில பெரியவர்கள் உன் தாத்தாவைக் கையைப் பிடித்து இழுத்து அமர வைக்க முயன்றனர். “அவனைப் பேச விடுங்கள்”, என்று தலைமை பட்டர் கூறினார்.

சபை அவர் பேச ஆமோதித்தது. ஆனால் பெருந்தனக்காரர் ஆட்சேபித்தார். ‘பிரும்மச்சாரிகள் சபைகளில் பேசுவது சாஸ்த்ர விருத்தம்”, என்று கூறினார் பெருந்தனக்காரர். உன் தாத்தா தன்னை எதிர்த்துப் பேசப் போகிறார் என்று ஒருவாறு ஊகித்துவிட்டார் பெருந்தனக்காரர்.

அப்போது உன் தாத்தா கூறியது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. அது ஒரு சிம்ம கர்ஜனை என்பேன்.

“பிரும்மச்சாரிகள் சபைகளில் பேசக் கூடாது என்பது உண்மை தான். ஆனால் ஏக பத்தினி விரதர்கள் மட்டுமே சபையில் அமர வேண்டும் என்றும் சாஸ்த்ரம் கூறுகிறது என்று சபை முன் சமர்ப்பிக்கிறேன்”, என்று சூசகமாகக் கூறினார் உன் தாத்தா.

சபை நடுவர்களில் பல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவர் யாரைச் சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வது போல் இருந்தது எனக்கு. பலர் ஏக-பத்தினிக் காரர்கள் அல்லர் என்பது அப்போது தெளிவாகியது.

உன் தாத்தா மேலும் சொன்னார்,” நான் யாரைச் சொல்கிறேன் என்று அவரவர்களுக்குத் தெரியும். எனவே முதல் மரியாதை பற்றிப் பேசுவதற்கு முன் ஒவ்வொருவரும் தாங்கள் இந்தச் சபைக்கே பொறுத்தமானவர்களா என்று கேட்டுக்கொள்வது நல்லது”, என்று மேலும் கூறினார்.

சபைக்காரர்களில் பலருக்கு முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. ஏதோ தங்கள் வரை பிழைத்தோம் என்று நிம்மதி அடைந்தனர் போல் தெரிந்தது.

அத்துடன் சபை கலைந்தது. பின்னர் அந்த வருடம் பெருந்தனக்காரருக்கு முதல் மரியாதை கொடுக்கப்படவில்லை.

பெருந்தனக்காரர் அத்துடன் விடவில்லை. கறுவிக்கொண்டிருந்தார்,

ஒருமுறை வைகாசி உற்சவத்தின் போது ஒரு வெள்ளி சந்தனக்கிண்ணம் காணாமல் போனது. அது காணாமல் போகவில்லை. தேருக்குக் கீழே பெருந்தனக்காரரின் வேலையாள் போட்டு விட்டுச் சென்றது எனக்குத் தெரியும்.

கடைசியாக வேத விற்பன்னர்களுக்குச் சந்தனம் கொடுத்தது உன் தாத்தா தான் என்பதால் அவர் பேரில் சந்தேகம் எற்படச் செய்தார் பெருந்தனக்காரர். கிண்ணத்தைத் திருப்ப வேண்டும், அத்துடன் இரண்டு ஆண்டுகள் உற்சவங்களில் ஈடுபடக் கூடாது அல்லது கம்பத்தில் கட்டி வைத்து அடி வாங்க வேண்டும் என்பதே சபை அவருக்கு அளித்த தீர்ப்பு.

ஏழைச் சொல் அம்பலம் ஏறவில்லை. உன் தாத்தா குற்றவாளி என்று தீர்ப்பு எழுதினர். வெள்ளியைத் திருப்ப வழி இல்லை. தேர் எதிரில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்தார்கள். பெருந்தனக்காரர் உட்பட நால்வர் அடிப்பது என்று முடிவானது.

தாத்தா கட்டி வைக்கப் பட்டார்.

அப்போது குடியானத் தெருவிலிருந்து பெரும் கூச்சல் கேட்டது. சுமார் இரு நூரு பேர் கையில் வேல் கம்புகளுடன் கோஷம் எழுப்பியபடி வந்தனர். அவர்களில் நந்தவனக் காவல்காரனும் தென்பட்டான். இன்னொரு பக்கத்திலிருந்து சங்கர அக்ரஹாரத்திலிருந்து வக்கீல் ராமசுப்பையர் தனது ஆட்களுடன் வந்துகொண்டிருந்தார்.

அப்புறம் என்ன ? உன் தாத்தா அவிழ்த்து விடப்பட்டார். பெருந்தனக்காரர் மீது ராமசுப்பையர் வழக்கு போட்டார். பல வழக்குகளில் மாட்டி பெருந்தனக்காரர் தன் செல்வம் எல்லாம் இழந்தார். விரைவில் ஊரை விட்டு வெளியேறினார். சில நாட்களிலேயே காலமானார்.

ராமசுப்பையர் உன் தாத்தாவின் பால்ய நண்பர். அத்துடன் அவருக்கும் பெருந்தனக்காரரிடம் சில பழைய பகைகள் இருந்தன. எல்லாம் சேர்த்து பழி வாங்கிவிட்டார் ராமசுப்பையர் என்று பேசிக்கொண்டார்கள்.

ஆனால் இதெல்லாம் ஒரு அநீதியை சமன் படுத்தவே என்று எனக்குத் தெரியும்.

இது எல்லாம் நடந்த முப்பது ஆண்டுகள் கழித்து நான் இருந்த தேர் எரிக்கப்பட்டது. அதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் உன்னிடம் இருக்கிறேன்.’

“டேய், நான் தான் சொன்னேனே, ஆயிரம் வருஷம் பழசெல்லாம் வீட்டுலெ வெச்சுக்க வேண்டாம்னு. பாரு எவ்வளோ நாழியா அதையே பார்த்துண்டு நிக்கறே!”, என்று கிச்சாமி சொன்ன போது தான் சுய நினைவுக்கு வந்தேன்.

எத்தனை நேரம் நான் அப்படியே அனுமன் சிலையைப் பார்த்தபடி நின்றிருந்தேன் என்று தெரியவில்லை.

இது வரை பேசியது யார்? இந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மையா ? அல்லது என் பிரமையா ?

தெரியவில்லை. ஆனால் இவை அனைத்தையும் அனுபவித்தது போலவே இருந்தது.

இது போல் பல முறை நிகழப் போகிறது எனக்கு அப்போது தெரியவில்லை.

பழைய கணக்கு

இன்னிக்கி சாப்பாடு இல்லே, நீ வேற ஆத்துக்குப் போன்னு வக்கீலாத்துலே சொல்லிட்டா.

இன்னிக்கும் சாதம் இல்லை.  வேற யார் ஆத்துக்கும் போக முடியாது. சாயங்காலம் 9  மணிக்கு மேலத் தெருவாத்துலேயும் கதவு சாத்திடுவா. அம்மவாசையும் அதுவுமா இன்னிக்கிப் பூரா பட்னிதான். கார்த்தாலேர்ந்து ஒண்ணும் சாப்பிடலே. இப்பிடியே எவ்வளவு நாள் போகப்போறதோ.

வேற ரெண்டு அகம் இருக்கு. சந்நிதித் தெரு சாமிங்கார் இருக்கார். ஆனா அவருக்கே அவ்வாத்துலே சாப்பாடு இல்லே. எதோ திங்கள் கிழமை மட்டுமே என்னை வரச் சொல்லி இருக்கா.  பட்டவர்த்தி சர்மாவாத்துலே புதன் கிழமை, வடக்குத் தெரு நாராயண சாஸ்திரியாத்துலே வியாழன், ஹெட் மாஸ்டர் சேஷகிரி சார் ஆத்துலே வெள்ளின்னு இப்பிடி வாரம் ஓடிடும். சனி , ஞாயிறு ஊருக்கு நடந்தே போய்டுவேன். ஆனா இன்னிக்கி செவ்வாய். வக்கீலாத்துலதான் சாதம்.  ஆனா அவாளும் இல்லேன்னுட்டா.

சாப்பிடலேன்னாலும் பரவாயில்லை. ஆனா தேசிகர் கோவில்லே ராத்திரி படுத்துக்கறது தான் பயமா இருக்கு. வௌவால் வேற ராத்திரி பறந்து பறந்து பயம் காட்றது. ராத்திரி தான் வௌவால் வரணும்னு ஏன் பெருமாள் வெச்சிருக்காறோ ?  இந்த ஊர்லே ராத்திரி தங்கறதுக்கு வேற ஒரு இடம் கூட இல்லை. வேற எங்கே போனாலும் காசு கேக்கறா.  தேசிகர் கோவிலுக்கு காவல் மாதிரியும் ஆச்சு, எனக்கு தங்கறதுக்கு எடம் மாதிரியும் ஆச்சுன்னு அப்பா சொன்னார். ஒரு நாள் என்னோட தங்கிட்டு வேத பாராயணத்துக்கு வேதாரண்யம் போனார். போனவர் வரவே இல்லே. போய்ட்டார்னு ஒரு தந்தி மட்டும் வந்துது.

இன்னிக்கி பூராவுமே எனக்கு சரியாவே இல்லை. தமிழ் ஆசிரியர் தியாகராசன் ஐயா பல தடவை புஸ்தகம் கொண்டுவான்னு சொல்லிட்டார். இருந்தாத்தானே கொண்டு போறதுக்கு ? நான் தினமும் ஹெட் மாஸ்டர் சேஷகிரி சாரோட பொண்ணு பிரேமாவோட புஸ்தகத்தை தான் ராத்திரிக்கி மட்டும் இரவல் வாங்கிண்டு போய் படிப்பேன். இது தெரியாம இன்னிக்கி தமிழ் ஆசிரியர் நான் ஏதோ வேணும்னே புஸ்தகம் கொண்டு போகாத மாதிரி நெனைச்சுண்டு கன்னத்துலே ஓங்கி அறைஞ்சுட்டார். நான் கீழே விழுந்துட்டேன். அப்பறம் உடன் படிக்கற ஞானசுந்தரம் சொல்லித்தான் அவருக்கு எனக்கு அப்பா இல்லாததால புஸ்தகம் வாங்க முடியலேன்னு தெரிஞ்சுது. அப்புறம் அவரோட புஸ்தகத்தையே எனக்குக் கொடுத்துட்டார்.

அது போகட்டும். இப்போ தேசிகர் கோவிலுக்கு உள்ளே போகணுமே.

எழுநூறு வருஷத்துக்கு முன்னே தேசிகரே இந்தக் கோவிலைக் கட்டினார்னு அப்பா சொன்னார். அதுக்கப்பறம் யாருமே இதப் பெருக்கக்கூட இல்லே போலே. ஒரே வௌவால் புழுக்கை. ராத்திரி சிம்னி வெளிச்சத்துலே அண்ணாந்து பாரத்தா எதோ உருவம் எல்லாம் போற மாதிரி இருக்கும். கண்ணையே தெறக்க மாட்டேன். இறுக்க மூடிண்டுடுவேன்.

கோவில் இருக்கட்டும். இப்போ ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன பண்றது ? காளியாகுடி ஹோட்டல் அம்பி மாமா ஆத்துக்குப் போகலாம். ஆனா இன்னிக்கி அமாவாசை. அவாத்துலேயும் ராத்திரி பலகாரமெல்லாம் ஆகி இருக்கும். இன்னிக்கி  ராத்திரி வயத்துக்கு குளத்து தீர்த்தம் தான்.

வக்கீல் ஆத்துலே சாதம் இல்லைன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை. ஆனா அவாத்து சமையல் மாமி சொன்னதுதான் ரொம்ப வலிச்சுது. “கண்ட நேரத்துலே வந்து நிக்க வேண்டியது, பத்துப்பாத்திரம் எல்லாம் தேச்சாச்சு. அவசியம் சாதம் வேணும்னா கோவில்லே போய் மடப்பள்ளிலே கேட்டுப்பாரு”, அப்பிடின்னு சொன்னா.

“என்ன மாமி, இப்பிடி சொல்றேளே, இன்னிக்கி இந்தாத்துலேதானே எனக்கு சாப்பாடு?” அப்பிடின்னு கேட்டு வெச்சேன்.

அப்போ வக்கீலாத்து மாமி வந்தா.  அவாகிட்டே கேக்கலாம்னு கேட்டேன். மாமியாலே ஒண்ணும் சொல்ல முடியலே. மென்னு முழுங்கினா. எனக்கோ மயக்கம் வர மாதிரி இருந்தது. கார்தாலேர்ந்து ஒண்ணும் சாப்பிடலே.

அப்போ வக்கீல் மாமா வந்தார். நிலைமையைப் புரிஞ்சுண்டா மாதிரி தெரிஞ்சுது. சரி நமக்கு சாப்பாடு கிடைக்கும்னு நெனைச்சேன்.

“மாமா, அம்மாவாசை தர்ப்பணம் பண்ணிட்டு இப்போ வரைக்கும் ஒண்ணும் சாப்பிடலே. இன்னிக்கி உங்காத்துலேதான் சாப்பாடு. சமையல் மாமி இல்லேங்கறா. நான் சீக்கரம் சாப்டுட்டு தேசிகர் கோவில் போகணும். ராத்திரி கொஞ்சம் படிச்சுட்டு நாளைக்கிக் கார்த்தாலே ஆறாவது பார்ம் பரீட்சை எழுதணும் ..” அப்பிடின்னு மென்னு முழுங்கி சொன்னேன்.

யாரோ பெரிய உலக்கையாலே தலைலே அடிச்ச மாதிரி இருந்துது. மாமா தான் பேசினார் : ” வாரா வாரம் உன் எழவு பெரும் எழவாப் போச்சு. கொட்டிக்கறதுன்னா கொஞ்சம் சீக்கரமே வந்திருக்க வேண்டியது தானே. எட்டு மணிக்கு வந்தா ஒண்ணும் இல்லையோ என்னவோ”.

நான் ரொம்ப பயந்து போயிட்டேன். அவர் அதுக்கு அப்பறம் சொன்னது தான் ரொம்ப கஷ்டமாயிடுத்து. அழ ஆரம்பிச்சுட்டேன்.

“மடிசிஞ்சி பிராம்மணன் உன் அப்பன் உன்னை விட்டுட்டுப் போயே போய்ட்டான். ஏதோ பண்ணிவைக்கற வாத்தியாரா லட்சணமா இருந்து உனக்கும் உபாத்யாயம் சொல்லி வெச்சிருக்கலாம். இங்கிலீஷ் படிப்பு ஒரு கேடா?  வேத பாராயணம் பண்ண வேதாரண்யம் போவானேன்; அப்பிடியே போயச்சேருவானேன் ? இப்போ உனக்கு தினம் ஒரு ஆத்துலே சாதம். ஒண்ணு பண்ணு. இன்னிக்கி எங்காத்துலே சாதம் இல்லே. கோவில் வாசல்லே உக்காந்துண்டு சஹஸ்ரநாமம் சொல்லு. போறவா வரவா யாராவது நாலு காசு கொடுப்பா.அத வெச்சுண்டு ஏதாவது ஹோட்டல்ல போய் கொட்டிக்கோ”, அப்பிடின்னு சொல்லிட்டு கதவை அறைஞ்சு சாத்திட்டா.

திடீரென்று “சார், Are you okay ?“, என்ற குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். நேர் காணலுக்கு வந்திருந்த பையன் என்னையே பார்த்துகொண்டிருந்தான்.

“உன் தாத்தா தான் வக்கீல் கிருஷ்ணசாமி ஐயங்காரா? அப்போ உன் அப்பா ரகுநந்தன் எப்படி இருக்கார் ?” என்றேன் சுய நினைவு திரும்பியவனாய்.

“இல்லே சார். அவர் ஒரு கார் விபத்துலே போய்ட்டார். குடும்பம் ரொம்ப கஷ்டப்படறது. அதான் உங்க கம்பெனிலே ஒரு ப்ரோக்ராமர் வேலைக்கான தேவை தெரிஞ்சுது”.

“இப்போ எங்கே தங்கி இருக்கே? ஹோட்டல் ஏதாவது..?”

“இல்லே சார், அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லே. அதுனாலே எம்.ஜி.ரோடு பின்னாடி இருக்கற தேசிகர் மடத்துலே ராத்திரி படுத்துக்கறேன். இப்போ ஒரு சரியான வேலை கிடைக்கணும். அப்பறம் வேற இடம் பார்க்கணும்”.

“சாப்பாடு எல்லாம் எங்கே”.

“கார்த்தாலே ஒரு வேளை மடத்துலே. சஹஸ்ரநாம பாராயணம் பண்ணின உடனே பொங்கல் குடுப்பா. இன்னொரு வேளை ரெண்டு வாழைப்பழம். அவ்ளோதான்”.

“ஒண்ணு பண்ணு. வாரா வாரம் செவ்வாக்கிழமை இந்த கப்பன் பார்க் அட்ரெஸ்ல உனக்கு சாப்பாடு”.

“ரொம்ப தேங்க்ஸ் சார். என்ன காரணம் சார்?”

“அது அம்பது வருஷம் பழைய கணக்கு” என்று கூறி அவனை அனுப்பி வைத்தேன்.

ஒரு இனிய காலைப் பொழுது ..

நான் அப்பவே சொன்னேன், இந்த காங்கிரசை நம்பாதீங்கன்னு.அவங்களுக்குக் கொள்கை, கத்திரிக்காய் ஒரு மண்ணும் கிடையாது, காலை வாரி விட்டவங்க கிட்ட போய் நிப்பாங்க, அடிக்கடி உளறுவாங்க அப்பிடின்னு.

நண்பர் நம்பலே. இல்லை. அப்படி எல்லாம் இல்லை, அவர்களுக்கு  கொள்கை பிடிப்பு உண்டுன்னு சொன்னார். தி.மு.க.வும் அப்படித்தான், அவங்களுக்கும் கொள்கைப்  பிடிப்பு உண்டுன்னு சொன்னார்.

எனக்குப் பகுத்தறிவு பத்தலை. அதனாலே புரியலை.

இப்போதான் புரியுது. கனிமொழி ராஜ்ய சபா பதவிக்கு காங்கிரஸ் ஆதரவு ஏன்னு.

காங்கிரஸ் ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டது. அதாவது 2G விவகாரத்துலே ராஜா வாயைத் திறக்கக் கூடாது. பார்லிமெண்டரி கமிட்டி முன்னாடி வந்து பேசுவேன்னு சொல்லக்கூடாது. அது சரின்னா கனிமொழிக்கு ஆதரவு. எப்பூடீ ?

கலைஞர் விவரம் தெரிந்தவர். ஸ்டாலின் பதவிலே  இருக்கார். எம்.எல்.ஏ. பதவி. அழகிரி எம்.பி. பதவி. இப்போ ஊசல்லே இருக்கறது கனி தான். சரி என்ன செய்யலாம்? யோசிச்சார்.

பெரியார் கை பிடித்து நடந்தவர் ஆச்சே. இது கூடவா தெரியாது?

சின்ன மீனப் போட்டுதான் பெரியமீன எடுக்கணும்.

இப்போ சின்ன மீன் ராஜா. பெரிய மீன் கனி.

கனி இருப்பக் காய் கவர்ந்தற்றுன்னு வள்ளுவர் தெரியாமலா சொன்னார்?

போட்டாரே ஒரு  போடு கலைஞர். பள்ளிகளில் ஆங்கிலம் கூடாதுன்னு பத்திரிகைகளுக்கு ஒரு தீனி போட்டுக்கொண்டே ஜெயந்தி நடராஜனை வரவழைத்துப் பேசினார்.

பேரம் முடிந்தது. கனி ( பழம் ) நழுவிப் பாலில் விழுந்தது.

அப்போது அவ்வையார் பாடிகொண்டே வந்தார் :

“பெரிது பெரிது தி.மு.க. பெரிது

அதனினும் பெரிது அதனது ஊழல்

தலைவருக்கு வீட்டுப் பிரச்சினை

எல்லாவற்றையுவிட ஆகப் பெரிது

அதனினும் பெரிது மகளின் எதிர்காலம்

மகளின் பெருமை சொல்லவும் அரிதே”

“சே, காலங்கார்த்தாலே என்ன தூக்கம்? எழுந்து வேலைக்குப் போங்க”, என்று மனைவியின் கத்தலில் கனவு கலைந்து பல் தேய்க்க ஓடினேன்.

எவ்வளவு தான் யோசித்தாலும், கூகுளில் தேடினாலும், நாடி ஜோசியம் பார்த்தாலும், சாலமன் பாப்பையாவைக் கேட்டாலும், பெரியார் சிலையை எவ்வளவு முறை வணங்கிக் கற்பூரம் ஏற்றினாலும் புரியவில்லை.

தேங்காய் உடைத்துப் பார்த்தேன், கிடா வெட்ட சிங்கபூரில் தடை மட்டும் இல்லாதிருந்தால் அதையும் செய்திருப்பேன்.

இத்தனை செய்தும் புரியவில்லை. சரி போனால் போகிறது என்று அம்மன் கோவிலில் குறி கேட்டுப் பார்த்தேன். குறி சொன்ன அம்மா “ஐயோ அம்மா”  என்று தலை தெறிக்க ஓடிவிட்டார்.

வேறு வழியே இல்லை என்று வழியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச்  சீட்டுக் குலுக்கிப் போட்டேன். போட்ட இரண்டு சீட்டுமே வெற்றுக் காகிதமாக இருந்தது. பிள்ளையாரே பின் வாங்கினார் என்று கருதினேன்.

சரி எதற்கும் இருக்கட்டும் என்று நண்பர் ஷானவாசிடம் கேட்டேன். என்னை ஒரு மாதிரி பார்த்தவர் “சரி ஒன்று செய்வோம். வாருங்கள் எங்கள் மசூதிக்குச் சென்று ஹாஜியிடம் கேட்போம்”, என்று அழைத்துச் சென்றார்.

ஹாஜியிடம் நான் கேட்டதுதான் தாமதம் விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டார்.

எதிரில் நண்பர் லியோ தென்பட்டார். வழக்கம் போல் அவரிடம் கேட்டேன். இவனை ஏனடா சந்தித்தோம் என்று நினைத்தவர் போல் “சரி வா”, என்று தனது தேவாலயத்திற்கு அவசரமாக அழைத்துச் சென்றார். அங்கு பேராயரிடம் கேட்டேன். அது வரை கோபமே படாத அவர் ,” தம்பி உனக்குப் பாவ மன்னிப்பே கிடையாது”, என்று கூறி தான் க்ஷண நேர கோபத்திற்காக யேசுவிடம் மன்னிப்புக் கோரினார்.

எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். வேறு வழி இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. பதில் தெரியாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.

வேகமாக வீடு வந்தேன். ஆவலாக மனைவியிடம் “உன் அறிவுக்கு ஒரு சோதனை”, என்ற பீடிகையுடன் ஆரம்பித்தேன். கேள்வியை நான் சொல்லி முடித்தவுடன் அவள் பார்த்த பார்வையின் அர்த்தம், ” உன் புத்தி போகுதே ..” என்பதாக இருக்கலாம் என்று ஊகித்துக்கொண்டேன்.

மகனைக் கேட்டேன். “உன்னோடு பேச மாட்டேன் போ”, என்று ஒரே ஓட்டமாக ஓடி விட்டான்.

ஐ-போன் என்னும் ஆபத்பாந்தவன் இருக்கக் கவலை ஏன்? “சிரி’ மென் பொருளை இயக்கினேன். கேள்வியைக் கூறினேன். மெல்லிய அலறலுடன் ஐ-போன் செல்பேசி செயலிழந்தது. “தங்கள் கேள்விக்குப் பதில் இப்பூவுலகிலேயே இல்லை” என்ற செய்தியுடன் செல் பேசி தன் கடைசி மூச்சை நிறுத்திக்கொண்டது.

அது என்ன கேள்வி என்று கேட்கிறீர்களா?  இரத்த அழுத்த மருந்து உட்கொண்டீர்களா ? சரி அப்படியென்றால் சொல்கிறேன்.

இதுதான் கேள்வி :-  தமிழ் அன்னை சிலையால் தமிழ் எப்படி வளரும்?

என்ன, பேச்சு மூச்சையே காணோம்? ஹலோ, அவசர மருத்துவ உதவியை அழைக்கட்டுமா ?

ஆமாம் கொலை தான் …. பாகம் 2

காஞ்சிபுரம் சென்று வந்த பிறகு  மறு விசாரணை.

ஓதுவார் வரவில்லை.அன்று சிவ ராத்திரியாம். ஆகையால் நாள் பூராவும் உண்ணா விரதமாம்.

மறுநாள் வழக்கு விசாரணை.

“நான் தான் சொன்னேனே ஜட்ஜ் தம்பி. நீங்க இவ்வளோ தூரம் கஷ்டப்பட வேண்டாம்.கொலை செஞ்சது நான் தான்”.

ஏனோ மனம் ஒப்பவில்லை.

“ஐயா, நீங்க செஞ்சது கொலை தான் . ஆனா அதுக்கு தண்டனை ரொம்ப கடுமையா இருக்கும்.அதாலே மீண்டும் நினைவு படுத்தி சொல்லுங்க. அவுங்க உங்கள தாக்கினான்களா? அதுனாலே நீங்க ஆயுதம் எடுத்தீங்களா ?”

தற்காப்புக்காக ஆயுதம் எடுத்தார் என்று காரணம் கற்பித்து தண்டனையை குறைக்கலாம் என்று முயற்சி செய்தேன்.

“ஜட்ஜ் தம்பி, நான் சொல்றத கேட்டுக்குங்க.

நான் நினைச்சிருந்தால் அவங்கள கொல்லாம இருந்திருக்கலாம்.ஆனா என்ன – ஆயிரம் வருஷ வரலாறு போகும்.பல்லவ ராசா காலம் முன்னலேருந்து இந்த மக்களை காவல் காக்கற வடிவுடை அம்மா இங்கிலாந்து போயி ஒரு கண்ணாடி பேழைக்குள்ளே நிப்பாங்க.

ஆனா இங்கே இருந்தா, மக்களை நிதமும் பாத்துகிட்டே இருப்பாங்க.

என்ன உபயோகம்னு கேக்கறீங்களா ? இந்த மக்களுக்கு ரொம்ப படிப்பறிவு எல்லாம் இல்லே.அரசாங்கமும் ஒன்னும் செய்யலே.வானம் பாத்த பூமி தான்.ஆனாலும் மக்கள் ஒரு ஒழுங்கு முறையோடு இந்த அம்மா முன்னாடி நடந்துப்பாங்க.

பொய் சொல்ல மாட்டாங்க.திருட மாட்டாங்க.தேர்தல் நேரத்துலே அரசியல்வாதிங்க வந்தாகூட கோவில் கிட்டே வந்து பொய் சொல்ல மாட்டாங்க.அந்த மாதிரி அம்மா பாத்துப்பாங்க.

ஊர்லே ஒரு கட்டுப்பாடு இருக்கும்.

தெரியுங்களா சேதி  ஐயா ? எங்கே ஊர்லே போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. யாராவது தப்பு செஞ்சா நேரே கைலாசநாதர் சந்நிதி தான், வடிவுடை அம்மா சந்நிதி தான்.அங்கே வெச்சு எவனாவது பொய் சொல்லுவான் ?

இதெல்லாம் ஒரு நொடிலே அழிக்கப் பார்த்தாங்க பாவிங்க.

அதாலேதான் விடக்கூடதுனு போட்டேன் ஒரே போடா. தேங்கா சீவுற மாதிரி.

இந்த கட்டை கெடக்குதுங்க. இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ. போய்ச்சீற வேண்டியது தான். எழுவது வருஷ கட்டை இது.

ஆனா வடிவுடை அம்மா ஆயிரம் வருஷமா நிக்கிறா. அது போகலாமா ? ஊரும் நாடும் போய்டுமே ஐயா.

நீங்கே விதிக்க வேண்டிய தண்டனையா விதிங்க.எல்லாம் நீங்களா செய்யறீங்க ? செவனேன்னு இருக்கற சிவன் செய்யறான்.

அன்ன ஒரே ஒரு வேண்டுகொளுங்க. தண்டனை காலம் முடியற வரைக்குமோ அல்லது தண்டனைகாலதுகுள்ளே என் காலம் முடியற வரைக்குமோ தினமும் கைலாசநாதர் வடிவுடியாமா முன்னாடி நின்னு ஒரு பதிகம் பாட முடியும்படியா  நீங்க உத்தரவு போடணும்.

செய்வீங்களா தம்பி?”

சொல்லிவிட்டு ஓதுவார் விடு விடு என்று பதிலுக்கு நில்லமால்  இறங்கிச் சென்றார்.

என்  ராஜினாமா கடிதம் தயார் செய்ய தட்டேழுத்தாளரை அழைத்தேன்.

ஓதுவாருக்கு  வக்கீலாக அவதாரம் எடுக்க.  

ஞான பண்டித சுவாமி நமோ நாமே அருள் வாயே …” மனம் முணுமுணுத்தது.