உள்துறை மந்திரி அமித் ஷா ‘ஹிந்தி திவஸ்’ அன்று அனைவரும் ஹிந்தி கற்க வேண்டும், தாய் மொழியுடன் ஹிந்தியையும் கற்க வேண்டும். ஏனெனில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்பதால் பாரதத்தின் முகமாக ஹிந்தி அமைகிறது. உலக அரங்கில் இந்தியாவின் மொழியாக ஹிந்தி திகழ வேண்டும் என்று சொல்லியுள்ளார். நான் இந்தச் செய்தியை வரவேற்கிறேன்.
அன்னிய மொழியான ஆங்கிலத்தை வரவேற்போம் ஆனால் ஹிந்தி வேண்டாம் என்பது ‘பஹுத்’ அறிவுவாதிகளுக்கானது. அன்னிய மொழியான ஆங்கிலத்துடன் நமது தேசத்தின் இணைப்பு மொழியான ஹிந்தியை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. நெல்லூர் தாண்டினால் வாய்ப்பூட்டு போடப்படும் தமிழர்கள் ஹிந்தி கற்பதன் மூலம் ஓரளவிற்கு வெளி மாநிலங்களில் சகஜமாக வாழ உதவும். மற்ற மாநிலங்களில் தொழில் செய்யவும் உதவி செய்யும்.
மூன்று மொழிக் கொள்கை உன்னதமானது. எட்டாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மூன்றும் பயிலவும், பின்னர் விருப்பப்பட்ட மொழிகளைப் பயிலவும் வழி செய்ய முடிந்தால் நல்லது. இவற்றுடன் ஜப்பானிய, சீன மொழிகளில் ஏதாவது ஒன்றைக் கற்றால் இன்னமும் நல்லதே. தமிழக மாணவர்கள் பயன்பெறுவர்.
பொதுவாக ஒரு மொழியில் பூரண தேர்ச்சி இருப்பின் பிற்தொரு மொழியை எளிதில் கற்க இயலும். ஆகவே பாரதியின் கூற்றுப்படி ‘யாமறிந்த மொழிகளிலே..’ என்று சொல்ல வேண்டுமானால் பன்மொழித்திறமை அவசியமே.
இந்த நிகழ்வில் தி.க.தலைவர் சிங்கப்பூரைத் துணைக்கு இழுத்துள்ளார். ‘சிங்கப்பூர் போன்று நான்கு மொழிகளிலும்..’ என்று வியாக்கியானம் செய்துள்ளார். சிங்கப்பூர் ஒருபோதும் தனது அயல் நாட்டு உறவுகளில் ஆங்கிலம் தவிர வேறெதையும் பயன்படுத்தியதில்லை. சீனம் பயன்படுத்துகிறார்கள் என்கிறார் எனது நண்பர். சீனாவுடன் தொடர்புகொள்ள சீனத்தைப் பயன்படுத்துகிறார்கள் போலும்.
சிங்கப்பூரில் நிரந்தரவாசம் செய்ய விண்ணப்பம் கூட ஆங்கிலத்திலேயே இருத்தல் வேண்டும். தமிழில் பிறப்புச்சான்றிதழ் இருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழில் உள்ள சான்றிதழை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்தியத் தூதரகத்திடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று அறிவுறுத்துகிறது சிங்கப்பூர். ‘சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் உள்ளதே?’ என்று கேள்வி எழுப்பி இருந்தேன். ‘இது தான் சட்டம். வேண்டுமானால் ஆங்கிலத்தில் கொண்டுவா’ என்று அனுப்பினர். ஏப்ரல் மாதம் முழுவதையும் தமிழ் மொழிக்காக ஒதுக்கியுள்ள நாடு, நிர்வாகம் தொடர்பாக இப்படிச் செய்கிறது. இதில் தவறில்லை. ஏனெனில் அது நிர்வாகத்தை எளிமையாக்குகிறது. பொதுமொழியாக ஆங்கிலம் பயன்படுகிறது. அவ்வளவுதான்.
ஆகவே தமிழக அரசியல் வியாதிகள் உளறாமல் இருத்தல் நலம்.
தமிழக மாணவர்களாகிய நினைவில் கொள்ள வேண்டியது:
நீங்கள் எத்தனை மொழிகளைக் கற்கிறீர்களோ அவ்வளவு பயன் பெறுவீர்கள். ஹிந்தி, மராத்தி, ஜப்பானிய மொழி முதலியனவற்றை ஓரளவு கற்றிருந்ததால் நான் பெற்ற பலன்கள் ஏராளம். நீங்களும் பயன் பெற அழைக்கிறேன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி தவிர, விருப்பப்பாடமாக சீனம் அல்லது ஜெர்மன் கற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
என் நண்பரின் உடன் படித்த ராமுவுக்குப் படிப்பு வரவில்லை. 8ம் வகுப்பில் 3 ஆண்டுகள் இருந்தான். பல ஆண்டுகள் சென்றபின் +2 முடித்தான். வேறு எதுவும் கிடைக்காததால் பி.ஏ. ஆங்கிலம் பயின்றான். சென்னையில் ஒரு தையல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து உபரி நேரத்தில் ஜெர்மன் பயின்றான். இரண்டாண்டுகளில் ஜெர்மனுடன் சேர்த்து ஃப்ரென்ச் பயின்றான். நண்பரின் உந்துதலால் ஜப்பானிய மொழி பயின்றான். 10 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சொன்னது: ‘ராமுவைப் பிடிக்கவே முடியல. மெயில் அடிச்சா ஜப்பான்ல இருக்கேங்கறான், ரெண்டு நாள் கழிச்சு ஸ்பெயின், அடுத்த வாரம் ஜெர்மெனில.. இப்பிடி பறக்கறான். ஊர்ல பல ஏக்கர் வாங்கிப் போட்டுட்டான். டூர் கைடா இருக்கானாம்’ என்றார். இன்று அவன் ஒரு சுற்றுலா நிறுவனத்தை நிர்வகிக்கிறான் என்று கேள்விப்பட்டேன்.
ஆக, மொழி அரசியலில் கலக்காமல், முடிந்த அளவு அதிகமான மொழிகளில் தேர்ச்சி பெறுங்கள். உலகம் உங்களை அரவணைக்கக் காத்திருக்கிறது. அதற்கு முதலில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியைக் கற்கத் துவங்குங்கள்.
வளமான எதிர்காலத்திற்கு ஆ..பக்கங்களின் வாழ்த்துக்கள்.