அணில்

தினமும் யாராவது ஒருவருக்கு ரெம்டிசிவிர் தேவைக்காக ஃபோன் பண்ணுகிறேன், குறைந்தது இருவருக்கு மருத்துவமனையில் இடம் தேடி அலைகிறேன், யாராவது ஒருவருக்காவது ஆக்ஸிஜன் வேண்டிப் பேசுகிறேன்.

இவர்கள் எல்லாம் யாரென்று தெரியாது. நான் ஏன் பேசுகிறேன் என்றும் தெரியாது. நான் பேசுவதால் மறுபுறத்தில் யாரோ ஒருவர் வேறு யாரிடமோ பேசி ஏதோ ஏற்பாடு செய்கிறார்கள். நான் யாரென்று அவருக்கும் தெரியாது. அவர் யாரிடம் பேசுகிறார் என்பது எனக்கும் தெரியாது. மூன்றாம் நபர் யாருக்காக உதவி செய்கிறார் என்பது அவருக்கும் தெரியாது.

யாருக்காவது உதவி தேவை என்று தெரிந்தால் இணைந்துள்ள பள்ளி வாட்ஸப், அலுவல, இலக்கிய வாட்ஸப் குழு என்று கேட்கிறேன். கேள்வியே இல்லாமல் யாரோ எங்கிருந்தோ உதவுகிறார்கள். நான் யாருக்குக் கேட்கிறேன் என்று எனக்கும் தெரியாது. யாருக்குச் செய்கிறோம் என்று அவர்களுக்கும் தெரியாது. ஓரிரு முறை மட்டுமே நண்பர்களின் உறவினர்களுக்கு உதவ முடிந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் யாருக்கோ, யாருடைய கணவருக்கோ, யாருடைய தாயாருக்கோ, யாருடைய மகளுக்கோ, பேத்திக்கோ..

எவ்வளவு பேர் பிழைத்தார்களோ தெரியவில்லை. பிழைத்தவர்கள் மறுபடியும் அழைத்து நன்றி சொன்னாலும் தெரியாது என்று நினைக்கிறேன். நான் மட்டும் சாஸ்வதமா என்ன?

இனம், மொழி, மதம், சாதி, மண்ணாங்கட்டி என்று எதுவும் தெரியாமல், கேட்காமல் ஒரு தொடர் சங்கிலி வேலை செய்கிறது. வேறொரு நாள் வேறொரு சங்கிலி. ஒரே நாளில் பல சங்கிலிகள். கடும் கோபத்துடன் துரத்திவரும் பேய் ஒன்றிடமிருந்து யாரையாவது எப்படியாவது காப்பாற்ற வேண்டியது மானுட அறம் என்கிற ஒரே உந்துதல் தான்.

எந்த உதவி என்று கேட்டாலும் ‘இந்த வாட்ஸப் குரூப்பில் இதைப் பேச அனுமதி இல்லை’ என்கிற செய்தி வருவதில்லை. அந்த அளவிற்கு எதையாவது செய்து, எப்படியாவது மக்களைக் காக்க வேண்டும் என்கிற பெரிய உத்வேகம் மட்டுமே எல்லாருடைய உள்ளங்களிலும் இருப்பதைக் காண முடிகிறது.

நான் வெளியில் எங்கும் அலைந்து செய்வதில்லை. ஆனால், பலர் அப்படிச் செய்கிறார்கள். அவர்கள் மனித உருவில் நடமாடும் தெய்வங்கள். அவர்கள் அனைவருக்கும் என் பிரணாமங்கள்.

எனக்கு எழுத வருகிறது, எழுதுகிறேன். எழுத முடியாத, எழுத வேண்டும் என்கிற எண்ணம் இல்லாத, அந்த நேரத்திலும் யாருக்காவது உதவலாம் என்று ஓடிக்கொண்டிருக்கும் உத்தமர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், முன் களப் பணியாளர்கள், முக்கியமாகக் காவலர்கள் – அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

பொலிக பொலிக.

‘அறம்’- அது இல்லாத படம்

‘அறம்’ என்றொரு இடதுசாரித் திரைப்படத்தை ஏர்-இந்தியா காண்பித்தது.
 
போர்வெல்லில் தவறி விழும் குழந்தையை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட கலெக்டர் மதிவதனி(பெயரைக் கவனிக்கவும்) முயல்கிறார். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த நிகழ்வில் படம் முழுவதும் இந்திய எதிர்ப்பு வசனங்கள். குறிப்பாக இஸ்ரோ எதர்ப்பு வெளிப்படை. அடிக்கடி இஸ்ரொவின் ராக்கெட் காட்டப்படுகிறது. டி.வி. பேட்டியில் ஒரு முட்டாள் ‘ராக்கெட் கனிம வளங்களைக் கண்டறியவே செலுத்தப்படுகிறது என்கிறான். ஆளை எங்கோ பார்த்த முகமாக இருக்கிறது. ஜி.பி.எஸ்., புயல் முன்னறிவிப்பு, கடல் வளப்பாதுகாப்பு, தொலைதூரக் கல்வி, தொலவு-மருத்துவம், அந்த மூட-பேட்டியாளன் பங்குபெறும் டி.வி. நிகழ்ச்சியை மக்கள் பார்க்கவும் கூட செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இவை தவிர மற்ற நாடுகளை வேவு பார்க்கவும், நமது ராணுவத் தேவைகளுக்காகவும் அனுப்பப்படுவதுண்டு. ராக்கெட் ஏவ வசதி, பணம், தொழில்நுட்பம் இல்லாத நாடுகள் பலவற்றிற்கும் இந்தியாவே குறைந்த செலவில் உதவுகிறது. அடிப்படை அறிவு வேண்டாம், அடிப்படை அறம் இல்லாமல் பேட்டி நடக்கிறது.
 
இந்த அழகில் குழந்தையின் உயிருக்கு மிகுந்த ஆபத்து ஏற்படும் நேரத்தில், மக்களின் உணர்ச்சி பொங்கியிருக்கும் நிலையில் கலெக்டர் பிரச்சாரம் செய்கிறார். குழிக்குள் இறங்கும் சிறுவனிடம் ‘இந்தியா போன்ற நாடுகள்ல..’ என்று அறிவுரை சொல்லி ஊக்கம் ஊட்டுகிறாராம். படத்தில் பல இடங்களில் ‘இந்தியா போன்ற நாடுகள்ல..’ வருகிறது.
 
உச்சகட்ட வெறுப்பு ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா’ பாடலை ஒரு குடிகாரன் இழிவுபடுத்துவது.
 
எந்த சினிமாவும் பார்க்கக்கூடாது என்றும், குறிப்பாகத் தமிழ் சினிமா பார்ப்பதே இல்லை என்றும் சில ஆண்டுகளாக இருந்துவருவது என்ற எனது முடிவு மிகச்சரியானதே என்பதை எனக்கு உணர்த்தியது ‘அறம்’.
 
கலை, இலக்கியம் என்கிற போர்வையில் தேசத்தையும் அதன் வெற்றிகளையும் இழிவுபடுத்துவது முற்போக்கு என்றால் நான் முற்போக்காளன் அல்லன்.
 
‘அறம்’ = எள்ளளவும் அதைத் தன்னகத்தே கொள்ளாத படம்.

என்ன மாதிரியான அறம் ?

இரண்டு மாதங்களாக ‘செய்தி உபவாசம்’ ( News Fast ) என்று இருந்துவருகிறேன். படிப்பதற்கு ஏற்ற, கொந்தளிப்பற்ற மனநிலையையும் , அதற்கான அவகாசத்தையும் இது தருகிறது என்று உணர்கிறேன்.

இந்த உபவாசக் கடட்ளையில் ஜெயமோகனின் வலை தளத்தையும் சேர்க்க வேண்டி இருக்கும் போலத் தெரிகிறது. தற்போது அவரது நேர்மை குறையும் நேரம் போல இருக்கிறது. முதலில் திரை நாயகர் ஒருவர் சார்பாக, ஒருதலைப் பட்சமாக எழுதினார். தற்போது வைணவ அடையாளங்கள் பற்றிய கட்டுரை குறித்து.

சாதி மேட்டிமைவாதம் என்று சொல்கிறார். வேதாந்த தேசிகனின் ‘ஆஹார நியமம்’ வழி நடப்பவர்கள் பலர் இன்றும் உள்ளனர். ‘ஆசாரக் கோவை’ என்னும் பொது சுகாதாரத்தை வலியுறுத்தும் தமிழ் நூல் சொல்லும் விதிகள் கடுமையானவை தான். இவை வழிகாட்டிகள். தொழில் சார்ந்த, மரபுகள் சார்ந்த ஆசாரங்கள்.

விமானம் ஓட்டுபவர் இன்ன உடையில் இருக்க வேண்டும், மது அருந்தியிருக்கக் கூடாது, போதைப் பொருட்களை உட்க்கொண்டிருக்கக் கூடாது என்பது விதி. அத்தனையும் ஆசார விதிகள், அவற்றைப் புறந்தள்ள வேண்டும் என்று சொல்லலாமா? கைலி கட்டிக்கொண்டு பிளேன் ஓட்டுவது தவறு என்று ஒருவர் எழுதினால் அதை ‘பைலட்களின் சாதி மேட்டிமைவாதம்’ என்று சொல்லலாமா?

மின்னியல் சோதனைச் சாலையில் மாணவர்கள் ரப்பர் ஷூ அணிந்து தான் வர வேண்டும் என்பது ஆதாரவிதி. பெண்கள் தங்கள் ஜடையை சோதனைச் சாலைக்கான மேற் சட்டைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதும் விதியே. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வாறு உண்டு. இதை மின்னியல் துறையினரின் சாதி மேட்டிமை வாதம், பெண் அடக்குமுறை என்று சொல்லலாமா?

அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மது அருந்தியிருத்தல் கூடாது என்கிற விதி இருக்கலாம். அதுவும் தவறு என்று கொள்வதா? மருத்துவர்களின் சாதி மேட்டிமைத்தனம் என்று கொள்வதா?

வைதீகர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் இப்படி இருந்தார்கள் என்றும், இன்று அப்படி இல்லையே என்று அங்கலாய்ப்பதாக அந்தக் கட்டுரையில் வரும். இதில் தவறென்ன இருக்கிறது? அர்ச்சகர் வீதியில் நின்று புகைபிடித்தவாறே அபிஷேகம் செய்வதுதான் சாதி மேட்டிமைத்தனம் இல்லாத செயலா?

இப்படி எழுதுவது என்னமாதிரியான அறம் என்று தெரியவில்லை.

படைப்பூக்கம் பெற என் உத்தி

”அந்த குறளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றேன்.

‘சம்பந்தம் இருக்குண்ணா குறளை எல்லாரும் சொல்லுகானுக? குறள்னாக்க ஞாபகம் வாற எடத்துல சும்மா எடுத்து போடறதுக்குண்டான ஒண்ணாக்கும். எனக்க கிட்ட கேக்கேரே கருணாநிதிட்ட கேப்பேராவே?’

‘அறம்’ தொகுதியில் ‘பூமேடை’ கதையில் பூமேடை ராமையா என்னும் தியாகி சொல்வதாக வரும் ஒரு பேச்சு. சம்மட்டி அடி என்றால் இது தான். இக்கதையைக் கருணாநிதி படித்திருப்பாரா தெரியவில்லை.

அதே போல் இன்னொன்று. பூமேடை சொல்வதாக வருவது: ‘அன்னைக்குள்ள தியாகியெல்லாம் இன்னைக்குப் பிக்பாக்கெட்டாக்கும். அப்ப அன்னைக்குள்ள பிக்பாக்கெட் இன்னைக்குத் தியாகி தானே?’ இது ஒரு சுத்தியல் அடி.

இன்னொன்று: ‘இது நம்ம சுதேசி கோர்ட்டு. மேலே சீலிங் ஃபேனெல்லாம் உண்டு. காந்தி படம் இருக்கு. மண்ணு தின்னுறப்ப பிடிபட்ட பிள்ளை மாதிரி சிரிக்காரு.. மத்தபடி அதே டவாலி, அதே பளைய பேப்பரு. அதே சட்டம். ஒரு ஐயராக்கும் ஜட்ஜு. பழைய தண்டனைய பாக்காரு. பிரிட்டிஷ் சர்க்காரு நடைமுறைகளை அப்பிடியே ஃபாலோ பண்ணணுமுன்னுல்லா சுதேசி சர்க்காருக்க சட்டம்?’ விடுதலை பெற்ற பின் நமது சட்டத்தின் நிலையை இதைவிட யாரும் தெளிவாக எழுத முடியாது.

தியாகி பென்ஷன், மொழிப்போர் பென்ஷன் வாங்கியிருக்கலாமே என்னும் கேள்விக்குப் பூமேடை சொல்வது: ‘அது செத்தவனுக்குப் போடுற வாய்க்கரிசில்லா? நான் இப்பமும் சீவனோட இருக்கறவனாக்கும் வே. காந்திக்கு பென்ஷன் குடுத்தா வாங்கிட்டிருப்பாரா?’

‘பூமேடை’ கதையில் ஒவ்வொரு வரியும் சாட்டையடி. ஜெயமோகன் ஜொலிக்கிறார்.

எத்தனை முறை படித்தாலும் ‘அறம்’ தொகுப்பு திகைப்பை ஏற்படுத்தும் படைப்பு. சுமார் 8 முறை படித்திருப்பேன். புதிய படைப்பு ஏதாகிலும் செய்ய முயலும் போது ஒரு மன ஒருமை ஏற்பட நான் நாடுவது ‘அறம்’ தொகுப்பை.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

பழைய கணக்கு

இன்னிக்கி சாப்பாடு இல்லே, நீ வேற ஆத்துக்குப் போன்னு வக்கீலாத்துலே சொல்லிட்டா.

இன்னிக்கும் சாதம் இல்லை.  வேற யார் ஆத்துக்கும் போக முடியாது. சாயங்காலம் 9  மணிக்கு மேலத் தெருவாத்துலேயும் கதவு சாத்திடுவா. அம்மவாசையும் அதுவுமா இன்னிக்கிப் பூரா பட்னிதான். கார்த்தாலேர்ந்து ஒண்ணும் சாப்பிடலே. இப்பிடியே எவ்வளவு நாள் போகப்போறதோ.

வேற ரெண்டு அகம் இருக்கு. சந்நிதித் தெரு சாமிங்கார் இருக்கார். ஆனா அவருக்கே அவ்வாத்துலே சாப்பாடு இல்லே. எதோ திங்கள் கிழமை மட்டுமே என்னை வரச் சொல்லி இருக்கா.  பட்டவர்த்தி சர்மாவாத்துலே புதன் கிழமை, வடக்குத் தெரு நாராயண சாஸ்திரியாத்துலே வியாழன், ஹெட் மாஸ்டர் சேஷகிரி சார் ஆத்துலே வெள்ளின்னு இப்பிடி வாரம் ஓடிடும். சனி , ஞாயிறு ஊருக்கு நடந்தே போய்டுவேன். ஆனா இன்னிக்கி செவ்வாய். வக்கீலாத்துலதான் சாதம்.  ஆனா அவாளும் இல்லேன்னுட்டா.

சாப்பிடலேன்னாலும் பரவாயில்லை. ஆனா தேசிகர் கோவில்லே ராத்திரி படுத்துக்கறது தான் பயமா இருக்கு. வௌவால் வேற ராத்திரி பறந்து பறந்து பயம் காட்றது. ராத்திரி தான் வௌவால் வரணும்னு ஏன் பெருமாள் வெச்சிருக்காறோ ?  இந்த ஊர்லே ராத்திரி தங்கறதுக்கு வேற ஒரு இடம் கூட இல்லை. வேற எங்கே போனாலும் காசு கேக்கறா.  தேசிகர் கோவிலுக்கு காவல் மாதிரியும் ஆச்சு, எனக்கு தங்கறதுக்கு எடம் மாதிரியும் ஆச்சுன்னு அப்பா சொன்னார். ஒரு நாள் என்னோட தங்கிட்டு வேத பாராயணத்துக்கு வேதாரண்யம் போனார். போனவர் வரவே இல்லே. போய்ட்டார்னு ஒரு தந்தி மட்டும் வந்துது.

இன்னிக்கி பூராவுமே எனக்கு சரியாவே இல்லை. தமிழ் ஆசிரியர் தியாகராசன் ஐயா பல தடவை புஸ்தகம் கொண்டுவான்னு சொல்லிட்டார். இருந்தாத்தானே கொண்டு போறதுக்கு ? நான் தினமும் ஹெட் மாஸ்டர் சேஷகிரி சாரோட பொண்ணு பிரேமாவோட புஸ்தகத்தை தான் ராத்திரிக்கி மட்டும் இரவல் வாங்கிண்டு போய் படிப்பேன். இது தெரியாம இன்னிக்கி தமிழ் ஆசிரியர் நான் ஏதோ வேணும்னே புஸ்தகம் கொண்டு போகாத மாதிரி நெனைச்சுண்டு கன்னத்துலே ஓங்கி அறைஞ்சுட்டார். நான் கீழே விழுந்துட்டேன். அப்பறம் உடன் படிக்கற ஞானசுந்தரம் சொல்லித்தான் அவருக்கு எனக்கு அப்பா இல்லாததால புஸ்தகம் வாங்க முடியலேன்னு தெரிஞ்சுது. அப்புறம் அவரோட புஸ்தகத்தையே எனக்குக் கொடுத்துட்டார்.

அது போகட்டும். இப்போ தேசிகர் கோவிலுக்கு உள்ளே போகணுமே.

எழுநூறு வருஷத்துக்கு முன்னே தேசிகரே இந்தக் கோவிலைக் கட்டினார்னு அப்பா சொன்னார். அதுக்கப்பறம் யாருமே இதப் பெருக்கக்கூட இல்லே போலே. ஒரே வௌவால் புழுக்கை. ராத்திரி சிம்னி வெளிச்சத்துலே அண்ணாந்து பாரத்தா எதோ உருவம் எல்லாம் போற மாதிரி இருக்கும். கண்ணையே தெறக்க மாட்டேன். இறுக்க மூடிண்டுடுவேன்.

கோவில் இருக்கட்டும். இப்போ ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன பண்றது ? காளியாகுடி ஹோட்டல் அம்பி மாமா ஆத்துக்குப் போகலாம். ஆனா இன்னிக்கி அமாவாசை. அவாத்துலேயும் ராத்திரி பலகாரமெல்லாம் ஆகி இருக்கும். இன்னிக்கி  ராத்திரி வயத்துக்கு குளத்து தீர்த்தம் தான்.

வக்கீல் ஆத்துலே சாதம் இல்லைன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை. ஆனா அவாத்து சமையல் மாமி சொன்னதுதான் ரொம்ப வலிச்சுது. “கண்ட நேரத்துலே வந்து நிக்க வேண்டியது, பத்துப்பாத்திரம் எல்லாம் தேச்சாச்சு. அவசியம் சாதம் வேணும்னா கோவில்லே போய் மடப்பள்ளிலே கேட்டுப்பாரு”, அப்பிடின்னு சொன்னா.

“என்ன மாமி, இப்பிடி சொல்றேளே, இன்னிக்கி இந்தாத்துலேதானே எனக்கு சாப்பாடு?” அப்பிடின்னு கேட்டு வெச்சேன்.

அப்போ வக்கீலாத்து மாமி வந்தா.  அவாகிட்டே கேக்கலாம்னு கேட்டேன். மாமியாலே ஒண்ணும் சொல்ல முடியலே. மென்னு முழுங்கினா. எனக்கோ மயக்கம் வர மாதிரி இருந்தது. கார்தாலேர்ந்து ஒண்ணும் சாப்பிடலே.

அப்போ வக்கீல் மாமா வந்தார். நிலைமையைப் புரிஞ்சுண்டா மாதிரி தெரிஞ்சுது. சரி நமக்கு சாப்பாடு கிடைக்கும்னு நெனைச்சேன்.

“மாமா, அம்மாவாசை தர்ப்பணம் பண்ணிட்டு இப்போ வரைக்கும் ஒண்ணும் சாப்பிடலே. இன்னிக்கி உங்காத்துலேதான் சாப்பாடு. சமையல் மாமி இல்லேங்கறா. நான் சீக்கரம் சாப்டுட்டு தேசிகர் கோவில் போகணும். ராத்திரி கொஞ்சம் படிச்சுட்டு நாளைக்கிக் கார்த்தாலே ஆறாவது பார்ம் பரீட்சை எழுதணும் ..” அப்பிடின்னு மென்னு முழுங்கி சொன்னேன்.

யாரோ பெரிய உலக்கையாலே தலைலே அடிச்ச மாதிரி இருந்துது. மாமா தான் பேசினார் : ” வாரா வாரம் உன் எழவு பெரும் எழவாப் போச்சு. கொட்டிக்கறதுன்னா கொஞ்சம் சீக்கரமே வந்திருக்க வேண்டியது தானே. எட்டு மணிக்கு வந்தா ஒண்ணும் இல்லையோ என்னவோ”.

நான் ரொம்ப பயந்து போயிட்டேன். அவர் அதுக்கு அப்பறம் சொன்னது தான் ரொம்ப கஷ்டமாயிடுத்து. அழ ஆரம்பிச்சுட்டேன்.

“மடிசிஞ்சி பிராம்மணன் உன் அப்பன் உன்னை விட்டுட்டுப் போயே போய்ட்டான். ஏதோ பண்ணிவைக்கற வாத்தியாரா லட்சணமா இருந்து உனக்கும் உபாத்யாயம் சொல்லி வெச்சிருக்கலாம். இங்கிலீஷ் படிப்பு ஒரு கேடா?  வேத பாராயணம் பண்ண வேதாரண்யம் போவானேன்; அப்பிடியே போயச்சேருவானேன் ? இப்போ உனக்கு தினம் ஒரு ஆத்துலே சாதம். ஒண்ணு பண்ணு. இன்னிக்கி எங்காத்துலே சாதம் இல்லே. கோவில் வாசல்லே உக்காந்துண்டு சஹஸ்ரநாமம் சொல்லு. போறவா வரவா யாராவது நாலு காசு கொடுப்பா.அத வெச்சுண்டு ஏதாவது ஹோட்டல்ல போய் கொட்டிக்கோ”, அப்பிடின்னு சொல்லிட்டு கதவை அறைஞ்சு சாத்திட்டா.

திடீரென்று “சார், Are you okay ?“, என்ற குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். நேர் காணலுக்கு வந்திருந்த பையன் என்னையே பார்த்துகொண்டிருந்தான்.

“உன் தாத்தா தான் வக்கீல் கிருஷ்ணசாமி ஐயங்காரா? அப்போ உன் அப்பா ரகுநந்தன் எப்படி இருக்கார் ?” என்றேன் சுய நினைவு திரும்பியவனாய்.

“இல்லே சார். அவர் ஒரு கார் விபத்துலே போய்ட்டார். குடும்பம் ரொம்ப கஷ்டப்படறது. அதான் உங்க கம்பெனிலே ஒரு ப்ரோக்ராமர் வேலைக்கான தேவை தெரிஞ்சுது”.

“இப்போ எங்கே தங்கி இருக்கே? ஹோட்டல் ஏதாவது..?”

“இல்லே சார், அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லே. அதுனாலே எம்.ஜி.ரோடு பின்னாடி இருக்கற தேசிகர் மடத்துலே ராத்திரி படுத்துக்கறேன். இப்போ ஒரு சரியான வேலை கிடைக்கணும். அப்பறம் வேற இடம் பார்க்கணும்”.

“சாப்பாடு எல்லாம் எங்கே”.

“கார்த்தாலே ஒரு வேளை மடத்துலே. சஹஸ்ரநாம பாராயணம் பண்ணின உடனே பொங்கல் குடுப்பா. இன்னொரு வேளை ரெண்டு வாழைப்பழம். அவ்ளோதான்”.

“ஒண்ணு பண்ணு. வாரா வாரம் செவ்வாக்கிழமை இந்த கப்பன் பார்க் அட்ரெஸ்ல உனக்கு சாப்பாடு”.

“ரொம்ப தேங்க்ஸ் சார். என்ன காரணம் சார்?”

“அது அம்பது வருஷம் பழைய கணக்கு” என்று கூறி அவனை அனுப்பி வைத்தேன்.

%d bloggers like this: