சிங்கப்பூர் 'சங்கப்பலகை' முதல் அமர்வு – நிகழ்வுகள்

அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களுமாக 26 பேர் வந்திருந்த ‘சங்கப்பலகை’ முதல் அமர்வு, பல சிந்திக்க வைக்கும் பேச்சுக்களுடன் சிறப்பாக நடைபெற்றது. 86 வயது இளைஞரும் தமிழ் ஆர்வலருமான திரு.ஏ.பி.ஆர் ஐயா வந்திருந்து ஆசிர்வதித்தார். திரு.செல்வம் கண்ணப்பன், திரு.புகழேந்தி முதலான ஆர்வலர்களும், விழாவில் ஆதரவாளர் திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தது பெரும் ஊக்கம் அளித்தது. ‘நான் இராமானுசன்’ நூலின் கன்னட மொழிபெயர்ப்பாளர் ஹரிணி அவர்களும் வந்திருந்தார்.

பாவை சீயர் –  மாதங்கி

பாலகாண்டம் – நவீன கவிதை – கண்ணன் சேஷாத்ரி

 

நாட்டுப் பசு – சசி குமார்

 

அதிபதி – புகழேந்தி

'பழைய கணக்கு' – சில கதைகளின் வெளி

சென்றகால அநீதி வரலாற்றில் தங்கி புனைவுகளில் வெளிப்படல். அல்லது பல நூறு ஆண்டுகால தொடர்ந்த நினைவுகூரல்களின் வழியாக மானுடத்தின் நினைவடுக்குகளிலேயே தங்கியிருந்து, தற்காலத்திய ஒரு நிகழ்வின் , காட்சியின் மூலம் உருப்பெற்று பண்டைய சித்திரத்தையும் புதிய பார்வையையும் இணைத்துப் புனைவில் வெளிப்படுவது என்பது இந்த வகை.

‘பழைய கணக்கு’ நூலில் உள்ள வரலாற்றுக் கதைகள் பற்றி சில கடிதங்கள் வந்தன. இக்கதைகள் என்ன மாதிரியான உத்தி? இவற்றை எப்படி எழுதுவது? என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

‘பழைய கணக்கு’ற்குள் செல்வதற்கு முன் வேறு இரு சிறுகதைகளைப் பார்ப்போம்.

அரவிந்தன் நீலகண்டனின் ’அமுதம்’ என்றொரு சிறுகதை. ‘பிரானையங்கார்’ என்னும் பண்டைய நாளைய கதாபாத்திரம் ஆழ்வார்களின் அடியொற்றி சீர்திருத்தம் செய்ய முனைவதும், அதற்கான பலன்களை அனுபவிப்பதும், சில நூற்றாண்டுகள் கழித்து அந்தப் பெரியவரின் பணி எப்படி பார்க்கப்படுகிறது என்பதும் கதை. கதையில் சில விடுபடல்கள் தெரிந்தாலும், பழையதையும் புதியதையும் இணைக்கும் யுக்தி நல்ல முயற்சி. கதையின் முடிவு ஊகிக்க முடிவதாக உள்ளது. ஆக, முடிவில் வேண்டிய ‘திடுக்கிடல்’ தென்படவில்லை. ஆனால் புராணத்தையும், ஒரு கல்வெட்டையும், செவிவழிச் செய்தி ஒன்றையும் தற்கால நிகழ்வுகளையும் ஒரு புள்ளியில் இணையச் செய்யும் முயற்சி அது.

தொடர்புடைய கதை சுஜாதா தேசிகனுடைய ‘ராமானுஜலு’ என்னும் அதிரடி சின்னஞ் சிறுகதை. சிறுகதை வடிவ ஒழுங்கு மிக நேர்த்தியாய் அமைந்துள்ள, தத்துவத் தொடர்புடைய, பல நூற்றாண்டு இடைவெளியை ஒரு வரியில் இணைக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று. சுஜாதா கைத்தொடல் இருப்பது போன்று ஒரு தோற்றம் ஏற்படுத்தும் கதை.

‘பழைய கணக்கு’ நூலில் இதே பழைய புதிய இணைப்பை ஏற்படுத்தும் கதைகளை நான் எழுதியுள்ளேன். 200 ஆண்டுத் தொடர்பு தெரியும் வண்ணம் எழுதப்பட்ட கதைகள் அத்தொகுப்பில் உள்ளன. ‘அனுமன் சொன்ன கதை’, ‘வாசல்’ முதலானவை இந்த ரகத்தில் இருக்கும். சென்றகால அநீதி வரலாற்றில் தங்கி புனைவுகளில் வெளிப்படல். அல்லது பல நூறு ஆண்டுகால தொடர்ந்த நினைவுகூரல்களின் வழியாக மானுடத்தின் நினைவடுக்குகளிலேயே தங்கியிருந்து, தற்காலத்திய ஒரு நிகழ்வின் , காட்சியின் மூலம் உருப்பெற்று பண்டைய சித்திரத்தையும் புதிய பார்வையையும் இணைத்துப் புனைவில் வெளிப்படுவது  என்பது இந்த வகை.

இந்த மூன்றும் தொடுட்டுச் செல்லும் கதைக்களம் ஏறக்குறைய ஒன்றே.

கிளர்ந்தெழுந்த ஞானச் சுடர் பேருருவெடுத்து உலகெங்கிலும் பிரும்ம ஞானப் பேரொளி பரவச் செய்த காலம் ஒன்று பாரதத்தில் இருந்தது. அதே நேரம் மற்ற கண்டங்களில் மானுட வளர்ச்சி பிற்போக்குத்தனமாயும், தேக்க நிலையிலும் இருந்தது. பின்னர் அக்காலம் மறைந்து  பாரத தேசத்தின் ஞானப் பேரொளி மங்கி, மிலேச்ச அரசுகள் தோன்றி, இன்னமும் பின்னாலிழுக்கப்பட்டு, பெருவீழ்ச்சி அடைந்து, மக்கள் தங்களின் முன்னாளைய பெருமை மறந்து, வெறும் சோற்றுப் பிண்ட வாழ்வு வாழும் நிலையை அடைவதைப் பெருமை என்று கொள்ளும் நிலையில் வாழ்ந்து வருவர். இந்த இரு நிலைகளையும் இணைக்கும் பண்பாட்டுக் கருவியாக தத்துவம், கோவில், சிற்பம் முதலானவை திகழும்.

இந்த இணைப்பைக் கண்டுகொண்டு அதன் ஊடாகக் கதை சொல்வது என்பதே மேற்சொன்ன மூன்று கதைகளிலும் உள்ள உத்தி. இதற்கு நமது பாரத பண்பாடு, தத்துவம், சிற்பம், கலைகள் முதலியவற்றில் ஒரு சிலவற்றோடாவது  கொஞ்சம் தொடர்பு இருந்து, அந்தப் பழைய பண்பாட்டுப் பெருமைகளை மீட்டெடுக்கும் உத்வேகமோ அல்லது மீட்டெடுக்க வேண்டும் என்கிற தாபமோ இருப்பவனாக எழுத்தாளன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..

மொழியின் மீது ஆளுமை, பண்பாட்டின் மீது காதல், சென்ற மகோன்னதக் காலங்களின் மீதான பெருமிதம் கலந்த பரிவுப் பார்வை, நீண்ட இடைவிடாத வாசிப்பு முதலியன இருப்பின் யாரும் இம்மாதிரியான கதைகளை எழுதலாம் என்றே நினைக்கிறேன்.

அரங்கன் ஏன் தூங்குகிறான் ?

‘பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி’ என்று ஆண்டாள் சொன்னாள். பெருமாளை ‘பைய’ தூங்கச் சொல்கிறாள். பெருமாள் ஏன் தூங்க வேண்டும் ?

திருவரங்கத்தில் பெருமாள் தெற்குத் திக்கைப் பார்த்துப் படுத்திருக்கிறார். அதற்கு ஒரு கதை உண்டு. இராமாயணம் முடிந்து விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் முடித்து அயோத்தி திரும்பிய இராமனைப் பார்த்து விபீஷணன் ‘அரசாட்சி செய்வதில் எனக்கு அனுபவம் இல்லை. உனது அருட்பார்வை என் மேல் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இலங்கையிலேயே இருந்து விடுங்கள்’, என்று வேண்டுகிறான்.

ஆனால் இராமன், ‘இலங்கையுடனேயே இருந்துவிட  முடியாது. ஆனால் உனக்காகத் திருவரங்கத்தில் சற்று ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். உங்கள் இலங்கையைப் பார்த்தபடியே படுத்திருக்கிறேன்’, என்று சொல்லிப் படுத்துவிட்டான் என்று ஒர் புராணக் கதை உண்டு.

கும்பகோணம் என்னும் திருக்குடந்தையில் ‘ஆராவமுதன்’ என்ற பெயருடைய திருமால் பள்ளி கொண்ட ‘கிடந்த கோலத்தில்’ சேவை சாதிக்கிறான். அவனைப் பார்த்த திருமழிசையாழ்வார், ‘அயோத்தி முதல் இலங்கை வரை நடந்த உன் கால்கள் நொந்ததால் படுத்துக்கிடக்கிறாயா ?’, என்ற பொருள் படும் படி,

“நடந்தகால்கள் நொந்தவோ நடுங்கஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவா றெழுந்திருந்து பேசு,வாழி கேசனே”

என்று திருச்சந்த விருத்தத்தில் பாடுகிறார்.

அது சரி. அதுதான்  நடந்த களைப்பில் தூங்குகிறாரே, அதில் என்ன கேள்வி என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கேள்வி இருக்கிறது. 

ஆண்டாள் ‘பையத் துயின்ற’ என்று சொல்வது தான் கொஞ்சம் அதிகமோ என்று படுகிறது. ‘நன்றாகத் தூங்குகிற’ என்ற பொருளில் கூறுகிறாள் ஆண்டாள்.

பெருமாள் இப்படி நன்றாகத் தூங்கினால் நாமெல்லாம் என்ன ஆவது  என்ற கேள்வி நமக்குள் எழுவது இயற்கையே. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது.

அதுவும் மயிலாடுதுறையை அடுத்த ‘திரு இந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் ‘பரிமள அரங்கன்’  நீண்ட  நெடுந்துயில் கொண்டுள்ளான். பல முறை அழைத்துப் பார்த்தேன். அவன் எழவில்லை. 

‘வாழ்ந்தே போம் நீரே’ என்று பெருமாளிடம் கோபித்துக்கொண்டு சென்ற ஆழ்வார் போல் நானும் போகலாம் என்று நினைத்தேன். அப்போது தான் கோவிலின் கர்ப்பக் கிருகத்துக்குள் குளிரடித்தது. ஒரு வேளை பெருமாள் எழுந்து வந்து விட்டாரோ ? அதனால் தான் குளிர் தெரிகிறதோ என்று பார்த்தேன். 

அது தான் இல்லை. பெருமாளுக்கு ஏஸி ( A/C ) போட்டிருக்கிறார்கள். இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெருமாளுக்கு ஏஸி போட்டுள்ள கோவில் திரு இந்தளூர் பரிமள ரங்கனாதர் கோவில் தான் என்று நினைக்கிறேன். 

  A/C  எந்த ஆகமத்தில் வருகிறது என்று தெரியவில்லை. வைகானஸம், பாஞ்சராத்ரம் என்று இரண்டிலும் தேடிப்பார்த்து விட்டேன்.  A/C  பற்றித் தெரியவில்லை. இராமானுசரின் ‘கோவில் ஒழுகு’-லும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘நீங்கள்ளாம் மட்டும் ஏஸி-லெ வேலை பாக்கறேள், ஏஸி கார்ல போறேள், ஆனால் உங்களை எல்லாம் பாத்துக்கற பெருமாள் ஏஸில இருக்கப் படாதா? என்ன நியாயம் ஸ்வாமி ?’, என்று ஒரு பெரியவர் கேட்கிறார்.

அந்தப் பஞ்சாயத்து இருக்கட்டும்.

ஆண்டாள் பெருமாள் நன்றாகத் தூங்கட்டும் என்று ஏன் பாடினாள் ?

மே 16, 2014 அன்று நாட்டை ஒரு சரியான ஆளிடம் ஒப்படைத்து விட்டதால் பெருமாள் இன்னமும் நன்றாக உறங்கட்டும் என்று ஆண்டாள் சொல்லியிருக்கலாம் என்கிறாள் என் மனைவி.  

மனைவி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

சிங்கைக் கம்பன் விழா-2014

Kamban Vizhaaதேரழுந்தூரில் பிறந்த கம்பனுக்குச் சிங்கையில் விழா எடுத்தார்கள். சிங்கப்பூரின் முதல் கம்பன் விழா அதன் எழுத்தாளர் கழகத்தின் ஆதரவில் நடைபெற்றது. ஒரு நாள் முழுக்கக் கம்பச் சுவை பருக வாய்ப்பு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழித்துக் கம்பன் விழா அனுபவம்.

அந்நாட்களில் தேரழுந்தூரில் ‘கம்பர் விழா’ நடக்கும் ( ‘ர்’ – காண்க ). .மு.இஸ்மாயில், சொ.சத்தியசீலன், புலவர். கீரன், செல்வகணபதி, முனைவர். இராமபத்திரன் ( என் பெரியப்பா ) முதலானோர் பல தலைப்புக்களில் பேசுவர். இளமையில் கல். அது என் இளமையின் மைல்-கல்.

ஒரு முறை சாலமன் பாப்பையா ( அப்போது அவர் மதுரைக் கல்லூரிப் பேராசிரியர் ) சீதை குறித்து ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். ஆனால் அவரோ விருந்தினர், நடுவர். மேடையில் எதுவும் கூற முடியாது. பட்டிமன்றம் முடிந்து
அவரை என் பெரியப்பா எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் இருவரும், அவர்களுடன் வேறு சில அறிஞர்களும் சுமார் 2 மணி நேரம் சீதை பற்றிப் பேசினர். ஆழ்வார்கள், கம்பன், துளசிதாசர், வால்மீகி என்று பலரும்
சீதை பற்றிச் சொன்ன கருத்துக்கள் எல்லாம் பேசினர். அந்த வயதில் முற்றிலும் உள் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லை. ஆனால் இந்த விஷயங்கள் குறித்துப் பேசினர் என்பது புரிந்தது.

அது போலவே சிங்கையிலும் நடந்தது. ‘பாத்திரங்கள் பேசினால்’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இராம.வைரவன் இந்திரசித்தாகக் கவி பாடினார். ஆனால் மேடையில் ‘வீடணன்’ உருவில் அமர்ந்திருந்த வெண்பா வேந்தர் ஆ.கி.வரதராசனாரை ‘எட்டப்பன்’ என்று சாடிவிட்டார். ‘ஆகா வென்றழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று பாரதி சொன்னது போல வீடணர் பொங்கி எழுந்தார். நிமிடத்தில் வெண்பா இயற்றி இந்திரசித்தரை மறுத்தார். அருமையான பல கவிதைகள் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, சுக்ரீவன், வாலி முதலான பாத்திரங்கள் மூலம் பேசின.

பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் ‘தேன்’ என்னும் சீரில் முடிந்த கவிதை வரிகள் நிற்காமல் கொட்டிக்கொண்டே இருந்தன. சமீபத்தில் கலைஞரிடம் பரிசு பெற்றவர் இவர்.

பட்டி மன்றங்கள் என்றால் தொலைக்காட்சிகளின் மூலம் நாம் அறிந்துகொண்டுள்ளது ‘பட்டி’ ( மலையாளப் பொருள் கொள்க ) களின் அணிவகுப்பு என்பதைத்தான். ஆனால் கம்பன் விழாப் பட்டி மன்றம், தன் நிலையில் இருந்து விழா மன்றமாக் இருந்தது. காரணம் பங்கேற்றவர்களும் நடுவரும். பங்கேற்ற நால்வரில் மூவர் முனைவர்கள். நடுவரோ உலகறிந்த தமிழறிஞர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள். ‘தம்பியருள் சிறந்தவன் பரதனா, இலக்குவனா’ என்பது தலைப்பு. தீவிர சொற்போருக்குப் பின் ‘பரதனே’ என்று தீர்ப்பளித்தார் ஜெயராஜ்.

முன்னதாகக் காலையில் மலேசிய அமைச்சர் சரவணன், சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன், சிங்கைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், தவிர பேரா. சொ.சொ.மீ மற்றும் ஜெயராஜ் பேசினர். விழாத் தலைவராக முனைவர்.சுப.திண்ணப்பர் சிறப்புரை ஆற்றினார்.

‘மும்முறை பொலிந்தான்’ என்னும் தலைப்பில் இராவணன் பற்றீப் பேரா.சொ.சொ.மீ.யும், ‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் அவர்களும் பேசினர்.

செவிக்கு உணவு இல்லாத ஒரு அரை மணி நேரத்தில், வயிற்றுக்கும் ஈயப்பட்டது ஆனந்த பவன் சார்பில்.

என் கை வண்ணம் எதுவும் இன்றி, கண்ட வண்ணம் நிகழ்ந்த வண்ணம் எழுதியிருக்கிறேன் இந்தத் தேரழுந்தூர்க் கட்டுத்தறி. தவறுகள் கட்டுத்தறியினுடையவை என்பதறிக.

விழாவின் உணர்ச்சிப்பிரவாகப் பெருக்கால் நானும் ஒரு மரபுக் கவிதை எழுதலுற்றேன். என்ன ‘பா’ என்றெல்லாம் கேட்காதீர்கள். தெரியாது.

ஆழிசூழ் உலகுக
கெல்லாம் அஞ்சுவை தந்த கம்பன்
ஆமருவிக்கும் தன் கவிச்சுவை தெரியத் தந்தான்
ஆசுகவிப் புலவர் யாரும் பாங்குடனே பாடக் கேட்டேன்
ஆவெனவே திறந்த வாய் பிளந்த வாறு.

‘மும்முறை பொலிந்தான்’ என்ற தலைப்பில் பேரா.சொ.சொ.மீ. பேச்சு :

‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் பேச்சு :

‘தம்பியரின் சிறந்தவன் இலக்குவனா பரதனா ? பட்டிமன்றம்- இலங்கை ஜெயஆஜ் பேச்சு :

பெயரில்லாப் பெருமகன்

20140529-214518-78318509.jpg
பெயரில்லாப் பெருமகன்

இந்த முறை தேரழுந்தூர் சென்ற போது கவனிப்பாரற்ற பழைய சிலை ஏதாவது கிடைக்கிறதா என்று சற்று கண்களை அகல விரித்துக்கொண்டு பார்த்தேன்.

நல்ல பௌர்ணமி இரவு அது. கோவிலில் என்னையும் என் தம்பியையும் தவிர ஓரிருவரே இருந்தனர். அவனும் என்னைப்போல் ஒரு வரலாற்றுக் கிறுக்கன். பொழுது போகாவிட்டால் பழையாறை சென்று ஏதாவது சோழர்காலப் பள்ளிப்படை இருக்கிறதா என்று பார்த்து வருவான்.

பெருமாள் சன்னிதியில் இருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒரு படி இறக்கத்தில் உள்ள பழைய கல் தூணில் இந்த மானுடனின் வடிவம் தென்பட்டது. நேராகப் பார்ர்க முடியாமல் ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் விதமாக உள்ளது. தூணின் மிக அருகில் கைப்பிடிச் சுவர் ஒன்று கட்டியுள்ளதால் இந்தச் சிலை இருப்பது அதுவரை தெரியவில்லை.

முன்னம் பல முறை, அதே இடத்தில் அமர்ந்து ஆமருவியப்பன் கோவிலின் கட்டடக் கலையை வியந்து பேசியதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் மிக அருகில் இருந்த இந்தத் தூண் சிற்பம் கண்களில் படவில்லை.

கண்கள் மூடியிருப்பது போலும், கைகள் கூப்பி இருப்பது போலவும் தெரிகிறது இந்த வடிவத்தைப் பார்த்தால். உடலில் ஆபரணங்கள் அதிகம் இல்லை. ஆனால் முகத்தில் ஒரு பெரிய அமைதி தெரிகிறது. ஏதோ எல்லாவற்றையும் அறிந்து அதனால் வேறு எதுவும் வேண்டாம், இறை அனுபவம் மட்டுமே போதும் என்பது போன்ற ஒரு பேரமைதி இந்த ஆடவரது முகத்தில் தெரிகிறது.

இவர் யார் என்று விசாரித்தேன். அப்படி ஒரு தூண் சிற்பம் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை.

அவரது கைகளில் ஆயுதம் இல்லை. உடலின் மேல் பாகத்தில் ஆடை இல்லை. அதிக ஆபரணங்கள் இல்லை. இடையிலும் பெரிய ஆடைகள் எல்லாம் இல்லை. ஒரு துண்டு போல் ஏதோ ஒன்றை அணிந்துள்ளார். கால் பாதங்கள் தெரியவில்லை. எனவே தண்டை முதலியன அணிந்துள்ளாரா என்பதும் தெரியவில்லை.

யாராக இருக்கலாம் இவர் ?

ஆமருவியப்பன் கோவில் கட்டிய யாராவது மன்னனாக இருக்கலாமா ? முதலாம் பராந்தக சோழன் கட்டியது என்று அறிகிறேன். ஆனால் அரசனுக்கு உரிய எந்த அலங்காரமும் இல்லை.

அரசன் ஏதாவது போரில் வெற்றி பெற உதவிய போர் வீரனாக இருக்கலாமோ ?  ஆனால் ஆயுதங்கள் எதுவும் இல்லை.

அல்லது கோவிலை அன்னிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்கும் வேலையில் தன் உயிர் இழந்த வீரனாக இருக்கலாமோ ?

அல்லது கோவிலை நல்ல முறையில் கட்டிய ஸ்தபதியாக இருக்கலாமோ ?

கவிச் சக்கரவர்த்தி கம்பர் இந்த ஊர்க்காரர் தான்.

கம்பர் இந்தக் கோவிலில் இருந்து தான் கம்ப இராமாயணம் எழுதியுள்ளார். எனவே அவனது உருவமாக இருக்குமோ ? இருக்கலாம். ஆனால் சற்று இளமையாகத் தெரிகிறது. ஆகவே இருக்க வாய்ப்பு குறைவு. அத்துடன் அவ்ருக்கும் அவரது மனைவிக்கும் தனியாக சன்னிதி உள்ளது. எனவே அவராக இருக்க முடியாது.

ஒருவேளை கம்பனின் மகன் அம்பிகாபதியாக இருக்கலாமோ ? சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்த அம்பிகாபதியாக இருக்கலாமோ ? ஆனால் அவனது உருவத்தை இந்தக் கோவிலில் வடிக்க வேண்டிய காரணமென்ன ?

ஒருவேளை அருகில் உள்ள பழையாறையில் இருந்த குந்தவை நாச்சியாரின் அபிமானம் பெற்ற சிற்ப வேலைக்காரராக இருக்கலாமோ ? குந்தவை தான் பல கோவில்களையும் கற்றளிகளாக மாற்றினாள். அவளது ஆசியுடன் இந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்த சேனாதிபதி அல்லது ஊழியராக இருக்குமோ ?

இப்படிப் பலவாறு எண்ணிக்கொண்டிருந்தேன்.

அந்த இரவு அமைதியாக இருந்தது. நான் கல் தூண் சிலை முன் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன்.

எத்தனை ஆயிரம் தலைமுறைகள் இவர் கண் முன்னால் கடந்து சென்றிருக்கும் ?

எத்தனை செறுக்கு மாந்தர்கள் அழிவை இவர் பார்த்தபடி நின்றிருந்திருப்பார் ?

என்னைப் போல் இந்த ஆயிரம் வருடங்களில் எத்துணை பேர் இவரைப் பார்த்தும் பார்க்காமலும் சென்றிருப்பர் ?

இவர் செய்த தியாகம் என்னவோ ? கோவிலுக்கும் கலைக்கும் இவரது பங்களிப்பு என்னவோ ?

எந்த ஒரு பதிலும் பேசாமல் மௌனியாக இதுவரை கடந்து சென்றுள்ள வரலாறுகளுக்கும் வர இருக்கின்ற நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இவர் நின்றுகொண்டிருக்கிறார்.

எத்தனை நேரம் அவர் முன் நின்றிருப்பேன் என்று தெரியவில்லை.

‘இந்த ஆயிரம் ஆண்டுகளில் ஏதோ நீயாவது என்னைப் பற்றி நினைத்தாயே’, என்று அவர் நினைப்பது போல் உணர்ந்தேன்.

வெகு அருகில் யாரோ நன்றியுடன் பெருமூச்சு விடுவது போல் பட்டது.

திடீரென்று என் உடம்பு சில்லிட்டது போல் உணர்ந்தேன்.

சுற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. ஒரு வௌவால் மட்டும் பறந்து சென்றது.

வானில் நிலா மட்டும் காய்ந்துகொண்டிருந்தது. நிலா வெளியில் நானும் இந்தப் பெயர் தெரியாப் பெருமகனும் ஒரு மௌன சம்பாஷணை நிகழ்த்திக்கொண்டிருந்தோம்.

என் மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.

‘நீங்கள் யாரோ எவரோ. இத்தனை ஆண்டுகள் இந்தக் கோவில் எனும் கலைப் பொக்கிஷத்தைக் காவல் காத்தபடி நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீரே காவல் வீரர் ஆகுக. நீரே இதன் சிற்பி ஆகுக. நீரே இந்தப் பரந்த சோழ ராஜ்ஜியத்தின் காவலன் ஆகுக.

இத்தனை ஆண்டுகள் பத்திரமாகக் காத்திருந்து, காவல் இருந்து இந்த வரலாற்றுத் தொன்மத்தை எங்கள் தலைமுறை வரை காத்து வந்துள்ள உமக்கு எனது நன்றிகள்’.

%d bloggers like this: