ஆம்பள பாவம்

ஒண்ணு சொல்லவா? என்னிக்காவுது நீயே சமைச்சி நீயே துன்னுக்கறியா? அப்ப தெரியும்பா உனக்கு. சகிப்புதம்மைன்னா என்னன்னு அப்ப தெரியும் உன்க்கு.

அப்டி இன்னா ஸார் சொல்லிட்டாரு ஆமிர் கானு? சகிப்புதம்மை இல்ல, அதால ஊர உட்டு போறேன்னு சொன்னாரு. இன்னா தப்பு ஸார் அதுல?

அதும் அவுரு சொல்லல; ஊட்டுக்காரம்மா சொன்னாங்கன்றார். நாயந்தானே? இன்னா இருந்தாலும் ஊட்டுக்காரம்மா சொன்னா எதிர் கேல்வி கேக்க முடிமா? இன்னான்ற நீயி?

ஒரு ஆம்பள, ‘எம் பொண்டாட்டி இப்டி சொல்றா’ன்றான். அவுனுக்கு அதுக்கு கூட உரிம இல்லியா இந்த நாட்ல? ஒரு ஆம்பலையோட கஸ்டம் இன்னொரு ஆம்பலைக்கித்தான் தெரியும். ஊட்டுல பேச முடிமா உன்னாலா? அதால அமீரு வெளில வந்து சொன்னாரு? இன்னா தப்புபா இதுல? நீயே சொல்லு, நெஞ்சுல கைய வெச்சு சொல்லு, ஊட்ல பேசுவியா நீயி? வெளில வந்து தான பேசற. அப்பால அமீரு பேசினா தப்புன்ற?

ஆம்பளையால ஊட்ல பேச முடிலங்காட்டிதானெ வெளில டாஸ்மாக்குல வந்து தண்ணி சாப்டுப் பேசறான் நம்மாளு? அமீரு அங்கெல்லாம் வர மாட்டாரு. அதான் தண்ணி சாப்டாமயே சொல்றாரு. தப்பு இன்னாபா?

அப்டி இன்னா சொல்லிட்டாரு அமீரு? சகிக்கலன்னாரு. உண்மை தான? நீயே சொல்லு. இத இப்ப ஒரு படம் வந்துதே, உத்தம வில்லன்னு. அத்தப் பாக்க முடிஞ்சிச்சா உன்னால? சகிக்கல தான? அதான் அமீரு சொல்றாரு – சகிக்கலன்றாரு. இதுல இன்னா தப்பு கண்டுகின நீயி?

அத்த உடுமா. கோச்சடையான்னு ஒரு கொயந்தைங்க படம் வந்துச்சே. பாத்தியா நீயி? சகிக்கல தானே? அதான் சொல்றாரு அமீரு. இன்னா தப்புன்றேன்?

புலி, வாலு, மரவட்ட, பூரான்னு படம் படமா வந்துகினே இருக்கே, எதாவுது பாக்க சகிக்குது? அதாம்பா சொல்றாரு அமீரு. இன்னா தப்பு கண்டுகின நீயி?

ஒண்ணு சொல்லவா? என்னிக்காவுது நீயே சமைச்சி நீயே துன்னுக்கறியா? அப்ப தெரியும்பா உனக்கு. சகிப்புதம்மைன்னா என்னன்னு அப்ப தெரியும் உன்க்கு. அமீரு நடிச்ச படத்த அவரே பாத்துருப்பாரு. அதான் சகிக்கல, ஊர உட்டு ஓடலாம்னிருப்பாரு. இனான்னற நீயி?

அமீரு ஊர உட்டு போகலாம்னு பொண்டாட்டி சொன்னானுதான் சொன்னாரு. ஆனா ராகுல் தம்பி இன்னா சொல்ச்சி? சொல்லிக்காம கொள்ளாம தாயிலாந்து போயி ரோசன பண்ணிட்டு வரல? அமீரு சொல்லிகினு போறேன்றாரு. ரீஜண்டான ஆளுப்பா அமீரு. அதப்போயி தப்புன்ற நீயி.

ஊட்லயும் பேச முடியாது, வெளிலயும் பேச முடியாதுன்னா ஒரு ஆம்பள இன்னாபா செய்வான்? கொஞ்சமாவுது ரோசன பண்ணியா நீயி?

அவுரு இன்னாபா சொன்னாரு? போலாம்னு பொண்டாட்டி சொல்றான்னாரு. நம்மூர்ல நாட்ட உட்டு ஓடறேன்னு பூச்சாண்டி காட்டினவங்கல்லாம் குந்திகினு மாடு துண்ணலாமா மாணாமான்னு பேசிக்கினிகறாங்க, பம்பாய் போயி சிவ சேனா தாதாவையெல்லாம் கண்டுகினு வந்திருக்காங்க. அப்பல்லாம் எங்கப்பா போயிட்டீங்க நீங்கள்ளாம்? அவர்ட்ட போயி,’ இன்னா அண்ணாத்த, ஏதோ ஊட்ட வித்துட்டு வேற ஊருக்கும் நாட்டுக்கும் போறேன்னியே, இன்னும் டிக்கெட் கெடைக்கலியா?’ன்னு ஒரு கேள்வி கேட்டியா நீயி? அமீரு இந்தி கார்ருன்னு தானெ நீயி அவர கேள்வி கேக்குற?

இந்தி மாணாம் ஆனா இந்தி நடிகை மட்டும் வேணும்னு சொல்றோம்ல. அதுங்க தமிளு பேசுறேன்னு வெட்டி வெட்டி பேசுதே அது சகிக்கலைன்றாரு அமீரு. இன்னா தப்புன்றேன்?

அத்த உடு. நாட்ல சகிப்புதன்ம இருக்குன்றியா நீயி? சும்மா உதார் உடாத மாமு. நம்ம கையில ராங்கு காட்டாத. எங்க இருக்கு சொல்லு சகிப்புதன்ம? முன்னாடியாவுது 2ஜி, நிலக்கரி, ஆதர்சுன்னு ஆயிரம் கோடி, லச்சம் கோடின்னு காணாம போக சொல்ல அப்ப நம்ம பிரதமரு எப்பிடி நாக்கலிய கெட்டியா புட்சுகினு கண்ண மூடிகினு சகிப்புதம்மையோட குந்திகினு இருந்தாரு? வாய தெறந்து ஒரு வார்த்த சொல்லியிருப்பாரா மனுசன்? அது சகிப்புதம்மை.

இப்ப இருக்கறவரு அப்பிடியாகீறாரு? ஒரு ஊழலு கூட இல்லியே. கவருமெண்டு நடக்குதா இல்லியான்னே தெரீல்லியே? ஊழல நடக்க உட்டமா, கண்டுக்காம சகிப்புத் தன்மையோட இருந்தமான்னு இல்லாம வெளிநாட்டு முதலீடு, பொருளாதாரம்னு புரியாம பேசிக்கினேகீறாரு.

இப்பிடி ஒரு பிரதமர சகிச்சுக்கினு அமீரு, சாருக்கு தம்பி, அருந்ததி அக்கா இவுங்கல்லாம் எவ்வலவு தான்யா சகிப்புதம்மையோட இருக்கறது?

தமிளு நாட்டுல வெள்ளம் வந்து ஊரே நெஜ தண்ணில இருக்கசொல்ல மொதலமைச்சரு எவ்ளோ சகிப்புதம்மையோட ஊட்டுக்குள்ளயே இர்ந்தாங்க? ஆனா பிரதமரு கொஞ்சம் கூட சகிப்புதம்மை இல்லாம வெளி நாட்டுக்கெல்லாம் போயி, பணம் சம்பாரிச்சுக்கிட்டு, இப்போ வெள்ளத்த பாக்க சென்னைக்கு வரப் போறரு. முதலமைச்சர் மாதிரி பிரதமருக்கு சகிப்புத் தன்மை இல்ல தானெ? அதான் சொல்றாரு அமீரு.

மெய்யாலுமெ சொல்றேன். ஆம்பள பாவம் பொலாதது. அமீரு நம்மள மாதிரி ஆம்பள. அவுருக்கு கொரலு குடுக்காட்டாலும், திட்டாதீங்க. ஏன்னா ஒரு ஆம்பளையோட கஸ்டம் ஆம்பளைக்குத் தான் தெரியிம்.

‘நெக்ஸ்ட் ஸ்டேஷன் கிளிமெண்டி’ குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

%d bloggers like this: