RSS

Tag Archives: அத்தி வரதர்

அத்தி வரதரை சேவித்தேன்

வாழ்வில் இரண்டாம் முறையாக அத்தி வரதை சேவித்தேன். 1979ல் சேவித்தது நினைவின் அடுக்குகளில் அமிழ்ந்து பழுப்பேறிய புகைப்படம் போல் உள்ளது. எங்கோ வெகு நேரம் கூட்டமாச் சென்றது மாடுமே நினைவில் உள்ளது.

இன்று காலை 3 மணிக்குக் கிளம்பினோம். நல்ல மழை. மயிலையில் இருந்து காஞ்சி செல்ல 50 நிமிடங்கள் ஆனது. வழி நெடுகிலும் வரதரைக் காண பக்தர் குழுக்கள், காரிலும், பஸ்ஸிலும் என்று ‘சலோ காஞ்சி’ என்னும் விதமாக இருந்தது.

‘எங்கியாவது நின்னு டீ குடிக்கறியா தம்பி?’ என்று ஓட்டுனரிடம் கேட்டேன். ‘இல்ல சார். 10 நிமிஷம் நின்னா கூட 100 கார் போயிரும். உங்களக் கொண்டு விட்டுட்டு பிறகு சாப்டுக்கறேன்’ என்ற ஓட்டுனரின் கரிசனம் நெகிழச் செய்தது.

தந்தையார் இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்குமே, எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்த போது, ‘வரதர் ஏன் குளத்துல இருக்கார்?’ என்ற ஓட்டுனரின் கேள்வி என்னை உசுப்பியது. கொஞ்சம் குளிர் காற்று, கொஞ்சம் வரலாறு என்று பேச வாய்ப்பாக இருந்தது. பாரதத்தின் சோக வரலாற்றை அசை போட்டால் குளிரூட்டப்பட்ட குருதியும் கூட கொதிக்கத் துவங்கும்.

காஞ்சியை நெருங்கி விட்டோம் என்பதை உணர்த்தின காவல்துறை வாகனங்கள். பச்சையப்பா கல்லூரிக்கு முன்னரே நிறுத்திவிட்டனர். ஆட்டோ மூலம் கோபுர வாயிலை அடைந்ததாக நினைத்துக் கொண்டோம். இறங்கிய இடத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் நடக்க வேண்டி இருந்தது. இறங்கி நடக்கத் துவங்கினோம்.

எங்கும் போலீஸ். சர்வ வ்யாபி என்பது தமிழக போலீசையே குறிக்கும் என்பது போல் அவர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். நெல்லை, மதுரை என்று பல மாவட்டத் தமிழ் வாசனைகளும் காதில் கேட்க அவர்கள் உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டும், பிறப்பித்துக் கொண்டும் இருந்தனர். மிக அதிக அளவில் பெண் போலீசார். யாரைக் கேட்டாலும் தளராமல் பதில் சொல்லிய வண்ணமே இருந்தனர். தந்தையாரின் வயதை ஊகித்து, ‘வீல் சேர் பயன் படுத்தலாம், ஆனா, அதுல போனா ரொம்ப நேரம் ஆகும். முடிஞ்ச வரைக்கும் நடந்து போங்க. வேணும்னா வீல் சேர் வெச்சுக்கலாம்’ என்று அறிவுரை கூறினர். மூத்த குடிமக்கள் வரிசையில் நானும் தந்தையாரும் நின்றோம் ( நான் அவருக்குத் துணை, எங்களுக்கு வரதன் துணை).

சிறிதளவு தள்ளு முல்லு இருந்தது. ஆங்காங்கே போலீசார் பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தனர். துப்புரவுப் பணியாளர்கள் மழை நீரை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். குப்பைகள் சேராமல் உழைத்துக் கொண்டிருந்தனர். அரசு மருத்துவர்களின் குழுக்கள் இருந்தன. கழிவறைகளும் இருந்தன. பேட்டரி காரினால் பலன் இல்லை. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கே செல்கிறது. அதனைப் பயன் படுத்தவில்லை.  ஒரு மணி நேரத்தில் பெருமாளைச் சேவித்தோம்.

அன்னியப் படைகளின் அழித்தொழிப்புகளைக் கடந்து பெருமாள் சயனக் கோலத்தில் காட்சியளித்தார். ‘உன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிவேன். ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல் வந்து பார்க்கிறாயா?’ என்று கேட்பது போல் தோன்றியது. காலங்களைக் கடந்து மிகப் பழங்காலத்தில் இருந்துகொண்டு பெருமாள் எங்களைப் பார்த்தார். பெருமாளை நாம் பார்க்கவா கோவிலுக்குச் செல்கிறோம்? அவன் நம்மைப் பார்க்கவன்றோ?

வெளியில் அனுமார் சன்னிதிக்கு அருகில் உள்ள அஹோபில மடத்தில் ஶ்ரீமான் சேஷாத்ரி என்பார் வெளியூர் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிக்கிறார். ஒரு நாளைக்கு ரூ.2 லக்ஷம் செலவாகிறது என்கிறார். யாராவது கொடுக்கிறார்கள். பெருமாள் நடத்திக்கறார் என்கிறார் அவர். அங்கு உணவு தயாரிப்பது முதல், பரிமாறுவது வரை தொண்டூழியர்கள். அனைவரும் வயதான ஶ்ரீவைஷ்ணவர்கள். உதவி செய்ய விரும்புபவர்கள் +91-99402-94908 என்னும் தொலை பேசிக்கு அழைத்து விபரம் கேட்டுக் கொள்ளலாம். அவரது வங்கிக் கணக்கு: எண்: 1257155000073013. Karur Vysya Bank. IFSC: KVBL0001276. ஒரு முறை அழைத்து, விபரம் பெற்றுக் கொண்டு பின்னர் உதவி செய்யலாம். 24 மணி நேரமும் உணவு அளிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆடிக் கிருத்திகை என்பதால் கூட்டம் குறைவு என்று ஒரு காவலர் சொன்னார். ஆனால், எள் போட்டால் எள் விழாது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மராட்டி, ஹிந்தி, ராஜஸ்தானி என்று பல மொழியுனரையும் பார்க்க முடிந்தது. ஊழிப் பெருவெள்ளம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய கூட்டத்தைக் கண்டால் தெரிந்துகொள்ளலாம் என்று தோன்றியது.

வசதிகள் போதுமானவையா? இன்னமும் செய்யலாமா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால், இத்தகைய ஜனத்திரளுக்கு இதற்கு மேல் என்ன செய்திருக்க இயலும் என்று தோன்றியது. அரசு என்னதான் செய்தாலும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நிற்க.

அத்தி வரதர் நிகழ்வில் யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. 12 மணி நேரத்திற்கும் மேல் பணி புரியும் காவலர்களுக்கா, மிகச் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்த இந்து அற நிலையத் துறையினருக்கா, துப்புரவுத் தொழிலாளர்களுக்கா, அன்னம் அளிப்பவர்களுக்கா? அல்லது இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, பாரதத்தின் பல கோடி மக்களை ஒரு சிறு நகருக்குள் வரவழைத்து, ஆன்மீகப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தி, இந்த மண் ஆழ்வார்களுடைய மண், இராமானுஜர் காலடி பட்டதால் புனிதமடைந்த மண், வேதாந்த தேசிகர் வாழ்ந்து சம்பிரதாயம் பரப்பிப் புனிதப் படுத்தியதால் புனிதமான மண் எனவே தேசிகரின் மண், இன்னும் எத்தனையோ ஆச்சார்ய புருஷர்களால் புனிதமடைந்த ஆன்மீக மண் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ள அத்தி வரதருக்கு நன்றி சொல்லிப் பணிவதா என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

மண்ணின் நிறம் தெரியா வண்ணம் அவ்வளவு கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கும் பக்தகோடிகளின் பாதங்களிலும் மானசீகமாக விழுந்து வணங்கி விடைபெற்றேன்.

‘அடுத்த வருஷம் அத்தி வரதர சேவிக்கப் போகணும். நீ வந்து அழைச்சுண்டு போ’ என்று அம்மா சொல்லியிருந்தாள். அதற்குள் அவளை வரதர் அழைத்துக் கொண்டுவிட்டார் என்பது மட்டுமே ஒரே சோகம்.

பாராட்டு:

  • போலீஸ் துறை – அதிலும் தூக்கக் கலக்கத்திலும் பணிபுரியும் பெண் போலீசார்
  • அற நிலையத் துறை
  • துப்புரவுத் துறை
  • அரசு மருத்துவர்கள்

கோபம்:

  • ஆட்டோ ஓட்டுனர்கள்

 

 
3 Comments

Posted by on July 26, 2019 in தமிழ்

 

Tags: ,

 
%d bloggers like this: