ஐயா,
நீங்கள் யாரை வேண்டுமானாலும் விழாவிற்கு அழையுங்கள். என்ன கண்றாவியையானாலும் பேசிவிட்டுப் போங்கள். ஆனால், உங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத, புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைப் பற்றிப் பேசச் சொல்வதற்கு முன், தலைப்புகள் பற்றிய அடிப்படை கொஞ்சமேனும் தெரிந்தவர்களிடம் பேசியிருந்திருக்கலாம். வைணவப் பாடசாலைகளில் பயிலும் 7 வயதுச் சிறுவனிடம் கேட்டிருக்கலாம். அவன் சொல்லியிருப்பான், உங்கள் முகத்தில் அறைந்தது போல், ஆண்டாள் யார் என்று.
வழக்கம் போல் கோட்டை விட்டுவிட்டீர்கள், திராவிடப் புண்-நாக்குகளிடம். போகட்டும்.
ஆண்டாள் யாரென்று நான் சொல்கிறேன்.
அவளது பிறப்பு பற்றித் தெரியவில்லை என்று நீங்கள் அழைத்தவர் சொல்லியிருந்தார். துளசிச் செடியின் அடியில் அவள் கிடைத்தாள் என்பது ஐதீகம். அவள் வில்லிபுத்தூரில் வசித்தாள் என்பதை அவளே சொல்கிறாள். ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன் கோதை சொன்ன’ என்று ‘ஶ்ரீவில்லிபுத்தூரின் விஷ்ணு சித்தரின் மகள் கோதையாகிய நான் சொன்ன தமிழ் மாலை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது திருப்பாவைப் பாசுரத்தை முடிக்கிறாள் ஆண்டாள்.
அவள் ஶ்ரீரங்கத்தில் வசிக்கவே இல்லையே? பெரியாழ்வார் அவளைத் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்றவுடனேயே அவள் அரங்கனைச் சேர்ந்துவிட்டாளே. இதை அவரே சொல்கிறார் : ‘ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால்தான் கொண்டு போனான்’. பெரியாழ்வாருக்கே தெரியாத செய்தி பேச்சாளருக்குத் தெரிந்ததோ? என்னே விந்தை! தன்னைப்போலவே பிறரை எண்ணும் குழந்தை மனம் படைத்த பேச்சாளரோ?
அவளைப் பற்றி அந்தப் பேச்சாளர் ஏதோ சொன்னதாகப் படித்தேன். கொஞ்சம் பேசுவோமா?
ஆண்டாள் பாடுவது இது:
‘ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே’ என்கிறாள். ‘நான் மனிதனுக்கு வாழ்க்கைப் படப்போகிறேன் என்று காதில் விழுந்தால் உயிர் துறப்பேன்’ என்று மன்மதனிடம் சொல்கிறாள். இவளைப் போய் அப்படிச் சொன்னவரை நீங்கள் உங்கள் விழாவிற்கு அழைத்ததுப் பேசச் சொல்லியுள்ளீர்கள்.
அந்தத் தொழில் செய்யும் பெண்களைப் பற்றி அப்பேச்சாளர் சொன்னது இளக்காரமா அல்லது கேலியா என்கிற கேள்விக்குள் நான் செல்லவில்லை. ஆனால் அதே ஶ்ரீரங்கத்தில் இருந்த உண்மையான தாசி செய்தது என்ன தெரியுமா? முஸ்லிம் படைத் தளபதியை, அவனை அரங்க நாதனை நெருங்க விடாமல் செய்ய, அவனை மயக்கி, அவனுடன் உறவு கொள்ள அழைத்து, கோபுரத்தின் மீதேறிக் கொண்டு அங்கிருந்தபடியே அவனை அணைத்துக்கொண்டு கீழே விழுந்து அவனையும் கொன்று, தானும் இறந்தாள். அவள் நினைவாக, அவளது பெயரான வெள்ளாயி என்பதை ஒட்டி, இன்றும் அக்கோபுரம் ‘வெள்ளைக் கோபுரம்’, ‘வெள்ளாயி கோபுரம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. சம்பிரதாயத்துக்காக ஒரு தாசி செய்த தியாகம் இது.
வைணவத்தில் பரம்பொருளுக்கும் ஜீவாத்மாவுக்கும் ( சரி, பேச்சாளருக்குப் புரியாதுன்னா அடுத்த பத்திக்குப் போங்க எடிட்டர் சார்) உள்ள 9 உறவு நிலைகளை ‘நவ-வித சம்பந்தம்’ என்று சொல்வர். அதில் ஒன்று ‘சேஷ-சேஷி பாவம்’ ( ஆண்டான் – அடிமை). இறைவனை எஜமானன் என்று கொள்கிற இந்த நிலையை இன்று நினைத்துப் பார்த்தால் ஒப்புக்கொள்ள முடியாது. அப்படிக் கண்ணனை யஜமானனாகவும், தன்னை அவனது அடிமையாகவும் பாவித்துப் பாடுவது ஒரு உணர்வு நிலை. ஆண்டாள் அப்படிப் பாடியுள்ளாள்.
இன்னொரு சம்பந்தமும் உள்ளது. ஸ்வ-ஸ்வாமி ( உடைமை, உடையவன்) சம்பந்தம். பல ஆழ்வார்கள் இந்த உறவுமுறை குறித்துப் பாடியுள்ளார்கள். அதுவும் போகட்டும். கணவன் – மனைவி உறவு முறை கூட உண்டு. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் முதலியோர் தங்களைப் பெண்களாப் பாவித்துக் கொண்டு, பெருமாளைக் காதலனாகப் பாவித்துக் கொண்டு பாடுவதும் உண்டு. ஆக இந்த ஆழ்வார்கள் ஆண்களா, பெண்களா என்றும் கேட்பாரோ அந்தப் பேச்சாளர்?
குலசேகராழ்வார் பாசுரம் ஒன்றுண்டு. ‘கண்டார் இகழன்ழனவே காதலன் தான் செய்திடினும்’ என்னும் பாடலில் தன்னை மனைவியாகவும், திருமாலைக் கண்ணனாகவும் நினைத்துப் பாடுகிறார் மன்னரான குலசேகராழ்வார். Bridal Mysticism என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சரி. கல் தோன்றி மண் தோன்றிக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். பகுத்தறிவுப் பாதையில் போனால் அறிவு தேங்கும் தான்.
ஐயா, இந்த உறவு நிலைகள் என்பன ஶ்ரீவைணவத்தின் குறியீடுகள். பரம்பொருள் ஒன்று, ஜீவன் பல, ஜடப்பொருளும் உண்மை என்கிற மூன்று உண்மைகளையும், ஜீவன், பரமாத்மாவை அடைய என்னென்ன வழிகள் உள்ளன என்றும் சொல்பவை ஆழ்வார் பாசுரங்கள். இவை தத்துவங்களாக இல்லாமல், உறவு நிலைகளின் வழியாக, அனைவருக்கும் புரியும்படியான எழுத்துக்களில் அமைந்திருக்கும். இந்த உணர்வு நிலையிலான பார்வைகள் புரிய சில விஷயங்கள் இல்லாதிருக்க வேண்டும்.
- ‘நான்’ என்னும் அகந்தை
- மற்ற அனைவரும் புழுக்கள் என்னும் திராவிட நாசிச எண்ணம்
ஆனால், உளுத்துப்போன பகுத்தறிவுப் பல்கலைக் கழகங்களினால் இப்படியான ஆட்களையே உருவாக்கவியலும். என்ன செய்வார் உங்கள் பேச்சாளர்?
வைணவ மரபில் திருமாலின் சக்கரப் பொறி பெற்றவர்கள் ‘தாசர்கள்’ என்று தங்களை அழைத்துக் கொள்வார்கள். ‘ராமானுஜ ராசன்’, ‘பத்மனாப தாசன்’ என்பதாக அவர்கள் பெயர் இருக்கும். ‘தாஸ்ய நாமம்’ என்பது. பெரியாழ்வார், ‘கோயிற்பொறியாலே ஒற்றுண்டு’, ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து’ என்று சொல்வது இதைத் தான். ‘முன்னர் எந்தக் குலத்தவனாக இருந்தாலும் அக்கறையில்லை, தற்போது சக்கரப் பொறி பெற்று, அனைவரும் இறைவனின் தாசர்களாய உள்ளோம், நம்மில் வேற்றுமை இல்லை’ என்கிற மிக உயர்ந்த சமூக நீதித் தத்துவத்தை 8ம் நூற்றாண்டில் உணர்த்தியது வைணவ மரபு.
9ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண், கல்வியில் சிறந்து, ‘பஃறொடை வெண்பா’ யாப்பில் பாடல் இயற்றியுள்ளாள். அப்பாடல்களில் தேர்ந்த அறிவியல் கருத்துக்கள் தெறித்து விழுகின்றன (‘ஆழி மழைக் கண்ணா’ பாசுரம்). பெண்ணடிமை, பெண் கல்வி மறுப்பு என்று பட்டம் கட்டிய காலத்தில் மழை எப்படிப் பொழிகிறது என்கிற இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானத்தை அப்பெண் எடுத்துரைக்கிறாள். வெளிப்படையான இது கண்ணில் படவில்லை உங்கள் விழாவின் ‘சிறப்புப் பேச்சாளர்’ ‘கவிஞர்’ அவர்களுக்கு. தெரியாது தான். வந்த வழி அப்படி.
களப்பிரர் காலம் என்கிற இருண்ட காலத்தில் தமிழுக்கு எந்த ஏற்றமும் இல்லாதிருந்த போது, அதை நீக்கும் விதமாக வீறுகொண்டெழுந்த பக்தி இயக்கக் காலகட்டத்தின் ஆழ்வார்கள், நாயன்மார்களின் தமிழ்ப் பாசுரங்கள் இல்லையெனில், இன்று தமிழில் நீட்டி முழக்க ‘கவிஞர்’கள் இருந்திருக்க மாட்டார்கள். தமிழும் இருந்திருக்காது. அதனால் என்ன? உருது, அரபி என்று வேறு எங்காவது யாசித்து வயிறு வளர்க்கலாம். வயிறு தானே பிரதானம் திராவிட நாசிசவாதிகளுக்கு?
பணம் பண்ணுவதற்கு ‘வாரணமாயிரம்’ பாடலும் வேண்டும், ஆனால் அதை எழுதியவள் கீழ்மகள் என்று சொல்லவும் வேண்டும். இப்படிப்பட்டவர்களை வைத்து விழா நடத்த ஒரு மன வக்கிரம் வேண்டும். அது அபரிமிதமாக இருப்பது தெரிகிறது. ‘உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்று வாழ்ந்தவர்களைப் பற்றிப் பேசுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
ஆசிரியரே, எனக்கு எந்த சினிமாக் கழிசடையாலும் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. எனவே மனதில் பட்டதைத் தெளிவாக எடுத்துரைக்கத் தயக்கமில்லை. ஏனெனில் நான் ‘பெருந்தமிழன்’ வழியில் வந்த வைணவன். ஆம், பெருந்தமிழன் என்று தன்னை அழைத்துக் கொண்ட பூதத்தாழ்வார் அடியொற்றி வந்தவன்.
யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,யானே தவமுடையேன் எம்பெருமான், – யானே
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது.
ஒரு பெண் தன் திருமணம் பற்றிப் பாடுகிறாள். அதில் விசிட்ட அத்வைத தத்துவங்கள் அடங்கியுள்ளன, சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது என்று பெரியோரும், கற்றோருமான பெரியவாச்சான் பிள்ளை, பகவத் ராமானுசர் முதலியோர் காட்டுகின்றனர். ஆனால், நீங்கள் அழைத்த பேச்சாளருக்கு உள்ள களி மண் அறிவில் இவற்றில் ஒன்றும் புரியவில்லை, தனது நாய்ப்பிழைப்பு அரசியல் சார்ந்த, தரங்கெட்ட பார்வை ஒன்று மட்டும் புலப்படுகிறது. உங்களுக்கு இம்மாதிரியான மனிதர்(?) பெரியவராகப் போய்விட, அவரை வைத்து விழா நடத்துகிறீர்கள். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது இதுவோ?
உங்களின் இந்தச் செய்கையால் பிதாமகர்கள் ராம்நாத் கோயங்காவும், ஏ.என்.சிவராமனும் சுவர்க்கத்தில் மனவருத்தமுற்றிருப்பர் என்பதில் ஐயமில்லை.
அடுத்தமுறை ‘விழா’ நடத்தும் போது, மேடையில் ஆண்டாளின் உருவம் இல்லாமல், ஆடைகள் விலகிய நிலையில் தோன்றும் இந்தி பேசும் தமிழ் நடிகையின் படத்தை வைத்து, இதே போன்ற ‘தரம்’ உடைய ‘அறிஞர்’களைக் கொண்டு பேசச் சொல்லுங்கள். பொருத்தமாக இருக்கும், தமிழும் வளரும்.
பகுத்தறிவுக் குழியில் தமிழைப் புதைப்பவர்களுக்கு ஒரு பெயர் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன கொடுக்கலாம்? ‘பணத்தாசிகள்’? எதற்கும் ‘கவிஞரிடம்’ கேட்டுச் சொல்லுங்கள்.
Like this:
Like Loading...